கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகர்ப்புறவியம் (Urbanism) என்பது, நகர்ப்புற மக்கள் கட்டிடச் சூழலுடன் கொண்டுள்ள சிறப்பியல்பான தொடர்பாடலைக் குறிக்கிறது. இன்னொரு வகையில் சொல்வதானால், இது, நகர்ப்புற வாழ்வோடு சிறப்பாகப் பிணைந்துள்ள மனநிலை, வழக்காறுகள், மரபுகள், மனப்போக்குகள், உணர்வுகள் போன்றவை ஆகும். நகரங்களின் புவியியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு வெளிப்பாடுகளையும், கட்டிடச் சூழல் மீது இவை அனைத்தினதும் ஒன்றிணைந்த தாக்கங்களையும் உட்படுத்தி நகரங்களை ஆய்வு செய்யும் துறையாகவும் இது உள்ளது.
கோட்பாடு[தொகு]
தற்காலத்தில், பல கட்டிடக்கலைஞர்களும், திட்டமிடலாளரும், சமூகவியலாளரும் மக்கள் செறிந்து வாழும் நகர்ப்புறங்களில் மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பது குறித்துப் பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்து வருகின்றனர். நகர்ப்புறவியம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, நகர்ப்புறவியத்தை நகரத்தின் பௌதீக அம்சத்துடன் அடையாளம் காண்பதை நிறுத்த வேண்டும் எனவும், மேலெழுந்தவாரியான எல்லைகளுக்கும் அப்பால் சென்று, தொழில்நுட்ப, தொலைத்தொடர்பு வளர்ச்சிகள் எவ்வாறு நகர வாழ்க்கை முறையை நகரங்களுக்கும் அப்பால் விரிவாக்கியுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் லூயிசு வர்த் (Louis Wirth) என்பவர் கூறுகிறார்.[1]
நகர்ப்புறவியத்தின் பல்வேறு வடிவங்கள்
பால் நாக்சு (Paul Knox) என்பவர் தான் எழுதிய நகரங்களும் வடிவமைப்பும் (Cities and Design) என்னும் நூலில் தற்கால நகர்ப்புறவியத்தின் பல போக்குகளில் ஒன்றாக "அன்றாட வாழ்க்கையை அழகுள்ளது ஆக்கல்" என்பதைக் குறித்துள்ளார்.[2] அலெக்சு கிறீகர் (Alex Krieger) என்பவர் நகரத் திட்டமிடல், வடிவமைப்பு என்பன தொடர்பான வல்லுனர்கள், எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக நகர்ப்புறவியக் கோட்பாடுகளை ஆய்வு செய்துள்ளார். இவர் தற்காலத்தில் நகர்ப்புறவியம் பத்து விதமான வழிகளில் பயன்படுத்தப்படுவதை அடையாளம் கண்டுள்ளார்.[3] அவையாவன:
- திட்டமிடலுக்கும் கட்டிடக்கலைக்கும் இடையிலான இணைப்பு
- பொதுக் கொள்கையில் வடிவ-அடிப்படையிலான வகைப்பாடு
- நகரக் கட்டிடக்கலை
- நகர வடிவமைப்பை மீளமைப்பு நகர்ப்புறவியமாகக் கொள்ளல்
- நகர வடிவமைப்பை இட உருவாக்கத்துக்கான கலையாகக் கொள்ளல்
- நகர வடிவமைப்பைத் சூட்டிகை வளர்ச்சியாகக் (smart growth) கொள்ளல்
- நகர உட்கட்டமைப்பு
- நகர வடிவமைப்பை நிலத்தோற்ற நகர்ப்புறவியமாகக் கொள்ளல்
- நகர வடிவமைப்பைத் தொலைநோக்கு நகர்ப்புறவியமாகக் கொள்ளல்
- நகர வடிவமைப்பைச் சமூகச் சார்பு வாதமாகக் கொள்ளல்
சூழலியல் நகர்ப்புறவியம் (ecological urbanism) என்பது, சூழலியலின் அடிப்படையில் சமூகம் சார்ந்ததும், சூழலைக் கவனத்தில் கொள்வதுமான ஒரு நகர்ப்புறவியம் ஆகும். இது நகர வடிவமைப்பு, நகரத் திட்டமிடல் ஆகியவற்றின் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் சூழலியல் மற்றும் காலநிலையியல், நீரியல், புவியியல், உளவியல், வரலாறு, கலை போன்ற பல்வேறு சூழல் சார்ந்த துறைகளுடன் இணைக்கின்றது. இது, பசுமை நகர்ப்புறவியம், தாங்குநிலை நகர்ப்புறவியம் போன்ற நகர்ப்புறவிய வகைகளிலும் பார்க்கக் குறைந்த அளவான கருத்தியல் அடிப்படையில் இயங்குகிறது. சூழலியல் நகர்ப்புறவியம் பல வழிகளிலும் நிலத்தோற்ற நகர்ப்புறவியத்தில் இருந்து வளர்ச்சியடைந்தது என்பதுடன் அதனை விமர்சிப்பதாகவும் உள்ளது. இது நகர வடிவமைப்பிலும் அதன் மேலாண்மையிலும் முழுதளாவிய அணுகுமுறை ஒன்றின் தேவையை வலியுறுத்துகிறது.
"சூழலியல் நகர்ப்புறவியம்" என்பதற்கு ஈடான "ecourbanismo" (எக்கோஏர்பனிஸ்மோ) என்னும் சொல் கட்டிடக்கலைஞரான மிகுவேல் ருவானோ (Miguel Ruano) என்பவர் எழுதிய எசுப்பானிய மொழி நூலொன்றில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர், 2003 ஆம் ஆண்டில் ஒரிகோன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாநாட்டில் இதற்கிணையான Ecological urbanism (எக்கோலாஜிக்கல் ஏர்பனிசம்) என்னும் ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்பட்டது.
பசுமை நகர்ப்புறவியம் (green urbanism) என்பது, மனிதருக்கும், சூழலுக்கும் நன்மை பயக்கக்கூடிய சமூகங்களை உருவாக்கும் ஒரு நடைமுறை ஆகும். இது கூடிய தாங்குநிலையோடு கூடிய இடங்களையும், சமூகங்களையும், வாழ்க்கை முறைகளையும் எற்படுத்துவதற்கான ஒரு முயற்சி. பசுமை நகர்ப்புறவியம் உலக வளங்களைக் குறைவாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பசுமை நகர்ப்புறவியம் பல்துறை சார்ந்தது. இது, கட்டிடக் கலைஞர்கள், நகர வடிவமைப்பாளர்கள் ஆகியோருடன், நிலத்தோற்றக் கலைஞர், பொறியாளர்கள், நகர்ப்புற வடிவமைப்பாளர், சூழலியலாளர், போக்குவரத்துத் திட்டமிடலாளர், இயற்பியலாளர், சமூகவியலாளர், பொருளியலாளர் போன்றோரின் கூட்டு முயற்சியை உள்ளடக்கியது.
நகரமயமாதலும் சுற்றுச் சூழல் அழிவும்[தொகு]
நகரமயமாதலும், சுற்றுச் சூழல் அழிவும் எப்பொழுதும் ஒன்றாகவே இடம் பெறுகின்றன. 1989ல் ஒடும் (Odum) என்பவர் நகரங்கள் உணவு உற்பத்தியில் ஈடுபதுவது இல்லை என்பதால் அவை இயற்கை மற்றும் செய்கை பண்ணப்படும் சூழல்களில் தங்கியுள்ள ஒட்டுண்ணிகள் என வர்ணித்தார். இவ்வாறான இசைவற்ற தன்மையின் விளைவாக சூழலுக்குப் பேரழிவாக அமையக்கூடிய நிகழ்வுகள் இடம்பெறக்கூடும் என்றார் மயுர் (1990)
தாங்குநிலை நகர்ப்புறவியம் என்பது, நகரங்களின் வடிவமைப்பு, திட்டமிடல், நிர்வாகம் ஆகியவற்றில் தாங்குநிலைக் கொள்கைகளைப் பயன்படுத்தும் நகர்ப்புறவியம் ஆகும். உலகெங்கெலும் உள்ள பல அரச அமைப்புக்கள், அரசுசாரா அமைப்புக்கள், உயர்தொழிற் கழகங்கள், உயர்தொழில் நிறுவனங்கள் போன்றவை தாங்குநிலை நகர்ப்புறவியத்தை முன்னெடுத்துச் செல்வதுடன் இதன் நடைமுறைகள் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளன. சூழலியல் நகர்ப்புறவியம், பசுமை நகர்ப்புறவியம், நிலத்தோற்ற நகர்ப்புறவியம் போன்ற நகர்ப்புறவிய இயக்கங்கள் தாங்குநிலை நகர்ப்புறவியத்தோடு தொடர்புள்ளவை.
தாங்குநிலை நகர்ப்புறவியம், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நகர வளர்ச்சியினால் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை நீக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இது, எல்லா உற்பத்திப் பொருட்களும் தாங்குநிலையைக் கவனத்தில் கொண்டு செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக அவற்றின் முழு வாழ்க்கை வட்டத்தையும் கவனத்திற் கொள்கிறது. மின் உற்பத்தி, உணவு உற்பத்தி போன்றவற்றையும் நகருக்குள்ளேயே கொண்டு வருவதைத் தாங்குநிலை நகர்ப்புறவியம் வலியுறுத்துகிறது. நகரங்களின் தேவைகள் அனைத்தையும் அங்கேயே பெறத்தக்க வகையில், தாங்குநிலை கொண்டவையாகவும், தன்னிறைவு கொண்டவையாகவும் இருக்கவேண்டும் என்பதை இது குறிக்கின்றது.
தாங்குநிலை நகர்ப்புறவியத்தின் கூறுகள்[தொகு]
- நெருக்கம்
- மனிதனுக்கு இயற்கையின் மீதும் பிற உயிர்கள் மீதும் உள்ள இயல்பான ஒட்டுறவு
- தாங்குநிலைப் பாதைகள்
- உயர் திறன் கட்டிடங்கள்
- உயர்திறன் உட்கட்டமைப்பு
புதிய நகர்ப்புறவியம் (new urbanism) என்பது ஒரு நகர்ப்புற வடிவமைப்பு இயக்கம். பல்வேறு வகையான வீடமைப்புக்களையும், தொழில் வகைகளையும் உள்ளடக்கியதான நடந்தே பல வசதிகளையும் அணுகக்கூடிய அயல்களை (neighborhood) உருவாக்குவதை இந்த இயக்கம் முன்னெடுக்கின்றது. இது 1980களில் ஐக்கிய அமெரிக்காவில் உருவானது. படிப்படியாக இது நகரத்திட்டமிடல், நகர நிலப் பயன்பாட்டுக் கொள்கை என்பன தொடர்பான பல அம்சங்களை வெளிப்படுத்தியது.
புதிய நகர்ப்புறவியம், 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முந்திய தானுந்துகள் புழக்கத்துக்கு வராத காலப்பகுதியின் வடிவமைப்புத் தரங்களின் செல்வாக்குக்கு உட்பட்டது. இது, மரபுவழி அயல் வடிவமைப்பு, போக்குவரத்து நோக்கு வடிவமைப்பு போன்ற கொள்கைகளை உட்படுத்துகிறது. பிரதேசவியம், சூழல்வாதம், சூட்டிகை வளர்ச்சி (smart growth) போன்ற கருத்துருக்களுடன் இதற்கு நெருக்கமான தொடர்பு உண்டு.
நிலத்தோற்ற நகர்ப்புறவியம் (Landscape urbanism) என்பது, நகர்ப்புறத் திட்டமிடலின் ஒரு கோட்பாடு ஆகும். கட்டிடங்களை வடிவமைப்பதின் ஊடாக அன்றி, நகரின் நிலத்தோற்றத்தை வடிவமைப்பதின் ஊடாகவே நகரங்களைச் சிறப்பாக ஒழுங்கமைக்கலாம் என்பது இதன் கொள்கை. இக்கோட்பாடு தொடர்பில், நிலத்தோற்ற நகர்ப்புறவியம் என்னும் பொருள் கொண்ட "Landscape Urbanism" (லான்ட்ஸ்கேப் ஏர்பனிசம்) என்னும் ஆங்கிலத் தொடர் 1990களில் முதன் முதலில் தோன்றியது. அதைத் தொடர்ந்து இத்தொடர் பல்வேறுபட்ட பயன்பாடுகளுக்கு உட்பட்டது. ஆனால், பெரும்பாலும் புதிய நகர்ப்புறவியத்தின் தோல்விகளுக்குப் பின்-நவீனத்துவத்தின் ஒரு பதிலாக இது பார்க்கப்பட்டது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
No comments:
Post a Comment