Sunday, January 1, 2017

ஆர்கிடெக்சர் - Architecture

கட்டிடங்களையும், இதர கட்டுமானங்களையும் வடிவமைப்பது பற்றிய படிப்பு தான் ஆர்கிடெக்சர். இந்த படிப்பின் பின்னர் பி.ஆர்க் பட்டம் வழங்கப்படும். இந்த படிப்பு ஐந்து ஆண்டுகள் கொண்டது. இந்த படிப்பு தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் கலந்து பயன்பாட்டில் எடுத்துக் கொண்டு, கட்டமைப்பில் எவ்வகை மாற்றங்களை கொண்டு வரலாம் என திட்டமிட்டு வடிவமைப்பை உருவாக்கப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் பெயரும் நிலைத்து, பார்க்கும் வேலைக்கு தகுந்தாற்போல் பணமும் பார்க்க வேண்டும் என்பவர்களின் சரியான தேர்வு  கட்டிட வடிவமைப்பியல் படிப்பு. மேலும், ஆர்கிடெக்சர் படிப்பவர்களுக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. இந்த படிப்பு இந்தியாவில் மிக சில கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களில் தான் இருக்கிறது. அதனால் இந்த படிப்பில் சேர போட்டி போட வேண்டி இருக்கும்.

இந்த படிப்பில் சேர, தனியே நுழைவு தேர்வு எழுத வேண்டும். அதில் பெறும் மதிப்பெண் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண் இரண்டில் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் டூ தேர்வு முடிந்தவுடனோ அல்லது அதற்கு முன்னதாகவோ கவுன்சில் பார் ஆர்கிடெக்சர் அமைப்பு நடத்தும், தேசிய அளவிலான திறனறிவு தேர்வு  எழுத வேண்டும். இந்த திறனறிவு தேர்வு, எப்போது வேண்டுமானாலும், விண்ணப்பித்து நுழைவு தேர்வு எழுதலாம். நுழைவு தேர்வில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை(அப்ஜக்டிவ் டைப்).  இதில், பொது அறிவு வினாக்களோடு, கட்டிட கலையின் வரலாற்று சார்ந்த விஷயங்களும் கேட்கப்படும். இரண்டாவது மாணவரின் வரையும் திறனையும், கற்பனை திறனையும், சோதித்தறியப்படும் வகையிலான டிராயிங் தேர்வு.

உங்களுடைய படைப்பாற்றலையும், வடிவமைப்பு திற¬னையும் வெளிகாட்டுவதற்கு இதைவிட சரியான படிப்பு வேறு ஒன்றுமில்லை. கட்டுமானத்தை அழகுற திட்டமிடுவதும், வடிவமைப்பு கொடுப்பதும் தான்.  எப்படி ஒரு கவிஞன் தன்னுடைய எண்ணத்தை கவிதையாக எழுதுகிறானே, அதைப்போலவே, கட்டிட கலைஞன் தன்னுடைய கற்பனையை வரைந்து, அதற்கு உருவம் கொடுக்கும் கலை தான் கட்டிட கலை.

கட்டிடவியல் வடிவமைப்பாளர், கட்டுமான இடத்தில் என்னென்ன புதுமைகளை புகுத்த முடியும், அதற்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு இடம் தேவைப்படும், எவ்வளவு பொருட்கள் தேவைப்படும்,  கட்டிடதிற்கு எவ்வளவு காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைக்கும் என்று பல விஷயங்களையும் உள்வாங்கி கட்டுமானத்தை திட்டமிடுகிறார்கள்.

இத்துறையில் புராதன கட்டிடங்கள் காப்பது, கிரீன் பில்டிங் வடிவமைப்பு, நகர வடிவமைப்பு, நகர திட்டமிடல், கட்டிட வெளி புல்வெளி அமைப்பு என பல்வேறு பிரிவுகளாக இருக்கிறது.
இப்போது எங்கு பார்த்தாலும் நகரமயமாகி வருவதால் ஆர்கிடெக்சர் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிய அளவில் இருக்கிறது.  மேலும், நகரத்தில் எங்கு பார்த்தாலும் வியாபார தளங்களும், அடுக்குமாடி குடியிருப்புகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் என அதிகரித்து வருகின்றன. இதனால் கட்டுமான வடிவமைப்பில் வேலை வாய்ப்பு என்பது எந்த விதமான சிரமம் இல்லாமல் கிடைத்துவிடும். ஒரு குறிப்பிட்ட காலம் வேலை செய்த பின்பு, தனியே வடிவமைப்பாளராக களம் இறங்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். பெரிய அளவில் தேவை இருக்கிறது. அதே போல் வடிவமைப்புக்கு அதிகளவில் சம்பாதிக்கவும் வாய்ப்புகள் ஏராளம். குறைந்தது 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் வரை ஆண்டு சம்பளமாக வாங்குகிறார்கள். பழங்கால கட்டிடங்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு துறையில் கட்டுமான வடிவமைப்பு, ரயில்வே துறையிலும், இதர பொது துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. நகர கட்டமைப்பு துறையில் வேலை வாய்ப்பு பெறலாம். நகர வளர்ச்சி பிரிவு, தனியார் நிறுவனங்களும், பெரிய அளவில் உருவாகி இருக்கின்றன.
ஆர்கிடெக்சர் படிப்பை முடிப்பவர்கள், ஆரம்ப நிலையில் கட்டுமான நிறுவனங்களிலும், வடிவமைப்பு நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். இங்கு வேலைக்குச் சேர்ந்து உத்திகளை கற்றுக் கொண்டு, தனியே ஆலோசனை நிறுவனங்களையும், கட்டுமான நிறுவனத்தையும் தொடங்கலாம்.தனியே வடிவமைப்பை உருவாக்கி தருபவராகவும் இருக்கலாம் அல்லது அரசு பணிகளுக்கு வடிவமைப்பை உருவாக்கி தரலாம், ஆசிரியர் பணிக்கும் பெரிய அளவில் தேவை இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொது பணி துறைகளில் இவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறலாம். மேலும், கட்டுமான நிறுவனங்களிலும் வாய்ப்பை பெறலாம். மேலும், ஆலோசகராகவும், கட்டுமான தொழில் முனைவோராகவும் தனியே வியாபாரம் செய்யலாம்.

மக்களின் முக்கியமான கனவுகளில் ஒன்று சொந்தமாக வீடு கட்டுவது. தற்போது இந்த கனவை பலரும் நிறைவேற்றி வருகிறார்கள். மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிகவளாகங்கள், தெருக்கள், அலுவலக மற்றும் தொழில் துறை கட்டிடங்கள், விற்பனை மையங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், விமான நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற அனைத்துக்கும் கட்டிடகலைக்கும், வடிவமைப்புக்கும் முக்கியத்துவம் தர ஆரம்பித்திருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள கட்டிடத்தை மாற்றி அமைக்கவும், புதுமைப்படுத்தவும் செய்கிறார்கள். இதனால் கட்டிட கலைஞர்களுக்கு ஒய்வு இல்லாமல் பணிகள் இருந்த வண்ணம் இருக்கின்றன. கூடவே, கட்டுமான துறையின் வேகமாக வளர்ச்சியால், கட்டிடகலையும் அதன் வடிவமைப்பும் வளர்ச்சி பெற ஆரம்பித்திருக்கிறது. மேலும், நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அத்தகைய உள்கட்டமைப்பு பணிகளிலும் கட்டுமான கலைஞர்களின் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது.

அரசு துறையிலும் வேலை வாய்ப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.  இளநிலை கட்டிட வடிவமைப்பு படிப்பை முடித்தவர்கள்,  பல்வேறு துறைகளில் இளநிலை கட்டிட வடிவமைப்பாளர் பதவி பெறலாம். அதன் பின்பு பெரிய அளவில் வளர்ச்சி பெற முடியும். குறிப்பாக, அரசு துறையில் பொதுபணித்துறை, ஆர்கியாலஜி துறை, பாதுகாப்பு துறை, ரயில்வே துறை, தபால் மற்றும் தந்தி துறை, பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய கட்டுமான அமைப்பு, நகர திட்ட அமைப்பு, வீடு மற்றும் நகர மேலாண்மை நிறுவனம், தேசிய கட்டுமான கட்டிட நிறுவனம் என பல அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறலாம். இதைத்தவிர, மாநில அளவிலும் பல வித வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

தற்போது இந்த துறை வளரும் துறை என்பதால் பல கல்லூரிகளில் புதியதாக படிப்பு தொடங்கியும், தொடங்கவும் தயாராக இருக்கிறார்கள். அங்கு எல்லாம் விரிவுரையாளர் பணிக்கு செல்லவும் செய்யலாம். இதன் மூலம் தன் கற்றுக் கொண்டதை கொண்டு பல இளம் ஆர்கிடெக்குகளை உருவாக்க முடியும். பிற்கால சிற்பிகளை உருவாக்குவார்கள்.மேலும் வடிவமைப்பு கலையை பற்றி ஊடகங்களிடையே பேசுவதற்கும், எழுதுவதற்கும் கூட ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறனோடு, திட்டமிடல் திறனோடும் இருப்பது அவசியம். மேலும் வரைகலையில் வடிவமைக்கும் திறனும், ஒரு வடிவமைப்பு திட்டத்தை, முன்னரே எப்படி வடிவம் வரும் என்பதை கணிக்கும் திறனும் இருக்க வேண்டும். ஏராளமான சிக்கலான வடிவமைப்புகளை உள்வாங்கி கொண்டு, புதிய வடிவமைப்பு உருவாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் கட்டுமானத்திலும், வடிவமைப்பிலும் அனைத்து டெக்னிக்கல் விஷயங்களையும்  ஆர்வத்தோடு கற்றுத்தெரிந்துக் கொள்ளக்கூடிய ஆர்வம் இருக்க வேண்டும். , சுற்றுச்சுழல் குறித்த அறிவு இருப்பதும் அவசியம். குறிப்பாக கற்பனை சக்தி, வரையும் திறன் போன்றவை அவசியம்.

http://www.sikams.com/component/content/article/8622.html

No comments:

Post a Comment