Monday, January 2, 2017

இலங்கைத் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாய அபிவிருத்தியும் நீர்வளப் பயன்பாடும்

எழுத்தாளர்: இரா.சிவசந்திரன்
முகவுரை:-
தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வரலாற்று ஆதாரங்களின் படி இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாண எல்லைப்பரப்பை விடப் பரந்ததெனினும் இங்கு ஆய்வு நோக்கம் கருதி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் என்றே கொள்ளப்படுகின்றது. வடகீழ் மாகாணம் 18,333 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் 558 சதுரகிலோமீற்றர் உள்நாட்டு நீர்ப்பரப்பையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.8 வீதமாக அமைகின்றது. இவை எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு என்பன வடமாகாணத்தினுள்ளும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என்பன கிழக்கு மாகாணத்தினுள்ளும் அமைகின்றன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் உழைக்கும் மக்களில் 60 வீதத்தினர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இப்பிரதேசத்தில் விவசாயமே பாரம்பரியப் பொருளாதார நடவடிக்கையாக, நீண்டகாலமாக பெரு மாற்றங்கள் எதுவுமின்றி இருந்து வருகிறது. பிற்காலத்தில்; விவசாயத்துறையில் புகுத்தப்பட்ட புதிய நுட்ப முறைகள் இப்பகுதி விவசாயிகளிடையே வேகமாகப் பரவி உள்ளன. இதில் மாற்றுவிவசாயம், விவசாய உள்ளீடுகள், நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவம் தொடர்பான நுட்ப முறைகள் குறிப்பிடத்தக்கவை.
நிலப்பயன்பாடு:-
தமிழர் பாரம்பரியப் பிரதேசம் அடக்கியுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாய நிலப்பயன்பாட்டை இரு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம்.
01) தோட்டச்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு
02) நெற்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு
இப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.43 வீதத்தையும் மொத்தக் குடித்தொகையில் 35.4 வீதத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை அதிகளவுக்கு வளர்ச்சி பெற்ற பகுதியாக உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப்பெறும் தரைக்கீழ் நீர்வளத்தைப் பயன்படுத்தி இப்பகுதி வாழ் மக்கள் வருடம் முழுவதும் பயிர் செய்கின்றார்கள். மிகவும் சிறிய அளவினதான துண்டு நிலங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிரச்செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வேறு எப்பாகத்திலும் இவ்வகையான செறிந்த பயிரச்செய்கை முறை மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதி செறிவான குடித்தொகையை கொண்டுள்ளது. தோட்ட நிலங்கள் அதிகளவு கொண்ட பகுதிகளில் சதுர மைலுக்கு 3000க்கு மேற்பட்டோர் வாழ்கி;ன்றனர்.
யாழ்ப்பாண குடாநாடு 1025 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இதில் 60 வீதமான பகுதியே மக்கட் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகின்றது. ஏனைய 40 வீதமான பகுதி மணல், பாறை ஆகியவற்றையும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ளதால் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையவில்லை. மக்களுக்கு பயன்படுகின்ற 60 வீதமான நிலப்பகுதியில் மூன்றிலொரு பகுதி குடியிருப்பு நிலங்களாக உள்ளன. பனை, தென்னை ஆகிய மரப்பயிர்கள் மற்றொரு மூன்றிலொரு பகுதியிற் காணப்படுகின்றன. எஞ்சிய பகுதியே நெற்பயிரும், தோட்டப்பயிரும் செய்கை பண்ணப்படும் விவசாயப்பகுதியாகும். அண்மைக்காலங்களில் நெல்வயல் நிலங்கள் தோட்டநிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் தோட்ட நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகின்றது.
இப்பகுதித் தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், திணை வகைகள், பழ வகைகள் என்பன பெருந்தொகையாக விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப உணவுத்தேவையின் கணிசமான பங்கு யாழ்ப்பாணக்குடாநாட்டு உற்பத்தியாலேயே யுத்தத்திற்கு முன்னர்  பூர்த்தி செய்யப்பட்டது. உதாரணமாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 வீதத்தையும், மிளகாய்ச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 15 வீதத்தையும் யாழ்ப்பாணக் குடாநாடே அடக்கியிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் விவசாயிகள் புதிய தொழில் நுட்பமுறையினை புகுத்துவதில் பேரார்வம் கொண்டவர்கள். தோட்டச்செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரம், செயற்கை உரம், களைநாசினி, கிருமி நாசினி என்பன பெருமளவு பயன்படுத்தப்பட்டு விவசாய உற்பத்தி உயர்வடைந்த நிலை காணப்பட்டது.
யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப்பகுதியின் நிலப்பயன்பாட்டை தாழ்நிலப்பயன்பாடு, மேட்டு நிலப்பயன்பாடு என வகைப்படுத்தலாம். மேட்டு நிலப் பயன்பாடு இப்பகுதியில் அதிகம் விருத்தி அடையவில்லை. தாழ்நிலப் பயன்பாட்டில் நெற்செய்கையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆற்று வடிநிலப் பகுதிகளிலும் நீர்த்தேக்கத்தினை அண்டிய பகுதிகளிலும் வண்டல்மண், களிமண் படிவுகள் காணப்படும் தாழ்வான பகுதிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதிகளில் பழைய பாரம்பரிய கிராமிய விவசாய நிலப்பயன்பாடும் புதிய குடியேற்றத்திட்ட நிலப்பயன்பாடும் வௌ;வேறான பண்புகளைக் கொண்டமைந்துள்ளன. மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளின் கரையோரமாகப் பழைய விவசாய நிலப்பரப்புகள் பரந்துள்ளன. முன் காடுகளாக இருந்து தற்போது நில அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளமைந்த பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்டன.
1935 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நில அபிவிருத்திச் சட்டத்தின் பின்னர் இப்பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பல நோக்கு குடியேற்றத்திட்டம், பாரிய குடியேற்றத்திட்டம், கிராம விஸ்தரிப்புத் திட்டம், மத்திய வகுப்பார் குடியேற்றத்திட்டம், இளைஞர் திட்டம் ஆகியனவாக இவை அமைக்கப்பட்டுள்ளன. குடியடர்த்தி மிக்க பகுதிகளில் இருந்து மக்களை நகர்த்தவும், நிலமற்றோருக்கு நிலமளிக்கவும், வேலையற்றிருந்தோருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், குடியேற்றத்திட்ட உருவாக்கம் ஓரளவு உதவியுள்ளது. கிளிநெச்சியில் இரணைமடுக்குளத்திட்டம், மன்னாரில் கட்டுக்கரைக்குளத்திட்டம், வவுனியாவில் பாவற்குளத்திட்டம், திருகோணமலையில் கந்தளாய் குளத்திட்டம், மட்டக்களப்பில் உன்னிசசைக்குளத்திட்டம், அம்பாறையில் கல்லோயாத்திட்டம் என்பன மாவட்டத்திற்கொன்றான உதாரணங்களாகும். பிற்;காலங்களில் இப்பகுதிகளிலே படித்த இளைஞர்களுக்கென உபஉணவு உற்பத்தித் திட்டங்கள் பல ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை மேட்டு நிலப்பயிர்களை ஊக்குவிப்பனவாகவும், ஏற்று நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விவசாய அபிவிருத்தி திட்டங்களாகவும் அமைந்தன.
இவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த முத்தையன் கட்டு இளைஞர் திட்டம், கிளிநெச்சி மாவட்டத்தில் அமைந்த விஸ்வமடு, திருவையாறு, இளைஞர் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. ஏனைய குடியேற்றத்திட்டங்கள் போலன்றி இளைஞர் திட்டங்கள் பொருளாதார ரீதியில் திருப்தியைத் தருவனவாக விருத்தியடைந்திருந்தன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மொத்த நிலம் ஏறத்தாழ 156692 ஹெக்டேயர் ஆகும். இது இலங்கையின் மொத்த நெல் விளைபரப்பில் பரப்பில் 31.3 வீதமாக அமைகின்றது. இப் பிரதேசத்தின் மொத்த நெல் விளை பரப்பில் 62 வீதத்தைக் கிழக்கு மாகாணம் உள்ளடக்கியுள்ளது. மொத்த நெல் விளை நிலத்தில் 33 வீதம் பருவ கால மழையை நம்பிய மானாவாரி நிலங்களாக உள்ளன. ஏனையவை நீர்ப்பாசன வசதியுடைய குளங்களை அடுத்துள்ளன. பாசன வசதியுடைய நிலங்கள் சிலவற்றிலே வருடத்திற்கு இருதடவை நெல் விளைவிக்கப்படுகின்றது. வருடத்திற்கு இரு தடைவ நெல் விளைவிக்கப்படும் விளைபரப்பு 28 வீதமாக அமைகின்றது.
பொதுவாக இப்பிரதேசத்தில் அதிகளவு நெல் விளைபரப்பு பருவ மழையை நம்பியதாகையால் பருவமழை பெய்துவரும்; காலங்களில் நெல் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. நெற்செய்கையில் நிலவும் இந் நம்பிக்கையற்ற நிலையை மாற்றவும் மிகுதி 72 வீதமான நிலப்பரப்பில் இருபோகச் செய்கையை மேற்கொள்ளவும் ஏற்கனவே பயிர்செய் பரப்பாகப் பயன்பட்டு வரும் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசன வசதியை அதிகரித்தல் வேண்டும். இவற்றில் தெளிவு பெறுவதற்கு இப்பிரதேசத்திலுள்ள நீர்வளம், பாசன வாய்ப்புகள் பற்றி தெளிவு அவசியமாகும்.
நீர்வளமும் நீர்ப்பாசனமும்
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் விவசாயச் செய்கை பெருமளவுக்கு மழை வீழ்ச்சியை நம்பியதாகவே அமைந்துள்ளது. வருடம் 2000 மில்லி மீற்றருக்கு (75 அங்குலம்) குறைந்த மழைவீழ்ச்சி பெறும் இலங்கையின் வரண்ட வலயத்தின் பெரும்பாகத்தை உள்ளடக்கியுள்ள தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் வருடச் சராசரி மழைவீழ்ச்சி 1250 மி.மீ ஆகும். மழைவீழ்ச்சிப் பரம்பலில் பிரதேச வேறுபாடுகள் உள்ளன. மன்னார், அம்பாறை மாவட்டங்களின் தென் பகுதிகள் குறைந்தளவான 750 மி.மீ முதல் 1000 மி.மீ வரை மழை பெற, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் மேற்குப் பகுதிகள்  உயர்ந்தளவான 2000 மி.மீ மேற்பட்ட மழைவீழ்ச்சியை பெறுகின்றன. எனினும் 1000-2000 மி;மீ வரை (50- 75 அங்குலம்) மழை பெறும் பரப்பளவே தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் அதிகமாகும். அதாவது யாழ்ப்பாணம், கிளிநெச்சி, வவுனியா, திருகோணமலை மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை ,மட்டக்களப்பு  மாவட்டங்களின் பெரும் பாகமும் 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை பெறும் பகுதிகளாக அமைகின்றன.
இப்பகுதி வடகீழ் மொன்சூன் காற்றினாலும், சூறாவளி நடவடிக்கைகளினாலும் ஒக்டோபர், முதல் ஜனவரி வரையிலான காலப்பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. இப்பகுதியில் வருடம் முழுவதும் கிடைக்கப்பெறும் மொத்த மழைவீழ்ச்சியின் 70 வீதம் மேற்படி நான்கு மாத காலத்திற்குள்ளாகவே பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் மழை நீரில் 20-25 வீதம் புவி மேற்பரப்பு ஓடு நீராகக் கடலையடைகின்றதெனவும் 40–45 வீத நீர் ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பினால் இழக்கப்படுகின்றதெனவும், எஞ்சிய நீரே பயன்பாட்டிற்குரியதாக அமைகின்றதெனவும் சில கணிப்பீடுகளிலிருந்து தெரிகின்றது. இவ்வளவு குறைந்த காலத்தில் மழைவீழ்ச்சியினால் மாத்திரம் கிடைக்கும் நீர் வளத்தைப் புவி மேற்பரப்பு நீராகவும் தரைக்கீழ் நீராகவும் சேமித்துப் பாசனப் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் போதே இப்பிரதேசத்தின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் பாசனத்திற்குக் கிடைக்கக் கூடிய நீர் வளங்களை இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
01) புவி மேற்பரப்பு நீர்வளம்
02) தரைக்கீழ் நீர்வளம்
புவி மேற்பரப்பு நீர்வளம்
புவி மேற்பரப்பு நீர் வளமே யாழ்ப்பாணக்குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப்பகுதியில் பாசனத்திற்குப் பயன்படும் வளமாய் உள்ளது. தரைக்கீழ் நீர்வளம் முக்கியமாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாசனத்திற்குப் பயன்படுகின்றது.
புவிமேற்பரப்பு நீர்வளம் என்னும் போது ஆறுகள், குளங்கள் என்பவற்றில் தேக்கப்படும் நீரினைக் குறிக்கும். இப்பிரதேசத்தில் மகாவலி தவிர ஏனையவை வறண்ட பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் ஆறுகளேயாகும். பருவ காலங்களில் மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீர் வளத்தையே இவை கொண்டுள்ளன. இவ்வகை ஆறுகளையோ கிளை ஆறுகளையோ அவற்றின் வடிநிலப்பரப்பில் தடுத்து அணைகட்டி குளங்களாக உருவாக்கியுள்ளனர். ஒரு சில ஆறுகள் திசைதிருப்ப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பாசன நாகரிகம் கிறீஸ்து காலத்திற்கு முன்பாகவே தமிழர் பிரதேசங்களில் பரவியிருந்தமையை மகாவம்சமே குறிப்பிடுகின்றது. குவேனி விஜயனைச் சந்தித்தபோது இவ்வாறான குளமொன்றின்  அணைக்கட்டில் நூல்நூற்றுக் கொண்டிருந்தாள். எனவும், அக்குளம் மன்னார் பிரதேசத்தில் அமைந்திருந்ததெனவும் மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகள் சிலவற்றிலிருந்து தெரிய வருகின்றது.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியிற் காணப்படும் குளங்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
01) சிறு குளங்கள்( இவை 200ஏக்கர் பரப்பளவுக்கு உட்பட்டவை)
02) நடுத்தரக் குளங்கள்(200-1500 ஏக்கர் பரப்பளவுக்கு இடைப்பட்டவை)
03) பாரிய குளங்கள் ( 1500 ஏக்கர் பரப்பளவுக்கு மேற்பட்டவை)
இவற்றுள் சிறு குளங்களின் பராமரிப்பு அவ்வப்பிரதேச கமநல சேவை நிலையத்திடம் உள்ளது. ஏனையவை நேரடியாக நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவையாகும். 1900 ஆண்டில் இலங்கையில் நிறுவப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களமே இந் நாட்டின் விவசாய அபிவிருத்திக்கு உதவும் பொருட்டு நீர்ப்பாசனத்திட்டங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது.
1959 இல் நீர்ப்பாசனத்திணைக்களம் இலங்கைத்தீவின் உள்ளார்ந்த நீர்வளம் பற்றிய குறிப்புகளுடன் படம் ஒன்றினை வெளியிட்டது. இதில் இலங்கையிலுள்ள 103 ஆற்று வடிநிலங்கள் பலவற்றில் பெருந்தொகையான நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், அமைத்து பாசன அபிவிருத்தி செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் விபரமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மேற்படி 103 ஆற்று வடிநிலங்களில் 61 வடிநிலங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நீர்ப்பாசனத்திணைக்களம், வடிகால் விருத்தியையும் நீர் வெளியேறும் அளவையையும் கருத்தில் கொண்டு ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கப்பெறும் நீரின் ஆண்டுச் சராசரி அளவை மதிப்பிட்டுப் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி வவுனியாவையும் ஆனையிறவையும் இணைக்கும் கோட்டிற்கு மேற்காக ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின் அளவானது 500 ஏக்கர் அடி நீரில் இருந்து 300 ஏக்கர் அடி நீராகக் குறைந்து செல்வதையும் கோட்டிற்கு கிழக்காக முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பிரதேசம் வரை 500 முதல் 650 ஏக்கர் அடியாக அதிகரித்துச் செல்வதையும் படம் காட்டுகின்றது. கிழக்கு மாகாணத்தில் ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின் ஆண்டுச் சராசரி அளவு 1000 முதல் 1500 ஏக்கர் அடியாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதிலிருந்து வடமாகாணத்தை வடகிழக்கு மாகாணம் நீர்வளம் அதிகம் கொண்ட பிரதேசமாக அமைந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு பெறக்கூடிய நீரின் அளவும், பல்வேறு விதமாக இழக்கப்படும் நீரின் அளவும் கணிக்கப்படின், தேக்கிப் பயனபடுத்தத்தக்க நீர்வளத்தின் அளவை மதிப்பிட்டு பாசனத்தை அபிவிருத்தி செய்தல் இலகுவானதாகும்.
பொதுவாக தமிழர் பாரம்பரியப் பிரதேசம் பாசன அபிவிருத்திக்கு உள்ளார்ந்த நீர் வளங்களைப் பெருமளவு கொண்டுள்ளது. இவ்வடிகால் வளங்களில் சிலவற்றிலேயே நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் அபிவிருத்தியை வேண்டியிருக்கும் சிறு, நடுத்தரக் குளங்கள் தவிர பாரிய குளங்களின் எண்ணிக்கை வட மாகாணத்தில் 10 ஆகவும், கிழக்கு மாகாணத்தில் 15 ஆகவும் அமைந்துள்ளது. இப்பாரிய குளங்களில் பல இன்னும் பெருப்பிக்கக் கூடியனவாயும் பல குளங்கள் ஒன்றுடன் ஒன்றை இணைந்து நீர் கொள்ளளவை அதிகரிக்கக்கூடிய அமைப்புக்களுடனும் காணப்படுகின்றன. இவ் இணைப்பானது ஒரு வடிகாலுடன் இன்னோர் வடிகால் இணைக்கும் வகையிலும் அமைக்கப்படலாம். இப்பிரதேசத்தின் தரைத்தோற்றம் பரந்த தாழ்நிலத்தையும் அலைவடிவான தரைத்தோற்ற அமைப்பினையும் கொண்டுள்ளதால் இங்கு இவ்வாறான அபிவிருத்திக்குரிய வாய்ப்புகள் உள்ளன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியிலேயே எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்தி செய்யக்கூடிய உள்ளார்ந்த வாய்ப்புகள் நிறைய உண்டு. இங்கு இரு வழிகளில் விவசாய அபிவிருத்தியை முன்னெடுக்கலாம்.
01) ஏலவேயுள்ள விளை நிலங்களில் விளைவை அதிகரித்தல்
02) புதிய நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல்
ஏலவேயுள்ள விளைநிலங்களின் விளைவை அதிகரிப்பதற்கு பசுமைப்புரட்சி அளித்த நவீன விவசாய அபிவிருத்தி செய்முறையினை நல்ல முறையில் பரவச் செய்தல் வேண்டும் நவீன விவசாய முறைகள் வெற்றியளிக்க வேண்டுமாயின் பாசன வசதி பெறத்தக்க நிலங்களாக விளைநிலங்கள் மாற்றப்படுதல் அவசியம். புதிய உயர் விளைச்சல் தரும் நெல்லினங்களின் அக்கறையான விஞ்ஞானப+ர்வமான முறையிலான கவனிப்புகளுக்கு பாசன வசதியுடன் கூடிய நிலங்களே அவசியமானவை.
விளைவை அதிகரிப்பதற்கு இன்னோர் வழி வருடத்தில் இரண்டு அல்லது மூன்று போகங்கள் நெற்செய்கை மேற்கொள்வதாகும். இது நீர்ப்பாசன வசதிகள் அதிகரிக்கப்பட்டால் சாத்தியமாகும். பெரும்போகம், சிறு போகம், இடைப்போகம் என வருடத்தில் மூன்று போகங்கள் நெற்பயிர் செய்து இப்பகுதியில் பலர் வெற்றி கண்டுள்ளனர்.
புதிய நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்குரிய நிலவளம் யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நிறையவே உண்டு. ஒரு நாட்டின் மொத்த நிலத்தில் 25 வீதம் காடாக இருக்கவேண்டும் என்ற கருத்தை மனதிற் கொண்டு திட்டமிட்ட முறையில் புதிய விவசாய குடியேற்றத்திட்டங்களை இப் பகுதிகளில் ஏற்படுத்தலாம். ஏலவேயுள்ள குடியேற்றத்திட்டப் பகுதிகளை விஸ்தரித்தலிலும் சாத்தியமே. இந் நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசன வசதிகளைத் திட்டமிட்ட முறையில் விருத்தி செய்தல் வேண்டும். இப்பிரதேசத்தில் ஏலவே அபிவிருத்தி செய்யப்பட்ட நீர்ப்பாசனக்குளங்களின் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலமும், வடிநிலத்திலுள்ள பாரிய, நடுத்தர, சிறு குளங்களை இணைப்பதன் மூலமும், முடிந்தால் வடிநிலத் திசைதிருப்பத்தை ஏற்படுத்துவதன் மூலமும் நீர்ப்பாசன வளங்களை அதிகரித்து விவசாய நிலப்பரப்புகளை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் இங்குள்ள 60 வடிநிலங்களில் சிலவே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன. பல பயனபடுத்தக்கூடிய உள்ளார்ந்த வளங்களைக் கொண்டுள்ளன.
எடுத்துக்காட்டாக வவுனியாவில் ஊற்றெடுத்து மன்னார் இலுப்பைக் கடவையில் சங்கமமாகும் பறங்கியாறு இதுவரை பாசன வசதிக்காக  முறையாகப் பயனபடுத்தப்படவில்லை. இவ் வடிநிலத்தில் இரணைமடு நீர்த்தேக்கம் போன்ற பாரிய இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் என நீர்ப்பாசனவியலாளர்கள் கருத்துகின்றனர். இதுபோன்றே வவுனிக்குளத்திட்டத்தின் கீழ் உள்ள பாலியாற்றிலும் இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் எனவும் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே தமிழர் பாரம்பரியப் பிரதேச பிரதான நிலப்பகுதியில் முறையான திட்டமிடல் நடவடிக்கைகள் மூலம் பாரம்பரிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்து விவசாய அபிவிருத்தி செய்தல் சாத்தியமே.
தரைக்கீழ் நீர்வளம்
தரைக்கீழ் நீர்வளம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மனித வாழ்வுக்கும் வளத்திற்கும் வரலாற்றுக்காலம் முதல் அடிப்படையாக இருந்து வருகின்றது. வட மாகாணத்தின் மொத்தக் குடித்தொகையில் 70 வீதத்தினர் யாழ்.குடாநாட்டில் செறிந்திருப்பதற்கும் குடாநாடு செறிந்த பயிர்ச்செய்கைப் பிரதேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர்வளமே காரணமாகும்.
புத்தளத்தில் இருந்து பரந்தன், முல்லைத்தீவை இணைத்து வரையப்படும் கோட்டிற்கு வடமேற்காகவுள்ள பகுதிகள் மயோசின்காலச் சுண்ணாம்பு பாறையமைப்பைக் கொண்டுள்ளன. இப்படிவுகள் தரைக்கீழ் நீரைப் பெருமளவு சேமித்து வைக்கக் கூடிய தன்மை வாய்ந்தவையாகும். சுண்ணக்கல்லை அடிப்படையாகக் கொண்ட செம்மண், செம்மஞ்சள் மண்கள் நீரை உட்புகவிடும் இயல்பை அதிகளவு கொண்டவையாகவும் அமைந்துள்ளன. மழையால் பெறப்படும் நீர் இப்பகுதிகளில் இலகுவாக உட்புகுந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகின்றது. உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீர் வில்லையாக உவர்நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கின்றது. குடாநாட்டின் கரையோரப் பகுதிகளிலிருந்து மையப் பகுதியை நோக்கிச் செல்லும் போது இவ் வில்லையின் தடிப்பு அதிகரித்துச் செல்லுகின்றது. ஆகக்கூடிய தடிப்பு 100 அடி முதல் 110 அடி வரை உள்ளது. இந்த வில்லையானது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நடுவேயுள்ள உவர் நீர் ஏரிகளினால் துண்டுகளாக்கப்பட்டுள்ளன. இந்த உவர்நீர் ஏரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றினால் துண்டுபடும் நன்னீர் வில்லை துண்டுபடாது தொடராக அமையும்.
சுண்ணக்கற் பாறைப் படிவுகள் பிரதான நிலப்பகுதியில் ஆழமாகக் கீழ் பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் ஆழமற்று மேற்பாகப் பகுதியிலும் காணப்படுகின்றன. இதனால் அதிகம் ஆழமற்ற கிணறுகளை தோண்டுவதன் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின்றது. மாறாக புத்தளம், பரந்தன், முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாகக் காணப்படுகின்றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செலவில் குழாய்க் கிணறுகள் அமைத்தே தரைக்கீழ் நீரைப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.
கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தோண்டப்பட்டன. யாழ்ப்பாணத்தில் மனித குடியிருப்பின் வரலாறு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது. அக்காலத்தில் இருந்தே கிணறுகள் தோண்டி தரைக்கீழ் நீரைக் குடிப்பதற்காகவும், விவசாயத்திற்காகவும் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளமைக்கான சான்றுகள் நிறைய உண்டு. கிணறுகளில் இருந்து மனித சக்தியால் குறிப்பாக துலா மூலமும், உள்ளுர் சூத்திர முறையாலும் நீரானது பாசனத்திற்குப் பெறப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந்துள்ள பாசன முறையிலான விவசாயச் செய்கை பிற்பட்ட கால கட்டங்களில் உப உணவுச் செய்கை எனும் சிறப்பானதும் செறிவானதும் நவீனத்துவமானதுமான பயிர்ச்செய்கை முறையாக மாறிய பின்னர் நீர் இறைக்கும் இயந்திரத்தின் பாவனை யாழ் குடாநாட்டின் சகல கிராமங்களிலும் அதிகரித்து வந்துள்ளது.
இவற்றினால் அண்மைக் காலங்களில் குடாநாட்டின் பல பகுதிகளில் தரைக்கீழ்நீர் உவர்நீராதல் போன்ற பிரச்சனைகள் தோன்றியுள்ளன. இது அபாயகரமானதோர் நிலைமை என்பதில் சந்தேகமில்லை. இச்சவாலை நல்லமுறையில் எதிர்கொள்வதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளார்ந்த தரைக்கீழ் நீர்வளம், அதன் பாவனை, அவற்றின் முகாமைத்துவம், அபிவிருத்தி என்பவைகள் பற்றி நுண்ணாய்வுகள் பல செய்யப்படுதல் வேண்டும். 1965 இல் இங்கு அமைக்கப்பட்ட நீர்வளசபை வடபகுதி தரைக்கீழ் நீர் உவர் நீராதல் பற்றியும் குழாய்க்கிணறு தோண்டி பாசன விருத்தி செய்யும் வாய்ப்புகள் பற்றியும் சில ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும் இன்றுவரை அவை முறையாக வெளியிடப்படவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்வளம் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் முன்னெப்போதுமி;ல்லாதவாறு இன்றைய காலகட்டத்தில் மிக அக்கறையுடன் சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம். திட்டமிட்ட முறையில் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. மேல் விபரித்த அம்சங்கள் அனைத்தையும் மனங்கொண்டு நாம் செய்ய வேண்டிய பணிகள், ஆலோசனைகள் என்பன இங்கு அனைவரதும் அக்கறையான கவனத்திற்கு முன்வைக்கப்படுகிறது.
சில அபிவிருத்தி ஆலோசனைகள்
யாழ்ப்பாணத்தில் விவசாயமும் நீர்ப்பாசனமும் எனும் போது அவற்றின் அபிவிருத்தி அம்சமே முன்னுரிமை பெறுகின்றது. யாழ்ப்பாணக்குடாநாட்டில், இனிமேலும் நாம் விவசாய விரிவாக்கத்தை: முக்கியமாக விளைபரப்பை அதிகரித்து மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுவது தவறாகும். இது “உள்ளதையும் கெடுக்கும்” ஆபத்தான நிலையை உருவாக்கக் கூடும். இங்கு தற்போது காணப்படும் விவசாயச் செய்கையை மிகவும் நவீன முறையிலானதாக மாற்றுவதோடு நீர்ப்பாசன முறைகளிலும் நவீனத்துவத்தை கையாண்டு நல்ல முறையில் பாசன முகாமைத்துவத்தைப்  பேணி வீண் விரயமாதலைத் தடுத்து ஏலவே உள்ள விவசாய நிலப்பயன்பாட்டை உச்ச வருமானம் தரத்தக்கதாக மாற்றி அமைப்பதே சிறந்த வழியாகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலப்பயன்பாடு சிறப்புத்தேர்ச்சி பெற்றதாக மாற்றப்பட வேண்டும். அதிக செலவில் விவசாயம் செய்யும் இப்பகுதியில் ஒவ்வொரு அங்குல நிலமும் உச்ச பயன் தரத்தக்கதாக அமைதல் வேண்டும். விவசாய அபிவிருத்தி விவசாய வர்த்தக முறையிலமைந்ததாக அமையப்பெற வேண்டும். யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் நெற்பயிர்ச்செய்கை தவிர்க்கப்பட்டு அதிக வருமானம் தரத்தக்க பணப்பயிர்ச்செய்கை விருத்தி செய்யப்பட வேண்டும். உப உணவு, காய்கறி, பழச்செய்கை, பானப்பயிர் செய்கை, எண்ணை வித்துப் பயிரச்;செய்கை போன்றனவாக இவை அமைய வேண்டும். உற்பத்திகளில் சில விவசாய கைத்தொழில்துறை விருத்திக்கு மூலப்பொருள்களை வழங்குபவையாகவும் இருக்கவேண்டும். உண்மையில் இப்பகுதியில் புகையிலை செய்கை, காய்கறி செய்கை, திராட்சைப் பழச்செய்கை என்பன ஊக்குவிக்கப்படுதல் வேண்டும். ஏனெனில் இவை செய்கையாளருக்கு குறைந்த நிலத்தில், குறைந்த நீர் வளத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் தருவதோடு விவசாய கைத்தொழில் விரிவாக்கத்திற்;கும்  உதவுவதாகும். தேயிலை, இறப்பர் ஏற்றுமதியில் இலங்கை அந்நியச்செலாவணி பெறுவது போல் நாம் இவற்றால் அந்நியச்செலாவணியை பெறலாம்.
நகரங்களைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயச் செய்கை நகரச் சந்தையின் தேவைக்குரியவற்றை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்படுதல் வேண்டும். சந்தை நிலமைக்கேற்பவும் யாழ்ப்பாண விவசாயம் மாற்றமுறுதல் வேண்டும். இவ்வகையான நிலப்பயன்பாட்டு மாற்றமே யாழ்ப்பாண பகுதியில் வேண்டப்படுவதாகும்
மழை நீரை தேக்குதலும் குளங்களின் தூர் அகற்றுவதும்.
யாழ்ப்பாணக் குடாநாடு தரைக்கீழ் நீரின் மீள்நிரப்பும் தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதில் பலர் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். இங்கு குறுகிய காலத்திற் கிடைக்கப்பெறும் ஒரே ஒரு மீள் நிரப்பியான மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை மேற்பரப்பில் ஓடி வீணே கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் நாம் முயலுதல் வேண்டும். யாழ்ப்பாணக் குடிhநாட்டின் சுண்ணக்கற் புவியமைப்பின் காரணமாக சுண்ணக்கற் கரைசலால் ஏற்பட்ட 1050 குளங்கள் காணப்படுகின்றன. இக்குளங்களில் நிறையும் தண்ணீரில் பெரும்பகுதி தரையின் கீழ்ச் சென்று நீர்வளத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இவ்வாறான குளங்கள் குப்பை, கூழங்கள் கொட்டப்படுவதாலும் தூர் சேர்ந்தமையாலும் நீரினை உட்செலுத்தும் தன்மையில் குறைவடைந்து காணப்படுகின்றன. இவ்வாறான குளங்களைத் துப்புரவு செய்தலும் தூர் அகற்றுதலும் அவசியம.; இங்கு இவ்வறான முயற்சிகள் அரிதாகவே இடம்பெறுகின்றன.
தோட்டங்களை இணக்குவதற்கு குளங்களின் மண், மக்கி, எடுக்க அனுமதிக்கும் முறை இங்கு உண்டு. இதில் மிக்க அவதானம் தேவை. குளங்களைத் தரைக்கீழ் நீர்ப்பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க விடுதல் கூடாது. இவ்வாறு நிகழின் குளங்கள் மூலம் தரைக்கீழ் நீர் பெருமளவு ஆவியாக வெளியேறிவிடும். எனவே குறிப்பிட்ட ஆழம் வரையே மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில பகுதிகளில் சுண்ணக்கல் நிலத்தோற்றத்தில் ஒன்றாக தரைக்கீழ் நீர் ஓடும். குகைகள் சில மேற்பரப்பு இடிந்த நிலையில் காணப்படுகின்றன. நிலாவரைக்கிணறு, குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, கீரிமலைக் கேணி, அல்வாய் மாயக்கைக் குளம், கரவெட்டி குளக்கிணறு, ஊறணிக்கிணறுகள், யமுனா ஏரி என்பன இவ்வகையில் அமைந்த குகைப் பள்ளங்கள் ஆகும். இவற்றில் சில பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொண்ட பின் பயன்படுத்தத்தக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.
நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி நாள் ஒன்றிற்கு  10 மணித்தியாலங்களில் 30,000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை தெரிய வந்தது. இவற்றைப் பாசனத்திற்காக மாத்திரமன்றி, மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட்செலுத்துவதற்கும் பயன்படுத்த இயலும். இது இப்பகுதிகளின் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்கக்கூடியதாக அமையும் என துணியலாம்.
தரைக்கீழ் நீர் குகைவழிகள் மூலம் நீரானது கடலைச் சென்றடையும் நிலையும் இங்கு காணப்படுகின்றது. கீரிமலைக் கேணிக்கு குகை ஊடாக வரும்  நீர் இதற்கு உதாரணம் ஆகும். தரைக்கீழ் நீரைக் கடலில் கலக்க வைக்கும் குகை வழிகள் எல்லாப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டு அவற்றை நிலத்தின் கீழாக அணைகட்டித் தடுக்கவேண்டும். இவ்வாறான முயற்சிக்கான ஆலோசனைகள் ஏலவே முன்வைக்கப்பட்டிருப்பினும் செயல்முறையில் இவ்வகை முயற்சிகள் ஒன்றும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
நன்னீர் ஏரித்திட்டம்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் எதிர்கால வாழ்வுக்கும் வளத்திற்கும் இன்றியமையாத திட்டம் பற்றி அக்கறையுடன் நோக்கும் எவரும் இங்குள்ள கடல் நீரேரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றும் திட்டம் பற்றிச்  சிந்திக்காதிருக்க முடியாது. நன்னீரேரித் திட்டங்களால் யாழ்ப்பாணத்தின் தரைக்கீழ் நீர்வள சேமிப்பு அதிகரிப்பதோடு வீணே கடலை அடையும் நீர் தரைக்கீழ் நீரின் மீள் நிரம்பியாக மாறும். குடாநாட்டுத் தரைக்கீழ் நீர் வில்லைகள் துண்டுபடாது தொடராகவே இருக்கும். குடாநாட்டின் உவர்நீராதல் பிரச்சனைகள் கணிசமான அளவு குறையும். உவர் நிலங்கள் வளமுள்ள விளை நிலங்களாக மாறும். குடாநாட்டின் நிலப்பரப்பும் நன்னீர் பரப்பும் அதிகரிக்கும். இவ்வாறு பல நன்மைகள் நன்னீர் ஏரியாக்கும் திட்டம் எமக்கு வழங்குமெனத் துணியலாம். உண்மையில் இப்பகுதிக் கடல்நீரேரிகளை  நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றிய சிந்தனை நூறு வருடம் பழமை வாய்ந்தது. 1922இல் இரணைமடுக் குளத்தேக்கம் பாரிய அணை கட்டி உருவாக்கப்பட்டபோது ஆனையிறவுக் கடல் நீரேரியை நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றியும் கூறப்பட்டிருந்தமை மனங்கொள்ளத்தக்கது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் நன்னீரேரிகளாக மாற்றப்படக்கூடிய 13 கடனீரேரிகளும் நடைமுறையிலுள்ள 33 உவர்நீர்த்தடுப்புத் திட்டங்களும் உள்ளன. மேற்படி 13 கடனீரேரிகளில் நான்கு கடனீரேரிகளை அதிக செலவின்றி நன்னீரேரிகளாக மாற்றமுடியும். அவையாவன.
01) ஆனையிறவு மேற்கு கடனீரேரி
02) ஆனையிறவு கிழக்கு கடனீரேரி
03) உப்பாறு மற்றும் தொண்டைமானாறு கடனீரேரி
மேற்படி கடனீரேரிகளை நன்னீரேரிகளாக  மாற்றும் திட்டங்கள் பல உருவாக்கப்பட்டு அவற்றில் சில பகுதிகள் செயற்படுத்தப்பட்டுமுள்ளன. உப்புநீர் மீன்பிடிக்கு உதவுமென்று எண்ணும் மக்கள் ஏதோ வழிகளில் கடல்நீரை உள்ளே வர விடுவதனால் இத்திட்டங்கள் பூரண வெற்றியை அளிக்காதுள்ளன. இத் திட்டங்களை நல்ல முறையில் செயற்படுத்துதல் இன்றியமையாததாகும். அத்துடன் குடாநாட்டைச் சூழவுள்ள ஏனைய சில கடனீரேரிகளையும் அதிக பொருள் செலவின்றி நன்னீரேரியாகக் கூடிய வாய்ப்பு உண்டு. உதாரணமாக மண்டை தீவையும் வேலணையையும் பிரிக்கும் கடனீரேரியை சுலபமாக நன்னீரேரியாக மாற்றலாம். மற்றும் பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலம் யாழ்.நகரத்தின் தென்மேற்குப் பகுதியில் பாரிய நன்னீரேரித் தேக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறான திட்டங்களால் நன்னீர் வளம் பெருகுவதோடு நிலப்பரப்புகளில் உவர்த்தன்மை நீக்கப்பட்டு அவற்றை வளமான விளைநிலங்களாக மாற்றமுடியும். இது நில, நீர் பற்றாக்குறையால் அல்லல்படும் யாழ்ப்பாணத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையுமெனலாம்.
கடல் நீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் முக்கியமாக இரு பிரச்சினைகளை முன்வைக்கின்றனர்.
01) சூழல் மாசடைதல் தொடர்பானது
கடல் நீரேரிகளில் நீர்வரத்து தடைப்பட்டு நீரேரிகள் முற்றாக வற்றும் காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீது வேகமாக வீசும் காற்றினால் (சோழக்காற்று) புழுதி வாரி வீசப்படுமென்றும் இதனால் இத்திட்டம் சுற்றுப்புறச் சூழல்மாசடையும் அபாயத்தை கொண்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டுகின்றார்கள். இந்த அபாயத்தை இலகுவாக சமாளிக்கலாம். நன்னீரை வற்றாத அளவுக்கு தேக்கி வைப்பதன் மூலமாகவும் முற்றாக நீர்வற்றும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் திட்டமிட்ட அடிப்படையில் புல் வளர்ப்பதன் மூலமாகவும் இம் மாசடைதல் பிரச்சனையைச் சமாளிக்கலாம். ஒல்லாந்து தேசத்தில் கடல் நீரேரிப் பரப்புகள் பெருமளவு மீட்கப்பட்டு புல் வளர்ப்பிற்கு உட்படுத்தப்பட்டு விலங்கு வேளாண்மை விருத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
02) கடல் நீரேரிகளில்  மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும் மக்களின் தொழிற்துறை பாதிப்புறும் என்ற கருத்து
இத்திட்டத்தால் பாதிப்புறும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பொருத்தமான வேறு கரையோரப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பது இயலக்கூடியதே. குடாநாட்டு பரவைக் கடற்பரப்புகளில் மீன்பிடித் தொழில் ஈடுபடுவதைவிட ஆழ்கடல் மீன்பிடியில் அவர்களை ஈடுபட வைப்பது பொருளாதார அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை விளைவிப்பதாக அமையும். எனவே பாதிப்புறும் மக்களை குடாநாட்டின் அல்லது பிரதான நிலப்பகுதியின் கிழக்கு கரையோரமாகக் குடியேற்றி ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கலாம். இம்மாற்றமானது குறுங்கால நோக்கில் கடினமாக அமைந்தாலும் நீண்ட கால பிரதேச அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை பயக்குமென நம்பலாம்.
பயிர்களுக்கு மிதமிஞ்சிய நீர்ப்பாவனை
யாழ்ப்பாணப் பகுதிகளில்  நீரிறைப்பு இயந்திரமயப்படுத்தப்பட்ட பின்னர் பயிர்களுக்கு மிதமிஞ்சிய நீர் பாய்ச்சப்படுவதாக கருதப்படுகின்றது. உவர்நீராதல் பிரச்சனைக்கு இதுவும் ஒரு காரணமாகும். உண்மையில் இன்ன பயிருக்கு இன்ன பிரதேசத்தில் இன்ன காலத்திற்கு இவ்வளவு நீர் தேவை என்பதை விவசாயிகளுக்கு நல்ல முறையில் அறிவுறுத்தல் வேண்டும். மேலும் இங்கு காணப்படும் பாசன முறைமை நீர் ஆவியாக்கத்தைக் அதிகரிக்கச்செய்கின்றது. இதனை தடுப்பதற்கு இஸ்ரேல் நாட்டில் காணப்படும் பாசன முறைகளான விசிறல் பாசன முறைமை, பல குழாய் வழி இணைப்புகள் மூலம் பயிருக்கு அடியில் நீரைச் செலுத்துதல், ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பை தடுப்பதற்கு சில இரசாயணங்களை நீரில் மிதக்கவிடல் போன்ற முறைகளைப் பின்பற்றி ஒருதுளி நீரும் வீணாகாமல் பாசன முகாமைத்துவ முறைகளை மக்கள் பின்பற்றும்படி செய்தல் வேண்டும்.
நீர்வள அபிவிருத்தி தொடர்பான திட்டமிடலுக்கு பல்வேறு தரவுகள் தேவை. இதற்கு புவியியல், பொருளியல், புவிச்சரிதவியல், மண்ணியல், பொறியியல், விவசாய அறிவயல் போன்ற துறை சார் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் நீர்வள நிலையங்களாக முதலில் வகுக்கப்படுதல் வேண்டும். ஆறுகள், குளங்கள், கிணறுகள் என்பவற்றை அவதானித்து நீர்ப்பீட ஆய்வு செய்து அவற்றின் உவர்த்தன்மை, ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு, ஊடுவடித்தல், போன்ற அம்சங்கள் யாவும் கணிக்கப்பட்டு நீர் வள வலயங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படைத் தரவுகளின் துணையுடனேயே அபிவிருத்தித் திட்டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். இந்த அடிப்படைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் வெற்றி பெறுமென நம்பலாம்.
பிரதான நிலப்பகுதி நீர்வள ஆய்வுகள் இன்னும் சரியாக ஆராயப்படவில்லை. இப்பகுதிக் காடுகளிலே பழைய குளங்கள் பல தூர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இவை புனருத்தாரணம் செய்யப்படுதல் வேண்டும். பயன்பாட்டிலுள்ள குளங்களின் கொள்ளளவைக் கூட்டலாம். தெளிவான ஆய்வுகள் மேற்கொண்டு சூழல் நிலமைகள் பாதிக்கப்படாதவகையில் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம். 1980-81 இல் கனகாம்பிகைக் குளம், பிரமந்தலாறு, புதுமுறிப்புக் குளம், போன்றவற்றின் கொள்ளளவை அதிகரிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. பறங்கியாறு, பாலியாறு, என்பவற்றைப் பொருத்தமான இடத்தில் மறித்துக் கட்டி புதிய நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கக்கூடிய வளவாய்ப்புகள் பற்றி நீரியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.
பிரதான நிலப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களில் ஏற்று நீர்ப்பாசன வளங்களை அதிகரிப்பதன் மூலம் அங்கு உபஉணவுச் செய்கையை ஊக்குவிக்கலாம். வடபகுதிக் குடியேற்றத் திட்டங்களில் ஏற்று நீர்ப்பாசன வசதிகளுடன் உப உணவு உற்பத்திக்கு முதலிடம் வழங்கிய இளைஞர் திட்டங்களே பெருமளவுக்கு வெற்றியைத் தந்த திட்டங்களாக உள. (உ.ம் முத்தையன் கட்டு, விசுவமடு, வவுனிக்குளம்) இவ்வாறான ஏற்று நீர்ப்பாசன திட்டங்களில் பணப்பயிர் செய்கைகளே ஊக்குவிக்கப்படுதல் வேண்டும்.  ஏற்று பாசனமுறை அதிக செலவிலமைக்கப்படுவதால் பணப்பயிர்ச் செய்கையே அதிக வருமானத்தை தரத்தக்கதாக அமையும்.
முடிவுரை
தமிழரின் பாரம்பரியப் பிரதேச நீர்வள அபிவிருத்தியை எமக்கு வேண்டுவதான அபிவிருத்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் இவ்வள அபிவிருத்தி தொடர்பான கொள்கைகள், திட்டங்களை உருவாக்குவதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் அப்பிரதேசங்கள் அவ்வப் பகுதி வாழ் மக்களின் நிர்வாகத்தினுள் வருதல் வேண்டும். அப்போது தான் தங்கு தடையின்றி உள்நோக்கம் எதுவும் அற்ற விவசாய பாசனஅபிவிருத்தி திட்டங்களை உருவாக்கலாம். இதனால் விவசாய உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறுவது மாத்திரமன்றி மிகை உற்பத்தி செய்தலும் சாத்தியமாகும்.
http://keetru.com/index.php/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/13282-2011-03-01-05-49-40

சூழலின் வெம்மையைக் குறைத்து பசுமையைப் பேணும் நகர வனங்கள்

“நான்கு திசைகளிலும் புகை போக்கிகள்! நச்சுக் காற்று நெளிந்து ஊடுருவி மனித நாற்றுக்களை மெளனமாய்த் தலைசாய்க்க கத்தியின்றி... இரத்தமின்றி யுத்தமொன்று ஆரம்பம்! நாள்தோறும் பேருந்து, வாகனங்கள், வண்டிகளின் கரிய புகையால் வெளி நிரம்பும்! ஓங்கியுயர் மரங்களை வெட்டிவிட்டார் மழையும் தான் பொய்க்காதோ மண்ணுலகம் தன்னில்?...”


இணையத்தில் பூத்திருந்த இந்தக் கவிதை சுட்டுவது வேறெதையுமல்ல. அதிகரிக்கும் மனிதத் தேவைகளை ஈடுசெய்யும் நோக்குடனே உதித்த நகரமயமாக்கலைத்தான்!
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து மனித வாழ்விலே, காடுகளின் முக்கியத்துவம் இன்றியமையாததாக இருந்தது. காடுகள் பூமியில் வாழும் சகல ஜீவராசிகளுக்கும் ஒன்றுக்குமேற்பட்ட பயன்களை வழங்கி வருகின்றன.

மனித நாகரிகத்தின் வளர்ச்சி சாதித்த அபிவிருத்திக்கான விலையை மனிதன் காடுகளை அழித்துச் செலுத்துகிறான். இவ்வாறு காடுகள் அழிக்கப்படுவதற்கு உடனடிக் காரணங்களாக, மரங்கள் வெட்டப்படல், இடம்பெயரும் விவசாயிகள், பணப் பயிர்கள், மந்தை நிலங்களின் தேவை, எரிபொருட் தேவை, பெரியளவிலான நீர்த்தேக்கங்களின் நிர்மாணம், சுரங்கத் தொழில், குடீயேற்றத் திட்டங்கள், சுற்றுலாத்துறை போன்றன கருதப்படுகின்றன.
இவை தவிர அபிவிருத்தித் திட்டங்களும், ஆடம்பரத் தேவைகளால் உருவாகிய மிகை நுகர்வுமே காடழிப்புக்கான அடிப்படைக் காரணங்களாகும். இவை தவிர கைத்தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளால் மேற்கொள்ளப்படும் இயற்கை வளங்களின் துஷ்பிரயோகமும், மூன்றாம் உலக நாடுகளின் கடன் சுமை, வறுமை, அதிகரிக்கும் சனத்தொகை ஆகிய காரணங்களும் காடழிப்பின் பின்னணியில் இருக்கின்றன.

60 சதவீதமாகவிருந்த உலகின் காடுகள் ஒரு சில தசாப்தங்களுக்குள்ளேயே 30 சதவீதமாகக் குறைவடைந்தமையே, அதிகரித்துள்ள மனிதத் தேவைகளுக்கும் இயற்கை வளங்களின் துஷ்பிரயோகங்களுக்கும் மிகச் சிறந்த உதாரணமாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையிலே, காடுகளைப் பேணுவதற்கான சட்டதிட்டங்கள் துட்டகைமுனு மன்னனின் காலத்திலேயே (கி. மு. 161 – கி. மு. 137) பேணப்பட்டனயென வரலாறு கூறுகிறது. அம் மன்னனின் காலத்திலே இருந்த சமூகம், மிகுந்த அக்கறையுடன் வனவளங்களைப் பாதுகாத்து இயற்கைச் சூழலின் சமநிலையை சீராகப் பேணி வந்திருக்கிறது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பின் ஆங்கிலேயரென அடுத்தடுத்து இலங்கை வெளிநாட்டவர் வசமானமை, இலங்கையின் நிலப்பாவனை முறைமைகளிலும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. புதிய புதிய நிலப் பாவனைக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக இயற்கை வனப்பிரதேசங்களின் அளவு குறையத் தொடங்கியது- 1886ஆம் ஆண்டு இலங்கையின் மொத்த நிலப்பரப்பின் 80% சதவீதமாகவிருந்த வன வளம், 1900 ஆம் ஆண்டு 70 சதவீதமாகவும், 1956 இலே 44 சதவீதமாகவும் குறைவடைந்து சென்றது. அவ்வாறு வனவளம் துரிதகதியில் அழிக்கப்படுவது அதே போக்கிலே தொடர்ந்தால், 2030 ஆம் ஆண்டளவில் அது முற்றாக அழிந்துவிடும் எனக் கணக்கிடப்பட்டது.

வனவளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் பல்வேறு கொள்கைகள், சட்டதிட்டங்கள், அமைப்புக்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது. பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன. ஆயினும் வனப் பிரதேசங்கள் அழிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. மாறாக, அழிக்கப்படும் வேகம் குறைவடைந்தது. 2002 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி இலங்கையின் வனப் பிரதேசம் மொத்த நிலப்பரப்பில் 32 சதவீதமாக (னிஜிஜிளி, 2002) காணப்பட்டது.
மொத்த நிலப்பரப்பின் 80 சதவீதமாகவிருந்த இலங்கையின் வனவளம் ஒரு நூற்றாண்டு காலப் பகுதிக்குள்ளேயே 40 சதவீதத்தால் குறைவடைந்து இன்று மொத்த நிலப்பரப்பின் 32 சதவீதமாகக் காணப்படுகிறது. இதுபற்றி நாம் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

19ஆம் நூற்றாண்டிலே ஆரம்பிக்கப்பட்ட வர்த்தகப் பயிர்ச் செய்கைகளும் காலப் போக்கில் உருவாக்கப்பட்ட பாரிய விவசாய அபிவிருத்தித் திட்டங்களும் சடுதியான காடழிப்புக்கு வழிவகுத்தன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விவசாயக் குடியேற்றத் திட்டங்களும், அபிவிருத்தி மற்றும் நகரமயமாதல் செயற்பாடுகளும் வன வளங்களின் குறைவடையும் போக்குக்குப் பின்னணியாக அமைந்தன.
இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டு சீமெந்துக் காடுகள் தோற்றம் பெற்றன. நகரமயமாதலின் போர்வையில் சீமெந்தானது இயற்கை படர்ந்திருந்த சகல இடங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கியது. நகரமயப்படுத்தப்பட்ட பல இடங்களில் மண்ணையும் மரத்தையும் காண்பதுகூட அரிதாயிற்று. இவற்றின் விளைவு அசெளகரியமான சூழலாக மீண்டும் மனிதனையே தாக்கியது.

இயற்கையோடு விளையாடுதலென்பது சுலபமான காரியம் அல்லவே! விளையாடத் தொடங்கியவனுக்கு, எதிர்கொள்ளப் போகும் விபரீதங்களும் தெரியாமலிருக்கவில்லை. ஆனால் அபிவிருத்தி, முன்னேற்றம் என்ற தொலைநோக்கிலான இலக்குகளின் முன்னே, இந்த விபரீதங்களுக்கான முக்கியத்துவம் குறைவாகவே காணப்பட்டது.
மனிதத் தேவைகள் அதிகரிக்க, அபிவிருத்தி எனும் பெயரிலான அத்திவாரமும் இடப்பட்டது. மண் வீதிகள் கொங்கிaட் பாதைகளாகவும் மேம்பாலங்களாகவும் மாற்றம் பெற்றன. வானுயர்ந்த கொங்கிaற் கட்டங்கள் தோன்றின. இன்னும் பல உட்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டன.

குளிர்ச்சி தரும் மரங்களற்று, சூழலின் வெம்மை அதிகரித்தது. தொடர்ந்து ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் பல சூழல் பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின. பின் அவை சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளாக உருவெடுத்தன. இந்நிலை இலங்கைக்கு மட்டுமே உரித்தானதல்ல. முழு உலகுமே இதே நிலையைத்தான் எதிர்நோக்கியது.
1700 களிலே, நகரப் பகுதிகளில் நிழலுக்காகவும் அழகுக்காகவும் மரங்களை வளர்க்கும் திட்டமொன்று இங்கிலாந்திலே தொடக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டின் பின்னர் 1850 ஆம் ஆண்டளவிலே தனியார் நிறுவனங்களும் அமைப்புக்களும் அழகுக்காக வளர்க்கப்படும் மரங்களைச் சந்தைப்படுத்தும் நோக்குடன் அத்தகைய மரங்களை நகர்ப்பகுதிகளிலே வளர்ப்பதை ஊக்குவித்தன.


நாற்றுமேடையில் வளரும்
மரக் கன்றுகள்
பின்னர் 1890 களில் இங்கிலாந்திலே உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களால் இவ்வாறு நிழல் தரு நோக்கத்துக்காக நகர்ப் பகுதிகளில் வளர்க்கப்படும் மரங்கள் பொதுச் சொத்து என்று வரையறுக்கப்பட்டது. அதனடிப்படையிலே பின்னர் ஐக்கிய அமெரிக்காவிலும், ஏனைய நாடுகளிலும் பொதுச் சொத்தாக மரங்கள் வளர்க்கப்பட்டன.
பின்னர் நில அமைப்பு முகாமைத்துவம் என்ற துறையும் அதைத் தொடர்ந்து நகர வனவியல் (ஸிrban பிorலீstry) என்ற புதியதோர் துறையும் உருவாகியது, அதைத் தொடர்ந்து பல கிளைத் துறைகளும் அவற்றையொட்டிய தொழில்சார் வாய்ப்புக்களும் உருவாகின. இன்று நகரமயமாதலின் முக்கிய பகுதியாகவே இந்த நகர வனங்கள் மாறிவிட்டன.


நகர வனவியலானது, வனவியலின் ஒரு கிளையாக மட்டுமன்றி மரங்களின் உடற்றொழிலியல், சமூகவியல், பொருளியல் ரீதியான முக்கியத்துவத்தையும் அவற்றால் சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மையையும் கருத்தில் கொண்டு, மரங்களை நாட்டி, அவற்றைச் செவ்வனே முகாமைத்துவம் செய்தலை நோக்காகக் கொண்டது.

நகர வனவியலைப் பொறுத்தவரையிலே, மூன்று விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, தாவர (மர) இனங்கள் கவனமாகத் தேர்வுசெய்யப்பட வேண்டும். அவற்றை நாட்ட வேண்டிய இடம், சூழல் அவற்றின் சராசரி ஆயுட்காலம், பராமரிப்புக்காக ஏற்படும் செலவின் மதிப்பீடு போன்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இடத்தேர்வு மிகவும் முக்கியமானது.

நாட்டவேண்டிய இடம் ஒழுங்காகத் தேர்வு செய்யப்படாவிடில், மரங்கள் வளர்ந்து மின் இணைப்புக்களுடனோ அல்லது மின்சாரக் கம்பிகள், வீதிச் சமிக்ஞை விளக்குகளுடனோ சிக்குற நேரிடும். மரங்கள் வளர்க்கப்படும் இடங்கள் கட்டடங்கள் நிறைந்த நகர்ப் பகுதிகளாகையால், இத்தகைய பிரச்சினைகள் நகரவனச் சூழல் தொகுதியால் கிடைக்குமென எதிர்பார்க்கப்படும் நன்மைகளை, மூடி மறைத்துவிடும்.
அத்துடன், இனங்களின் தெரிவானது ஒரே இனத்தை மட்டுமே சார்ந்ததாக இல்லாமல், இனங்களின் பல்வகைமையை உள்ளடக்கியதாகக் காணப்பட வேண்டும். அவ்வாறு இனங்களைத் தெரிவு செய்யும்போது, மண் பாதுகாப்பு, நடைபாதைப் பகுதிகள், உயிர்த்திணிவு (உதிரும் தாவரப் பகுதிகள்), நீர்பேணல் முறைமைகள், வளியின் தரம், சூழலின் அழகு போன்ற விடயங்களும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
இரண்டாவதாக, மரங்களின் விபரக் குறிப்பு (யிnvலீntory) பேணப்பட வேண்டியதுடன், நில அமைப்பு முறைமைகளும் திட்டமிடப்பட வேண்டும். அவை, மரங்களின் பராமரிப்பு வட்டங்கள் (எவ்வாறு பராமரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது? என்பது பற்றிய விபரங்கள்). மரங்கள் ஏனைய நகர சேவைகளில் (மின்சாரம், போக்குவரத்து) ஏற்படுத்தும் தாக்கங்கள், வனத்தின் கட்டமைப்பு, வரவு செலவுத் திட்டம், போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக, திட்டமிடல் இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, மரங்கள் ஒழுங்காகப் பராமரிக்கப்பட வேண்டியதுடன் மரப்பகுதிகளும் வினைத்திறன் மிக்க வகையில் பாவிக்கப்பட வேண்டும்.

மரங்கள் கிரமமாகப் பராமரிக்கப்பட்டு, தேவையான காலங்களில் அகற்றப்பட்டு புதியவை நாட்டப்படலாம். கிளைகளை ஒழுங்காக வெட்டி அவற்றாலேயே தாவரத்திற்கான நீரைத் தேக்கி வைக்கும் வகையில் நிலத்தை மூடலாம். ஆயினும் இந்த நகர வனங்களின் மரங்களுக்கான பராமரிப்புச்செலவு மிகவும் உயர்ந்ததாகும். இவை பொதுச் சொந்தாகையால் பொதுவான நிதியமொன்றினாலேயே பராமரித்து நிர்வகிக்கப்படுகின்றன. அத்துடன் பொதுமக்களினதும் அரசாங்கத்தினதும் முழுமையான ஆதரவின்றி இந்த நகர வனங்களை நிர்வகிக்க முடியாது.

நகர வனங்கள் உருவாவதற்கு, பின்வரும் தேவைகள் அடிப்படையாய் அமைந்தன.
1. இயற்கையைப் பேணுதல்
2. வெள்ளப்பெருக்கு, மண் சரிவு, மண்ணரிப்பு போன்ற அனர்த்தங்களிலிருந்து நகரைப் பாதுகாத்தல்.
3. வீதிகள் மற்றும் உட்கட்டமைப்புக்களுக்கு உருவாகும் சேதங்களைக் குறைத்தல்.
4. வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்
5. தனிமனித வாழ்வையும் சுகாதாரத்தையும் பேணுதல்

இந்தத் தேவைகள் யாவற்றுக்குமே அடிப்படையாக அமைவது, ‘சூழலைப் பசுமையாக்கல்’ என்ற கொள்கையாகும். நகரப் பகுதிகளில், மரங்கள் விதை மூலம் உருவாக்கப்படுவதில்லை. நாற்று மேடைகளில் வளர்க்கப்பட்டு இளங்கன்றாகவோ அல்லது முதிர்ச்சியடைந்த மரமாகவோ மாறிய பின்னர்தான் நகரப் பகுதிகளுக்குக் கொண்டு வந்து நாட்டப்படுகின்றன.


பொருத்தமான இடத்தில் நாட்டப்படும் வளர்ந்த மரக்கன்று.
இந்த நகர வனங்கள் தனித்தனி மரங்களாக மட்டுமே நாட்டப்பட வேண்டுமென்ற அவசியமெதுவுமில்லை. மரங்கள் நிறைந்த பூங்காக்களும் நகரப் பகுதிகளிலே காணப்படும் மர நடுகைத் திட்டங்களும்கூட நகர வனங்களே! வளங்கள் குறைவாகக் கிடைக்கும் நகர்ப்புறக் குடியிருப்புகளில் நகர வனங்களை உருவாக்குதலானது குடியிருப்பாளர்களின் உணவுத் தேவையைச் சிறிதளவிலாவது பூர்த்தி செய்யும் முயற்சியாகும். உணவுக்காகப் பயன்படுத்தப்டும் காய்கள், பழங்கள் இலைகளையுடைய மரங்களை இத்தகைய இடங்களில் வளர்க்கலாம்.
பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் நகர்ப்புறங்களில், இந்த நகர வனங்கள் காற்றுத் தடைகளாகவும் செயற்பட்டு, பயிர் நிலங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுகின்றன.

சக்தித் தேவையைப் பூர்த்திசெய்யும் முக்கிய எரிபொருளாக, மரங்கள் காணப்படுகின்றன. நகரங்களின் சக்தித் தேவையை ஈடுசெய்யவும் இந்த நகர வனங்கள் பயன்படுகின்றன.
மழைநீரின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் இவை பெரும்பங்காற்றுகின்றன. மழைநீர் தரையில் படும் வேகத்தைக் குறைத்து மழைநீர் பாய்ந்தோடுவதைத் தடுக்கின்றன. இதனால் மண்ணும் அரிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

சூழலைக் குளிர்மையாக வைத்து, சூழலின் வெம்மையைக் குறைப்பதுடன், நிழலையும் தருகின்றன. வளிமண்டலத்தை மாசுபடுத்தும் துணிக்கை மாசுக்களுடன் பரிமாறலில் ஈடுபட்டு அவற்றை உறிஞ்சுகின்றன.

அதேபோல சூழல் மாசடைதலை வெளிக்காட்டும் காட்டிகளாகவும் இந்த நகர வனங்கள் காணப்படுகின்றன. அவற்றின் செழுமை வளர்ச்சிப் போக்கை அடிப்படையாகக்கொண்டு, சூழல் மாசடைதல் மட்டம் அறியப்படும்.

கட்டங்கள் நிறைந்த நகரச் சூழலிலே மரங்களை வளர்ப்பதானது, சூழலுக்கு அழகையும் கண்ணுக்குக் குளிர்ச்சியையும் தருவதை நாம் யாவருமே அறிந்திருப்போம். இம்மரங்கள் நகர்வாழ் மக்களின் உடல், உள ஆரோக்கியத்தையும் அதிகரித்திருக்கின்றனவென ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நகர வனங்கள் காணப்படும் நிலப்பரப்பும் நகர வனங்களின் தரமும் அதிகரிக்க, நகரின் நுண் காலநிலை சீராக்கப்படும். மண், நீர், வளியின் தரம் ஆகியன செவ்வனே முகாமைத்துவம் செய்யப்படும்.

பல பறவைகளினதும் உயிரினங்களினதும் வாழ்விடமாக, மரங்கள் தொழிற்பட விளைய, உயிர்ப்பல்வகைமை பேணப்படும். நகரின் பொழுதுபோக்கு, கலாசாரப் பெறுமதி அதிகரிக்கும்.

வாகனப் போக்குவரத்து செவ்வனே முகாமைத்துவம் செய்யப்படும். பொருளாதார அபிவிருத்தியும் தானே உருவாகும்.

நாற்று மேடையில் பதித்து வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள், பொருத்தமான போக்குவரத்து முறைமை மூலம் பக்குவமாக நகருக்குக் கொண்டுவரப்படும். அவை அவ்வாறு கொண்டு வரப்பட முன்னரே, நகரில் அவற்றை நாட்ட வேண்டிய இடம் தீர்மானிக்கப்பட்டு நிலமும் மண்ணும் தயார்படுத்தப்படும்.

பொதுவாக மழைக் காலங்களிலேயே இவ்வாறு மரங்கள் நடப்படும். நீர் தேங்கி நிற்கும் காலங்களிலோ அல்லது வறண்ட மற்றும் அதிக காற்று வீசும் காலங்களிலோ நகர வனங்களுக்கான மரங்களை நடுதல் உகந்ததல்ல.

மண்ணானது வளம் மிக்கதாகவும், நீரை வடிந்தோடவிடக் கூடியதாகவும், வளியடக்கம் உள்ளதாகவும், தேவையானளவு ஈரப்பற்றையுடையதாகவும், நடு நிலைத் தன்மையுடையதாகவும் காணப்பட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடைய மரங்களாக அவை வளரும்.

மரங்களை நடுவதோடு நகர வனவியலாளர்களின் பணி முடிந்து விடுவதில்லை. மரங்கள் தாமாகவே வளரும் நிலையை அடையும் வரை, அவற்றைப் பராமரிக்க வேண்டும். மரங்கள் நாட்டப்பட்டுள்ள மண்ணின் வளம் தொடர்பான பிரச்சினைகள் ஒழுங்காக முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும். இல்லாவிடில், மண்ணின் தன்மைக்கமைய,இசைந்து வளரக்கூடிய மர இனங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
நகர வனங்களில் உள்ள மரங்கள் அழகானவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் இருக்க வேண்டும்.

சிதைந்த இறந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டு ஒழுங்காகப் பேணப்பட வேண்டும். மற்றைய மரங்களுக்கு வளர இடமளிக்கும் பொருட்டும் கிளைகள் ஐதாக்கப்படலாம். நகரப் கட்டமைப்புக்களின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலோ அல்லது அதீத முதிர்ச்சியடைந்த நிலையிலோ அவை தறிக்கப்படலாம்.
நகர வனங்களில் உள்ள மரங்களின் ஆயுட் காலம், இயற்கை வனங்களிலுள்ள அத்தகைய மரங்களின் ஆயுட்காலத்தை விடக் குறைவானதாகும்.
நகர வனங்களில் உள்ள மரங்களுக்கு அவை நாட்டப்பட்ட காலத்திலிருந்து அவை சுயமாக நிலைத்து வளரும் காலம் வரை, கிரமமாக நீர் பாய்ச்ச வேண்டும். மழை வீழ்ச்சி, ஈரப்பற்றைத் தேக்கிவைக்கும் மண்ணின் ஆற்றல், நிலத்தில் நீர் வடிந்தோடும் தன்மை போன்ற காரணிகளைப் பொறுத்து, பாய்ச்சும் நீரின் அளவும், நீர் பாய்ச்சும் காலமும் வேறுபடலாம். வரண்ட காலங்களில், கட்டாயம் நீரைப் பாய்ச்ச வேண்டும். மிகையாக நீரைப் பாய்ச்சினாலும், அது மரத்தின் வேர் அழியக் காரணமாகி வளர்ச்சியைப் பாதிக்கும்.

நீர் பாய்ச்சுவதுடன் மட்டும் நின்றுவிடாது தகுந்த வகையில் பசளையிட்டு, நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்கத்துக்கும், ஈடுகொடுக்கும் வகையிலும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்கு மரங்களால் எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணமும், அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நகர வனங்களைப் பராமரிக்கும் போது, பல சவால்களையும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இலங்கை போன்ற வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையிலே, இத்துறை மிகவும் புதியது. அதற்குரிய தொழில்நுட்பம், ஆய்வுகளுக்கான பற்றாக்குறை மிகவும் அதிகமாகும். அத்துடன், நகர வனங்களின் பொருளாதார ரீதியிலான பெறுமதி மிகவும் குறைவாக மதிப்பீடு செய்யப்படுவதுடன், அரச, தனியார் துறைகளும் பொது மக்களும் இணைந்து செயற்படும் தன்மையும் குறைவாகவே காணப்படுகிறது- பொருத்தமற்ற முறையில் உருவாக்கப்பட்ட நிலப்பாவனைக் கொள்கைகள், நகரச் சூழலில் காணப்படும் சூழல், தொழில்நுட்பம் தொடர்பான தடைகள், நகர வனவியலையும் வனவியலையும் இணைத்த திட்டமிடலும் அபிவிருத்தியும் போன்ற பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. நகர வனங்களின் பராமரிப்புச் செலவு மிகவும் அதிகமாகும்.

இலங்கையிலும் இத்தகைய நகர வனங்கள் சிறிதளவிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. தலைநகரின் காலி முகத்திடலிலே வரிசையாக நாட்டப்பட்டுள்ள பனை, தென்னை, கத்தா மரங்களும், உலக வர்த்தகமையக் கட்டடத்தின் முன்னே வளர்க்கப்படும் மரங்களும் கூட நகர வனங்களே! தும்முள்ள சந்தியிலிருந்து பிரியும் வீதிகளின் இரு மருங்கிலும் காணப்படும் அடர்ந்த முதிய மரங்கள் அந்தப் பிரதேசத்தையே குளிர்மையாகப் பேணி வருகின்றமை நாம் யாவருமறிந்த ஒரு விடயமாகும். விகாரமகாதேவி பூங்கா கூட ஒரு நகர வனமேயாகும்.

நாம், தனி நபர்களாகக்கூட, நகர வனங்களை உருவாக்க முடியும், ஏறத்தாழ 7 வருடங்களுக்கு முன்னர், கொழும்பு - வெள்ளவத்தை கெனல் வீதியிலுள்ள கழிவு நீர்க்கால்வாய் துர்நாற்றம் வீசுவதாகக் காணப்பட்டது. நல்லுள்ளம் கொண்ட பிரதேச வாசிகளின் முயற்சியால் கால்வாயின் கரையோரத்திலே சிறிய மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. காலப் போக்கில் அவை வளர்ந்து இன்று பெருஞ்சோலையாகக் காணப்படுகின்றன. இப்போது அந்தப் பகுதி துர்நாற்றம் வீசுவதில்லை.
கடும் வெம்மை மிகுந்த வவுனியா நகரின் மையப் பகுதியிலே உள்ள வீதியொன்றிலும் கூட இத்தகைய முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது.

ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு முன்பு, பிரதேச வாசிகளின் முயற்சியால் அடைக்கப்பட்ட கூடுகளுக்குள், வீதியின் இரு மருங்கிலும் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டன. இன்று அவை அகலக் கிளை பரப்பி நிழல் தரும் பெரு மரங்களாகக் காட்சியளிக்கின்றன. நகர வனவியல் பற்றித் தெரிந்தோ தெரியாமலோ நகரப் பகுதிகளிலே இவ்வாறு பல நல்லுள்ளம் படைத்த மக்கள் மரங்களை வளர்த்து வருகின்றனர்.
இனிவரும் காலங்களில் நீங்கள் நகரப் பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் கட்டடங்களையும் கடைகளையும் மட்டுமே அவதானிக்காமல், நகர வனப் பகுதிகளையும் அவதானியுங்கள்.

நீங்கள் நகர வாசியாக இருப்பின், உங்கள் நகரத்தில் உள்ள நகர வனப் பகுதிகளை இனங்காணுங்கள்! உங்கள் பிரதேசத்திலும் சிறியளவிலாவது நகர வனங்களை உருவாக்க முயற்சி செய்யுங்கள்! அவை உங்களை மட்டுமன்றி உங்கள் எதிர்காலச் சந்ததியையும் சந்தோஷமாக வாழவைக்கும். எதிர்காலச் சந்ததியும் உங்களை வாழ்த்தும்!

நகர அபிவிருத்தி

உலகெங்கும் நகரமயமாகக்கொண்டு போகிறபோக்கில், நகர்ப்புற சனத்தொகையில் விரைவானதொரு வளர்ச்சியை நாடு எதிர்நோக்குகின்றது.  2005-2015 ஆண்டு காலப்பகுதியில் வருடாந்த சனத்தொகை வளர்ச்சியானது 1.2 சதவீதத்திலும் குறைவாக இருக்குமிடத்து, நகர்ப்புற சனத்தொகை வளர்ச்சியானது ஆண்டுக்கு 3 சதவீதமாக மதிப்பிடப்படுகிறது. 2015ஆம் ஆண்டளவில், மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோர் நகர்ப்புற மாநகரங்களில் வசிப்பார்கள் என மதிப்பிடப்படுள்ளது.  இவ்வாறாக நகரமயமாகுதலின் வேகமும் பரிமாணமும், நகர்ப்புற ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை மேம்படுத்துவதன் மூலம் மாநகரங்களில் அதிகரித்து வரும் வறுமையை இயன்றளவு குறைக்கவும் நிலைபேறான நகர அபிவிருத்தியை வலியுறுத்துவதற்கும் உரிய கொள்கைகளும் உபாயங்களும் தகுந்த விதத்தில் வகுக்கப்பட வேண்டும் என்பதையே காட்டுகின்றன.  ஆகவேதான் நிலைபேறான நகர அபிவிருத்தியை நோக்கி இட்டுச்செல்லும் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு வழிமுறையானது, நாட்டின் முன்னணி தேவைகளில் ஒன்றாகி விட்டது.

நகர அபிவிருத்தி, புனித நிலப்பகுதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை (ந.அ.அ), நாடு முழுவதிலுமுள்ள நகர்ப்புற பிரதேசங்களின் திட்டமிடலுக்கும் அபிவிருத்திக்கும் பொறுப்பாக உள்ளது.

1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க சட்டமூலத்தினால் ந.அ.அ. ஸ்தாபிக்கப்பட்டது.  காலத்துக்கு காலம் தேவை ஏற்பட்டவிடத்து, இச்சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

இச்சட்டமுலத்தின் பிரகாரம் (பிரிவு 3இன் கீழ்), நகர அபிவிருத்தி எனும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர், அபிவிருத்திக்கு உகந்த பிரதேசங்களை பிரகடனப்படுத்துவார்.

1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க ந.அ.அ. சட்டத்தில் 1982ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது, ந.அ.அ. சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் பிரகடனம் செய்யப்பட்ட அனைத்து பிரதேசங்களுக்குமான அபிவிருத்தி திட்டவரைவுகளை தயாரிப்பதனை ந.அ.அ.இன் பிரதான பணி ஆக்கியுள்ளதுடன் அத்தகைய பிரதேசங்களில் பௌதீக அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் அதற்கு அதிகாரம் அளித்துள்ளது.

ந.அ.அ.இனால் தயாரிக்கப்பட்ட கொழும்பு மாநகர அபிவிருத்தி திட்டவரைவானது, வலயப்பிரிப்பு மற்றும் கட்டிட நிர்மாண ஒழுங்குவிதிகளை அமுலாக்கும் பொருட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.  ந.அ.அ. திட்டமிடலும் கட்டிட நிர்மாண ஒழுங்குவிதிகளும் இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 1986 மார்ச் 10ஆம் திகதிய 392/9ஆம் இலக்க விசேஷ வர்த்தமானியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அமைச்சர் அவர்களால் நகர அபிவிருத்தி பிரதேசம் என இற்றை வரைக்கும் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக பிரகடனம் செய்யப்பட்ட ஒவ்வொரு பிரதேசத்துக்கும் இவ்வொழுங்கு விதிகளிலுள்ள எற்பாடுகள் யாவும் பொருந்தும்.

1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க ந.அ.அ. சட்டமூலத்தின் 18ஆவது பிரிவின் கீழ், நகர அபிவிருத்தி எனும் விடயத்துக்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சரினது அங்கீகாரத்துடன் இவ்வதிகாரசபை தன்னிடமுள்ள எந்தவொரு காணியையும் பராதீனப்படுத்தவோ, குத்தகைக்கு விடவோ அல்லது வாடகைக்கு கொடுக்கவோ இயலும். (மேலதிக தகவல்கள் ந.அ.அ. இணையத்தளத்தில்)

பௌதீக திட்டமிடல்
அபிவிருத்தியடைந்த நாடுகள் யாவும் தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கை மற்றும் வரைவின் வழிகாட்டல்களுக்கு ஏற்பவே தமது அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

இலங்கைக்கான தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கையும் வரைவும் உருவாக்கப்பட்ட வேண்டிய அவசியம் 1997ஆம் ஆண்டு உணரப்பட்டது. 1946ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க நாடு நகர திட்டமிடல் கட்டளைச்சட்டம் திருத்தம் செய்யப்பட்டதன் மூலம், நகர அபிவிருத்தி, புனித நிலப்பகுதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள இந்த தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் 2000ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

தேசிய பௌதீக திட்டவரைவின் பிரதான குறிக்கோள் யாதெனில், சுற்றாடலை பாதுகாத்தலும் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் சேதங்கள் ஆகக்குறைவாகவுள்ள இடங்களில் குடியிருப்புக்களை அமைத்தலுமே ஆகும். தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கையையும் தேசிய பௌதீக திட்டவரைவையும் தயாரிப்பது இத்திணைக்களத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இவைகள் தயாரிக்கப்பட்டு 2007 ஜுலை 3ஆம் திகதி மேதகு ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இக்கொள்கையினுள், இயற்கை அனர்த்தங்களை தவிர்க்கும் விதமாக அமைக்கப்பட்ட குடியிருப்பு பாங்கு, அபிவிருத்திக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட முறையாக திட்டமிடப்பட்ட நகர்ப்புற பிரதேச வலையமைப்பு, நகர மற்றும் கிராமிய பிரிவுகளை உரியமுறையில் ஒருங்கிணைக்கத்தக்க விதத்தில் சேவைகளை வழங்குகின்ற சிறிய புறநகரங்களின் வலையமைப்பு ஆகியன உள்ளடங்கியிருக்கும்.

சுற்றாடல் ரீதியில் மிகுந்த கூர்ந்துணர்வான பிரதேசங்கள், காடுகள், வனவிலங்குகள், தொல்பொருள் ஆய்வுப்பகுதிகள் ஆகியன காணப்படும் பிரதேசங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்ட அதே நேரம், பல்வேறு வகையான விவசாய நடவடிக்கைகளுக்கு பொருத்தமான பிரதேசங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதன் மூலம் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்குரிய பரிந்துரைகளும் தெரிவிக்கப்பட்டன. கட்டமைப்பு திட்டவரைவின் பிரதான கூறுகளில், மாநகரங்களை கொண்ட மாநகர பிராந்தியங்கள், மாவட்ட தலைநகரங்கள், பிரதான நெடுஞ்சாலைகள், பிரதான ரயில் பாதைகள், கப்பல் துறைமுகங்கள், விமான இறங்குதுறைகள், பிரதான மீன்பிடி துறைமுகம், மின்னுற்பத்தி நிலையங்கள் ஆகியன அடங்குகின்றன.

சமுதாயங்களிடையே இனரீதீயில் ஒற்றுமை, நாட்டிற்கு பொருத்தமான காணிப்பயன்பாட்டு பாங்கு, பிராந்தியங்களுக்கு இடையில் விரைவான இயக்கப்பாடு, பிராந்தியங்களுக்குள் பொருத்தமான பொருளாதார நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு வழிகாட்டியாக விளங்கும் இக்கட்டமைப்பு திட்டவரைவு நாட்டிலுள்ள பிராந்திய, சமூக, பொருளாதார சமத்துவமின்மையை குறைக்கவும் செய்கிறது.

இத்திணைக்களத்தின் முக்கிய பணிகளில் இன்னொன்று, தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கை மற்றும் வரைவின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, மாகாணங்களுக்குரிய பிராந்திய திட்டவரைவுகளை தயாரித்தலாகும். தற்போது, கிழக்கு மற்றும் சபரகமுவ ஆகிய இரு மாகாணங்களுக்கான பிராந்திய தேசிய பௌதீக திட்டவரைவுகள் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. வடமேல், தென், வடமத்திய, மேல், மத்திய, ஊவா, வட மாகாணங்களுக்கான திட்டவரைவுகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

இக்கொள்கையையும் வரைவையும் 2030ஆம் ஆண்டு வரைக்குமான பௌதீக அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு பயன்படுத்த முடியும்.

Sunday, January 1, 2017

வெள்ளத்தைத் தடுக்க என்னதான் தீர்வு?

சாரதா மனோகரன்

சில நாட்கள் தொடர்ந்து பெய்த அடை மழையால் உருவாகிய வெள்ளம் இன்னும் முற்றாக வடிந்தோடவில்லை. பல இலட்சம் மக்கள் இடம்பயெர்ந்திருந்தனர். பல தோல்வியாதிகள் பரவின. சுத்தமான நீரைக் கூடப் பெற முடியாத சூழ்நிலையும் காணப்பட்டது.

கழிவு வாய்க்காலும் ஆறுகளும் மழையின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் பெருக்கெடுத்தன. நகர்களும் நகர்களை அண்டிய பகுதிகளுமே அதிகளவில் பாதிக்கப்படடன. இவையெல்லாம் நடந்தது ஏதோ ஒரு நாட்டிலல்ல. இலங்கையிலேயே!
வெள்ள நீர் வடிந்தோடாமைக்கான அடிப்படைக் காரணம், வடிகாலமைப்பு முறைகளிலேயான குறைபாடேயாகும். கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டமைக்கு வடிகாலமைப்பு முறைமைகளிலுள்ள குறைபாடுகளுட்படப் பல காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மட்டும் தான் கழிவு நீர் வடிகாலமைப்புத் தொகுதி காணப்படுகிறது. ஏனைய பகுதிகளில் மழை நீர் வடிகால்களே காணப்படுகின்றன. இவற்றில் பல பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டவை. ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழைமையானவை. தற்போதைய சூழல் நிலைமைகளுக்கு அவை பூரண ஒத்துழைப்பை வழங்க முடியாதனவாகவே காணப்படுகின்றன.
இரண்டாவது விடயம், தாழ்நிலப் பகுதிகளில் காணப்படும் சட்டவிரோதக் குடியிருப்புகளாகும். மேல் மாகாணத்தில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ள அபாயம் மிக்கனவாகும். இப்பகுதிகளில் மக்கள் பலர் சட்டவிரோதக் குடியிருப்புக்களை அமைத்து பல காலமாக வாழ்ந்து வருகின்றனர். வெள்ளம் வீடுகளுக்குள் வந்த போதும் கூட தமது வீடுகள் பறிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தினால் இடம்பெயராமல் வெள்ளத்துக்குள் அவதிப்பட்ட மக்களும் இருக்கின்றார்கள்.
மூன்றாவது காரணமாகக் கூறப்படுவது கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால்களினுள் கொட்டப்படும் குப்பைகளாகும். தமது வாழிடச் சூழல் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைக்கும் மக்கள் அவ்வாழிடத்தின் புறச் சூழல் பற்றிச் சிந்திப்பதில்லை. குப்பைகள், பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளை வடிகால்களுக்குள் கொட்ட விழைகின்றார்கள்.
நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட வடிகால்களில் இந்தத் திண்மக் கழிவுகள் நிறைகின்றன. விளைவாக வெள்ள நீர் கால்வாய்களூடு செல்லாமல் பெருக்கெடுக்கிறது. வெள்ளப் பெருக்கின் பாதிப்புக்களை உணர்த்தவர்கள், அனுபவித்தவர்கள் கூட குப்பைகளை ஒழுங்காக அப்புறப்படுத்தாமையின் விளைவுகளை உணர்ந்து திருந்துவதாக இல்லை என்பதே வருத்தத்துக்குரிய விடயமாகும்.

அடைமழை பெய்வதை நாமே நினைத்தாலும் தடுக்க முடியாது. எம்மால் முடிந்தது. அடை மழையினால் ஏற்படும் வெள்ளத்தை எதிர்கொள்ளக்கூடியவாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே!

மழையென்பது நீர்ச்சமநிலையைப் பேணுவதற்கான இயற்கையின் தொழிற்பாடு ஆகும். நகரப் பகுதிகளை சீமெந்துக் கட்டடங்களும் தார்ப்பாதைகளும் அதிகளவில் ஆக்கிரமிக்கத் தொடங்கியதால் மழை நீர் வடிந்தோடமுடியாத நிலையொன்று ஏற்பட்டிருக்கின்றது.
அதைச் சரிசெய்யும் வகையில் பாதைகளின் சாய்வுகளும் நகர்ப்புற வடிகாலமைப்புத் தொகுதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அவை ஒழுங்காகப் பேணப்படாததால் வெள்ளம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

இதற்காக அரசாங்கத்தையோ இல்லை மாநகர, நகர சபைகளையோ குறைகூறுவதால் எந்தப் பயனும் இல்லை. இதற்கான பொறுப்பை முதலில் ஏற்க வேண்டியவர்கள் பொதுமக்களாகிய நாங்களே!

இத்தகைய இயற்கை அனர்த்தங்களால் உருவாகும் பாதிப்புக்களுக்கான அடிப்படைத் தீர்வாக ‘சூழல் நகர வடிவமைப்பு’ காணப்படுகிறது.

சட்டவிரோதக் குடியிருப்புக்கள் உருவாவதற்கு அடிப்படையாக அமையும் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் இம்முறைமையால் இல்லாதொழிக்கப்படுவதுடன் சிறந்த வடிகால் முகாமைத்துவமும் மேற்கொள்ளப்பட முடியும்.
நாளைய தினம் உலக சுற்றுச் சூழல் தினமாக அனுசரிக்கப்படவிருக்கும் நிலையிலும் இன்று நாம் எதிர்நோக்கி வரும் வெள்ள அபாயம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துள்ள நிலையிலும் திட்டமிடப்பட்ட பேண்தகு நகரங்கள், அவற்றின் அமைப்பு முறைகள் பற்றிய அறிவும் அவசியமாகிறது.

முன்னைய காலங்களில் நகர அமைப்பு திட்டமிடப்படும் போது அதிகரிக்கப் போகும் சனத்தொகை கருத்தில் கொள்ளப்படவில்லை. சனத்தொகை அதிகரிக்க, தேவைகளும் அதிகரித்தன. திட்டமிடப்படாத நகரங்கள் பல உருவாகின. இதனால் நகரங்களையும் அவற்றை அண்டிய பகுதிகளிலும் வெள்ளம் போன்ற பல இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் சாத்தியக் கூறுகளும் அதிகரித்தன. சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒருங்கிணைந்தாலன்றி வேறெந்த வகையிலும் திட்டமிடப்பட்ட நகரங்களை உருவாக்க முடியாது.

அறிவைப் பகிர்தலென்பது சற்றுச் சிக்கலான காரியமாகும். சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி பேண்தகு நகரங்களாய் வெற்றிகரமாகச் செயற்படும் நகரங்களின் நடைமுறைகளை இன்னும் பேண்தகு நகரங்களாக மாறும் எண்ணமற்ற நகரங்கள் பின்பற்ற வேண்டும்.

இனிமேல் நகர வாழ்வை நோக்கிய எமது நகர்வானது சக்தியின் வினைத்திறன் மிக்க பயன்பாடு, தாவர, விலங்குகளின் வாழ்வு மீளாக்கம் போன்றவற்றிற்கு வேண்டும். அப்போது மட்டுமே மனித வாழ்வு நிலைக்கும். இல்லையேல் இயற்கை அனர்த்தங்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிடும்.

பேண்தகு நகரங்கள் அல்லது சூழல் நகரங்கள் எனப்படுபவை சூழலியல் தொடர்பான தாக்கங்களைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டவை. அத்தகைய நகரங்களிலே சக்தி, உணவு, நீர்த் தேவைகளுக்கான உள்Zடுகள் இழிவளவாக்கப்பட்டிருக்கும். வெப்பம், வளி மாசு, நீர் மாசு போன்றவற்றின் வெளியீடுகளும் இழிவாளவாக்கப்பட்டவை.
சூழல் நகரம் என்ற சொற்பதமானது 1987 ஆம் ஆண்டு முதன்முதலாக ‘ஆரோக்கியமான வாழ்வுக்காக நகரங்களைக் கட்டமைத்தல்’ எனும் புத்தகத்தில் பிரயோகிக்கப்பட்டிருந்தது.
சூழல் நகரங்கள், தன்னிறைவானதாக இருக்கும். அத்துடன் அவை மிகவும் குறைந்தளவிலான சூழல் மாசையும் ஏற்படுத்துகின்றன. அங்கே நிலப்பாவனை முறைமைகள் வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கும். பாவிக்கப்பட்ட பொருட்கள் மீள்பாவனைக்காக பயன்படுத்தப்படும்.

இயலாவிடின் மீள் சுழற்சி செய்யப்படும். அதுவும் இயலாதெனின் அவற்றின் பாவனை மட்டுப்படுத்தப்படும். கழிவுகள் சக்தியாக மாற்றப்பட்டும் மீள் பாவனைக்குட்படுத்தப்படும். அந்நகரங்கள் உலகளாவிய காலநிலை மாற்றத்துக்குப் பங்களிக்கும் வீதமும் இழிவளவாக்கப்படும்.

உலக சனத்தொகையில் 50 சதவீதமான மக்கள் நகரங்களிலும் மாநகரங்களிலுமே வசிக்கின்றனர். இதனால் சூழல் நகரங்களின் உருவாக்கம், அவற்றையொட்டிய கட்டட வடிவமைப்புகள், மக்களின் வாழ்க்கை முறைமைகள் யாவுமே பேண்தகு வழிமுறைகளுக்கமைய மாறினால் மட்டுமே மனிதரின் எதிர்காலமும் சிறக்கும் எனலாம்.
சூழல் நகரங்கள் பலவகைகளில் தமது இலக்கை அடைய முயல்கின்றன. அடைவதில் வெற்றியும் கண்டிருக்கின்றன. அவை ஒரே நகரத்திலே பல்வேறு விவசாய முறைமைகளைக் கொண்டிருக்கும். அதாவது நகரொன்றின் மையப் பகுதியிலோ அல்லது புறநகர்ப் பகுதிகளிலோ நகர்ச் சூழலின் தேவைக்கமைய விவசாய உற்பத்திகள் மேற்கொள்ளப்படும்.

இதனால் சாதாரணமாக விளை நிலத்திலிருந்து நகர்ப்பகுதிகளுக்கு விவசாய உற்பத்திகளைக் கொண்டு செல்வதற்கான தூரம் குறைக்கப்படும். பாரிய நிலப்பரப்பில் ஒரேயடியாக மேற்கொள்ளப்படுவதானது நடைமுறைக்குச் சாத்தியமல்லாததாகையால் சிறிய சிறிய நிலப்பரப்புக்களிலே பரந்தளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு நகரச் சூழலின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

மீள உருவாக்கப்படக்கூடிய சக்தி மூலங்களின் பயன்பாடு உச்சமாக இருக்கும். அதாவது காற்றாடிகள், சூரிய படல்கள் அல்லது கழிவு நீர் கால்வாய்களிலே உற்பத்தி செய்யும் உயிர்வாயு போன்றவையே இத்தகைய நகரங்களின் பிரதான சக்திமூலங்களாகத் தொழிற்படும்.

குளிரூட்டிகளுக்கான பயன்பாட்டின் தேவையானது இயன்றளவில் குறைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் சாதாரண நகர்ப்பகுதிகளின் பிரதான சக்தித் தேவைகளுள் குளிரூட்டலும் ஒன்றாகும். மரங்களை நடுவதாலும் கட்டடங்களுக்கு இள வர்ணங்களைத் தீட்டுவதாலும் இயற்கையான காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்வதாலும் குளிரூட்டல் வசதிகளுக்கான தேவை குறைக்கப்பட்டிக்கும். நகரங்களின் நில மேற்பரப்பில் ஆகக் குறைந்தது 20 சதவீதமாவது பசுமையாக்கப்பட்டிருக்கும்

பொதுப் போக்குவரத்துச் சேவைகள் நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கும். கார்களினால் வெளியேற்றப்படும் புகையின் அளவைக் குறைப்பதற்காக நடைப்போக்குவரத்து ஊக்குவிக்கப்படும். கைத்தொழில், வர்த்தக, குடியிருப்பு வலயங்கள் ஒருங்கே உருவாக்கப்பட்டிருக்கும். இதனால் சூழலை மாசுபடுத்தும் போக்குவரத்துச் சேவைகளின் பயன்பாடு குறைக்கப்பட்டிருக்கும். வாகனங்களை ஓட்டக் கடினமாக இருக்கும் வகையில் பாதைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

கட்டடங்களின் அடர்த்தி பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும் ஆனால் நகர் வெப்பமடைதலைக் குறைக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.

இத்தகைய நகரங்களின் மக்கள் தாம் தொழில் செய்யும் இடங்களுக்கு அருகிலேயே குடியிருப்பார்கள். வீடுகளின் கூரைகள் பசுமைக் கூரைகளாக இருக்கும். அதாவது வீட்டுக்குத் தேவையான தாவரங்கள் கூரைகளிலே வளர்க்கப்பட்டிருக்கும். மீள உருவாக்கப்பட முடியாத சக்தி வளங்களின் பாவனையுடைய கட்டடங்களும் சூழலை மாசுபடுத்தும் வாகனங்களின் பாவனையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டிருக்கும்.
நகர்ப்புற வடிகாலமைப்பு முறைகள் பேண்தகு வழியிலே அமைக்கப்பட்டிருக்கும். சக்தியைப் பேணக்கூடிய உபகரணங்கள் மற்றும் கருவிகளின் பாவனை அதிகரிக்கப்பட்டிருக்கும்.

தொழில் வாய்ப்புகள் கல்வி மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும். இயற்கை நீரியல் தொகுதிகளும் அவற்றின் பாவனையும் பொருத்தமான முறையிலே பாதுகாக்கப்பட்டிருக்கும். கழிவுகள் இழிவளவாக்கப்பட்டிருக்கும்.

இந்தச் சூழல் நகரங்களால் பல நன்மைகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரிக்கும் மனிதத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அதேவேளை, இயற்கை அனர்த்தங்களின் பாதிப்பும் குறைவடையும். இயற்கை வளங்களும் சூழலும் தம் சமநிலை குலையாவண்ணம் செவ்வனே பேணப்படும். மக்களின் வாழ்க்கைத்தரம் பாரபட்சமின்றி உயர, சுபிட்சமான எதிர்காலம் தானே உருவாகும்.

சூழல் நகரங்களை உருவாக்குதலொன்றும் இலகுவான காரியமல்ல. ஆனால் எல்லாத் தடைகளையும் தாண்டி சூழல் நகரங்களை உருவாக்கத் தொடங்கினால் அதைவிடப் பெரிய வெற்றி வேறெதுவுமே இல்லை.

சூழல் நகரங்கள் உருவாவதற்குப் பல காரணிகள் தடையாக உள்ளன.
சூழல் பிரச்சினைகள் தொடர்பான அடிப்படை விளக்கங்களைக் கூடப் பலர் அறிந்திருப்பதில்லை. இதனால் சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வாகப் பேண்தகு / சூழல் நகரங்களை உருவாக்குவது சற்றுச் சிக்கலானதாகவே இருக்கும். அத்துடன் இத்தகைய சூழல் நகரங்கள் உருவாக்கப்படும் பொறிமுறைகளைப் பொறுத்து வெற்றியின் நிச்சயமற்ற தன்மையும் அமைந்திருக்கும்

மக்களின் பெளதீக ஏற்பாடுகளான கட்டடங்கள், தெருக்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் யாவுமே உடனடியாகவோ சடுதியாகவோ மாற்றப்பட முடியாதவை. ஆனால் அவை யாவுமே குறுகிய காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ மாற்றியமைக்கப்பட வேண்டியவை. பேண்தகு கொள்கைகளையுடைய சமுதாயமொன்று ஒரே இரவில் யாவற்றையும் மாற்றியமைக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்காது. ஏனெனில் அதற்காக சமூக, மற்றும் நிதி ரீதியாகக் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமாகும்.
சிறுதுளி பெருவெள்ளமென்பர். நாம் சிறுகச் சிறுக, மெதுமெதுவாக பேண்தகு வழிமுறைகளைக் கைக்கொள்வதன் மூலம் மட்டுமே சூழல் நகரங்களை உருவாக்கமுடியும். ஏனெனில் நகர்வாழ் மக்களின் அடிப்படை மனப்பாங்கில் மாற்றம் ஏற்படாத பட்சத்தில் சூழல் நகரங்கள் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் மிகமிகக் குறைவாகும். சூழல் நகரங்களின் வெற்றி அவற்றின் மக்களின் கையிலேயே தங்கியிருக்கிறது.

சூழல் நகரங்களின் சிறப்பியல்புகளின் அடிப்படையில் தேசிய ரீதியிலான கொள்கைகளும் சட்டங்களும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இவையாவுமே சுமுகமாக நடைபெற்றால் பேண்தகு நகரங்களாகிய சூழல் நகரங்களும் இலகுவில் உருவாகிவிடும்.

பேண்தகு நகரங்கள் ஒன்றும் எட்டாக் கனிகள் அல்ல. உலகின் பல நாடுகளும் இந்தச் சூழல் நகரங்களை உருவாக்கி வெற்றி கண்டிருக்கின்றன. அவுஸ்திரேலியா, பிறேசில், கனடா, சீனா, டென்மார்க், இந்தியா, கென்யா, கொரியா, நியூசிலாந்து, அயர்லாந்து, சுவீடன், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் சில நகரங்கள் சூழல் நகரங்களாகும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கின்றன.

சில நகரங்கள் காபன் நடுநிலையான நகரங்களாகவும் சில, கார்களே அற்ற நகரங்களாகவும் அமைந்திருக்கின்றன. சில கழிவகற்றல் முறைமைகள், கழிவு நீர் வடிகால் திட்டங்கள், குடிநீர் கிடைக்கும் தன்மை, குறைந்தளவிலான வளிமாசு, சிறந்த வாழ்க்கைத்தரம் போன்றவற்றிலே மிகச் சிறந்த மட்டத்தை அடைந்திருக்கின்றன. சில சூரிய சக்தியின் பாவனையை உச்சமாக்கியுள்ளன.

சில சூழலுடன் நட்புறவான கைத்தொழில் பேட்டைகளை அமைத்து வெற்றி கண்டிருக்கின்றன. சில நகரங்கள் சூழலுடன் நட்புறவான குடியிருப்புத் தொகுதியை உருவாக்கியிருக்கின்றன. சில நகரங்கள் நன்கு திட்டமிடப்பட்டு, கடல் நீர் மூலமான விவசாயம், விஸ்தரிக்கப்பட்ட நடைபாதைகள் மற்றும் துவிச்சக்கர வண்டிப் பாதைகள், மழை நீர் சேகரிப்பு மற்றும் நிலக் கீழ்நீர் பேணல் திட்டங்கள், உருவாக்கப்படும் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் திட்டங்கள் எனச் சூழல் நகரங்களுக்குரிய சிறப்பியல்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

உலகின் முதலாவது காபன் நடுநிலையான நகரமாக இங்கிலாந்தின் மிகச் சிறிய நகரமாகிய சென் டேவிட்ஸ் திகழ்கிறது. அதேபோல் முதலாவது சூழல் நகரமாக லிசெஸ்டர் நகரமும் திகழ்கிறது.

பேண்தகு அபிவிருத்தியானது விஞ்ஞானம், வர்த்தக, வணிக விருத்தி, ஆகியவற்றிற்கு அப்பால் சென்று மனித அபிவிருத்திக்கு வழிவகுக்கிறது. பேண்தகு அபிவிருத்தி மூலம் பால் சமத்துவம், கல்வியியல் சமத்துவம், சுகாதார வசதிகளில் சமத்துவம் எனச் சகல வழிகளிலும் சமத்துவத்தை அடைய முடியும்.

இலங்கையைப் பொறுத்தவரையிலே, மழைநீர் மற்றும் கழிவு நீர் வடிகாலமைப்பு மேம்படுத்தப்படுவதுடன் கழிவகற்றல் முறைமைகள் செவ்வனே நிர்வகிக்கப்பட்டால் இலங்கையின் நகரங்களைச் சூழல் நகரங்களாக மாற்றுவதற்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டு விட்டதெனலாம்.

இது தென் பகுதிக்கு மட்டுமன்றி முழு இலங்கைக்குமே பொருத்தமானது. தென்பகுதியில் சனத்தொகை அடர்த்தி அதிகமாதலால் வெள்ளத்தின் பாதிப்பும் அதிகமாகக் காணப்பட்டது. காலப் போக்கில் ஏனைய பகுதிகளிலும் சனத்தொகை அடர்த்தி அதிகரிக்க பாதிப்பு மேலும் அதிகமாகி விடுவதற்கான சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன. நகர சபை, மாநகர சபைகளுடன் இணைந்து அரசும் பொதுமக்களும் ஏனைய பங்குதாரர்களும் செயற்படக்கூடிய ஒருங்கிணைப்பு முறைமைகள் வரையறுக்கப்பட்டு உருவாக்கப்பட வேண்டும்.

செலவு குறைந்த, இலகுவாகப் பராமரிக்கக் கூடிய முறைமைகள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு எமது அறிவு வளமும் மனித வளமும் புலம்பெயருதல் மட்டுப்படுத்தப்பட வேண்டும். மக்களின் பங்கு முதன்மைப்படுத்தப்பட்டால் முடியாத விடயம் எதுவுமே இல்லை.
நகர சபைத் தொழிலாளர்கள் எமது வீடுகளின் திண்மக் கழிவுகளை அகற்ற ஒரு நாள் வரத் தவறினால் உருவாகும் அசெளகரியங்களை நகர வாசிகளாக, எம்மில் பலர் அனுபவித்திருப்போம்.

கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளில் எழும் பிரச்சினைகளையும் அன்றாடம் பார்த்து உணர்ந்திருப்போம். இந்தப் பகுதிகளெல்லாம். மிகவும் சுத்தமாக, நிழல் தரு மரங்கள் நிறைந்தனவாகவும் பூத்துக் குலுங்கும் செடிகளைக் கொண்டனவாகவும் காணப்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அந்தக் கற்பனை எத்தகைய மனமகிழ்வை உருவாக்குகிறது?
கற்பனையே அப்படி இருக்கும் போது அவை உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு இதமான சூழலை உருவாக்கித் தரும்? என்றெல்லாம் எண்ணக்கூடியதாக இருக்கிறதா?

நாம் நினைத்தால் சூழல் நகரங்களையும் உருவாக்கலாம். ஈஸ்டர் தீவுகளையும் உருவாக்கலாம். முயன்றுதான் பார்ப்போமே?

http://archives.thinakaran.lk/2010/06/04/_art.asp?fn=d1006041&p=1

காஞ்சிபுரமும் டெல் அவிவ் நகரும்

கதீஷ் சந்திர போஸ் என்ற உடனேயே நினைவுக்கு வர வேண்டிய, ஆனால் இந்தியர்கள் மறந்துவிட்ட ஒரு முக்கியமான பெயர் பேட்ரிக் ஹெடிஸ் (Patrick Geddes). ஏனெனில், ஜகதீஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இவர்தான். இதுதான் போஸின் ‘அதிகாரபூர்வமான’ வாழ்க்கை வரலாறு என்றுகூட சொல்லலாம்.

சகோதரி நிவேதிதாவின் ‘இந்திய வாழ்வின் வலைப்பின்னல்’ (The web of Indian life) எனும் நூலில் இருவருக்கு நன்றி சொல்லியிருப்பார். ஒருவர், இந்திய பொருளாதார அறிஞர் ரமேஷ் சந்திர தத். மற்றொருவர், பேட்ரிக் ஹெடிஸ். பேட்ரிக் ஹெடிஸ், பலதுறை மேதை. Polymath என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தாவரவியலாளர், கல்வியியலாளர், பரிணாம கோட்பாடுகளை முன்வைத்தவர், நகரங்களை திட்டமிடுவதில் வல்லவர். குறிப்பாக, நகரங்களை வடிவமைப்பதில் அவர் உயிரியல் கோட்பாடுகளை கையாளுவார். நகரத்துக்கும் அதில் வசிக்கும் மக்களுக்குமான உறவு உயிரியல் உறவு என்பது அவரது கருத்து.
patrick-geddes.jpg 
இந்த மாதிரி ஒரு கோட்பாடு நம்மிடம் உண்டு. பரிபாடலில். மதுரையை வர்ணிக்கும் வரிகள் இவை:

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் 
பூவொடு புரையுஞ் சீரூர் பூவின் 
இதழகத் தனைய தெருவம் இதழகத் 
தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில் 
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்

தாமரை மலரின் இதழ்களின் அமைப்பை போன்ற தெருக்கள் என்பதுடன் மக்கள், மலரின் மகரந்தத் தூள்கள்போல என ஒருவித உயிர் உறவைக் காட்டும் இந்தப் பாடல் வரிகளை கவிஞனின் கற்பனை என்று மட்டுமே எடுத்துக்கொள்ளலாமா?

பேட்ரிக் ஹெடிஸ், தென்னிந்தியாவில் உள்ள கோவில் நகரங்களையும், அந்த நகரங்களின் பழமையான அமைப்பையும் ஆழ்ந்து படித்தார். ஒவ்வொரு கோவில் நகரத்துக்கும் சென்றார். மதுரை, காஞ்சிபுரம் எல்லாம் சுற்றிப் பார்த்தார். தெருக்களின் அமைப்பு முதல் சாக்கடைகள் எங்கே போகின்றன என்பது வரை எல்லாவற்றையும் அவர் கவனமாக உற்று நோக்கினார். குறிப்புகள் எடுத்தார். புகைப்படங்கள் எடுத்தார். தெருக்களின் வடிவமைப்புகள், கோவில்களில் இருந்து குடியிருப்புகள் வரை அவை அமைக்கப்பட்டிருக்கும் விதங்கள் என அனைத்தையும் அவர் உள்வாங்கினார். அப்போது இந்தியா மாறிக்கொண்டிருந்தது.

இந்தியாவின் பழமையான நகர வடிவமைப்புகள், ஆங்கில அதிகாரிகளாலும் அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிற ஆங்கிலக் கல்வி கற்ற இந்தியர்களாலும் அந்த வடிவமைப்புகள் அழிந்து வருவதை ஆதங்கத்துடன் பதிவு செய்திருக்கிறார். மதுரை போன்ற கோவில் நகரங்கள் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டவை. அவற்றில் மிகவும் கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ள வாழ்விடங்கள், தனிமனித சுதந்தரத்தையும் கலை சுதந்தரத்தையும் இணைக்கும் கண்ணியத்துடன் உருவாக்கப்பட்டவை. தென்னிந்திய பெரும் கோவில் நகரங்களின் பண்டைய வடிவமைப்புக்கு இணையாக எங்கும் ஒரு நகரத்தைக் கூற இயலாது. ஐரோப்பாவின் மிகப்பெரிய நகரங்களில்கூட அவற்றைக் காண முடியாது.  

இதெல்லாம், இந்தியப் பண்பாட்டில் மயங்கிவிட்ட ஏதோ ஒரு மேற்கத்தியரின் வர்ணனை அல்ல. மேற்கத்திய நகரங்களை முழுமைத்தன்மையுடனும் அறிவியல்பூர்வமாகவும் அழகியலுடனும் வடிவமைக்க வேண்டும் என்கிற தேவையின் அடிப்படையில், இந்திய நகரங்களின் பண்டைய வடிவமைப்புகளை ஆராய்ந்த ஒருவரின் அவதானிப்பு.

தேர்த் திருவிழாக்கள், இந்திய நகர வடிவமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவை. இவற்றுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மேற்கத்திய நாடுகளில் அவதூறுப் பிரசாரங்கள் நடத்தப்பட்டன. ஆனால் பேட்ரிக் ஹெடிஸ், தேர்த் திருவிழாக்களை நகர வீதிகளை நிர்வாகிக்கும் மிக சிறந்த ஒரு அமைப்பாகப் பார்க்கிறார். ரத வீதிகளில் இயல்பாகவே ஆக்கிரமிப்புகள் குறைந்திருக்கின்றன. மோட்டார் வாகனங்கள் வருவதற்கு முன், தெருக்களைப் பராமரிக்க இதைவிடச் சிறந்த ஒரு சமூக ஒருங்கிணைப்பை யோசிக்க முடியாது. 

நகரங்களை வடிவமைப்பதில் பேட்ரிக் ஹெடிஸுக்கு உள்ள மேதமை அனைவருக்கும் தெரியும். எனவே, அவரது ஆலோசனைகள் ஏற்கப்படுகிறதோ இல்லையோ, நிச்சயமாக அரசின் ஆலோசனைக் குழுக்களில் கோரப்படும். ஆனால், காலனிய நகராட்சி நிர்வாகங்கள், இந்தியர்களைப் பெயரளவுக்குத்தான் வைத்திருந்தன. இவற்றின் மூலம், தனது பார்வையை செயல்படுத்த முடியாது என உணர்ந்த ஹெடிஸ், சமஸ்தான அரசர்களின் ஒத்துழைப்பை நாடினார். இந்தூர் சமஸ்தானத்தில் அவரது செயல்பாடு முக்கியமானதாக அமைந்தது என்றாலும், சமஸ்தானங்களும் இறுதியில் காலனிய அதிகாரிகளின் முடிவுகளைத்தான் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருந்தன.

இந்திய நகராட்சி நிர்வாகங்களுக்கு ஹெடிஸ் ஒரு அறிவுரை வழங்குகிறார். ரத வீதிகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள். ஒவ்வொரு கோவில் நகரத்திலும் உள்ள நகராட்சி உறுப்பினர்களும், கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செயல்படுவதைவிட, நகரங்களைச் செம்மைப்படுத்த நல்ல வழி கிடையாது… 

நகரத்தை விரிவுபடுத்துகிறோம் என்று நாநூறு ஐநூறு வீடுகளை இடித்து பெரிய வீதிகளை உருவாக்குவதை அப்போதே ஹெடிஸ் எதிர்க்கிறார். தெருக்கள் ஆங்காங்கே ஒரு மர நிழலில் முடிந்து அங்கிருந்து மீண்டும் தொடங்க வேண்டும். மரத்தடியில் ஒரு சிறிய தெய்வச் சிலை இருக்கட்டும். அங்கே, பெண்கள் கூடிப் பேசவும், குழந்தைகள் இணைந்து விளையாடவும் ஒரு வெளி தேவை.  

காஞ்சிபுரத்தின் பழமையான நகர வடிவமைப்பில் மிகவும் தோய்ந்து போயிருக்கிறார் பேட்ரிக் ஹெடிஸ். இந்த ஊரில் சாக்கடைகள் என்ன ஆகின்றன என்பதை ஆராய்ந்து அவர் எழுதியிருப்பதைப் படிக்கும்போது வருத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இரண்டு இடங்களில் கழிவு நீர் வெளியேற்றும் அமைப்புகள் செயல்படும் விதத்தை நான் அவதானித்தேன். இவற்றை இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் எல்லாம் செயல்படுத்த முடியும் என நம்புகிறேன். இந்தக் கழிவு நீர், தோட்டங்களுக்குச் செலுத்தப்படுவதுடன் அதற்காகவே புதிய தோட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. இவ்விதமாக, நச்சுத்தன்மையும் துர்வாடையும் கொண்ட கழிவு நீர், அழகும் ஒழுங்கும் கொண்ட ஒரு விஷயமாக மாற்றப்படுகிறது.

இன்றைக்கு பாதாள சாக்கடை என்கிற பெயரில், நம் சிறு நகரங்களுக்குத் தேவையற்ற ஒரு திட்டத்தை, எவரோ அரசியல்வாதிகளும் இடைத்தரகர்களும் லாபமடைய உருவாக்கி, வீதிகளை எல்லாம் மரணக் குழிகளாக்கும், கட்சி வேறுபாடின்றி கொள்ளையடிக்கும் நம் நகராட்சிக் கொள்ளையர்களைப் பார்த்தால், ஹெடிஸ் என்ன சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை.

காஞ்சிபுரத்தின் பண்டைய வடிவமைப்பைச் சார்ந்து, அதன் அடிப்படையில் நகர சீரமைப்பைச் செய்ய ஹெடிஸ் ஒரு திட்டத்தை சமர்ப்பித்தார். ஆனால் அது செயல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

1920-களில், பாலஸ்தீனின் தங்கள் பூர்விக தாயகப் பகுதிகளுக்கு யூதர்கள் திரும்ப ஆரம்பித்தனர். குறிப்பாக, ஐரோப்பிய யூதர்கள். அவர்கள், குடியிருப்புகளையும் நகரங்களையும் வடிவமைக்க ஆரம்பித்தனர். பின்னர் இஸ்ரேலின் தலைநகராக விளங்கப்போகும் டெல் அவிவ் நகரத்தினை வடிவமைக்க பேட்ரிக் ஹெடிஸின் உதவி கோரப்பட்டது. அதற்கு அவரது வடிவமைப்புத் திட்டம், காஞ்சிபுரத்தின் பழைய நகர வடிவமைப்பு குறித்த அவரது ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்திருந்தது.

காஞ்சிபுரம் பல குடியிருப்புகளால் ஆனதாகவும், ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு ஆலயத்தை மையப்படுத்தி தன் இருப்பைக் கொண்டதாகவும் இருப்பதை ஹெடிஸ் கண்டார். இதே அமைப்பு முறையை டெல் அவிவ் வடிவமைப்பில் பயன்படுத்தினார். ஆலயங்களுக்கு பதிலாக பூங்காக்கள்.

பாரதத்தின் திருவிழாக்கள் அவருக்கு பெரும் உத்வேகத்தை அளித்தன. சமூக ஒருங்கிணைப்புடன் குடியிருப்புகளை சுத்தமாக வைத்திருக்கும் வருடாந்திர வாய்ப்புகளாக அவர் அதைக் கண்டார். பொங்கல், தீபாவளி இரண்டுமே அவரைக் கவர்ந்தன. பொங்கலைப்போல ஒரு திருவிழாவை ஐரோப்பாவில் எண்ணிப்பார்க்க முடியாது. அங்குள்ள நான்கு பண்டிகைகளைச் சேர்த்தால்தான் பொங்கல் பண்டிகையின் அனைத்து செயல்பாடுகளும் கொண்டதாக அமையும்.

சுத்தம், சுகாதாரம், மகிழ்ச்சி, ஆன்மிகம் இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் சமூக பண்பாட்டு நிகழ்வுகள்தான் இந்தியத் திருவிழாக்கள். இவற்றை நகராட்சி அமைப்புகள் பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஹெடிஸ்.

இந்தூரில் தீபாவளி கொண்டாட்டத்தை இவ்விதமாக மாற்றிக் காட்டினார். ராவணன் எரிக்கப்படும்போது சுகாதாரக்கேட்டையும் நோய் பரப்புவதையும் காட்டும் குறியீடாக, ஒரு பெரிய எலியும் சேர்த்து எரிக்கப்பட்டது. மேலும், நகராட்சியின் சுகாதார ஊழியர்களுக்கு, சமுதாய அமைப்பிலிருந்த இழிவான பார்வையை அவர் கேள்விக்குள்ளாக்கினார். அவர்கள் சாக்கடைகளில் பணி புரிவோர் அல்லர். கழிவுகளை நந்தவனங்களாக்கும் நந்தவனப் பணியாளர்கள் எனும் பார்வை மாற்றம் தேவை. இதற்கு, கழிவுநீரை சாக்கடைகளாக்குவதற்குப் பதிலாக நந்தவனத் தோட்டங்களுக்குச் செலுத்தும் முறையை இந்தியாவில் மீண்டும் உருவாக்க வேண்டும் என அவர் கூறினார்.

சீனாவில் இத்தகைய பாரம்பரிய முறை இருப்பதை சுட்டிக் காட்டினார். கழிவுகளாகக் கருதப்படும் அனைத்தும் சாக்கடைகளுக்குள் செல்ல வேண்டும் என்கிற ஐரோப்பிய நகர திட்டமிடுதலுக்குப் பதிலாக, அனைத்தும் மீண்டும் மண்ணை வளப்படுத்த மண்ணுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்கிற இந்தியப் பார்வையை அவர் வலியுறுத்துகிறார்.

ஹெடிஸ், அடிப்படையில் ஒரு அனார்கிஸ்ட் (Anarchist). அமைப்பு சாராத சோஷலிஸ மனப்பாங்கு கொண்டவர். இந்திய ஆன்மிகத்திலும் பண்பாட்டிலும் அவருக்கு இருந்த ஈர்ப்பு வெறும் ‘exotic’ என்பதல்ல. அதைத் தாண்டியது. ஒரு பெரும் பண்பாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டு அறிதல்களை உள்வாங்குவது, நாளைய மானுடத்தின் இருப்பை குறித்து சிந்திக்கும் அனைவருக்கும் தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

அவருடன் தொடர்புடைய மற்றொரு அனார்கிஸ்ட் பீட்டர் க்ரோப்போட்கின் (Peter Kropotkin). இருவருக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை உண்டு. இருவருமே டார்வினின் பரிணாம கோட்பாட்டால் ஈர்க்கப்பட்டவர்கள். ஆனால், அன்றைய காலகட்டத்தில் டார்வினிய அறிவியல் ‘சமூக டார்வினியம்’ எனும் போலி அறிவியல் பார்வையை உருவாக்கியிருந்தது. காலனியத்தையும் சமூக சுரண்டலையும் ‘வலியது வாழும்’ என கூறி நியாயப்படுத்தும் ஒரு பார்வை அது.

க்ரோப்போட்கின், அதற்கு மாற்றாக விலங்கினங்களின் பரிணாமத்தில் சமூக ஒத்துழைப்பும் பரஸ்பர உதவும் தன்மையும் கொண்ட உயிரினங்கள் வெற்றி அடைவதை முன்வைத்தார். போஸின் தாக்கம், ஹெடிஸின் நகர வடிவமைப்பிலும் இருந்ததை ஆராய்ச்சியாளர் நிருபமா கான் சுட்டிக்காட்டுகிறார். சுவாமி விவேகானந்தரின் தாக்கமும் அவரிடம் இருந்தது. இடதுசாரி சிந்தனையில் தொலைந்துபோன, ஆனால் மீட்டெடுக்க வேண்டிய ஒரு முக்கியமான இழை, பேட்ரிக் ஹெடிஸுடையது.

பாரத பாரம்பரியம் குறித்துப் பேசுவோருக்கு, உண்மையில் அதனை கண்டடைந்து மீண்டும் இன்றைய சூழல்களுக்கும் சவால்களுக்கும் ஏற்ற முறையில் தகவமைக்க பேட்ரிக் ஹெடிஸ் ஒரு ஆதார அச்சு. அவரது சிந்தனையிலிருந்து வளர்ந்திருக்கும் உயிர்த்துவம் கொண்ட நகரம் (Biopolis), இன்று சூழலியலாளர்களால் நாளைய நகரங்களின் முன்மாதிரி என விவாதிக்கப்படுகிறது.

இந்தியாவில், பேட்ரிக் ஹெடிஸின் அறிதலை முன்னெடுத்தவர் ராதாகமல் முகர்ஜி எனும் சமூகவியல் பேராசிரியர். 1930-களிலேயே அமெரிக்க சமூகவியல் ஆராய்ச்சி இதழில், மானுடத்துக்கும் இயற்கைக்குமான இசைவுடன் வளர்ச்சி அமைய வேண்டும் என எழுதியிருக்கிறார் இவர். இன்றைய சூழலியல் கோட்பாடுகளை அதிசயிக்கத்தக்க வகையில் எதிர்நோக்குகிறது இவரது எழுத்துகள்.

உதாரணமாக – “ஒரு அத்தி மரத்துக்கும் மண்புழுவுக்கும் எலிக்கும் பறவைக்கும் ஒன்றுடன் ஒன்று பல இணைப்புகள் உள்ளன. அவை, மானுட சமூகப் பொருளாதாரம் எனும் நிலையை வந்தடைய, இன்னும் மிக அதிகமான இன்னும் நுண்ணியத் தன்மை கொண்ட இணைப்புகளாக ஆகின்றன. மனிதன் தன் அறியாமையாலும் சுயநலத்தாலும் இந்த இணைப்புகளால் நெய்யப்பட்ட வலையிலிருந்து தன்னை அறுத்துக்கொண்டு நிற்கின்றான். ஆனால், உண்மையான சமூக முன்னேற்றம் என்பது தன்னுணர்வுடன் உணர்ந்து, மேன்மேலும் அருமையாக இயற்கையையும் சமூகத்தையும் ஒன்றோடொன்று ஒற்றுமையுடனும் ஒருங்கிணைப்புடனும் இசைவுபடுத்துவதுதான். ...உயிர் வலைப்பின்னல் (the web of life) குறித்த அறிதலும், அதனிடம் நாம் காட்டும் மரியாதையுமே மனிதனை அவனது ஆகச்சிறந்த விதிக்கு கொண்டு சேர்க்கும்”. 

இது எழுதப்பட்ட ஆண்டு 1930 என்பதையும், அதுவும் ஒரு சர்வதேச சமூகவியல் இதழில் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். காலனிய காலகட்டத்தில்கூட இந்தியச் சிந்தனை எப்படி உயிர்த் துடிப்புடன் இயங்கியது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ள இயலும்.

எங்கே தவறவிட்டோம் இந்த அறிவியக்க இழையை எனும் கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை. ஆனால், சுற்றி நோக்குகையில் அது ஒரு இன்றியமையாத வீழ்ச்சிதான்.

பாரதப் பண்பாட்டை காலனிய வெறுப்புக்கு சற்றும் குறையாத வெறுப்புடன் அணுகுவதை மட்டுமே இடதுசாரி ‘ஃபேஷனாக’ கருதும் மனநோயும், ஊழல்களுக்கான உறைவிடங்களாக மட்டுமே நகராட்சிகளை மாற்றியிருக்கும் தனித்தன்மையும், கட்சி பேதமற்றுக்கொண்டிருக்கும் நமக்கு, நம் நகரங்களை மீண்டும் நல்ல வாழ்விடங்களாக மாற்ற உழைத்த பேட்ரிக் ஹெடிஸ் போன்றவர்கள் மங்கலான நினைவாகி மறைந்துபோனதில் ஆச்சரியமில்லை.
http://www.dinamani.com/junction/arithalin-ellaiyil/2015/apr/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95-1093617.html