Tuesday, September 19, 2017

நிலையான சமாதானத்திற்காக ஆனையிறவில் ஒரு நினைவாலையம்

இலங்கையில் நிலவிய ஆயுதப்;போராட்டமானது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கபட்ட பின்னர் முடிவுக்கு வந்தது. அதற்கு பின்னர் இலங்கை இராணுவத்தினரும், மக்களில் ஒரு பகுதியினரும்  பாற்சோறு பரிமாறுதல், நினைவு இடங்கள் அமைத்தல், வருடாந்த நிகழ்வுகள் செய்தல், அனுபவப்பகிர்வு செய்தல் எனப்பல்வேறு வகையில் போர் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இன்றும் மகிழ்கின்றனர். இக்கொண்டாட்டமானது தோற்றுப்போனதாக கருதப்பட்ட பெரும்பாலான தமிழ் மக்களை மனதளவில் பாதித்தது. அதனை தமிழர்களும் இன நல்லினக்கத்தில் அக்கறையுள்ள வேறு பலரும் சுட்டிக்காட்டி வந்தனர் இன்றும் வருகின்றனர்.

தொடர்ந்து வந்த அரசியல் மாற்றங்கள் காரணமாக இலங்கையின் அரசாட்சியானது மாற்றங்கண்டது. குறித்த அரசானது நாட்டில் மக்களுக்கிடையில் நல்லிணக்கம் நிலவவேண்டும் என்ற அக்கறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனூடாக மக்களில் ஒரு பகுதியினரைத் திருப்திப்படுத்தியும் அதே வேளை இன்னொருபகுதியினரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டது. 

நிலைமை இவ்வாறு இருக்க, நிரந்தரமாக கட்டப்பட்ட பல நினைவுத்தூபிகள் தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருக்கின்றன. இவற்றில் வடக்கு கிழக்கில் இருக்கும் நினைவுத்தூபிகள் தோற்கடிக்கப்பட்டதாகக் கருதப்படும் தமிழர் பகுதியில் இருப்பதும், அவற்றைப் பார்பதற்காகவும், குறித்த போரில் உயிர் நீத்த படையினரின் உறவினர்கள் அவர்களை நினைவு கூர்வதற்காகவும் வந்து செல்வதும் தொடர்நது இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதேவேளை போரில் உயிர்நீத்த புலிப்;போராளிகளை நினைவு கூர்வதற்கு தடைவித்த படையினர் அரசியல் மாற்றம் அடைந்ததும் நினைவு கூறுவதற்கு அனுமதித்து இருந்தனர். தொடர்ச்சியாக முன்பு அழிக்கப்பட்ட புலிகளின் மாவீரர் மயானங்கள் மீளக்கட்டப்பட வேண்டும் என்ற கோசங்களும், அதற்கான முயற்சிகளும் இடம்பெற்றன.

மேற்குறித்த இரண்டு தரப்பினரது போரில் ஈடுபட்ட தரப்பினரையும் அதனோடு சேர்ந்த நிகழ்வுகளையும் நினைவு கூரும் முறையானது இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிக்கத்திற்குப் பதிலாக வேறு ஒன்றையே ஏற்படுத்துகின்றது அல்லது ஏற்படுத்தும்.

மேற்கூறப்பட்ட அனைத்தும் தற்போதைய நிலை. இந்த இடத்தில் 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் ஏற்பட்ட சமாதான காலத்தில் கட்டடக்கலை பயின்றவன் என்ற ரீதியில் நான் எடுத்துக்கொண்ட முயற்சியினை இங்கே கூறுவது நல்லிணக்கத்தில் அக்கறையுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன்.
தமிழீழ விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள் மாவீரர்களுக்கு நினைவுத்தூபிகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்களுடனும் கதைத்துப்பேசி தங்களுடைய எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க முற்பட்டனர். அத்துடன் இவ்வாறான வேலைத்திட்டங்களுடாக போராட்டத்துடன் விலகி நின்ற தமிழர்களை உள்வாங்கிக்கொண்டிருந்தனர். அந்த வகையில் நானும் கிளிநொச்சியில் ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக சென்று கொண்டிருந்தேன். என்னுடைய கல்விப்புலத்தை அறிந்த சிலர் மாவீரர் நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் கதைத்தனர். அதற்கு என்னால் முன்மொழியப்பட்ட திட்டம்.

முழுப்போராட்டத்திற்குமான நினைவுத்தூபி ஒன்று அமைக்கலாம் அதுவும் ஆனையிறவில் அமைப்பதே சிறந்தது.

1. இலங்கiயின் தரைத்தோற்ற அமைப்பில் ஆனையிறவு கழுத்துப்பகுதி ஆகும். கழுத்தில் ஆபரணங்கள் அணிவது மனிதப்பண்பு. உடலின் இருவேறு வடிவமைப்பில் உள்ள பகுதிகளை கழுத்தே இணைக்கின்றது.

2. ஆனையிறவில் இடம்பெற்ற யுத்தம் பலரின் உயிரை காவு கொண்டது. (விடுதலைப்புலிகள், இராணுவம், பொது மக்கள்)
3. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவுத் தாக்குதலே சமாதான முயற்சிகளுக்கு வித்திட்டது.

4. குறித்த இடம் முற்று முழுதாக பொதுக்காணி (அரச) 

5. வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதிலும் பார்க்க பொது இடம் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான இடம். குறித்த இடத்தை கடந்தே தலைப்பகுதியான குடா நாட்டிற்கு ஒள்ளேயும், வெளியேயும் செல்ல முடியும் (பூநகரி பாலம் அமைப்பதற்கு முன்னர்)

6. இன்றைய திகதியில் ஏற்கனவே இராணுவத்தினர் தங்களுடைய நினைவுத்தூபியையும் போர் வெற்றிச்சின்னத்தையும் அமைத்து காட்சிப்படுத்தி வருகின்றனர். குறித்த இடத்தில் ஏனைய மக்களையும் நினைவு கூருவதற்கு இடம் அமைத்து குறித்த ஆனையிறவுப்பகுதியை நினைவாலயம் அமைக்கப்பயன்படுத்துவதே சிறந்தது.


நினைவுத்தூபியின் அமைப்பு



கொங்கிறீட்டில் உயரமாக அமைக்கப்படும் கூம்பு போன்ற (இணைக்கப்பட்டிருக்கும் படத்தை பார்க்கவும்.) படத்தில் காட்டியவாறான அமைப்பு.

அதில் உச்சியில் ஒரு திறந்த மற்றும் கண்ணாடியால் மூடப்பட்ட ஒரு துவாரம்.
அமைப்பில் மேற்புறத்தில்  படத்தில் காட்டிவாறான துளை.

நீண்ட தூர நடைக்குப்பின்னர் அமைப்பிற்குள் உள்ளே செல்வதற்கான வாயில்
உள்ளே சுற்றி வர நடந்து செல்வதற்கு ஏற்ற வட்டப்பாதை அதன் நிலம் மண்ணால் நிரப்பப்பட்டது.

உள்ளே நடுவில் தொக்கிய நிலையில் அணையா விளக்கு
குறித்த அமைப்பு கடலின் மேல் கட்டப்படுவதால் கடல் நீர் உள்ளே சென்றுவருவதற்கான ஏற்பாடு

நீண்ட நடை பாதையின் இரு மருங்கிலும் போரில் இறந்து போன பொதுமக்கள், போராளிகள் (அனைத்துப் போராட்டக்குழுக்களும்) படையினர், ஆகியோரை நினைவு கூருவதற்கு ஏற்ற வகையிலான  ஏற்பாடுகள்

போர் சம்பந்தமான வரலாறுகளைச் சொல்லக்கூடிய கண்காட்சிக்கூடம். இளைப்பாறும் இடங்கள் மற்றும் இதர வசதிகளுக்கு தேவையான அமைப்புக்கள். என்பன இடம் பெற வேண்டும் என்று எனது எண்ணத்தை தெரிவித்திருந்தேன்.

கட்டட அமைப்பின் கரு

உலகில் மனித வாழ்வு என்பது இயற்கையால் உருவாக்கப்படும் உடல் சம்பந்தப்பட்டது. உடலில் ஆன்மா இருக்கும் வரை அது தன்னுடைய செயல்களைச் செய்யும் உடலில் இருந்து ஆன்மா பிரிந்ததும் உடல் மீண்டும் பஞ்ச பூதங்களோடு கலந்து விடும். மனிதர்கள் இயற்கையை உணராத பட்சத்திலேயே மனிதர்கள் மனிதர்களுக்கு எதிராக அணிதிரள்கின்றனர். நாட்டு மக்கள் அனைவரும் இயற்கையை உணர வேண்டும். இயற்கையை உணர்ந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தியும், நெருக்கமாகவும் வாழ்வார்கள்.

போரில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரு இடத்தில் நினைவு கூரும் போது நாடடு மக்கள் எல்லோருக்கும் பொதுவான இடம் ஒன்று இயல்பாகவே உருவாக்கப்படும். 

குறித்த திட்டம் தொடர்பில் என்னுடைய நண்பர்கள் பலருடனும் கதைத்து இருந்தேன். குறித்த விடயத்தை இன்று வெளியிடுவதன் நோக்கம் என்னுடைய நாட்டில் இன்னொரு யுத்தம் ஒன்று ஏற்பட்டு அப்பாவி பொதுமக்கள் இன்னல்களை அனுபவிக்க கூடாது என்ற நோக்கமே. ஒருவரோடு இன்னொருவர் முரண்பட்டுக் கொள்வதற்கும், வெறுப்பதற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். அவர்களுடைய உணர்வுகளை சிலர் தங்களுடைய நலனுக்குப் பயன்படுத்தும் வேளையில் அவர்களுக்கு இடையில் சண்டைகளை ஏற்படுத்தி விடுவார்கள். கோபத்தில் இருப்பவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையில் ஈடுபட்டு அழிந்து போக ஏனையவர்கள் அழிவுகளால் இலாபங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள் (ஆயுத வியாபாரிகளும் அதனோடு சார்ந்தவர்களும்)
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு இடம் அமைக்க அனுராதபுரத்தை அரசு தெரிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிரந்த சமாதானத்தை விரும்பும் அனைவருக்கும் இந்தக்கட்டுரை சமர்ப்பணம். நெல் விதைத்தால் நெல் அறுபடை செய்யலாம் இது தான் யதார்த்தம்.


குமாரலிங்கம் பதீதரன்
கட்டடக்கலைஞர்

pathytharan@gmail.com 

No comments:

Post a Comment