Monday, May 16, 2022

'பண்பாடும் வீட்டு வடிவமைப்புகளும்' - வ.ந.கிரிதரன் -


 அண்மையில் எழுபதுகளில் யாழ் இந்துவில் கல்வி கற்று , உலகமெங்கும் பரந்து வாழும் மாணவர்களில் சிலர் உருவாக்கிய அமைப்பான 'ஓராயம்' அமைப்பின் ஆதரவில். 'பண்பாடும் வீட்டு வடிவமைப்புகளும்' என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட மெய்நிகர் நிகழ்வினைக் கனடாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் தர்மகுலராஜா ஒருங்கிணைந்து நடத்தினார். இந்நிகழ்வில் கட்டடக்கலைஞர்களான மயூரநாதன் (யாழ்ப்பாணம்), குணசிங்கம் (ஆஸ்திரேலியா) மற்றும் சிவகுமார் (கனடா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கட்டடக்கலையும் அதன் மீதான பண்பாட்டின் தாக்கமும் பற்றிய நல்லதொரு நிகழ்வு. இதில் முதலில் உரையாற்றிய மயூரநாதன் வீட்டு வடிவ அமைப்பில் பண்பாட்டுக் கூறுகளான உணவுப்பழக்கம், அன்றாடச் செயற்பாடுகள், சிறப்பு நிகழ்வுகள், நம்பிக்கைகள், குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்புகள், வெளியாருடனான தொடர்புகள், தனிமைக்கான தேவை மற்றும் சமூகத்தகுதி வேறுபாடுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி , அவற்றில் குடும்ப உறுப்பினர்கள், வெளியாருடனான தொடர்புகள், சமூகத்தகுதி வேறுபாடுகள் என்பவற்றின் அடிப்படையில் நல்லதோர் உரையினைப் போதிய வரைபடங்கள், புகைப்படங்கள் உதவியுடன் நடத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய கட்டடக்கலைஞர் குணசிங்கம் கட்டடக்கலைஞராகப் பணியாற்றிய தனது சொந்த அனுபவங்கள், தனது இளமைக்காலத்தில் தான் அனுபவித்த யாழ்ப்பாண வீடுகள், மாந்தர்களுடனான தொடர்புகள் பற்றி நனவிடை தோய்ந்து, தன் உள்ளத்தில் சுமைகளாகக் காவிக்கொண்டிருக்கும் தன் இளமைக்கால வீடுகளின் பண்பாட்டுக் கூறுகளைத் எவ்விதம் புதிதாக அவர் வடிவமைக்கும் வீடுகளில் பாவித்தார் என்பதை உதாரணங்களுடன் எடுத்துக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய கட்டடக்கலைஞர் சிவகுமார் பண்பாட்டுக் கூறுகள் எவ்விதம் நவீனக் கட்டடக்கலையில் உள்வாங்கப்பட்டுள்ளன என்பதை உதாரணங்களுடன் எடுத்துக்காட்டினார். அவர் தனது உரையில் 'வெப்பமண்ட நவீனக்கட்டக்கலை'யின் தந்தையென்று கருதப்படும் கட்டடக்கலைஞர் ஜெஃப்ரி பாவா எவ்விதம் நாற்சார அமைப்பினத் தனது வீட்டின் அமைப்பில் உள்வாங்கினார் என்பதைச் சுட்டிக்காட்டினார். கூடவே ஒரு காலத்தில் நாற்சார வீடுகளைக் கட்டிய யாழ்ப்பாணத் தமிழர்கள் இன்று அதனைக் கட்டுவதாகத் தெரியவில்லையென்றும், ஆனால் கொழும்பில் கட்டப்படும் நவீன வீடுகள் பலவற்றில் மிகவும் சிறப்பாக அக்கூறு உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை உதாரணங்களுடன் விளங்கப்படுத்தியும் தனது உரையினை நிகழ்த்தினார்.

நிகழ்வு பற்றிய அறிவித்தலில் கட்டிடக் கலை என்னும் பதம் பயன்படுத்தப்பட்டதையும், நிகழ்வில் சிலர் கட்டிடக்கலை என்று பாவித்ததையும் அவதானித்தேன். உண்மையில் கட்டிடக்கலை என்பது சரியான பதமல்ல. கட்டடக்கலை என்பதே சரியான பதம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். கட்டிடக் கலை என்பது கட்டு + இடம் என்பதன் புணர்ச்சி. கட்டுவதற்குரிய இடம். கட்டு + அடம் என்பதன் புணர்ச்சியே கட்டடம். அடம் என்பது அடுக்கு என்று அர்த்தப்படும். அத்திவாரம், அதற்கு மேல் சுவர், மாடம் , கூரை என்று அடுக்கிக் கட்டுவதால் கட்டடம் என்னும் பெயர் உருவானது. எனவே கட்டடக்கலை என்பதே சரியான சொற்பதம்.

நல்லதொரு நிகழ்வினை வழங்கிய ஓராயம் அமைப்பு பாராட்டுக்குரியது.

நிகழ்வுக்கான காணொளி: https://www.youtube.com/watch?v=Wiy_LebjWnU

ngiri2704@rogers.com

https://www.geotamil.com/index.php/2021-02-11-18-08-43/6895-2021-10-09-19-11-21 

கட்டடக்கலலைஞர் அஞ்சலேந்திரனும் இந்து/திராவிடக் கட்டடக்கலையும்!


 அண்மையில் 'Kälam / Tradition & Heritage /C.Anjalendran / The Architecture of the Tamil Hindus of Sri Lanka' என்னும் தலைப்பிடப்பட்ட , இலங்கைக் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனுடான நேர்காணலை உள்ளடக்கிய காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சிலவற்றைப்பற்றிய என் கருத்துகளின் பதிவிது. காணொளிக்கான இணைப்பினை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.


முன்னாள் வவுனியா பா.உ சி.சுந்தரலிங்கத்தின் பேரனும் , கட்டடக்கலைஞருமான அஞ்சலேந்திரனின் உரையிது. அஞ்சலேந்திரன் புகழ்பெற்ற இலங்கை, தெற்காசியக் கட்டடக்கலைஞர்களிலொருவர். இங்குள்ள காணொளியில் அஞ்சலேந்திரன் இந்துக் கட்டடக்கலை பற்றிக் கூறிய கருத்துகளிலிருந்து அவருக்கு இந்துக்கட்டடக்கலை பற்றி மேலோட்டமான புரிதல்தான் உள்ளதோ என்று சந்தேகப்படுகின்றேன். உதாரணத்துக்கு அவர் கோயில் விமானத்தைக் கோபுரமாகக் கருதிக் கூறிய கருத்துகள். பொதுவாகக் கட்டடக்கலை கற்கைநெறி மேனாட்டுக் கட்டடக்கலையை அடிப்படையாகக்கொண்டு கற்பிக்கப்படுவது. அதில் பாரம்பரியக் கட்டடக்கலை ஆழமாகக் கற்பிக்கப்படுவதில்லை. பெளத்தக் கட்டடக்கலை , இந்துக் கட்டடக்கலை பற்றியெல்லாம் கற்பிக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவும் அவரது புரிதலில் தெளிவின்மை ஏற்பட்டிருக்கலாம்.

இதிலவர் கோபுரம் பற்றிக் கூறியவற்றைப் பார்க்கலாம். முதலில் கூறுகின்றார் 1080 இல் சோழரால் தஞ்சைபெரிய கோவிலில் அறிமுகப்படுத்தபட்டதுதான் கோபுரம் என்கின்றார். அதன் பின் இன்னுமோரிடத்தில் கூறுகின்றார். இலங்கைத்தமிழர்களின்
கொயில் அமைப்பு கேரளாவுடன் அதிகம் தொடர்புள்ளது தமிழகத்துடனல்ல என்கின்றார். இன்னுமோரிடத்தில் கூறுகின்றார் தமிழ்நாட்டில் கோயில் வாசலிலுள்ளது கோபுரம் என்கின்றார். மேலுமோரிடத்தில் இலங்கையில் கோபுரம்


அறிமுகப்படுத்தப்பட்டது கடந்த இருபது , முப்பது வருடங்களில்தானென்கின்றார் .

தஞ்சைபெரிய கோயிற் காட்சி.. விமானம் -கோபுரம் பற்றிய இவரது கூற்றுகள் அவை பற்றிய இவரது அறியாமையை[ப் புலப்படுத்தின. முதலாம் இராசராசனின் தஞ்சைப்பெருவுடையார் ஆலயத்திலிருப்பது கோபுரமல்ல. அது விமானம். தஞ்சைப்பெரிய கோயில் , கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவற்றின் காலகட்டம் ஆலய வடிவமைப்பில் விமானங்கள் கோலோச்சிய காலகட்டம். விமானம் என்பது ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்தின் மேல் (கருவறையின் மேல்) அமைக்கப்படுவது. அக்காலச்சோழர் காலத்தில் அமைந்திருந்த ஆலயங்களில் கோபுரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. பிற்காலச்சோழர்களின் காலகட்டத்திலேயே அவற்றின் முக்கியம் அதிகரிக்கத்தொடங்கிப் பின்னர் விஜயநகரசப் பேரசு காலத்தில் , நாயக்கர் கோலத்தில் அவை ஆலய அமைப்பில் கோலோச்சத்தொடங்கின. விசயநகரப்பேரரசு காலத்தில்தான் ஆலயங்கள் பெருமண்டபங்களையும் கொண்டிருக்கத்தொடங்கின. மேலும் இவர் கூறுவதுபோல் அண்மைக்காலத்தில்தான் இருபது , முப்பது வருடங்களில்தான் யாழ்ப்பாணத்தில் கோபுரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது தவறானது என்பது யாவருக்குமே தெரியும்.

இது தவிர இலங்கைத் தமிழருக்கும், கேரளாவுக்குமிடையிலான தொடர்புக்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார். அதனையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கைத்தமிழருக்கும் கேரளாவுக்குமிடையில் தொடர்புகள் இருந்தன. அவற்றின் விளைவாக இருபக்கமும் தாக்கங்கள் ஏற்பட்டன. அவை இயல்பானவை. அதற்காக இவர் தமிழர்களின் ஒட்டுமொத்த வரலாற்றையுமே மாற்றி விடுவது ஏற்கத்தக்கதல்ல. முப்பது , நாப்பதுகளில் யாழ்ப்பாணத்துக்கும், கேரளாவுக்குமிடையிலான வர்த்தகத்தொடர்புகள் உச்ச நிலையிலிருந்ததை அக்கால ஈழகேசரிப் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். உதாரணமாகப் புகையிலை வர்த்தகத்தைக் குறிப்பிடலாம்.


இன்னுமொரு விடயத்திலும் இவர் தவறிழைக்கின்றார். சிங்களவர்கள், தமிழர்கள் மத்தியில் ஒரு காலத்தில் கி.பி ஆரம்ப நூற்றாண்டுகளில் அவ்விதமான சூழல் இருந்ததை மணிமேகலைக் காப்பியம் எடுத்துக்காட்டும், சிங்கள மன்னன் கஜபாகு கண்ணகி வழிபாட்டை இலங்கைக்குக்கொண்டு வந்தது எடுத்துக்காட்டும். சிங்களவர்கள் அதாவது பெளத்தர்கள் மத்தியில் பத்தினி வழிபாடு ஏற்பட அது முக்கிய காரணம். சிங்கள மக்கள் மத்தில் ஏற்பட்ட பத்தினி வழிபாட்டை ஒட்டுமொத்தமாகத் தமிழ் இந்துக்கள் மத்தியிலும் ஏற்பட்டதாகத் தீர்மானித்துக் கருத்துகளைக் கூறுகின்றார் அஞ்சலேந்திரன். அது தவறானது. தமிழர்கள் மத்தியிலுல் கண்ணகி வழிபாடு அக்காலகட்டத்தில் ஏற்படத்தான் செய்தது. தமிழ்ப்பகுதிகளிலுள்ள கண்ணகியம்மன் ஆலய வழிபாட்டை அதற்குதாரணமாகக் காட்டலாம்.


இவ்விதமானதொரு சூழலில் இலங்கைத்தமிழர்கள் அதிகமாக தமிழகச்சோழர்களின், பாண்டியர்களின் பண்பாட்டுத் தாக்கங்களுக்கே ஆட்பட்டிருந்தார்கள். நல்லூர் சோழர் காலத்திலேயே பிரபலமான நகராக விளங்கியது. யாழ்ப்பாண அரசின் உருவாக்கத்தில் பாண்டியரின் தாக்கம் பலமாக இருந்ததையே வரலாறு எடுத்தியம்புகின்றது. நல்லூரில் அமைந்திருந்த முருகன் ஆலயக் கட்டடம் இடிக்கப்பட்டு , கோட்டை கட்டப் போர்த்துக்கீசர் பாவித்தனர் என்பது வரலாறு. யாழ்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட சோழர் காலக்கல்வெட்டொன்று நல்லூரை நல்லை மூதுரென்கின்றது.  இவ்விதமாக வரலாறிருக்க அஞ்சலேந்திரன் வரலாற்றையே திரிக்கின்றார்.

- கோபுரம் -

மேலுமின்னொன்றையும் கூறுகின்றார். அது: இலங்கைத் தமிழர்களின் புனித நூல் இராமாயணமோ மகாபாரதமோ அல்ல. சிலப்பதிகாரமே. சிலப்பதிகாரத்தைத் தமிழர்கள் யாருமே புனித நூலாகக் கொள்வதில்லை. ஐம்பெருந் தமிழ்க் காப்பியங்களிலொன்றாகவே கொள்வார்கள். சிலப்பதிகாரம் உருவான காலத்தில் கூடச் சேரர்கள் தமிழர்கள். சேர நாடு தமிழகத்தின் ஒரு பகுதி. சேரர் மூவேந்தரில் ஒரு பிரிவினர்.

அஞ்சலேந்திரன் இலங்கைத்தமிழர்களின் , தமிழகத்தின் வரலாறு, இந்து, திராவிடக் கட்டடக்கலை பற்றிய ஞானம் நிறையவே பெற வேண்டியிருப்பதை அவரது இக்காணொளிக் கருத்துகள் புலப்படுத்துகின்றன.



கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனின் நேர்காணலையுள்ளடக்கிய காணொளி: https://www.youtube.com/watch?v=0QU8m4VOxXY&fbclid=IwAR3DS7PjLOUvrWe6a0nuJ9k4cqoqVwz5lgH3__zjNmEP_sZd9DVhKKN7HJ4


https://www.geotamil.com/index.php/2021-02-11-18-08-43/6038-2020-07-03-03-41-28 

இலங்கையின் முதலாவது பெண் கட்டடக்கலைஞர் மினட் டி சில்வா (Minnette de Silva): அவரது வாழ்வும் , பணியும் பற்றியொரு நோக்கு!


 இலங்கையின் பயிற்றுவிக்கப்பட்ட முதலாவது  பெண் கட்டடக்கலைஞர் மின்னட் டி சில்வா உலகின் கவனத்துக்குள்ளாகிய முக்கியமான பெண் கட்டடக்கலைஞர். சுதந்திரமடைந்த இலங்கையின் கட்டடக்கலையின் முன்னோடியாகவும் கருதப்படுபவர்.  1948இல் முடிக்குரிய பிரித்தானிய கட்டடக்கலை நிறுவனத்தின் (Royal Institute of British Architects - RIBA)(தோழராகத் (Associate) தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஆசிய நாட்டுப் பெண் என்னும் பெருமையும் இவருக்குண்டு. உலகக் கட்டடக்கலைத் துறையில் இவரது முன்னோடிப்பங்களிப்பு 'வெப்பமண்டலப் பிரதேச நவீனத்துவம்' ('regional modernism for the tropics') என்னும் கட்டடக்கலைப்போக்கிலாகும்.


பெப்ருவரி 1, 1918இல் கண்டியில் பெளத்தச் சிங்களத் தந்தைக்கும் (ஜோர்ஜ் ஈ.டி,சில்வா), கிறித்தவ பேர்கர் தாய்க்கும் (ஆக்னெஸ் நெல்) பிறந்த கலப்பினக் குழந்தை இவர். தந்தையார் பிரபல்யமான கண்டிய  அரசியல்வாதி.  இலங்கைத் தேசியக் காங்கிரஸின் தலைவராகவும், அரசில் உடல்நலத்துறை அமைச்சராகவும்  விளங்கியவர். இவரத குடும்பத்தில் மூன்று குழந்தைகள்.  மின்னட் டி சில்வாவே கடைசிக்குழந்தை. இவரது சகோதரி அனில் டி சில்வா ஒரு கலை விமர்சகரும் , வரலாற்றாய்வாளராகவும் விளங்கியவர். சகோதரரான ஃப்ரெடெரிக் டி சில்வா வழக்கறிஞர். கண்டியின் முதல்வராகவும் விளங்கியவர். பின்னர் இலங்கைப்பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அவர் பிரான்சுக்கான இலங்கைத்தூதுவராகவும் பின்னாளில் பதவி வகித்தார்.



மின்னட் டி சில்வாவின் முக்கியமான பங்களிப்புகளாகக் கட்டடக்கலைத்துறைப்பங்களிப்பு, கட்டடக்கலை வரலாற்று ஆய்வுப்பங்களிப்பு, இதழியற் பங்களிப்பு , சமூக, அரசியற் பங்களிப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இங்கிலாந்தில் புனித  மேரிக் கல்லூரியில் படிப்பை முடித்துக்கொண்டு திரும்பிய மின்னட் டி சில்வா கொழும்பில் கட்டடக்கலைத்துறையில் பயிற்சியைப்பெற முடியாததால் , பம்பாயிலுள்ள 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத் தொடர்வதற்காகச் சென்றார். ஆனால் அவர் மெட்ரிகுலேசன் சித்தியடையாததால்  அவர் ஆரம்பத்தில் பம்பாயை மையமாகக்கொண்டியங்கிய  மிஸ்ட்ரி & பெட்வர் (Mistri and Bhedwar) என்னும் நிறுவனத்தில் கலைத்துறையில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அங்கு பயிற்சி பெறுகையில் பெரின் மிஸ்ட்ரி (Perin Mistry)  மற்றும் அவரது நண்பரான மினூவுடன் (Minoo) நட்பையேற்படுத்தி கட்டடக்கலையினைப் போதிக்கும்  கல்வி நிறுவனமொன்றில் பிரத்தியேக வகுப்புகளைக் கட்டடக்கலைத்துறையிலெடுத்தார். இதன் பின்னரே 'Sir Jamsetjee Jeejebhoy' கலைக்கல்லூரியில் தன் கல்வியைத்தொடர்ந்தார்.

அங்கு அவர் கல்வி கற்றுக்கொண்டிருக்கையில் கலாச்சார, அரசியல் துறைகளில் ஈடுபாடுள்ள வட்டமொன்றில் இணைந்து செயலாற்றினார். அவ்வட்டத்தில் எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த், சிதார் வாத்தியக் கலைஞரான ரவிசங்கர் ஆகியோரும் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தனர். இதனால் அவர்களுடன் மினட் டி சில்வாவுக்கும் நட்பு உருவானது. அக்குழு வெளியிட்ட சஞ்சிகையான 'மார்க்' (Marg)) இதழின் , கட்டடக்கலைக்கான ஆசிரியராக மின்ட டி சில்வா பங்காற்றினார். நவீனக் கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பிரதான விடயங்களாகக்கொண்டு வெளியான இதழ் மார்க் என்பதும் குறிப்பிடத்தக்கது. அக்காலகட்டம் இந்தியாவின் சுதந்திரப்போராட்டம் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த காலகட்டம். மகாத்மா காந்தியின் போதனைகளால் நடத்தப்பட்ட பாத யாத்திரையொன்றினுள் கலந்துகொண்டதற்காகக் கல்வி கற்றுக்கொண்டிருந்த கல்வி நிலையத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார். பாத யாத்திரையில் கலந்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்காததன் காரணமாகவே அவர் அவ்வாறு வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து , பெங்களூரில் வசித்து வந்த கட்டடக்கலைஞரும், நகரத்திட்டமிடல் வல்லுநருமான ஓட்டொ கொனிஸ்பேர்கர்  (  Otto Koenigsberger) என்பவரின் கட்டடக்கலை நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கு பணியாற்றுகையில் பீகாரில் நிறைவேற்றுவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த 'டாடா உருக்கு நகரத் திட்ட'த்துகாக முன்னுருவாக்கப்பட்ட வீடுகளுக்கான (Prefabricated house)வடிவமைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

பின்னர் இலங்கைக்குத் தற்காலிகப் பயணமொன்றின்போது சென்றிருக்கையில் , அப்போது இலங்கையின் ஆளுநராகவிருந்த ஹேர்வால்ட் ராம்ஸ்பொதமைச்  (Herwald Ramsbotham) சந்திக்கின்றார்.  அவர் இவரது கட்டடக்கலைத்துறைத் திறமையினை இனங்காண்கின்றார். இங்கிலாந்தின் கல்விக்குழுத்தலைவராகவுமிருந்த அவர் அப்பதவியைப்பாவித்து, கட்டடக்கலைச் சங்கம் மினட் டி சில்வா முடிக்குரிய பிரித்தானியக் கட்டடக்கலை நிறுவனத்தின் சிறப்புத் தேர்வினை எடுப்பதற்கு ஒழுங்கு செய்தார். உலக யுத்தத்தின் பின் திரும்பிய மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வு அது.

 

Karunaratne House

இங்கிலாந்தில் கட்டடக்கலைத்துறைத் தேர்வில் சித்தியடைந்த அவரை அரசியல்வாதியான அவரது தந்தையார் சுதந்திரமடைந்த நாட்டுக்குத் திரும்பி அதற்குப்பங்களிக்குமாறு  வலியுறுத்தினார், அதற்காகவே நாடு திரும்பிய மினட் டி சில்வா கண்டியில் தனியாகக் கட்டடக்கலைத்துறையில் இறங்குகின்றார். போதிய நிதியற்ற நிலையில் சுயமாக அவர் கட்டடக்கலைஞராகத் தன் தொழிலை ஆரம்பிக்கின்றார். அவர் வடிவமைத்த முதலாவது கட்டடம் ஒரு வீடு. கண்டியில் உருவாக்கப்பட்ட கருணாரத்தின வீடு என்றழைக்கப்பட்ட வீடுதான் அவர் முதன் முதலாகக் கட்டடக்கலைஞராக வடிவமைத்த கட்டடம் (1949). அவரது பெற்றோரின் நண்பர்களான வழக்கறிஞரான அல்ஹி, மற்றும்  லெட்டி கருணாரத்தின ஆகியோர் தமக்காக ரூபா 40,000 செலவில் வீடொன்றினை அமைத்துத்தருமாறு அவரிடம் கேட்டனர். அதற்காக அவர் வடிவமைத்த வீடான 'கருணாரத்தின வீடு' பின்னாளில் புகழ்பெற்ற அவர் வடிவமைத்த கட்டடங்களிலொன்றானது.  மலைப்பிரதேசமான கண்டியில் , தளங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் (Split -Level) அவ்விதம் முதன் முதலில் அமைக்கப்பட்ட வீடு அதுதான். அதுவும் இலங்கையின் முதலாவது பெண் கட்டடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட வீடென்ற பெருமையும் அதற்குண்டு. ஆணாதிக்கம் மிகுந்த துறையொன்றில், ஆண் பங்காளர் எவருமின்றி, காலூன்றிய கட்டடக்கலை நிறுவனம் என்னும் பெயரற்ற நிலையில் அவர் தன் தொழிலை ஆரம்பித்தபோது அத்துறை சார்ந்த சகல வர்த்தக நிறுவனங்களுக்கும் நம்பிக்கையைத்தரவில்லை. ஆனால் அவர் அவ்வீட்டினை வடிவமைத்து வெற்றிகரமாக உருவாக்கியதும்  (1951) அவர் கவனமௌம் அவர்பால் திரும்பியது. அடுத்த பத்தாண்டு காலம் அவர் புகழ்பெற்ற  கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கினார் எனலாம். இக்காலகட்டத்தில் முப்பது கட்டடங்களை அவர் வடிவமைத்ததாக அறியப்படுகின்றது.

Karunaratne House Drawings

அறுபதுகளில் அவரது கட்டடக்கலைத்துறைப்பங்களிப்பில் வீழ்ச்சி நிலவியதென்றே குறிப்பிடலாம். அதற்கு அவரது தாயாரின் மறைவும் (1962) அதனைத் தொடர்ந்து அவரடைந்த மனத்தளர்ச்சியும், அதன் விளைவாக ஏற்பட்ட உடல்நலச்சீர்கேடும் முக்கிய காரணங்கள். இதனைத்தொடர்ந்து அவர் அதிக காலத்தை வெளிநாட்டுப் பயணங்களில் செல்வழித்தார், இதன் விளைவா அவரால் தன் கட்டடக்கலைத்தொழிலில் அதிகக் கவனத்தைச் செலுத்த முடியவில்லை/ அப்பயணங்களின்போது அவர் கிரேக்கம், ஈரான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணித்தார்.  இதன் பிறகு நாடு திரும்பிய அவர் கவனம் உல்லாசப் பயணிகளுக்கான பெரிய ஹொட்டல்களை அமைப்பதில் திரும்பியது.  அவரது கட்டடக்கலை பற்றியும் , வாழ்க்கை பற்றியும்  ஃபுளோரா சாமுவல் (. Flora Samuel) எழுதிய லெ கோபுசியே: கட்டடக்கலைஞரும் பெண்ணியவாதியும் (Le Corbusier: Architect and Feminist) என்னும் நூலில் விவாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சுக் கட்டடக்கலைஞரும், நகர அமைப்பு வல்லுநருமான லெ கொபுசியே அத்துறைகளில் அன்று உலகப்புகழ்பெற்றிருந்தாரென்பதும், பஞ்சாபின் சண்டிகார் நகரை வடிவமைத்தவர் அவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மினட் டி சில்வாவின் நெருங்கிய நண்பர்களிலொருவராக விளங்கியவர் என்பதும் நோக்கத்தக்கது.

இக்காலகட்டத்தில் மினட் டி சில்வா வடிவமைத்த கட்டடங்களில் எண்ணிக்கை பதினொன்று (1960 -1974)

எழுபதுகளில் புதிதாகப் பதவியேற்ற சிறிமா பண்டாரநாயக்கவின் அரசின்மீது அதிருப்தியுற்ற மினட் டி சில்வா தன் கட்டடக்கலை நிறுவனத்தை மூடிவிட்டு இலண்டன் சென்றார். அங்கு ஃபிளாட் ஒன்றினை வாடகைக்கெடுத்து வசித்து வந்தார். அங்கு வசிக்கையில் அவரது கவனம் உலகக்கட்டடக்கலையின் வரலாறு பற்றித்திரும்பியது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கட்டடக்கலையின் வரலாறினைப் படிப்பவர்கள் பாவிக்கும் பிரதான நூல் பனிஸ்டர் ஃபிளெச்சரின் கட்டடக்கலையின் வரலாறு (Banister Fletcher's A History of Architecture) என்னும் நூலாகும்.  அந்நூலுக்கான 'தெற்காசியக் கட்டடக்கலை பற்றிய முழு அத்தியாயத்தையும் மினட் டி சில்வாவே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை எழுதியபோது இலண்டனில் வசித்த அக்காலகட்டத்தில்தான். கட்டடக்கலையின் வரலாறு பற்றிய அவரது ஆய்வுக்கட்டுரைப் பணி அவருக்கு ஹொங்ஹொங் பல்கலைகழகத்தின் கட்டடக்கலைப்பீடத்தில் ஆசியக்  கட்டடக்கலையின் வரலாறு பற்றிப் போதிக்கும் விரிவுரையாளர் பதவி அவருக்குக் கிடைக்க வழிவகுத்தது. அவர் அங்கு பணியாற்றியபோது (1975-1979) புதிய கோணத்தில் ஆசியக் கட்டடக்கலையைப் போதிக்கும் போக்கினை உருவாக்கினார். இவ்விதம் போதிப்பதில் அவரே முன்னோடியாகவும் விளங்குகின்றார்.

மீண்டும் 1979இல் நாடு திரும்பியதும் மீண்டும் தடைப்பட்டிருந்த தனது கட்டடக்கலைத் தொழிலை மீளுருவாக்கம் செய்ய முயற்சி செய்கின்றார். ஆனால் தகுதி வாய்ந்த இத்துறையில் பாண்டித்தியம் பெற்ற  பணியாளர்களைப்பெறுவதில் சிரமத்துக்குள்ளாகின்றார். இதுவே அவரது கட்டடக்கலைப் பங்களிப்பின் இறுதிக்காலகட்டமெனலாம். இக்காலகட்டத்தில் வடிவமைத்த முக்கியமான கட்டடங்கள் மூன்று, அவை: கண்டி கலை மையம் ( Kandy Arts Centre,சேகர் இல்லம் (Segar House, Ja-Ela -1991) & சிறிவர்தனா இல்லம் ( Siriwardene House, Colombo, 1992)

கண்டி கலை மையம்

கண்டி கலை மையம் பல மட்டங்களிலான கிடையான ஓட்டுக்கூரைகளையும், வாசல்களையும், திறந்த முற்றங்களையும் ,  மண்டபங்களையும், ஆடல் மற்றும் இசை அரங்கு மற்று கூட்டுவாழ்வுக்கான சுதேசிகளின் அம்சங்களையும் உள்ளடக்கிய கட்டடம். பொழுதுபோக்கையும் கட்டடக்கலையும் மனத்திலிருத்தி உருவாக்கப்பட்ட சிறந்த  கட்டடமே மின்ட டி சில்வாவின் கண்டிக் கலை மையம்.

இவ்விதமாக இலங்கைக் கட்டடக்கலைக்கு, உலகக் கட்டடக்கலைக்குப் பெரும்பங்காற்றியவர் மினட் டி சில்வா. கட்டடக்கலைஞரும் , நகரமைப்புத்திட்ட வல்லுநருமான  லெ கொபுசியே, நவீன ஓவியர் பிக்காசோ, எழுத்தாளர் முல்க்ராஜ்  ஆனந்த் போன்ற கலை,இலக்கிய ஆளுமைகளுடனெல்லாம் நட்பைப்பேணி  வந்தவர் மினட் டி சில்வா.

இவ்விதமாக உலகக்  கட்டிடக்கலைக்குப் பெருப் பங்காற்றிய  கட்டடக்கலைஞர்களிலொருவர் இலங்கையைச் சேர்ந்த மினட் டி சில்வா என்பதும் , அவர் 'வெப்பமண்டலப் பிரதேச நவீனத்துவம்' என்னும் கட்டடக்கலைப்பாணியை உருவாக்கிய முன்னோடியென்பதும் பெருமைப்படத்தக்கது. இவ்விதம் பெருமைக்குள்ளான மினட்  டி சில்வாவுக்கு  அவர் இறப்பதற்கு இரு வருடங்கள் முன்பு (1996) இலங்கைக் கட்டடக்கலைஞர்களுக்கான சங்கம் அவரது இலங்கைக் கட்டடக்கலைக்கான பங்களிப்புக்காகத் தங்க விருதினைப் பெறுகின்றார். ஆனால் அவர் மறைந்தபோது (1998) அவர் போதிய வருவாயற்று வருந்தினாரென்பது வருத்தத்துக்குரியது.

மினட் டி சில்வாவின் கட்டடக்கலைப்பங்களிப்பு!

1940s

Karunaratne House, Kandy (1947–51)

1950s

Jinaraja College, Gampola (1950–51)
Red Cross Hall, Kandy (1950) (Unbuilt)
Day Nursery Extension, Kandy (1950) (Unbuilt)
Pieris House I, Colombo (1952–6)
Daswani House, Kandy (1952)
House for buisnessman, Nawala (1952) (Never built)
Wickremaratna House, Colombo (1953)
Open Air Theatre for the Arts Council in Colombo, Colombo, (1953–54)[22]
C. H. Fernando House, Wellawatte (1954)[24]
Mrs. D. Wickremasinghe Flats, Colombo, (1954)
Senanayake Flats, Colombo, (1954–57)
Asoka Amarasinghe House, Kollupitiya (1954)
Dr. Chandra Amarasinghe Flats, Colombo, (1954–55)
Aluwihare Sports Pavilion, Police Park, Kandy (1955)
Bunnie Molamure House, Bolgoda, (1955)
Sri Rao House, Bangalore (1955) (Proposal)
Ivor Fernando Flats, Colombo, (1956)
V. Sachithanandam House, Colombo, (1956)
Mrs. N. De Saram House, Colombo, (1956–57)
Art Centre, Horana (1957) (Unbuilt)
Dr. Perera House, Colombo, (1957–58)
Watapuluwa Housing Scheme, Kandy (1958)
Amaduwa Game Reserve Lodges, Kandy (1958) (Proposal)
Sri Palee Open Air Theatre, University of Peradeniya, (1958–59)
Ceylon Match Factory (1958)[22]
General Habibullah Defence Academy Chief's House, India, (1958–59)
A. G. De Silva House, Cinnamon Gardens (1958–59)
Kalkudah Sea Side Resort, Kalkudah (1959)
Hikkaduwa Resr House, Hikkaduwa (1959) (Renovation)



1960s

Chandra Amarasinghe House, Colombo, (1960)
Dr. Hensman House, Ratmalana, (1960–61)
Dr. P. H. Amarasinghe House, Colombo, (1960)
Dr. Nadesan Villa, Kandy, (1960–61)
R. G. Senanayake House, (1960–61)(Unbuilt)
Keerthisinghe House, (1961)(Unbuilt)
Pieris House II, Colombo (1963)

1970s

Coomaraswamy Twin Houses, Colombo (1970)
Seneviratne House, Kandy, (1972)
Gamini Wickremasinghe Flat, Colombo, (1972)
Dr. and Mrs. PVJ Jayasekera House, Kandy, (1974)

1980s

Kandy Arts Centre, Kandy (1982–84)

1990s

Segar House, Ja-Ela (1991)
Siriwardene House, Colombo (1992)



உசாத்துணை:

 

1. நன்றி: விக்கிபீடியா ஆங்கிலப்பக்கம்

ngiri2704@rogers.com

https://www.geotamil.com/index.php/2021-02-11-18-08-43/6168--minnette-de-silva-