தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
கிராமங்களில் தான் அழகியலும் வாழ்வியலும் இரண்டையும் ஒருங்கே இணைக்கும் மனிதமும் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதர்கள் நகரங்களை நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். நகரங்கள் மெதுமெதுவாக நரகங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், கிராமங்களிலும் ஊர்களிலும் இருந்து மக்கள் நகரங்களைத் தேடி வந்துகொண்டே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மாநகரங்கள் ஒருவித களிப்பூட்டும் கவர்ச்சியுடையவையாகக் காட்சியளிக்கின்றன. இவையனைத்தும் நகரங்களைப் புதிய திசையை நோக்கி அழைத்துச் செல்கின்றன. அத்திசை எதுவென்பது தான் இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது.
கடந்த வாரம் ஈக்குவடோரின் குவிட்டோவில் இடம்பெற்ற ‘வீடமைப்பு மற்றும் நின்று நிலைக்கக்கூடிய நகர அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு’ உலகம் எதிர்நோக்கும் நகரமயமாதல் சிக்கலின் புதிய பரிமாணங்களை ஆராய்ந்தது. ‘ஹபிட்டட் 3’ (Habitat III) என அழைக்கப்பட்ட இம்மாநாடு 21 ஆம் நூற்றாண்டின் முக்கிய நெருக்கடிகளில் ஒன்றாக நகரமயமாதலை அடையாளம் கண்டது. இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்நகரமயமாதல் மாநாடானது 1996 ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இறுதியாக நடைபெற்றது. உலகின் முக்கியமான சவால்களில் ஒன்றாக மாறிவரும் நகரமயமாதலை இருபது ஆண்டுகள் என்கிற கால இடைவெளியில் கலந்துரையாடுவது கொஞ்சம் வியக்கத்தக்க விடயம்தான்.
உலகில் மனிதர் கிராமங்களை விட நகரங்களிலே அதிகம் வசிக்கிறார்கள். இம்மாற்றம் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான மாற்றம். இம்மாற்றம் 21 ஆம் நூற்றாண்டுக்கான முக்கியமான சவாலாகவும் மாறியுள்ளது. மாற்றமடைகின்ற அதேவேளை புதிதாகத் தோற்றம் பெறுகின்ற நகரக்கலாசாரம், மூச்சுத்திணற வைக்கும் காற்றின் மாசாக்கம், நத்தை வேகத்தில் நகரவைக்கும் வாகன நெரிசல், வாய்ப்புகளும் பாதுகாப்பின்மையும் என நன்மையும் தீமையும் கலந்த கலவையாக மாறியுள்ள நகர்ப்புற வாழ்க்கை வாழ்வின் நிச்சயமின்மையை மட்டுமன்றி அதன் நீண்டகாலத் தீய விளைவுகளையும் சுட்டி நிற்கின்றது.
இப்போது மேற்குலக நாடுகளில் மட்டுமன்றி மூன்றாமுலக நாடுகளிலும் நகரமாதலின் அதிகரிப்பு தவிர்க்கவியலாததாகிறது. சிறுநகரங்கள் மெதுமெதுவாக அதை அண்டியுள்ள ஊர்களையும் இணைத்துப் பெருநகரங்களாக மாற்றமடைகின்றன. பெருநகரங்கள் அதனைச் சூழ உள்ள பகுதிகளை நகருக்குள் உள்வாங்குகின்றன. இவை அனைத்தும் ‘அபிவிருத்தி’ எனும் பெயரால் அரங்கேறுகின்றன. அதிகரிக்கின்ற சனத்தொகை, பொருளாதாரச் செயற்பாடுகளின் விருத்தி, சமூகப் பண்பாட்டு ஊடாட்டங்கள், சுற்றுச்சூழல் மற்றும் மனிதாபிமானப் பாதிப்புகள் எனப் பல்பரிமாணமுடைய சவால்களைத் தன்னகத்தே கொண்டுள்ளவையாக நகரங்கள் திகழ்கின்றன. இவை வீட்டுவசதி, கட்டமைப்புகள், அடிப்படைச் சேவைகள், உணவுப் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம், கல்வி, நியாயமான வேலைவாய்ப்புகள், பாதுகாப்பு, இயற்கை வளங்கள் என அனைத்தும் நெருக்கடிக்கு உட்படுகின்றன.
மக்கள் கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி நகர்வதால் நகரங்களில் ஏற்படுகின்ற சனத்தொகைப் பெருக்கம் வீட்டு வசதிகளை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது. ஒருபுறம் அதிகரிக்கின்ற சனத்தொகையை உள்வாங்கப் போதுமான வீடுகள் இருப்பதில்லை. மறுபுறம் வீட்டு வாடகை அதிகரிக்கின்றது. வீடுகளுக்கான கேள்வி அதிகரிக்கின்றது. வழங்கலை விடக் கேள்வி அதிகரிக்கும் போது வீட்டு விலைகள் பன்மடங்கு அதிகரிக்கின்றன. இவை அனைத்தும் ஒரு வீட்டில் அளவுக்கதிகமானோர் வசிப்பதற்குக் கட்டாயப்படுத்தப்படுகிறது. இன்னொருபுறம் நகர்கள் பெருநகரங்களாக மாற்றமடைகின்ற போதும் அவற்றுக்குத் தேவையான அடிப்படைச் சேவைகளையும் தேவைகளையும் நிறைவுசெய்யக் கூடிய நிலையில் அரசாங்கங்கள் இல்லை. குறிப்பாக மூன்றாமுலக நாடுகள் வேகமாக அதிகரிக்கின்ற நகரமயமாதலுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையோ சமூகநலன்களையோ வழங்கக் கூடிய நிலையில் இல்லை.
நெருக்கடி இத்துடன் நின்றுவிடவில்லை; விரிந்து பெருகும் நகரங்களுக்குப் போதுமான சக்தியை வழங்கக்கூடிய நிலையில் அரசாங்கங்கள் இல்லை. குறிப்பாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்கள் இந்நெருக்கடியை அதிகம் எதிர்நோக்குகின்றன. ஒருபுறம் சனத்தொகை அதிகரிப்பு; மறுபுறம் புதிய தொழிற்றுறைகள், தொழிற்சாலைகள் என்பன நகரங்களை மையப்படுத்தியே உருவாகின்றன. இவை சக்தி நெருக்கடிகளுக்குக் களமமைக்கின்றன. இதேபோலவே நீருக்கான நெருக்கடியும் உருவாகின்றது.
இவை நகரமயமாதலின் விளைவுகளின் ஒருபக்கம் மட்டுமே. கிராமங்கள் அதன் வாழ்வியலையும் இயல்பையும் மெதுமெதுவாக இழந்து வருகின்றன. நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியும் நகரம் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளின் எழுச்சிக்கு வழி செய்தன. சமுதாயங்களின் மீது நகரங்களின் ஆதிக்கம் நிலவுடைமைக் காலம் முதலே இருந்து வந்தது. என்றாலும் முதலாளித்துவத்தின் வருகை அந்த ஆதிக்கத்தை இரண்டு வழிகளில் வலுப்படுத்தியது. ஒன்று, ஏற்கெனவே இருந்து வந்த பொருளாதார அரசியல் வலிமை காரணமான ஆதிக்கத்தின் துரித வளர்ச்சியாலானது. மற்றது, கிராமியப் பொருளாதாரத்தின் மீதும் சமூக இருப்பின் மீதும் நகரத்தின் தாக்கத்தின் விளைவாகக் கிராமப் பொருளாதாரத்தின் சிதைவும் சீரழிவும் காரணமானது.
கிராமத்திலிருந்து நகரம் நோக்கிய இடப்பெயர்வு நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான சமமின்மையை மேலும் மோசமாக்கியது. அதற்கும் மேலாகத் தொலைத் தொடர்பாடல் வசதிகளின் பெருக்கமும் அச்சிடப்பட்ட நூல்களதும் ஏடுகளதும் வருகையும் வளர்ச்சியும் ஒலி-ஒளி ஊடகங்களது பெரு வளர்ச்சியும் கிராமங்கள் மீது நகரத்தின் ஆதிக்கத்தை மட்டுமன்றி அந்நியப் பண்பாட்டு ஆதிக்கத்தை நகரங்களின் வழியாக இல்லாது நேரடியாகவே கொண்டு செல்லவும் வழி செய்துள்ளன.
அதற்கும் மேலாக உற்பத்தி உறவுகளிலும் உற்பத்தி முறைகளிலும் ஏற்படுகின்ற மாற்றங்கள் கிராமியப் பண்பாட்டைப் பாதிக்கின்றன. புலப்பெயர்வும் நேரடியானதும் மறைமுகமானதுமான பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களுக்கான கருவியாகிறது.
கிராமம் என்பது வரலாற்றில் இறுகி, உறைந்து போன சமூகமல்ல என்பதை நாம் சில நேரங்களில் மறந்து போய் விடுகிறோம். இது கிராமத்தைப் பின்தங்கியதாகவும் தாழ்நிலையில் உள்ளதாகவும் கருதுவோருக்கும் பொருந்தும். கிராமத்தைப் புனிதமானதும் நவீனத்துவத்தால் மாசுபடாததுமான ஓர் இலட்சியச் சமூக அமைப்பு என்று கருதுவோருக்கும் பொருந்தும். உலகமயமாதல் சூழலில் கிராமங்களின் பொருளாதாரச் சீரழிவும் சமூகச் சீரழிவும் தவிர்க்க இயலாதவை.
உலகமயமாக்கல் பல்வேறு வழிகளில் நகரமயமாதலை துரிதப்படுத்தியுள்ளது. மறுபுறம் கிராமங்களுக்குள் ஊடுருவி, நகரங்களின் எழில்மிகு வாழ்க்கை பற்றிய கனவை விதைத்து, கிராமங்களில் நுகர்வுப் பண்பாடு தடைகள் எதுவுமற்றுக் கடை விரிப்பதற்கு வழிசமைத்தது. உலகமயமாக்கல் சந்தைகளை ஒன்றிணைத்து மனிதர்களைப் பிரிக்கிறது. ஏனெனில் மனிதர்கள் ஒன்றுபடாமல் அவர்கள் தனித் தனியான நுகர்வோராக இருக்கும்போதுதான் அவர்களை உலகச் சந்தையின் நோக்கத்துக்காக சிறந்த முறையில் பயன்படுத்த முடியும். இதன் ஒரு செயற்பாட்டுக்கான வழிவகையாக நகரமயமாதல் நடைபெறுகிறது.
உலகமயமாக்கலின் விளைவால் சந்தை பரவலாக விரிவுபடுத்தப் பட்டதோடு, தீவிரமாக ஆழப்படுத்தப்பட்டது. எனவே, முன்னாள் கொலனிகள் ஓளரவு தொழில்மயமாவதும், உலகின் பெரும்பகுதி விவசாயம் பணப் பொருளாதார அடிப்படையில் மாறுவதும் பணச்சந்தைக்கு அல்லாத விவசாய உற்பத்தி உலகில் குறைந்து வருவதும் தேவையாகின. இதைச் சாத்தியமாக்கும் முக்கிய கருவியாக நகரமயமாதல் பயன்பட்டது.
நகரமயமாதல் ‘நவீனமாதல்’ என்ற கவர்ச்சியான சொல்லாடலுடன் மூன்றாமுலக நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. நவீனமாதல் உலகமயமாக்கலை நாடுகளுக்குள் எடுத்துச் செல்ல இலகுவான வழியாகியது. நிதி மூலதனம் தனது கரங்களை நீட்டுவதற்கு வசதியாக அதற்கான தொடக்கப்பணிகளை நவீனமாதல் செய்து கொடுத்தது. இதன்வழி கைத்தொழில் வளர்ச்சி முன்மொழியப்பட்டது. பல்தேசியக் கம்பெனிகள் தங்கள் தொழிற்சாலைகளை மூன்றாமுலக நாடுகளின் நகர்களில் நிறுவத் தொடங்கின. குறைந்த ஊதியத்துக்கு ஆட்கள் பெருமளவில் கிடைத்தார்கள். உழைப்புச் சுரண்டல் தங்குதடையின்றி நடந்தது. உழைப்பாளர்கள் கிராமங்களில் இருந்து நகருக்கு இடம்பெயர்ந்தார்கள். இன்னொருபுறம் சேவைத்துறைத் தொழில்களும் மெதுமெதுவாகத் தொடங்கின. அவை ‘வெள்ளைக் கொலர்’ தொழில்கள் என அறியப்பட்டதன் ஊடு இளந்தலைமுறையினரைக் கவர்ந்தன.
கிராமங்களில் உள்ளவர்கள் நகரங்கள் நோக்கி நகரத் தொடங்கியதன் பின் விவசாயம், சிறு கைத்தொழில், மீன்பிடி ஆகிய துறைகள் தங்கள் செல்வாக்கை இழந்தன. இன்னொரு வகையில் அரசாங்கங்கள் இத்துறைகளைப் புறக்கணித்ததன் ஊடு, இத்துறைகளின் எதிர்காலத்துக்கு சாவுமணி அடித்தன. இதனால் இத்துறைகளில் பணியாற்றியவர்கள், பணியாற்ற விரும்பியவர்கள் தவிர்க்கவியலாமல் புதிய தொழில்களைத் தேட வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டார்கள். அவர்களும் நகரங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். அரசாங்கங்கள் அதன் முக்கியமான துறைகள் மீது கவனம் செலுத்தாத வண்ணம் பார்த்துக் கொள்ளப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் ‘கட்டமைப்புச் சீர்திருத்தங்களைக்’ கோருவதன் மூலம் அரசாங்கத்தின் வகிபாகத்தை வலுவிழக்கச் செய்தது.
2014 ஆம் ஆண்டு உலக சனத்தொகையில் 52 சதவீதமானோர் நகர்களில் வசித்தார்கள். 2050 ஆம் ஆண்டளவில் இத்தொகை 66 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்படுகிறது. இவ்வதிகரிப்புக்கு நகரங்கள் தயாராக இருக்கின்றனவா என்பதே மேலெழும் வினாவாகும். இதை நோக்கி நகரங்கள் எத்திசையில் பயணிப்பது என்பதும் கிராமங்களை எவ்வாறு தக்க வைப்பது என்பதுமே சவாலுக்குரிய பணிகளாகும்.
இவ்விடத்தில் சிலவற்றை ஆழ்ந்து நோக்குதல் பயன் தரும். நகரமயமாதல் சரியா பிழையா? என்பதல்ல கேள்வி. நகரமயமாதல் தன்னளவிலே தீயது என்பது முழுமையான வாதமுமல்ல. நகரமயமாதல் நடைபெற்ற வண்ணமுள்ளது. அதை நிறுத்தி எதிர்த்திசையில் பயணிக்க இயலாது. இதில் கவனிக்க வேண்டியது நகரமயமாதலின் நடைமுறை பற்றியது. நகரமயமாதல் ஏன் நடக்கிறது? என்பதே இங்கு கேட்க வேண்டிய கேள்வியாகிறது. எந்தத் தேவையையும் நலன்களையும் கருத்தில் கொண்ட நகரமயமாதல் என்பதே கவனத்துக்குரியது. ஒரு நாட்டின் மக்களின் நன்மைக்கான நகரமயமாக்கல் என்பதற்கும் சர்வதேச நிதி மூலதனத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நகரமயமாக்கல் என்பதற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உண்டு. இப்போதைய நகரமயமாதல் முதலாளித்துவ உலகமயமாக்கலின் ஒரு பகுதியாகி விட்டது. நகரங்கள் தன்னைப் பெருப்பிக்கும் போது அதனுடன் சேர்ந்து சேரிகளும் வீடின்மையும் பெருகுகின்றது. நகரமயமாதலின் விளைவாகவே சேரிகள் உருவாகிப் பெருகுகின்றன என்ற உண்மை பல சந்தர்ப்பங்களில் மறைக்கப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் நகரங்களில் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் சேரிகளில் வாழ்கின்றனர். நகரமயமாதல் இன்னொரு வகையில் வறுமையையும் கொண்டு வந்து சேர்க்கின்றது. உலகில் பட்டினி என்பது ஒருவித நகர்ப்புற அம்சமாக மாறியுள்ளது. ஆபிரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பாக யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், பருவநிலை மாற்றங்களின் விளைவுகள் ஆகியவற்றால் பெருந்தொகையான மக்கள் அடிப்படை வசதிகளை வேண்டி நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இதன் விளைவால் ஆபிரிக்க நகர்களில் வாழ்பவர்களில் 72 சதவீதமானவர்கள் சேரிகளில் வாழ்கின்றார்கள். பருவநிலை மாற்றங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில்,
பருவநிலை மாற்றங்களின் விளைவால் நகரங்களில் வாழும் 77 மில்லியன் மக்கள் மேலதிகமாக வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி தெரிவிக்கிறது. இது நகரங்களில் வாழும் மனிதர்களின் எதிர்காலம் குறித்த விடைகளற்ற வினாக்களைத் தோற்றுவித்துள்ளது. இன்று கொலனியம், நவகொலனியமாகத் தன்னை முற்றாக மீள வடிவமைத்துள்ளது. பழைய வகையான கொலனியாட்சி முறையை ஏகாதிபத்தியத்தால்த் தொடர இயலாது. எனவே, உலகமயமாதல் மூலம் நவகொலனியத்தை அது வலுப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மூன்றாமுலக நாடுகள் சர்வதேச நிதி மூலதனத்தின் கோரப்பிடிக்குள் வந்துள்ளன. எனவே, சுயாதீனமாக முடிவெடுக்கும் நிலையில் நாடுகள் இல்லை. நகரங்களில் வாழும் ஒவ்வொருவரும் கடந்த ஒரு தசாப்த காலத்தில் தாங்கள் வாழ்ந்த நகரங்கள் எவ்வாறான மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன என்பதை நன்கறிவர்.
2008 இல் தோற்றம் பெற்ற உலகப் பொருளாதார நெருக்கடி நகர்களில் வாழ்பவர்களுக்கு மிகவும் சோதனையான காலத்தைப் பரிசளித்தது. நகரங்கள் பற்றிய பேச்சில் கிராமங்களை நாம் மறந்து விடுகிறோம். கிராமங்கள் மெதுமெதுவாக தன்னை இழக்கின்றன. அவையும் நகரமாக மாறுவதற்குத் தயார் செய்யப்படுகின்றன. உலகமயமாக்கல் - நிதி மூலதனம் - நவீனமயமாக்கல் என்ற கூட்டணி கிராமங்களையும் விட்டு வைக்கத் தயாரில்லை. ஒரு சமூக அடையாளத்தின் பிரதானமான அங்கம் அச்சமூகம் வாழ்ந்த கிராமங்களும் அதன் பண்பாடுமேயாகும். அதை இழந்துவிட்ட பிறகு எமக்கென்ற அடையாளங்கள் எதுவுமே இருக்கப் போவதில்லை. ஏனெனில், எங்கள் கிராமங்களில் வேறூன்றி நின்றபடியே பழம்பெருமையும் இன்ன பிறவும் பேசுகிறோம்.
நவீனத்துவம் எங்களை ‘உலகக் குடிமகனாக’ மாற்றுவதற்கு அழைத்துச் செல்கிறது. எங்கள் அடையாளங்களை அழித்துவிட்டு, உலகக் குடிமகன் சர்வதேச நிதி மூலதன ஒழுங்கமைப்பில் இன்னொரு பண்டமாக நோக்கப்படுகிறான். விற்பனைச் சரக்காகின்றான். இதைத்தான் வேண்டி நிற்கிறோமா என்பது நாம் ஒவ்வொருவரும் நமக்குள் கேட்க வேண்டிய வினாவாகும். நகரங்கள் உலகக் குடிமகன்களை பண்டங்களாக வரவேற்கக் காத்திருக்கின்றன. நாம் வேண்டும் பூவுலகம் இதுதானா?
- See more at: http://www.tamilmirror.lk/185237/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%A9-#sthash.eyu7WrpT.dpuf