யாழ் நகரின் இன்றைய நிலை
இறக்குமதியால் அதிகரித்து காணப்படும் வாகனங்கள் காரணமாக முன்பு நடைபாதைகள் அல்லது வண்டில் பாதைகளாக இருந்த வீதிகள் முடிந்தளவு அகலமாக்கப்பட்டு காபெற் இடப்பட்டுள்ளன. வசதி
வாய்ப்புக்களை தேடி குறைந்த அளவில் பயணம் செய்த மக்கள் அதிகமாக பயணிக்கின்றார்கள் இதன் காரணமாக நகருக்கு வந்து செல்லும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. குறித்த மக்களை இலக்கு வைக்கும் வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையும் வகைகளும் அதிகரித்துள்ளது. எல்லா வகையான அதிகரிப்புக்களுக்கும் ஏற்ப பௌதீக நிலங்கள் அதிகரிக்காமையால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ள அதே நேரம் காணிகளின் பெறுமதியும் அதிகரித்து காணப்படுகின்றது.
இதில் பயன்படுத்தப்பட்ட படங்கள் கூகுள் இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இவை காலத்தால் சற்றுப்பிந்தியவை இருப்பினும் இன்றைய நிலைக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நகரத்தை முகாமைத்துவம் செய்யும் நகர நிர்வாகம் நகரில் உள்ள பிரச்சனைகளுக்கு
தீர்வு காண முயற்சிப்பதாக தெரியவில்லை. உதாரணமாக கஸ்தூரியார் வீதியானது ஒருவழிப்பாதை
ஆனால் குறித்த பாதையின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் வண்டிகள் அவ்வழியால்
நடந்து செல்லும் மக்களை வீதிக்கு தள்ளுகின்றது. நகரில் தேவைகளை நிறைவேற்ற வரும் மக்கள்
பல்வேறு சிரமங்களுடன் தங்கள் பயணங்களையும் தேவைகளையும் நிறைவேற்றுகின்றனர்.
யாழ் நகரில் இருக்கும் குளங்கள் உருத்தெரியாமல் மறைக்கப்பட்டு அதனைச்சூழ
வியாபாரக் கட்டடத்தொகுதிகளும், வீடுகளும் காணப்படுகின்றன. யாழ் நகரின் கழிவு நீர்கள்
கால்வாய்கள் ஊடாக குளங்களுக்கே செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும்
கால்வாய்கள் ஒழுங்காக பராமரிக்கப்படாமையால் அனைத்து வடிகால்களும் நீர் மழை காலங்களில்
மட்டுமே சீராக ஒடுகின்றது. ஏனைய நாட்களில் கால்வாய்களில் தேங்கி நின்று முகம் சுழிக்க
வைக்கின்றது.
நிலத்தடி நீரை
மட்டும் நம்பி குடிநீர் பெறும் யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீரினைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறைவு அல்லது இல்லை என்றே சொல்லாம். ஒப்பீட்டளவில் இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் இருந்த நீரை உள்ளே உறுஞ்சும் வெற்றுத்தரைகள் இப்போது நகர்பகுதியில் இல்லை. அதேபோல் கிடைக்கும் மழை நீர் சேகரிக்கப்படாது குறுகிய நேரத்தில் கடலில் கலந்து விடுகின்றமையும் காணப்படுகின்றது.
வளர்ச்சி அடை
நாடுகளிலும், தமிழ்நாட்டின் சில நகராட்சி மன்றங்கள் தங்களின் நகரங்களை மக்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக நிர்வகித்து வருகின்றமை செய்திகளுடா அறிய முடிகின்றது. ஆனால் யாழ்ப்பாண மற்றும் ஏனைய ஊள்ளுர் அதிகாரசபைகள் மக்களை வேறாகவும், தங்களின் ஆட்சியை வேறாகவும் வைத்து கையாள்கின்ற போக்கை காண முடிகின்றது. அதாவது மக்களுக்கும் நகராட்சிக்கும் இடைவெளி உள்ளது.
கட்டடச்சூழல் சில சந்தர்ப்பங்களில் அழகில்லாமல், மனதிற்கு இதமில்லாமல் இருப்பதையும் காணலாம். இது
மட்டுமல்லாமல் அதிகமாக தொங்கவிடப்படும் விளம்பரங்கள் பதாகைகள் கண்களுக்கு களைப்பை ஏற்படுத்துவதையும் உணரக்கூடியதாக இருக்கின்றது. இது மட்டுமல்ல நகரத்தின் தென்பகுதியான கடற்கரைப் பிரதேசங்கள் திட்டமிடப்படாத குடியேற்றங்களால் யாழ்ப்பாண நகரானது பல்வேறு பிரச்சனைகளைத் எதிர்நோக்குகின்றது. ஒட்டு மொத்தமாக நகர வாழ்க்கை என்பது நரக வாழ்வாக மாறிக்கொண்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
நகரத்தின் சகல
இடங்களும், செயற்பாடுகளும் நகரத்தின் இயக்கத்திற்கு ஏதோ ஒருவகையில் முக்கியமானதும் அத்தியாசியமானதும் ஆகும். இது மனித உடலின் இயக்கத்திற்கு தேவையான உடலின் அவையவங்களும் அதன் செயற்பாடுகளும் போன்றது. மொத்த செயற்பாட்டில் ஏதாவது ஒன்றில் ஏற்படும் குறைபாடும் மொத்த செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். உலகத்தின் பெரு நகரங்களைப் போல் யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து மக்களும் யாழ். நகரப்பகுதியிலேயே குடியிருக்கவில்லை என்றாலும் குடாநாட்டின் ஏனைய இடங்களுடன் ஒப்பிடும் போது அதிகளவான மக்கள் செறிந்து வாழ்கிறார்கள் அல்லது ஏனைய பிரதேச மக்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நகரத்திற்கு வந்து செல்கிறார்கள். ஒழுங்கற்ற முறையில் உருவாகும் நகரமயமாகுதலை திட்டமிடல் பொறிமுறையால் கட்டுப்படுத்த முடியாத நிலையின் விளைவே இன்றைய நிலை. இது பல்வேறு பிரச்சனைகளையும் விளைவுகளையும் உள்ளுர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் உருவாக்கும்.
பின்ணணி
மக்கள் குழுவாக வாழ
ஆரம்பித்த நாட்களில் குளங்கள், நல்ல தண்ணீர் கிடைக்கும் இடங்களை சூழ வாழ்ந்தார்கள். இக்காலப் காலப்பகுதியில் சந்தை போன்ற பொது இடங்களில் பண்டங்களை மாற்றியோ அல்லது பணம் கொடுத்தோ வாங்கியோ தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். கால நீட்சியில் கடல் வாணிபம் தோற்றம் பெற்றதும் கடற்கரையை அண்டிய துறைமுகப்பகுதியில் கூடி வியாபாரங்களை மேற்கொண்டார்கள். சிலர் தொழில் காரணமாக அங்கு வாழவும் ஆரம்பித்தார்கள். குறித்த துறைமுகப்பகுதியை அன்னியர்கள் கைப்பற்றியதும் குறித்த பகுதிகள் அவர்களின் செல்வாக்கிற்கு உட்பட்ட இடங்கள் மாற்றம் கண்டன. அவ்வாறான கால ஒட்டத்திலேயே யாழ். நகர் என்று இன்று அழைக்கப்படும் வர்த்தக நகர் பகுதியானது போத்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டு நகர் பகுதியாக உருப்பெறத் தொடங்கியது. இதேவேளை நகரில் இருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் பாரம்பரிய நகரமாக நல்லூர் இருந்தது குறிப்பிடத்தக்கது. யாழ். நகர் பகுதியானது ஐரோப்பியரின் ஆட்சிக்காலத்தில் தோற்றம் பெற்று வளர்ந்தாலும், முழுமையான ஐரோப்பிய நகராக மாறவில்லை.
யாழ்ப்பாண கடல்
நீரோரிக்கு அருகில் பாதுகாப்பு காரணங்களை முன்னிலைப்படுத்தி போத்துக்கேயர் சதுர வடிவில் கோட்டையும் அதனை அண்டிய பகுதியில் படைகளுக்கான குடியிருப்பும் அமைத்தார்கள் என்பதை வரலாற்று ஆவணங்களில் இருந்து அறியக்கூடியதாக இருக்கிறது.
அதன் பின்னர் யாழ்ப்பாணக் கோட்டையானது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தற்போதுள்ள நட்சத்திர வடிவிலான கோட்டையை ஒல்லாந்தர் அமைத்தார்கள் என்பதும், அதன் பின்னர் ஆங்கிலேயர் யாழ்ப்பாணக் கோட்டையை நீதி நிர்வாக தேவைகளுக்குப் பயன்படுத்தியாதாகவும் அறிய முடிகின்றது. அது மட்டுமல்லாது கோட்டைக்கும் யாழ்ப்பாணக் கச்சேரிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஐரோப்பிய முறைகளில் நன்கு திட்டமிட்டப்பட்ட நகர் உருவாக்கப்பட்டது. இப்பகுதியில் குடாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குடியேற்றப்பட்டார்கள் அல்லது குடியேறினார்கள். அது மட்டும்மல்லாமல் கிறிஸ்தவ சபைகளினது சமய அலுவலகங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், சந்தைகள், கடைகள் சனசமூக நிலையங்கள் மயானங்கள் குறுக்கு வீதிகள் மற்றும் வடிகால்கள் என சகல வசதிகளுடனும் நகர் உருவாக்கப்பட்டு இயங்கிக்கொண்டு இருந்தது. இப்பகுதியில் காணியின் தேவை அதிகரிக்க கடற்கரையில் வாழ்வதற்கு சாதகமில்லாத நிலப்பகுதி சாதகமாக மாற்றப்பட்டு குடியேற்றங்களாக்கப்பட்டது. இதேவேளை குடாநாட்டில் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த இடங்களில் இருந்து கொண்டு பாரம்பரிய வாழ்வைத் தொடர்ந்தனர். அவர்கள் தேவைக்கு மட்டும் நகருக்கு வந்து சென்றனர் அல்லது இப்போதும் சென்று கொண்டு இருக்கின்றனர். யுத்த காலத்தில் பாதுகாப்பு மற்றும் வசதி வாய்ப்புக்களுக்காக தூர இடங்களில் உள்ளவர்கள் தொடர்ச்சியாக குடாநாட்டை அண்டிய பிரதேசங்களில் புதிதாக காணிகள் வாங்கி குடியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த
மாற்றங்கள் அரசியல் பொருளாதார வெளிநாட்டு விடயங்களும் காரணமாக இருந்தது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பிரித்தானியரிடம் இருந்து இலங்கையின் சுதந்திரம் அரசியல் ரீதியாக பெற்ற பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பிரித்தானியரால் ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் தொடர்ச்சியையே மேற்கொண்டமை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக பௌதீக அபிவிருத்தி சம்பந்தப்பட்ட செயற்பாடுகள் அமைந்தன. உதாரணமாக மருத்துவ வசதிகளை எடுத்துக்கொண்டால் ஏற்கனவே இருந்த வைத்தியசாலையோ அல்லது பாடசாலையையோ எடுத்துக்கொண்டால் அதனை தொடர்ந்து அதே இடத்தில் பண வசதிக்கு ஏற்ப பெரிதாக்கி அல்லது புனரமைப்பு செய்து செயற்பாடுகளை மேற்கொள்வதைக் குறிப்பிடலாம். அவ்வாறு செய்வதால் எவ்வாறான மாற்றங்கள் உருவாகும் என்ற தூர நோக்கற்ற சிந்தனை பல்வேறு பிரச்சனைகளை தொடர்நது ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றது. இதேவேளை ஐரோப்பியர்கள் தங்களின் அணுகுமுறையினை மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ச்சியாக மாற்றி வந்ததை அவர்களுடைய வரலாறுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக தேவைகள் அதிகரிக்கும் போது பழைய நகரங்கள் உள்ளது உள்ளவாறே இருக்க புதிய நகரங்களை தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கி அதிகரித்த தேவைகளை எதிர்கொண்டனர்.
தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்ற
பழமொழி அறியாதவர்கள் எவரும் இல்லை. இந்த விடயம் தனி ஒருவர் எப்படி தன்னைத் தலைமை தாங்கி தன்னுடைய உடலை வழி நடத்தி வாழ்கின்றார் என்ற சிறிய அளவில் இருந்து உலகத்தலைவர்கள் எப்படி சேர்ந்து உலகையும் அதனோடு சேர்ந்த மக்கள் மற்றும் வளங்களையம் வழி நடத்துகின்றார்கள் என்ற பெரிய அளவு வரைக்கும் பொருந்தும் என்பது உண்மையாகும். இன்று சமூகத்தில் காணப்படும் நல்லது கெட்டத்திற்கு யார், யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை புரிந்து கொள்வதற்கு மேற்குறிப்பிடப்பட்ட பழமொழியை அடிப்படையாக வைத்து அவர்களை இனங்கண்டு கொள்ள முடியும். அதேவேளை இனிவரும் காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கும் உதவும்.
அடிப்படையில் மாற்றங்களைச் செய்யாமல் அதிகாரம் தந்தால் மாற்றங்களைச் செய்வோம் என்பது எந்தளவிற்கு உண்மையானது என்பது புரியவில்லை. எந்த மாற்றமும் உடனடியாக சாத்தியப்படக்கூடியது இல்லை. மாற்றத்திற்காக நீண்ட காலம் உழைக்க வேண்டும் என்பதே உண்மை. இது எந்த அரசியல் நோக்கத்திற்காகவும் எழுதப்படவில்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்பதும் புரியும்.
கு.பதீதரன்
கட்டடக்கலைஞர்
அருமை எல்லோரும் படித்து அறிந்து ஆவன செய்வதற்கு முன் வரவேண்டும் மழைநீர் சேகரிப்பு மிக முக்கிமானதொன்றாகிறது. அதற்கு ஏதும் வழி வகுப்போமா?
ReplyDelete