Showing posts with label அபிவிருத்தி. Show all posts
Showing posts with label அபிவிருத்தி. Show all posts

Monday, November 15, 2021

ஸ்பாஞ்ச் நகரம்: வெள்ளத்தை உறிஞ்சும் சீனாவின் நகரங்கள் கட்டமைக்கப்படுவது எப்படி?

 

ஸ்பாஞ்ச் நகரம்

பட மூலாதாரம்,TURENSCAPE

படக்குறிப்பு,

யூவின் சொந்த மாகாணமான ஜென்ஜியாங்கில் ஓடும் வூஜியாங் ஆறு அண்மையில் சீரமைக்கப்பட்டது.

ஆற்றில் மூழ்கி கிட்டத்தட்ட இறந்து போகவிருந்த நாள் யூ கோங்ஜியனுக்கு நினைவிருக்கிறது.

மழையால் கரைபுரண்டிருந்த வெள்ளை மணல் ஆறு, சீனாவில் உள்ள யூ-வின் நெல் பயிரிட்டிருந்த நிலங்களை மூழ்கடித்தது. அப்போது யூவுக்கு வயது 10. கரைபுரண்ட ஆற்றைக் காண அதன் கரைக்கு ஓடினார்.

திடீரென அவரது கால்களுக்குக் கீழே இருந்த நிலம் சரிந்தது. வெள்ள நீர் அவரை நோக்கி வந்தது. நொடியில் அவரை இழுத்துச் சென்றது. ஆனால் அலரிச் செடிகளும், நாணல்களும் நிறைந்திருந்த கரைகள் ஆற்றின் ஓட்டத்தை மெதுவாக்கின. செடிகளைப் பிடித்து இழுத்தார் சிறுவனாக இருந்த யூ. பின்னர் கரையேறித் தப்பித்தார்.

"ஆறு இன்று இருப்பது போல், கான்கிரீட் வெள்ளத் தடுப்புச் சுவர்களால் அடக்கப்பட்டிருந்தால் நான் நிச்சயமாக மூழ்கியிருப்பேன் " என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

அது அவரது வாழ்க்கையை மட்டுமல்ல, மற்ற சீனாவையும் கட்டமைக்கும் ஒரு தீர்க்கமான தருணமாக மாறியது.

இப்போது யூ கோங்ஜியான் வளர்ந்துவிட்டார். சீனாவின் மிக முக்கியமான நகர்ப்புற வடிவமைப்பு சிந்தனையாளர்களில் ஒருவர் அவர். மதிப்புமிக்க பீக்கிங் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை கல்லூரியின் தலைவர். ஏராளமான சீன நகரங்களில் வெள்ளத்தை நிர்வகிப்பதற்கான ஸ்பாஞ்ச் நகரக் கருத்துருவின் பின்னணியில் இருப்பவர்.

மற்ற இடங்களுக்கும் இந்த யோசனை பொருந்தும் என்று அவர் நம்புகிறார். ஆனால் பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தீவிர வெள்ளத்தின் போது, ​இதுபோன்ற ஸ்பாஞ்ச் நகரங்கள் உண்மையிலேயே தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வியை சிலர் எழுப்புகிறார்கள்.

'நீருடன் சண்டை வேண்டாம்'

வெள்ளை மணல் ஆறு

பட மூலாதாரம்,YU KONGJIAN

படக்குறிப்பு,

யூ குறிப்பிட்ட வெள்ளை மணல் ஆறு. 1984-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட படம்

ஒரு வெள்ளம் என்பது பயமுறுத்துவதாக இல்லாமல், நாம் அரவணைத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தால் எப்படியிருக்கும்? யூவின் ஸ்பாஞ்ச் நகரத்தின் மையக் கரு இதுதான்.

வழக்கமான வெள்ள நீர் மேலாண்மை என்பது குழாய்கள் அல்லது வடிகால்களை உருவாக்குவது, முடிந்தவரை விரைவாக தண்ணீரை வெளியேற்றுவது, அல்லது ஆற்றின் கரைகளை கான்கிரீட் மூலம் பலப்படுத்துவது, அவை நிரம்பி வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வது போன்றவைதான்.

ஆனால் யூவின் ஸ்பாஞ்ச் நகரம் அதற்கு நேர் மாறாக இருக்கிறது. மழை நீரை ஆங்காங்கே ஆங்காங்கே ஊறவிட்டு, மேற்பரப்பு ஓட்டத்தை மெதுவாக்க முயல்கிறது. அதாவது பஞ்சு போல வெள்ளத்தை ஆங்காங்கே பூமியை உறிஞ்சவிட வேண்டும். அவ்வளவுதான்!

அது மூன்று பகுதிகளாகச் செய்யப்படுகிறது. முதலாவது நீர் ஆதாரங்கள். பல துளைகளைக் கொண்ட ஸ்பாஞ்ச் போல, நகரத்தில் பல குளங்களை ஏற்படுத்தி நீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி நடக்கிறது.

இரண்டாவது, நீரோடும் பகுதிகள். ஆற்றில் இருந்து வெளியேறும் நீரை நேர் கோட்டில் கொண்டு செல்வதற்குப் பதிலாக வளைந்து நெளிந்த கால்வாய்கள் மூலம் அனுப்புவதால், ஓட்டம் மெதுவாகிறது. அவரது உயிரைக் காப்பாற்றிய நதியைப் போலவே.

இதனால் பசுமையான இடங்கள் பெருகும். பூங்காக்கள், விலங்குகளின் வாழ்விடங்களை உருவாக்க முடியும். தாவரங்கள் மூலம் மேற்பரப்பு நீரை சுத்தப்படுத்த முடியும்.

மூன்றாவது நீர் சென்று சேரும் இடம். நதியானது ஏரி அல்லது கடலில் சென்று சேருகிறது. இதைச் சுற்றியுள்ள நிலத்தை ஆக்கிரமிக்கக்கூடாது, தாழ்வான பகுதிகளில் கட்டுமானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் யூ.. "நீங்கள் தண்ணீருடன் சண்டையிட முடியாது, நீங்கள் அதை அதன் போக்கிலேயேவிட வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

இதே போன்ற கருத்துக்கள் வேறு பகுதிகளில் இருந்தாலும், நகரத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க இயற்கையான செயல்முறைகளைப் பயன்படுத்துவதில் ஸ்பாஞ்ச் நகரம் குறிப்பிடத்தக்கது என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் நீடித்த வடிவமைப்பு நிபுணர் நிர்மல் கிஷ்னானி கூறுகிறார்.

"இப்போது நமக்கு இயற்கையுடன் பெரிய தொடர்பு இல்லை... ஆனால் இயற்கையின் ஒரு பகுதியாக நம்மைப் பார்ப்பதற்கான வழியைத் தேட வேண்டும் என்பதுதான் இப்போதைய யோசனை"

யூவின் பெரும்பாலான கருத்துகளில் பழைய விவசாய நுட்பங்களின் பாதிப்பு இருக்கிறது. பயிர்களுக்காக குளத்தில் நீரைச் சேமிப்பது போன்றவை அதில் அடங்கும். சீனாவின் கிழக்கு கடலோர மாகாணமான ஜெஜியாங்கில் வளரும்போது இவற்றை யூ கற்றுக் கொண்டார்.

"பருவமழைக் காலத்தில் கூட யாரும் நீரில் மூழ்க மாட்டார்கள். நாம் தண்ணீருடன் வாழ்ந்தோம். வெள்ளம் வந்தபோது நாம் தண்ணீரை ஏற்றுக் கொண்டோம்" என்கிறார் அவர்.

குளம்

பட மூலாதாரம்,TURENSCAPE

அவர் 17 வயதில் பெய்ஜிங்கிற்குச் சென்றார், அங்கு அவர் நிலவமைப்பு கற்றார். பின்னர் ஹார்வார்டில் வடிவமைப்பு படித்தார்.

1997ல் அவர் தாய்நாட்டிற்குத் திரும்பியபோது, ​​சீனா இன்றும் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கட்டுமான மோகத்தில் மூழ்கியிருந்தது.

இதைக் கண்டு யூவுக்கு திகைப்பு ஏற்பட்டது. "உயிரற்ற உள்கட்டமைப்பு" முறையை அவர் ஏற்கவில்லை. பாரம்பரிய சீன முறைகளின் அடிப்படையில் நகர்ப்புற வடிவமைப்பு தத்துவத்தை உருவாக்கத் தொடங்கினார்.

உதாரணமாக, ஸ்பாஞ்ச் நகரங்களைத் தவிர, இயற்கையான வடிமைப்பு அல்லது "பெரிய அடி புரட்சி"க்கு அவர் அழைப்பு விடுக்கிறார். பார்த்துப் பார்த்துச் செதுக்கப்படும் சீர்மிகு நவீனப் பூங்காக்களை எதிர்க்கிறார். பெண்களின் கால்களைக் கட்டும் காலாவதியான சீன நடைமுறையுடன் அதை அவர் ஒப்பிடுகிறார்.

சீனாவின் கடலோர நகரங்களும் அதே மாதிரியான காலநிலையைக் கொண்ட பிற நகரங்களும் நீடித்திருக்கும் தன்மை இல்லாத வகையில் வடிமைக்கப்பட்டிருக்கின்றன என்று அவர் கூறுகிறார்.

"ஐரோப்பிய நாடுகளில் உருவான நுட்பத்தை பருவமழை கொண்ட காலநிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியாது. மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் அவற்றின் உள்கட்டமைப்பு, நகர்ப்புற மாதிரியை நகலெடுப்பதால் இந்த நகரங்கள் தோல்வியடைகின்றன," என்று அவர் கூறுகிறார்.

தொடக்கத்தில் அரசுத் தரப்பில் இருந்து அவருக்கு எதிர்ப்பு வந்தது. முப்பள்ளத்தாக்கு அணை உள்ளிட்ட பெருமைக்குரிய சீனத் திட்டங்களை அவர் விமர்சித்ததால் பலர் எரிச்சலடைந்தனர்.

அவரது ஹார்வர்ட் பின்னணியும் மேற்கத்திய நாடுகளில் இருந்து அவருக்குக் கிடைக்கும் பாராட்டுகளும் சேர்ந்ததால் சிலர் அவரைத் துரோகி என்றார்கள், "மேற்கத்திய உளவாளி" என்று குற்றம்சாட்டினார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகளை நகைப்புடன் அணுகும் யூ, தம்மை பண்பாட்டுப் புரட்சியின் குழந்தை என்று கருதுகிறார்.

"நான் ஒரு மேற்கத்தியர் அல்ல, நான் ஒரு சீன பாரம்பரியவாதி," என்று அவர் புன்னகையுடன் கூறுகிறார். "எங்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டு கால அனுபவம் உள்ளது, நீங்கள் புறக்கணிக்க முடியாத தீர்வு எங்களிடம் உள்ளது. நாம் நமது சீன வழிகளைப் பின்பற்ற வேண்டும்."

சமீபத்திய ஆண்டுகளில் பெய்ஜிங் மற்றும் வுஹானில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகளைத் தொடர்ந்து அவரது கருத்துக்களை ஊடகங்களில் ஒளிபரப்பின.

அதற்கு பலன் கிடைத்தது. 2015 ஆம் ஆண்டில், அதிபர் ஜின்பிங்கின் ஒப்புதலைத் தொடர்ந்து, அரசாங்கம் பல மில்லியன் யுவான் திட்டத்தை அறிவித்தது. 2030 வாக்கில், சீனாவின் 80% நகரப் பகுதிகளில் ஸ்பாஞ்ச் நகரத்தின் கூறுகள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் 70% மழையை மறுசுழற்சி செய்ய வேண்டும் என்ற இலக்குகள் அறிவிக்கப்பட்டன.

யூ

பட மூலாதாரம்,TURENSCAPE

படக்குறிப்பு,

தம்மை பண்பாட்டுப் புரட்சியின் குழந்தை என்று யூகருதுகிறார்.

இது மந்திரத் தோட்டாவா?

உலகெங்கிலும் அதிக மழைப்பொழிவைச் சமாளிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதை விஞ்ஞானிகள் பருவநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். புவி வெப்பமடைதலுடன் வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​அதிக ஈரப்பதம் வளிமண்டலத்தில் ஆவியாகி, கனமழையை ஏற்படுத்துகிறது.

"எதிர்காலத்தில், மழைப்பொழிவு முன்பு எதிர்பார்த்ததை விட மிகவும் தீவிரமாகவும் கடுமையாகவும் இருக்கும்" என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் கடுமையான புயல்களுக்கு ஸ்பாஞ்ச் நகரம் உண்மையில் தீர்வாக இருக்குமா? சில நிபுணர்கள் இதில் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

"ஸ்பாஞ்ச் நகரங்கள் லேசான அல்லது சிறிய மழைப்பொழிவுகளுக்கு மட்டுமே நல்லது, ஆனால் இப்போது நாம் காணும் மிக மோசமான வானிலையைச் சமாளிக்க வேண்டுமானால், வடிகால், குழாய்கள் போன்ற உள்கட்டமைப்புகளுடன் அதை இணைக்க வேண்டும்" என்று வெள்ள மேலாண்மை நிபுணர் ஃபெய்த் சான் கூறுகிறார்.

மக்கள் தொகை அடர்த்தியான நகரங்களுக்கு யூவின் திட்டத்தைச் செயல்படுத்துவது கடினமாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

கோடிக்கணக்கில் செலவழித்தாலும், சீனாவால் இன்னும் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ள நிகழ்வுகளைச் சமாளிக்க முடியவில்லை. கடந்த கோடை காலத்தில் தொடர்ச்சியான வெள்ளத்தில் 397 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. மதிப்பிடுகிறது.

ஆனால் பண்டைய சீன அறிவு தவறாக இருக்க முடியாது என்று யூ வாதிடுகிறார். மேலும் உள்ளூர் அதிகாரிகள் தனது யோசனையை தவறாகவோ அல்லது துண்டு துண்டாகவோ செயல்படுத்தியதால் தோல்விகள் ஏற்பட்டதாக அவர் கருதுகிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெங்ஷுவில் ஏற்பட்ட வெள்ளம், ஒரு சிறந்த உதாரணம் என்று அவர் கூறுகிறார். நகரம் அதன் குளங்களுக்கு மேல் நடைபாதை அமைத்ததால், போதுமான தண்ணீரை மேல்நிலையில் சேமிக்க முடியவில்லை என்கிறார் அவர்.

ஸ்பாஞ்ச் நகரம் என்ற கருத்துருவை உண்மையிலேயே வேறு நாடுகளிலும் செயல்படுத்த முடியுமா என்பது மற்றொரு கேள்வி.

வங்கதேசம், மலேசியா, இந்தோனீசியா போன்ற வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் இந்த நுட்பத்தால் பயனடையலாம் என்றும், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற சில இடங்கள் இதே போன்ற கருத்துக்களை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன என்றும் யூ கூறுகிறார்.

ஆனால் சீனா முழுவதும் ஸ்பாஞ்ச் நகரத்தின் வெற்றிக்கு, அதன் அதிகாரம் குவிந்த மைய அரசாங்கமே காரணம் என்று வாதிடப்படுகிறது. சரியாகச் செய்தால், ஒரு ஸ்பாஞ்ச் நகரத்துக்கு வழக்கமான திட்டங்களைவிட கால் பகுதி மட்டுமே செலவாகும் என்று யூ கூறுகிறார்.

வெள்ளத்தை நிர்வகிப்பதற்கு கான்கிரீட் பயன்படுத்துவது "தாகத்தைத் தணிக்க விஷம் குடிப்பது போன்றது... இது ஒரு குறுகிய பார்வை" என்று அவர் கூறுகிறார்.

"காலநிலைக்கு ஏற்றவாறு நாம் வாழும் முறையை மாற்ற வேண்டும். அவர்கள் எனது தீர்வைப் பின்பற்றாவிட்டால், அவர்கள் தோல்வியடைவார்கள்." என்கிறார்.


https://www.bbc.com/tamil/global-59254068

Friday, October 1, 2021

கட்டடச்சூழலும் எம்மவர்களும் - 02 (பாடசாலைகள்)

 கற்றல் நிலையங்களின் வடிவமைப்பு

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக்கல்லூரிகள் மாணவர்களின் கற்றலுக்கு உரிய இடம். குறித்த இடங்கள் காலத்திற்கு காலம் வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் குருகுலக்கல்விக்கு ஏற்ற குடில்களே போதுமானவையாக இருந்தன. அதற்குப்பின்னர் சமயக்கல்வி தேவை ஏற்பட்ட காலத்தில் கோவில்களும் மடங்களும் போதுமானவையாக இருந்தன. மொழிக்கல்வி தேவைப்பட்ட காலத்தில் வீட்டுத்திண்ணைகள் கல்விச்சலைகளாக உருவாகின. தொடர்ந்து வந்த காலப்பகுதியில் தேவைகளுக்கும் வசதிகளுக்கும் ஏற்ப கட்டடங்கள் உருவாகி வளர்ந்து கற்றலுக்குரிய கட்டடச்சூழல் என்பது தற்போதுள்ள நிலையை அடைந்துள்ளது.

இன்று அநேகமான நிறுவனங்களின் கட்டமைப்புக்கள் சர்வதேச தரத்திற்கு அல்லது அதற்கு இணையாக மாறுவது என்பது பொதுவான போக்காகக் காணப்படுகின்றது. கல்விசார் நடவடிக்கைகளும் இதற்கு விதிவலக்கானவை அல்ல. கல்விக்கொள்கைகளிலும் கற்பித்தல் முறைகளிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் கட்டடச்சூழல் சர்வதேச தரத்திற்கு மாற்றம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாடசாலைகளில் நிகழும் பௌதீக மாற்றங்களும் பொருத்தமான திட்டத்துடன் இடம்பெறவில்லை என்பது இந்தக்கட்டுரையை வாசித்த பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள எந்தப்பாடசாலைக்கு சென்று பார்த்தால் உங்கள் கண்களுக்குப் இலகுவாகப்புலப்படும்.

 


எனக்குத் தெரிந்தவகையில் இதற்கு காரணமாக….. 

1. கட்டடங்கள் கட்டுவது என்பது பொருளாதாரம் தொழில்நுட்பம் சார்ந்த விடயம் என்பதாலும், பொதுப்பாவனைக்கானது என்ற காரணத்தாலும் கட்டடங்களை வடிவமைக்கப்படும் போது கற்றல் நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களின் நலன் சார்ந்து சிந்திப்பதோ முடிவெடுப்பதோ இல்லை. உதாரணமாக அருகருகே முற்றாக மூடப்படாத வகுப்பறையில் மாணவர்கள் நெருக்கமாக இருத்தி வைக்கப்பட்டு கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது சில சந்தர்பங்களில் கற்பித்தலுக்கு இடையூறாக அமைந்துவிடுகின்றது.  

2. அதிகரித்து வரும் மாணவர்களின் தேவைக்கு ஏற்ப காணிகள் அதிகரிக்காத நிலையில் மிக நெருக்கமாக கட்டடங்கள் அமைக்கப்படுகின்றது. இதனால் பாடசாலை ஆரம்பிக்கும் முன்னும் பின்னும் இடைவேளை நேரங்களின் போதும் மாணவர்கள் ஒன்றுகூடுவதற்கும் அவர்களுக்கான அசைவுகளுக்கும் போதிய இடங்கள் காணப்படுவதில்லை. மிக முக்கியமாக ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையான காற்று மற்றும் வெளிச்சம் போதாத நிலையும் காணப்படுகின்றது. 

3. கட்டடங்கள் காலத்திற்கு காலம் கட்டடப்படுவதால் அநேகமான சந்தர்பங்களில் கட்டடங்கள் தனியாகவும் தொகுதியாகவும் பார்க்கும் போது பயன்படுத்தப்படும் கட்டடப்பொருட்கள், பூசப்படும் வர்ணங்கள், போன்றவற்றால் பாடசாலை கட்டடங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடு மனதில் அமைதி உணர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஒழுங்கீனத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்துகின்றன. 

4. இன்றைய காலங்களில் கற்றலில் ஈடுபடும் மாணவர்களின் தேவைகள் வெவ்வேறாக இருப்பதால் திட்டமிடப்படாத கட்டடச்சூழல் அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய தவறிவடுகின்றன. இதனால் குறித்த சூழல் மாணவர்களின் நடத்தைகளில் தாக்கத்தை செலுத்துவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. 

5. கற்றலில் ஈடுபடுபவர்களின் தேவை அறிந்து அவர்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான கற்றல் சூழலை ஏற்படுத்தி மாற்றம் காணவேண்டும். 

6. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கற்றலுக்கான சூழல் தொடர்ச்சியாக மாற்றம் கண்டு வந்துகொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் கல்விக்கான கட்டடச்சுழல் என்பது பொருத்தமான வகையில் மாற்றம் காணவில்லை. குறிப்பாக எங்களுடைய காலநிலை, பொருளாதாரம் மற்றும் தேவைகள் என்பவற்றுக்கு ஏற்ப தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தேவைகள் அல்லது பிரச்சனைகளுக்கான தீர்வு காண வேண்டும். சந்தைச்சக்திகள் தீர்மானம் எடுப்பதில் அல்லது தாக்கம் செலுத்துவதை இயன்றளவும் குறைக்க வேண்டும். 

7. இவ்வாறான பிரச்சனைகளுக்கு மூல காரணமாக குறித்த கல்விசார் நிர்வாகம் மாணவர்களின் மீது அக்கறை இன்மையே காரணமாகும். இதை ஏற்க மறுக்கலாம்.....தாங்கள் அக்கறை உள்ளவர்கள் என்று சொல்லலாம் அப்படியாயின் அவர்களுக்கு விடயம் பற்றிய போதிய அறிவில்லை என்றே கூறவேண்டும். 


 முன்பள்ளிகளும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களும்

சிறுவர்களுக்கான  கட்டடங்கள்  அமைத்தல் என்பது ஒவ்வொரு குடும்பங்களினதும் வசதி வாய்ப்புக்கள் பெற்றோரின் விருப்பு வெறுப்புக்கள் சம்பந்தப்பட்டது. சிறுவர்களுக்கான பொழுபோக்கு இடங்கள் எவ்வாறு அமைக்கப்படுகின்றது என்பது பற்றி முன்னைய பதிவுகளில் இருந்து அறிந்திருப்பீர்கள்.

வீட்டில் வைத்து பிள்ளைகளைப் பராமரிக்கின்ற வசதிகள் குறைந்து போய்யுள்ளதால் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நாடுவதும் அல்லது 3 வயது ஆரம்பிக்கும் போதே அவர்களை முன்பள்ளிகளில் சேர்த்துவடுவதும் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலையை சாதகமாக்கி பல பொது அமைப்புக்களும், தனியார் நிறுவனங்களும் முன்பள்ளிகளை நிறுவி பராமரித்து வருகின்றன.

சிறுவர் பராமரிப்பு நிலையங்களில்  அல்லது  முன்பள்ளியில் கற்கும் 3 வயது தொடக்கம் 5 வயது வரையான சிறுவர்களுடைய இடங்கள்,  சிறுவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கின்றதா என்று உங்களுக்கு அருகில் இருக்கும் முன்பள்ளி ஒன்றுக்குச் சென்று அவதானியுங்கள் அப்போது உங்களுக்கு உண்மை நிலை புரியும்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையோடு தற்போதுள்ள நிலையை ஒப்பிட்டால் முன்னேற்றம் இருந்தாலும், தற்போதுள்ள நிலை என்பது கவலைக்குரியதே. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகமுக்கியமான காரணம் குறித்த நிறுவனங்களை ஆரம்பித்து இயக்குபவர்களின் சிறுவர் வளர்ப்பு பற்றி அக்கறை இன்மை அல்லது சிறுவர்கள் பற்றிய போதிய அறிவின்மை என்பது முக்கியமானது.

முன்பள்ளிக்கான கட்டடங்களை எடுத்துக்கொண்டால், சனசமூக நிலையம், கோவில் மண்டபம், பொதுநோக்கு மண்டபம் போன்ற வேறு தேவைகளுக்கு கட்டப்பட்ட கட்டடங்கள் கற்பித்தல் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதை அநேகமாக காணக்கூடியதாக உள்ளது.

கற்றல் என்பது தனியாக பரீட்சைக்காக கற்பது என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதால், சூழலில் இருந்து கற்கும் சந்தர்பங்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. சிறுவர்களுக்கு என்ன தேவை என்பதை பெரியவர்கள் தங்கள் அறிவுக்கும் வசதிக்கும் ஏற்றவகையில் சிந்திப்பதால் அவர்களுக்கு தேவையானவை பூரணமாக வழங்கப்படப்படவில்லை என்றே கூறவேண்டும்.

 

மலசல கூடங்கள்

குடாநாட்டில் உள்ள பாடசாலைகளின்  மலசல கூடம்... எல்லோரும் ஒரு காலத்தில் ஏன் இன்று கூட  மாணவர்களாக இருக்கலாம்…

பாடசாலை நாட்களில் நடந்த பல பசுமையான நினைவுகளை  மறக்காமல் கதைத்துக்கொண்டு இருப்பவர்கள் பாடசாலைகளில் உள்ள மலசல கூடங்களில் பெற்ற  துன்பமான அனுபவங்கள் பற்றி யாரும் பொதுவெளியில் கதைத்தது கிடையாது.




பொதுவாக பாடசாலை மலசல கூடங்கள் போதிய வெளிச்சமோ.... காற்றோட்டமோ இருக்காது நீர்குழாய்களில் இருந்து நீர் கசிந்துகொண்டோ  அல்லது உடைந்த நிலையில் மரக்கட்டைஇறுக்கிய நிலையிலேயே காணப்படும். சுவர்களில் பட்டப்பெயர்கள் தூசனங்கள் காதல் வரிகள் காணப்படும்

 நிலத்திற்குப் பதித்த மாபிள்களின் மேல் மண் மற்றும் சரியாக வழிந்தோடாத நீர் தேங்கி இருக்கும் பார்ப்பதற்க அருவருப்பாக இருக்கும். சிறுநீர் மணம் தாங்கமுடியாமல் இருக்கும். அதிபர்கள், ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு பூட்டிய நிலையில் மலசல கூடங்கள் இருக்கும்.

பெண்கள் பாடசாலைகள் பெற்றோரிடம் பணம் வாங்க  சொல்கின்ற  காரணங்களில் மலசலகூடப் பிரச்சனை முக்கியமானது  ஆனாலும் 6ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் கடும் நெருக்கடி என்றால் மட்டுமே பாடசாலை மலசகூடங்களை உபயோகிக்கின்றார்கள்  என்ற உண்மை பெண்பிள்ளைகளை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்.( இலங்கை அரச பாடசாலைகளில் 65 வீதமான மாணவிகள் மாதவிடயாய் காலத்தில் பாடசாலைகளுக்கு வருவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது)

மலசல கூடங்கள் சீராக இல்லாமல் இருப்பதற்கு  மாணவர்களை குறைசொல்வது வழமை  இருப்பினம்  மாணவர்களை வழிநடத்த தவறிய பொறுப்பை  ஆசிரியர்களும் பாடசாலை நிர்வாகமுமே ஏற்கவேண்டும். 

அவதானங்களின் படி மலசல கூடங்ககளின் வடிவமைப்பு  மற்றும் கட்டுமாணத்திற்கு பொறுப்பு எடுக்கும்  பொறியிலாளர்கள் தொழில்நுட்ப வியலாளர்கள் அவற்றின் பாவனை மற்றும் பராமரிப்பு பற்றி முழுமையாக அக்கறை எடுத்துக்கொள்ளாமை முக்கிய காரணம்.

கல்வியைப் போன்றே சுகாதாரமும் அடிப்படை தேவைகளில் ஒன்று மாணவர்களின் சுகாதாரம் சார்ந்த செயற்பாடுகளை மேம்படுத்த சுகாதாரக் கல்வி என்று ஒரு பாடத்தை வைத்துக் கொண்டு, அதனை கற்பித்து செயல் படுத்தி, சுகாதாரம் பேணப்பட வேண்டிய இடத்தில், முன் உதாரணமாக செயல்படாமல் இருப்பதை யாரிடம் சொல்லி அழுவது

 இவ்வாறன பிரச்சனைகளுக்கு உடனடித்தீர்வுகள் காண முடியாவிட்டாலும், குறித்த விடயங்கள் பற்றி சிந்திக்க தொடங்கும் போது சிறிது காலத்திற்குப் பின்னராவது பொருத்தமான தீர்வுகளை எடுக்க முடியும்.



அழகான ஆரோக்கியமான சூழலில் வளரும் வாய்ப்புக் கிடைத்த குழந்தைகள் அதிஷ்டசாலிகளே.


குமாரலிங்கம். பதீதரன்
கடட்டடக்கலைஞர்.

Sunday, September 19, 2021

மக்களின் தேவையை.......காலநிலையை...... கணக்கு எடுக்காத அபிவிருத்திப் பணி

 யாழ்ப்பாணத்தில் எல்லோரும் நன்கு படித்தவர்கள்....

ஒரு காரியத்தை செய்வதில் கெட்டிக்கார்கள்.....

எல்லா நாடுகளுடனும் நேரடித்த தொடர்பு உள்ளவர்கள்....

சிறந்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள்,

தலை சிறந்த சட்டத்தரணிகள் உள்ள சமூகம்

இப்படி பல்வேறு பெருமை  ஆனால் நடக்கின்ற சம்பவங்களை உற்று நோக்கிப் பார்த்தால், தங்களுக்குள் மனப்பிரமையை ஏற்படுத்தி  எல்லோரும் சுய திருப்த்தி அடைந்து கொள்கிறார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

வேலைத்திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றால் அது யாருக்காக செய்யப்படவுள்ளது (பயனாளிகள்) என்ன பொறுமதியில் செய்யப்படவுள்ளது எவ்வாறு செய்யப்படவுள்ளது என்ற நடைமுறையில் செய்யப்படுகின்றது. இந்த நடைமுறைகளைச் செய்வதற்கு நிறைவேற்று அதிகாரிகள், பொறியிலாளர்கள், திட்டமிடல் அதிகாரிகள் மற்றும் கணக்காளர்கள் எனப் பல முக்கிய ஆளணியினர் கொண்டே செய்யப்படுகின்றது. இது எல்லாம் இருந்து செய்யப்படும் ஒரு வேலைத்திட்டம் தோல்வி அடையக்கூடாது என்பதே இந்த நடைமுறைகளின் எதிர்பார்ப்பு, முக்கிய நோக்கம்.

இந்த அறிமுகத்தோடு விடயத்திற்கு வருவோம்.

யாழ்நகரில் மாநகரசபையின் பராமரிப்பில் பூங்காக்கள் இருக்கின்றது, அதில் ஒன்று சுப்பிரமணியம் பூங்கா மற்றயது பழைய பூங்கா. சங்கிலியன் பூங்காவை சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அமைக்கவுள்ளதாகவும் அறியக்கிடக்கிடக்கின்றது.






பூங்காக்கள் எல்லாமே காலனித்துவ மேற்கத்தேய நகர அமைப்புடன் தொடர்புடையது (எங்களுடைய பாரம்பரியத்தில் பொழுது போக்குகள் எல்லாமே கோவில் செயற்பாடுகளுடன் தொடர்பு பட்டவை). சுப்பிரமணியம் பூங்கா நகர சபை கட்டடத்திற்கு முன்னால் அமைந்துள்ளது. (இது ஒரு வகையில் கொழும்பு நகரசபையை பார்த்து பிரதி பண்ணியதாக இருக்கலாம் என்பது எனது ஐயம்)

பழைய பூங்கா முதலில் வெள்ளைக்கார அரச அலுவலர்களின் தங்குமிடமாக இருந்து அதற்கு பின்னர் நீண்ட காலமாக வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, ஒரு பகுதி  அண்மையில்  மக்களுக்காக மாற்றப்பட்டது. மிகுதி இன்னும் அரச அலுவலகங்களையே கொண்டிருக்கின்றது.

சுப்பிரணியம் பூங்கா பல  மில்லியன் ரூபா செலவில் பல்வேறு உதவித்திட்டங்களுடாக புனரமைக்ககப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டது. ஆனால் பழைய பூங்காவின் ஒரு பகுதி திருத்தி அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டதன் பின்னர் சுப்பிரமணியம் பூங்கா பொது மக்களின் பாவனை இன்றி இருக்கின்றது (கோவிட் நோய்த் தாக்கத்திற்கு முன்னரே) பழைய பூங்கா படப்பிப்பாளர்களாலும், சுற்றுலாப்பயணிகளாலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது என'பது ஒருபுறம் இருக்க  மிகக்குறைந்தளவான நகர மக்கள் பயன்படுத்தினார்கள்.



பிரதான பூங்காவின் நிலை இவ்வாறு இருக்க குருநகர் பகுதியில் உள்ள ஒரு சிறுவர் பூங்கா நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உள்ள பகுதியில் அமைந்தாலும் சிறுவர்களின் பாவனை இல்லாமல் இருக்கு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 8 வருடங்களாக இந்த சிறுவர் பூங்காவை பார்த்துக்கொண்டு வருகின்றேன் ஆனால் அது இன்னும் முழுமையாக இயங்கவில்லை. அதை இயக்குவதற்கு எந்த முயற்சியும் யாரும் எடுத்தாக வெளியில் தெரியவில்லை.



இதேவேளை, பிரதான வீதிக்கு அருகாமையில் சிறுவர்களின் பொழுது போக்கிற்காக தற்போது ஒரு விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டு வருகின்றது..


இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இதற்கருகில் தான் நகர சபையின் மீள்சுழற்சி நிலையம் பெரிய மருத மர நிழலின் கீழ் இயங்கி வருகின்றது

பிரதான
 வீதிக்கு அண்மையில் உள்ள இந்த இடம் சிறுவர்கள் விளையாடுவதற்குப் பொருத்தமானதா?

அருகில் இருக்கும் மீள்சுழற்சி நிலையம் எவ்வாறு தொடர்ந்து 
இயங்கவுள்ளது?





எந்தவித நிழலும் இல்லாமல் சிறுவர்கள் குறித்த இடத்தைப் பயன்படுத்தலாமா?

போன்ற கேள்விகளுக்கு இந்த திட்டத்துடன் சம்பந்தப்படடவர்களிடம் பதில் இருக்கின்றாதா எனக்கேட்டால்.....அநேகமாக இருக்காது ஆனால்

ஒரு பதில் கட்டாயம் இருக்கும்...வந்த காசு திரும்பிவிடும் இதனால் இதைச்செய்தோம் என்று சொல்வார்கள்.

 

இது எல்லாவற்றையும் விட யாழ் மாநகர சபையின் முக்கியமான பகுதி குருநகர், புள்ளிவிபரங்களின் படி இப்பகுதியே அதிக நெருக்கமான குடியிருப்பைக் கொண்ட பகுதியாகும். இங்கு போதிய இடவசதி இல்லை. பெரும்பாலான வீதிகளில் நான்கு சில்லு வாகனங்கள் செல்ல முடியுமா தெரிவில்லை. குடிநீர், மலக்கழிவகற்றல் பிரச்சனை இருக்கின்றது. இங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருக்கின்றது. இந்த நிலைமையை சீராக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ மாநகர நிர்வாகம் ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுத்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இன்று வரை அந்தப் பகுதியின் நிலை மோசமாகிக்கொண்டே வருகின்றது. இது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.




யாழ் மாநகரசபையின் இன்னொரு செயற்திட்டம், ஆரிய குளப்பகுதியில் தனியார் நிதிப்பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் செயற்திட்டம்.




குறித்த செயற்திட்டத்தின் படம் பார்வைக்கு நன்றாக இருக்கின்றது. படத்தில் உள்ளவாறு யாழ் நகரின்  காலநிலை தொடர்ந்து மம்பும் மந்தாரமாக இருக்காது. ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் summer காலத்தில் சூழல் வெப்பநிலை 15 பாகை அல்ல. நிழலுக்குள் ஒதுங்குவதே எங்களுடைய தேவை.



யாழப்பாணத்தில் இன்னும் நகர வாழ்க்கை ஆரம்பிக்கவில்லை. குருநகர் பகுதியைத்தவிர அனேகமான இடங்களில் குறைந்தது 2 பரப்பு காணிக்குள் தான் வீடுகள் இருக்கு.....குழிகள் உள்ள மலசல கூடம் தான் இன்னும் பாவனையில் இருக்கு (பொது மலக்கழிவு அகற்றும் பொறிமுறை இன்னும் இல்லை) அதிகமான நகரவாசிகள் வீட்டுக்கிணற்றிலேயே தண்ணீர் எடுத்து உபயோகப்படுத்துகின்றார்கள்.  (சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் மட்டும் உண்டு)



சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் அமைப்பு, இப்போதுதான் தூர்வாரப்பட்டு வருகின்றது. இருந்த குளங்கள் காணாமல் போய் இப்போது தான் தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது. நாளுக்கு நாள் நடைபெறும் கட்டுமானங்கள் எந்த வித விசேட கட்டுபாடுகளும் (யாழ்ப்பாண அபிவிருத்திக்கு தேவையான பொதீக திட்டமிடல் / Master Plan for Jaffna Development) இல்லாமல் பொதுவான நகர சபையின் வழிகாட்டலில் (UDA Regulation) மட்டும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

இது எல்லாம் தெரியாமல் யாரும் நிர்வாகத்தில், பதவிகளில் இல்லை. இதை எல்லாம் சட்டிக்காட்டுவதால் நாளை யாழ்ப்பாண திட்டமிடலில் அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஆனாலும் எழுதுவதன் நோக்கம் ஒன்றே ஒன்று மடடும் தான். நான் கற்றுக்கொண்ட விடயத்தை, என்னுடைய மனதில் தோன்றிய சிந்தனையை உங்களுடன் பகிருவது மட்டும் தான். இவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்திக் கொண்டு இருப்பவர்களுக்கும் ஏதாவது நோக்கங்கள் இருக்கும், அவர்கள் எல்லோரும் அந்த நோக்கத்தை அடைய முயற்சிசெய்வார்கள். நெல் விதைத்தால் நெல் அறுபடை செய்யலாம்....

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

 என்று 467 ஆவது குறளில் திருவள்ளுவர் சொன்னது.

கடட்டடக்கலைஞர்குபதீதரன்