Saturday, June 22, 2019

கட்டடக்லையில் நுழை வாசல்கள்


கட்டடக்லையைப் பொறுத்த வகையில் நுழைவாசல்கள், கதவுகள்  எப்போதும் முக்கியமான பங்கு வகிக்ககின்றது. சிறிய அறையின் வாசல்கள் தொடக்கம் ஒரு நகரத்தின் நுழைவாசல் வரை  இவற்றுள் அடங்கும்.  பாதுகாப்பு, எல்லைகளை வரையறுத்தல் போன்ற காரணகளை கடந்து  நுழைவாசல்கள், மனிதர்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பௌதீக ரீதியில் கடந்து செல்வதை உறுதிப்படுத்துகின்றது. இந்தப் பௌதீக  மாற்றத்தால் மனித மனங்களில் ஏற்படுத்துகின்ற உளவியல் மாற்றம் முக்கியமானது. அதாவது ஒரு இடத்தை அடைகின்றோம் என்ற உணர்வை இந்த வாசல்கள் அல்லது கதவுகள் தருகின்றன

தமிழர்களைப் பொறுத்தமட்டில்  வாசல் என்றவுடன் மனதில் தோன்றுவது வீட்டின் பிரதான வாசல் ஆகும். பரந்த வெளிகளில் உலாவி விட்டு வீட்டிற்கு வரும் போது மனதில் ஏற்படுகின்ற மாற்றம் காரணமாக வீட்டின் வாசல்கள் எப்போதும் முக்கியத்துவம் பெறுகின்றது. பாரம்பரிய நம்பிக்கை அடிப்படையில்  பிரதான வாசலை அமைப்பதற்கு  மனையடி சாத்திரத்தை நம்புவதும், அதற்காக பிரத்தியேகமான மரங்களைப் பயன்படுத்துவதும், அதன் படி வாசல் அமைப்பதும்  இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது.

வீட்டு வாசல்கள் தவிர ஊர்களுக்கு வாசல்கள் அமைப்பது பல நூறு ஆண்டு காலமாக வழக்கத்தில் உள்ளது.  ஊரின் வாசல்கள் அமைக்கும் போது குறித்த ஊரில் உள்ள மக்களின் மத நம்பிக்கைகள், பண்பாடு மற்றும் பொருளாதார வளம் என்பவற்றைப் பொறுத்து வாசல்கள் அமைவதுண்டு.  கோட்டை அமைத்து, அதற்கு வாசல்கள் அமைப்பது  இலங்கையில் ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்திய குடியிருப்பிற்கான வாசல்களுக்கு நல்ல உதாரணம் ஆகும்.  தமிழ்நாட்டில்  கோவில்களை அடிப்படைய கொண்ட நகரங்களில் கோபுரங்கள் அந்த நகரத்தின் வாசல்களாக இருக்கின்றன. இதற்கு உதாரணமாக மதுரை மீனாட்சிஅ ம்மன் கோவிலின் வீதிகளில் காணப்படுகின்ற கோபுரங்களைக் குறிப்பிடலாம்.


இலங்கையில் தமிழர் பிரதேசங்களில்  ஊருக்கான வாசல்கள் என்று பிரத்தியேகமாக இல்லாது இருப்பினும்  பிற்பட்ட காலத்தில்  தமிழர் பிரதேசங்களிலும் ஊருக்கு வாசல்கள் அமைக்கும் வழக்கம் உருவாகியது, உதாரணமாக யாழ்ப்பாணம், வவுனியா  போன்ற  பிரதேசங்களிலுள்ள வரவேற்பு வாசல்களை உதாணமாக கொள்ளலாம்.



       
இவற்றைப்  போல் பிரபலமான வாசல்கள்  உலகெங்கும் உள்ளன. இந்தியாவின் மும்பையில்  பிரித்தானிய அரசின் 5ஆம் ஜோர்ச் மற்றும் அவரது பாரியார் 1911 இல் இந்தியாவிற்கு தரையிறங்கிய  நினைவாக  கடலின் அருகில் வாசல் அமைத்து அதனை கேற் வே ஒப் இன்டியா மும்பாய் (Gate of India Mumbai) என்று அழைப்பதும் குறிப்பிடத்தக்கது.



ஊருக்கு பல வாசல்கள் இருக்கின்ற போதும் குறிப்பாக பிரதான வாசல்களையே முக்கியத்துவம் கொடுத்து. வாசல்கள் அமைக்கும் வழங்கம் உள்ளது. இவ்வாறான  வாசல்கள்  ஊர்களை இலகுவில் அடையாளம் காட்டும் குறியீடுகளாக மாற்றம் கண்டுள்ளமையையும் குறிப்பிடத்தக்கது.




       
எந்த ஒரு கலைப்படைப்பிற்கும் கரு இருக்கும்.  கலையை ரசிப்பதற்கு அதன் கருவை அறிவது முக்கியமாகும்.  கட்டடக்லையைப் பொறுத்த வரையில் படைப்பாளனின் எண்ணத்தில் என்ன இருக்கின்றது என்று அறிந்தால் மட்டுமே அதன் கரு வெளியில் தெரியும் அல்லாது  போனால் பார்ப்பவர்களுக்கு ஒரு அழகான கட்டடமாகவே தெரியும். கரு இல்லாத எந்தக் கலைப்படைப்பும் அழகாக இருப்பதில்லை.


இன்றைய காலத்தில் ஏனைய கலைத்துறைகள் தமிழர் மத்தியில் வளர்ந்தது போல் கட்டடக்கலை குறிப்பிடக்கூடிய வளர்ச்சி காணவில்லை. பல நூறு ஆணடுகளுக்கு முன்னர்  கட்டடக்லையில் பல சாதனைகளைப் புரிந்த தமிழ்ர்கள் இன்று மேற்குலக கட்டடக்லைப் பாணிகளைப் (Architecture style) பன்பற்றியே அதிக கட்டடங்களை அமைத்து வருகின்றனர். இந்த நிலையில் 

 தமிழர் பிரதேசங்களில் வழமையான நுழைவாசல் அமைப்பது போல் அல்லாது  யாழ் மாவட்டத்தில் உள்ள  புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தினரின் ஏற்பாட்டில் ஊரிற்கு நுழையும் பகுதியில் அமைக்கபட்டுள்ள நுழைவாசல் பற்றி அதன் வடிவமைப்பாளர்  கட்டடக்கலைஞர்  தமோதரம்பிள்ளை ஹரிகரன் அவர்கள்  நுழைவாசல் வடிவமைப்பின் எண்ணனக்கரு பற்றி குறிப்பிடும் போது,


கண்ணகி அம்மன் ஆலயத்தின் வரவேற்பு  நுழைவாசல் ஏனைய இடங்களில் உள்ளது போன்ற தனியாக ஊருக்கான  வாசலாக மட்டும் இருக்ககூடாது.  அதேவேளை  புங்குடுதீவு மக்களுக்கு மட்டுமன்றி அவ்வழியால் நைனாதீவுக்குப் பயணம் செய்கின்ற ஏனைய மக்களுக்கும்  பயனுள்ளதாக இருக்க வேண்டும். 


பண்பாட்டினையும் கலை உணர்வினையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற பல இலக்குகளுடன் வடிவமைக்கப்பட்டதாகும் என்று தெரிவித்தார்.

மேலும் நுழைவாசல் யாழ்ப்பாணப்பாரம்பரியத்தில் உள்ள வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறும்  தெரு மூடி மடம் என்ற பொது நோக்கு மண்டபத்தையும்,  வீடுகளில் இளைப்பாறுவதற்கு பயன்படும் திண்ணைகளையும்  இணைத்து இந்த நுழைவாசல் அமைக்கப்பட்டுள்ளது.  





நுழைவாசலின் புறத்தோற்றம் கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய பூம்புகார் பட்டினத்தில் உள்ள திராவிடக்கட்டடக்லை அம்சங்களைக் கொண்டு சுமார் 47 அடி உயரமும் 95 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்டாதாக  30 மில்லியன் ரூபாவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன் இரண்டு பக்கங்களிலும் உள்ள மண்டபத்தில் 50 பேர் வரை  இளைப்பாறும் வசதி உண்டு. நுழைவாசலுக்கான வர்ணம் வழமையான கட்டடங்களுக்கு பிரயோகிப்பது போல் இல்லாமல் கண்ணகியின் கோபத்தால் எழுந்த தீயை நினைவு கொள்ளும் வகையில் கருஞ்சிவப்பு  வர்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளதுநுழைவாசல் இரவிலும் கம்பீரமாக தெரியும் வகையில் பொருத்தமான வகையில் மின்சார விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது
இந்த நுழைவாசல் கண்ணகி அம்மனையும் புங்குடுதீவு என்ற இடத்தையும் உலக தமிழ் மக்களின் மனதில் நிறுத்தும் என்றும் குறிப்பிட்டார். 
அபிவிருத்திச் செயற்பாட்டின் முதலாவது பகுதி தற்போது  நிறைவடைந்துள்ளது.  தொடர்ந்து இரணடாவது பகுதியாக வாகன தரிப்பிட வசதிகளுடன் சிற்றூண்டிச்சாலை, சிறிய கடைத்தொகுதிகள் மற்றும் பொதுக்கழிப்பிடம் என்பன அமையவுள்ளன. 


இவ்வளவு காலமும்  வயல் வெளியாக மட்டும் இருந்த இடம், கட்டடங்கள்  மற்றும் மக்கள் பாவனையுடன் இணைந்து  மக்களின் வாழ்வில் மறக்க முடியாத ஒரு இடமாக உருவாகும்.  வயதானவர்கள்  தங்கள் கடந்த காலங்களை நினைவு கூறும்போது மரத்தடிகளையும் மதகுகளையும் இணைத்து கதை சொல்லும் காலம் முடிந்து, இனி வரும் காலங்களில் நுழைவாசல்களை இணைத்து கதை சொல்லும் காலம் உருவாகும்.




கு.பதீதரன்
கட்டடக்கலைஞர்

பட உதவி – Google, HARITHAMOTHAR DESIGN CONSULTANCY.