Friday, December 16, 2016

தமிழர் - கலை - பண்பாடு

இந்த தலைப்பில் மூன்று விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. இவற்றில் எல்லா இனங்களுக்கும் உள்ள இரண்டு பொதுவான விடயங்களான கலை மற்றும் பண்பாடு ஆனது மூன்றாவது விடயமான தமிழர் என்ற இனம் என்பதோடு மட்டும் இணைத்துப் பார்க்கப்படுகின்றது. இங்கு சொல்லப்படுகின்ற மூன்று விடயங்களையும் தனித்தனியே பார்க்க வேண்டும். அதாவது தமிழர் -கலை-பண்பாடு என்பவற்றை தனித்தியான ஆராய்ந்தால் மடடுமே முழுவதையும் இணைத்துப்பார்க்க முடியும்.

முதலில் தமிழர் என்பதை எடுத்துக்கொண்டால் இங்கு எழும் முக்கிய பிரச்சனை தமிழர்களை எவ்வாறு வரையறுப்பது. தமிழ் மொழி பேசுபவர்கள் அனைவரும் தமிழர்களா? அல்லது எந்த மொழி பேசினாலும் அம்மக்களின் மரபணு பண்புகளில் இருந்து தமிழர்களை வரையறுப்பதா?
அல்லது வரலாற்று ரீதியாக தமிழர்களாக இருந்து பல்வேறு நாடுகளில் தமிழ் மொழி தெரியாது வாழும் தமிழ் வம்சாவளியில் வந்தவர்களை குறிப்பிடுவதா? மனிதர்கள் தோன்றிய காலம் முதல் தமிழ் என்ற மொழி பேசும் இனம் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் ஆதியில் பிறந்த தமிழர்கள் எல்லோரும் இன்று அப்படியோ இருக்கிறார்களாபூமியின் சுழற்சி அதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றம், இடப்பெயர்வு, அன்னியராட்சி போன்ற பல்வேறு காரணங்களால் இன்று குறித்த இனம் மடடுமல்ல அநேகமான மனித இனங்கள் எல்லாம் இந்த உலகம் மட்டுமல்ல பிரபஞ்சம் முழுவதுமே இருப்பார்கள் என்பதை சாதாரண அறிவு படைத்த எவருமே ஏற்றுக்கொள்வார்கள். அப்படியாயின் தமிழர்கள்  என்று யாரைக்குறிப்பது?
தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களின் மூதாதையர்கள் ஆபிரிக்ககண்டத்தில்  இருந்து வந்தவர்கள் என்று அண்மைக்கால மரபணுப் பரிசோதனைகள் சொல்வதாக கூறப்படுகின்றது. இதே வேளை இலங்கையில் பல்வேறு அரசியல் இராணுவத் தேவைகளுக்காக பல்வேறு இன மொழி பேசியவர்கள் தமிழ் மொழியைப் பேசி, தமிழ் பேசியவர்களை திருமணம் செய்தும், தமிழர் பண்பாடுகள் என்று கூறப்படுபவைகளைப் பின்பற்றியும் வாழ்கின்றமையை அவதானிக்கலாம். இவ்வாறான போக்கு கடந்த 500 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இன்று யார் தமிழர்கள் என்பது வரையறுக்க முடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் கலை என்பதை எடுத்துக்கொண்டால்,
கலைகளின் தோற்றத்தைப் பார்க்கும் போது வேட்டையாடிய மனிதன் தன்னுடைய வேட்டை அனுபவத்தை ஏனையவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதற்காக சித்திரங்களை வரைந்ததாகவும், ஓய்வு சேரங்களில் ஆடல் பாடல்களில் ஈடுபட்டதாகவும் வரலாறு சொல்கின்றது. அந்த மனித இனம் தமிழ் பேசியதாக வைத்துக்கொண்டால்இன்று தமிழ் பேசும் அல்லது தமிழர் என்று சொல்லப்படும் ஒருவர் ஏற்பட்ட கால மாற்றத்தால் ஒவியத்துறையில் அல்லது ஏனைய கலைத்துறையில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களை, சிந்தனைகளை உள்வாங்கி தன்னுடைய படைப்புக்களை உருவாக்குவதை தமிழ்நாட்டிலேயே காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மேலாக இன்று ஐரோப்பிய சூழலில் வாழும் தமிழ் பேசும் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய படைப்புக்களை ஒரு கலைப்படைப்பு என்ற அடைப்படையிலேயே நோக்கின்றார். ஆதனை எந்தச் சந்தர்பத்திலும் தமிழ் அல்லது தமிழருடைய படைப்பு  என்று பார்ப்பதில்லை. இன்று உலகில் ஏற்பட்டிருக்கும் சிந்தனை மாற்றம் அநேகமாக எல்லாவிதமான கலைப்படைப்புகளையும் கலை என்ற கோணத்தில் மட்டும் பார்க்கும் போக்கு காணப்படுகின்றது. உலகம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை உள்வாங்கிய பின்னர் மனித மனங்களில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் சில மனிதக்குழுக்களுக்குரிய கலைகளை பாரம்பரிய அல்லது நாட்டுப்புற கலைவடிவம் என்ற வகையில் வகைப்படுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களின் கலை என்று கூறி நாம் பாதுகாக்கும் ஒன்றை தொடர்ந்து பேணிப்பாதுகாப்பது ஒரு கலைஞனின் ஆற்றலை அல்லது வளர்ச்சியைமட்டுப்படுத்துவது போன்ற செயற்பாடு என்ற எண்ணமே தோன்றுகின்றது.

அடுத்த விடயம் பண்பாடு
ஒரு விலங்கின் நடத்தை என்பது குறித்த விலங்கு வாழும் சூழ்நிலை, அந்த சூழலின் தரைத்தோற்றம், காலநிலை என்பவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டது. உதாரணமாக இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நிலவும் காலநிலைக்கு குறித்த மக்களின் உணவுப்பழக்கம் மற்றும் ஆடை அலங்காரங்கள் தோன்றின, அவை தொடர்நதும் பின்பற்றப்பட்டன. காலப்போக்கில் உலக வர்த்தகம் விரிவடைய பிறநாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்கள் மக்களின் உணவுப்பழக்கம், ஆடை அலங்காரங்களில் மாற்றத்தை ஏற்படுத்தின. இக்காலப்பகுதியில் மக்களின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மக்களின் நீண்ட காலப்பழக்க வழங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தின. இவ்வாறான மாற்றங்கள் தமிழர் என்று  சொல்லப்படும் மக்களின் வாழ்வில் கடந்த 200 வருடங்களில் பாரிய மாற்றம் ஏற்பட்டன. பாரிய அளவில் ஏற்படுத்தப்பட்ட கட்டாயக்குடிஏற்றங்கள், பாதுகாப்பிற்கான இடப்பெயர்வுகள், தொழில் ரீதியான இடப்பெயர்வுகள் எல்லாம் மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி தொடர்ச்சியாக பண்பாட்டில் மாற்ங்களை ஏற்படுத்தின. முன்னைய தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தமிழ் மக்களின் பண்பாடு என்பது இன்றைய தமிழ் மக்களின் பண்பாடு எனப்படுவதோடு பாரிய வேறுபாடுகளை காட்டிநிற்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் எழுகின்ற முக்கிய கேள்வி என்னவெனில்  இன்றைய தொழில்நுட்பம், தொடர்பாடல்கள் இல்லாத ஒரு காலகட்டத்தில் அதாவது இன்றைய காலத்திற்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் தோன்றிய ஒரு வாழ்க்கை முறையை ஒரு இனத்தின் அடையாளம் அல்லது பாரம்பரியம் என்ற பெயரில் அதனைப்பாதுகாக்க வேண்டுமா? இன்றைக்கு 10 வருடங்களிற்கு முன்னர் வந்த சாதாரண கைத்தொலைபேசியை எந்த மனித இனத்தைச் சேர்ந்த ஒருவருமே உபயோகப்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுவது கிடையாது. ஏனெனில் அவ்வாறான கைத்தொலைபேசிகள் இன்று பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதே காரணம்.

இனி தமிழர் கலை பண்பாடு என்ற விடயத்தை முழுமையாக நோக்கினால் தமிழ் பேசுக்கின்ற ஒரு மக்கள் கூட்டம் தங்களுடைய கலை பண்பாடு என்று உறுதியாக வரையறுக்க முடியாத சில வரையறைகளுக்குள் மட்டும் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. இன்று எம்மத்தயில் காணப்படுகின்ற சட்டங்கள் சாதாரண மக்களுக்கு மட்டும் பிரயோகிக்கப்படுகின்ற அதேவேளை குறித்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவர்கள் குறித்த சட்டங்களை மீறி செயலாற்றுவது போல் தமிழ் பேசும் மக்களில்ஒரு சிலர் மட்டும் நிகழும் சமூக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தாங்கள் சிறுவயதில் இருந்து புகுத்தப்பட்ட சில கலை பண்பாடு அதனைக் காப்பாற்றவும், பேணிப்பாதுகாக்கவும் முற்பட்டு அதனை முழுமையாக செய்யாது மனதளவில் துன்பத்திற்கு உள்ளாவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.


தமிழர்கள் எனச்சொல்லப்பபடும் மக்கள் கூட்டம் உலகில் மாற்றங்கள் ஏற்படுவதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து ஏனைய தங்களை இந்த பூமியில் தக்க வைக்கவேண்டும் அதற்கான செயற்பாடுகள் அவசியம். துமிழர் கலை உயர்ந்தது, பண்பாடு சிறந்தது என நம்புவர்கள் அதனைப் பின்பற்றி வாழ்ந்து உயர்ந்து காட்டவேண்டும். இது இவ்வாறு இருக்க யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே சிவம் போன்ற தமிழ்ச் சொற்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment