Friday, October 1, 2021

கட்டடச்சூழலும் எம்மவர்களும் - 02 (பாடசாலைகள்)

 கற்றல் நிலையங்களின் வடிவமைப்பு

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்பக்கல்லூரிகள் மாணவர்களின் கற்றலுக்கு உரிய இடம். குறித்த இடங்கள் காலத்திற்கு காலம் வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் குருகுலக்கல்விக்கு ஏற்ற குடில்களே போதுமானவையாக இருந்தன. அதற்குப்பின்னர் சமயக்கல்வி தேவை ஏற்பட்ட காலத்தில் கோவில்களும் மடங்களும் போதுமானவையாக இருந்தன. மொழிக்கல்வி தேவைப்பட்ட காலத்தில் வீட்டுத்திண்ணைகள் கல்விச்சலைகளாக உருவாகின. தொடர்ந்து வந்த காலப்பகுதியில் தேவைகளுக்கும் வசதிகளுக்கும் ஏற்ப கட்டடங்கள் உருவாகி வளர்ந்து கற்றலுக்குரிய கட்டடச்சூழல் என்பது தற்போதுள்ள நிலையை அடைந்துள்ளது.

இன்று அநேகமான நிறுவனங்களின் கட்டமைப்புக்கள் சர்வதேச தரத்திற்கு அல்லது அதற்கு இணையாக மாறுவது என்பது பொதுவான போக்காகக் காணப்படுகின்றது. கல்விசார் நடவடிக்கைகளும் இதற்கு விதிவலக்கானவை அல்ல. கல்விக்கொள்கைகளிலும் கற்பித்தல் முறைகளிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் கட்டடச்சூழல் சர்வதேச தரத்திற்கு மாற்றம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாடசாலைகளில் நிகழும் பௌதீக மாற்றங்களும் பொருத்தமான திட்டத்துடன் இடம்பெறவில்லை என்பது இந்தக்கட்டுரையை வாசித்த பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள எந்தப்பாடசாலைக்கு சென்று பார்த்தால் உங்கள் கண்களுக்குப் இலகுவாகப்புலப்படும்.

 


எனக்குத் தெரிந்தவகையில் இதற்கு காரணமாக….. 

1. கட்டடங்கள் கட்டுவது என்பது பொருளாதாரம் தொழில்நுட்பம் சார்ந்த விடயம் என்பதாலும், பொதுப்பாவனைக்கானது என்ற காரணத்தாலும் கட்டடங்களை வடிவமைக்கப்படும் போது கற்றல் நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களின் நலன் சார்ந்து சிந்திப்பதோ முடிவெடுப்பதோ இல்லை. உதாரணமாக அருகருகே முற்றாக மூடப்படாத வகுப்பறையில் மாணவர்கள் நெருக்கமாக இருத்தி வைக்கப்பட்டு கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது சில சந்தர்பங்களில் கற்பித்தலுக்கு இடையூறாக அமைந்துவிடுகின்றது.  

2. அதிகரித்து வரும் மாணவர்களின் தேவைக்கு ஏற்ப காணிகள் அதிகரிக்காத நிலையில் மிக நெருக்கமாக கட்டடங்கள் அமைக்கப்படுகின்றது. இதனால் பாடசாலை ஆரம்பிக்கும் முன்னும் பின்னும் இடைவேளை நேரங்களின் போதும் மாணவர்கள் ஒன்றுகூடுவதற்கும் அவர்களுக்கான அசைவுகளுக்கும் போதிய இடங்கள் காணப்படுவதில்லை. மிக முக்கியமாக ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையான காற்று மற்றும் வெளிச்சம் போதாத நிலையும் காணப்படுகின்றது. 

3. கட்டடங்கள் காலத்திற்கு காலம் கட்டடப்படுவதால் அநேகமான சந்தர்பங்களில் கட்டடங்கள் தனியாகவும் தொகுதியாகவும் பார்க்கும் போது பயன்படுத்தப்படும் கட்டடப்பொருட்கள், பூசப்படும் வர்ணங்கள், போன்றவற்றால் பாடசாலை கட்டடங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடு மனதில் அமைதி உணர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஒழுங்கீனத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்துகின்றன. 

4. இன்றைய காலங்களில் கற்றலில் ஈடுபடும் மாணவர்களின் தேவைகள் வெவ்வேறாக இருப்பதால் திட்டமிடப்படாத கட்டடச்சூழல் அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய தவறிவடுகின்றன. இதனால் குறித்த சூழல் மாணவர்களின் நடத்தைகளில் தாக்கத்தை செலுத்துவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. 

5. கற்றலில் ஈடுபடுபவர்களின் தேவை அறிந்து அவர்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான கற்றல் சூழலை ஏற்படுத்தி மாற்றம் காணவேண்டும். 

6. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கற்றலுக்கான சூழல் தொடர்ச்சியாக மாற்றம் கண்டு வந்துகொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் கல்விக்கான கட்டடச்சுழல் என்பது பொருத்தமான வகையில் மாற்றம் காணவில்லை. குறிப்பாக எங்களுடைய காலநிலை, பொருளாதாரம் மற்றும் தேவைகள் என்பவற்றுக்கு ஏற்ப தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தேவைகள் அல்லது பிரச்சனைகளுக்கான தீர்வு காண வேண்டும். சந்தைச்சக்திகள் தீர்மானம் எடுப்பதில் அல்லது தாக்கம் செலுத்துவதை இயன்றளவும் குறைக்க வேண்டும். 

7. இவ்வாறான பிரச்சனைகளுக்கு மூல காரணமாக குறித்த கல்விசார் நிர்வாகம் மாணவர்களின் மீது அக்கறை இன்மையே காரணமாகும். இதை ஏற்க மறுக்கலாம்.....தாங்கள் அக்கறை உள்ளவர்கள் என்று சொல்லலாம் அப்படியாயின் அவர்களுக்கு விடயம் பற்றிய போதிய அறிவில்லை என்றே கூறவேண்டும். 


 முன்பள்ளிகளும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களும்

சிறுவர்களுக்கான  கட்டடங்கள்  அமைத்தல் என்பது ஒவ்வொரு குடும்பங்களினதும் வசதி வாய்ப்புக்கள் பெற்றோரின் விருப்பு வெறுப்புக்கள் சம்பந்தப்பட்டது. சிறுவர்களுக்கான பொழுபோக்கு இடங்கள் எவ்வாறு அமைக்கப்படுகின்றது என்பது பற்றி முன்னைய பதிவுகளில் இருந்து அறிந்திருப்பீர்கள்.

வீட்டில் வைத்து பிள்ளைகளைப் பராமரிக்கின்ற வசதிகள் குறைந்து போய்யுள்ளதால் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நாடுவதும் அல்லது 3 வயது ஆரம்பிக்கும் போதே அவர்களை முன்பள்ளிகளில் சேர்த்துவடுவதும் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலையை சாதகமாக்கி பல பொது அமைப்புக்களும், தனியார் நிறுவனங்களும் முன்பள்ளிகளை நிறுவி பராமரித்து வருகின்றன.

சிறுவர் பராமரிப்பு நிலையங்களில்  அல்லது  முன்பள்ளியில் கற்கும் 3 வயது தொடக்கம் 5 வயது வரையான சிறுவர்களுடைய இடங்கள்,  சிறுவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கின்றதா என்று உங்களுக்கு அருகில் இருக்கும் முன்பள்ளி ஒன்றுக்குச் சென்று அவதானியுங்கள் அப்போது உங்களுக்கு உண்மை நிலை புரியும்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையோடு தற்போதுள்ள நிலையை ஒப்பிட்டால் முன்னேற்றம் இருந்தாலும், தற்போதுள்ள நிலை என்பது கவலைக்குரியதே. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகமுக்கியமான காரணம் குறித்த நிறுவனங்களை ஆரம்பித்து இயக்குபவர்களின் சிறுவர் வளர்ப்பு பற்றி அக்கறை இன்மை அல்லது சிறுவர்கள் பற்றிய போதிய அறிவின்மை என்பது முக்கியமானது.

முன்பள்ளிக்கான கட்டடங்களை எடுத்துக்கொண்டால், சனசமூக நிலையம், கோவில் மண்டபம், பொதுநோக்கு மண்டபம் போன்ற வேறு தேவைகளுக்கு கட்டப்பட்ட கட்டடங்கள் கற்பித்தல் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதை அநேகமாக காணக்கூடியதாக உள்ளது.

கற்றல் என்பது தனியாக பரீட்சைக்காக கற்பது என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதால், சூழலில் இருந்து கற்கும் சந்தர்பங்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. சிறுவர்களுக்கு என்ன தேவை என்பதை பெரியவர்கள் தங்கள் அறிவுக்கும் வசதிக்கும் ஏற்றவகையில் சிந்திப்பதால் அவர்களுக்கு தேவையானவை பூரணமாக வழங்கப்படப்படவில்லை என்றே கூறவேண்டும்.

 

மலசல கூடங்கள்

குடாநாட்டில் உள்ள பாடசாலைகளின்  மலசல கூடம்... எல்லோரும் ஒரு காலத்தில் ஏன் இன்று கூட  மாணவர்களாக இருக்கலாம்…

பாடசாலை நாட்களில் நடந்த பல பசுமையான நினைவுகளை  மறக்காமல் கதைத்துக்கொண்டு இருப்பவர்கள் பாடசாலைகளில் உள்ள மலசல கூடங்களில் பெற்ற  துன்பமான அனுபவங்கள் பற்றி யாரும் பொதுவெளியில் கதைத்தது கிடையாது.




பொதுவாக பாடசாலை மலசல கூடங்கள் போதிய வெளிச்சமோ.... காற்றோட்டமோ இருக்காது நீர்குழாய்களில் இருந்து நீர் கசிந்துகொண்டோ  அல்லது உடைந்த நிலையில் மரக்கட்டைஇறுக்கிய நிலையிலேயே காணப்படும். சுவர்களில் பட்டப்பெயர்கள் தூசனங்கள் காதல் வரிகள் காணப்படும்

 நிலத்திற்குப் பதித்த மாபிள்களின் மேல் மண் மற்றும் சரியாக வழிந்தோடாத நீர் தேங்கி இருக்கும் பார்ப்பதற்க அருவருப்பாக இருக்கும். சிறுநீர் மணம் தாங்கமுடியாமல் இருக்கும். அதிபர்கள், ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு பூட்டிய நிலையில் மலசல கூடங்கள் இருக்கும்.

பெண்கள் பாடசாலைகள் பெற்றோரிடம் பணம் வாங்க  சொல்கின்ற  காரணங்களில் மலசலகூடப் பிரச்சனை முக்கியமானது  ஆனாலும் 6ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் கடும் நெருக்கடி என்றால் மட்டுமே பாடசாலை மலசகூடங்களை உபயோகிக்கின்றார்கள்  என்ற உண்மை பெண்பிள்ளைகளை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்.( இலங்கை அரச பாடசாலைகளில் 65 வீதமான மாணவிகள் மாதவிடயாய் காலத்தில் பாடசாலைகளுக்கு வருவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது)

மலசல கூடங்கள் சீராக இல்லாமல் இருப்பதற்கு  மாணவர்களை குறைசொல்வது வழமை  இருப்பினம்  மாணவர்களை வழிநடத்த தவறிய பொறுப்பை  ஆசிரியர்களும் பாடசாலை நிர்வாகமுமே ஏற்கவேண்டும். 

அவதானங்களின் படி மலசல கூடங்ககளின் வடிவமைப்பு  மற்றும் கட்டுமாணத்திற்கு பொறுப்பு எடுக்கும்  பொறியிலாளர்கள் தொழில்நுட்ப வியலாளர்கள் அவற்றின் பாவனை மற்றும் பராமரிப்பு பற்றி முழுமையாக அக்கறை எடுத்துக்கொள்ளாமை முக்கிய காரணம்.

கல்வியைப் போன்றே சுகாதாரமும் அடிப்படை தேவைகளில் ஒன்று மாணவர்களின் சுகாதாரம் சார்ந்த செயற்பாடுகளை மேம்படுத்த சுகாதாரக் கல்வி என்று ஒரு பாடத்தை வைத்துக் கொண்டு, அதனை கற்பித்து செயல் படுத்தி, சுகாதாரம் பேணப்பட வேண்டிய இடத்தில், முன் உதாரணமாக செயல்படாமல் இருப்பதை யாரிடம் சொல்லி அழுவது

 இவ்வாறன பிரச்சனைகளுக்கு உடனடித்தீர்வுகள் காண முடியாவிட்டாலும், குறித்த விடயங்கள் பற்றி சிந்திக்க தொடங்கும் போது சிறிது காலத்திற்குப் பின்னராவது பொருத்தமான தீர்வுகளை எடுக்க முடியும்.



அழகான ஆரோக்கியமான சூழலில் வளரும் வாய்ப்புக் கிடைத்த குழந்தைகள் அதிஷ்டசாலிகளே.


குமாரலிங்கம். பதீதரன்
கடட்டடக்கலைஞர்.