Saturday, December 31, 2016

சண்டிகர் - நவீன இந்தியாவின் முதல் ‘திட்டமிட்ட நகர வடிவமைப்பு’!

வடமேற்கு இந்தியாவில் ஷிவாலிக் மலையடிவாரத்தில் இந்த சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரம் எனும் விசேஷமான அடையாளத்தை கொண்டுள்ளது. சண்டி எனும் ஹிந்து கடவுள் வீற்றிருக்கும் ஸ்தலம் என்பதால் இதற்கு ‘சண்டிகர்’ எனும் பெயர் வந்துள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட பெருநகரம் எனும் பெருமையும் இதற்குண்டு.
சண்டிகர் புகைப்படங்கள் - 'ஒப்பன் ஹாண்ட்' நினைவுச் சின்னம்

சண்டிகர் புகைப்படங்கள் - 'ஒப்பன் ஹாண்ட்' நினைவுச் சின்னம் 

பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் பஞ்சாப் மாநிலத்திற்கான புதிய தலைநகர் பற்றிய அவசியம் ஏற்பட்டபோது அப்போதைய பிரதமரான பண்டித ஜவகர்லால் நேரு ஒரு புதிய நவீன நகரத்தை நிர்மாணிக்க விரும்பினார்.
அவரது திட்டப்படி பிரபல ஃபிரெஞ்சு கட்டிடக்கலை நிபுணரும் நகர வடிவமைப்பாளருமான ‘லெ கொர்புசியர்’ என்பவர் இந்த சண்டிகர் நகரத்தை 1950களில் வடிவமைத்து நிர்மாணித்தார்.
1966ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இந்த நவீன நகரம் ஒரு தனிப்பட்ட யூனியன் பிரதேசமாகவும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரமாகவும் அறிவிக்கப்பட்டு உருவம் பெற்றது.
சண்டிகர் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்கள்

சண்டிகர் நகரத்தில் ‘லெ கொர்புசியர்’ சிருஷ்டித்த கலைப்படைப்புகளில் ஒன்றாக ‘தி ஓபன் ஹான்ட்’ என்றழைக்கப்படும் சின்னம் ஒன்று கேபிடோல் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
நீதிமன்றம், ஆட்சிமன்றம், சட்டமன்றம் ஆகியவை இந்த வளாகத்தில்தான் அமைந்துள்ளன. சண்டிகர் நகரத்தில் மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாக ராக் கார்டன் எனும் பூங்கா பிரசித்தமாக அறியப்படுகிறது.
இண்டர்நேஷனல் டால்ஸ் மியூசியம் மற்றும் கவர்ண்மென்ட் மியூசியம் போன்றவையும் இங்கு தவறவிடக்கூடாத சுற்றுலா அம்சங்களாகும்.
சண்டிகர் நகரத்தின் வடபகுதியில் உள்ள பெரிய வனப்பகுதி காட்டுயிர் ரசிகர்களை பெரிதும் கவரும் அம்சமாக வீற்றுள்ளது. கன்சால் மற்றும் நேப்லி காடுகளில் பல்வகையான உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் காணப்படும் இயற்கைப்பிரதேசமாக புகழ் பெற்றுள்ளன.
இவை தவிர சுக்னா காட்டுயிர் சரணாலயமும் இங்கு முக்கியமான இயற்கைச்சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. சுக்னா ஏரிக்கான நீர்ப்பிடிப்புப்பகுதியாக விளங்கும் இந்த வனச்சரகம் ஏராளமான பாலூட்டி விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன உயிரினங்களை கொண்டுள்ளது.
சண்டிகருக்கு அருகில் உள்ள மொஹாலி எனும் இடத்தில் சாத்பிர் வனவிலங்குக்காட்சியகம் ஒன்றும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது. ரோஸ் கார்டன் மற்றும் குருத்வாரா கூஹ்னி சாஹிப் ஆகியவை சண்டிகர் நகரத்தின் இதர சுற்றுலா அம்சங்களாகும்
எப்படி செல்வது சண்டிகருக்கு

நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் விமான, ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சண்டிகர் நகரை வந்தடையலாம். சண்டிகர் விமான நிலையம் நகர மையத்திலிருந்து 8 கி.மீ அமைந்துள்ளது.
17-வது செக்டார் பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. மேலும் வெளி மாநிலப்பேருந்துகளுக்கான இரண்டு பேருந்து நிலையங்கள் செக்டார் 17 மற்றும் செக்டார் 43ல்  அமைந்துள்ளன.
எப்போது விஜயம் செய்யலாம்

செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான பருவம் சண்டிகருக்கு பயணம் மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.

http://tamil.nativeplanet.com/chandigarh/

No comments:

Post a Comment