Wednesday, February 28, 2018

இலங்கையின் நகராக்கம்

தொழில்மயமாகுதல் உலகில் முன்னேறி வரும் பகுதிகளில் மிகுதியாகப் பரவி வருவதால், நகரமயமாகுதல் இப்பொழுது ஓர் உலகளவிலான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

நகரமயமாதல் பற்றியும் அதன் வளர்ச்சியைப் பற்றியும் ஆராய்தல் கொள்கை வகுப்பதிலும் திட்டமிடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. நகர வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. சமூகம் புதுமையடைதலின் முக்கிய கூறுகளுள் ஒன்று நகரமயமாதல் ஆகும்.

நகராக்கம் என்பது காலத்திற்கு ஏற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் மாறுபடும் தன்மை கொண்டமையினால் அதனை வரையறை செய்வது கடினம். நகராக்கத்தில் மிக முக்கிய அம்சம் நகரமாகும். 'நகரம்' என்பது சிறப்பு பணியும் துரித சமூக இயக்கமும் கொண்ட மனித உறைவிடம் என்பர். இதன்படி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கருத்தின்படி நகரமயமாக்கம் என்பது 'கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி இடம்பெறுகின்ற மக்களின் அசைவு' என குறிப்பிடுகின்றது. இடப்பரம்பலியல் நோக்கில் பார்க்கும் போது நாட்டின் மொத்த சனத் தொகையில் நகரத்தை மையமாகக் கொண்டிருக்கும் அளவு நகரமயமாதல் என அழைக்கப்படும். ஒரு நாட்டின் நகர வலயத்துக்கு அண்மையில் நிகழும் மக்கள் குவிவு நகரமயமாதல் எனக் கருதப்படும்.
நகரமயமாதல் என்பது ஒப்பீட்டு அளவீடாகும். நூற்றில் மொத்த சனத்தொகையில் நகர குடியிருப்புகளில் வசிப்போரளவு சதவீதமாகக் காட்டப்படும். உலக ரீதியான நகராக்க வளர்ச்சிக்கு இன்று அதிகரித்துச் செல்கின்ற குடித்தொகைப் போக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
வரலாற்றுக் காரணிகளை ஆராய்கின்ற போது பொருளாதார அபிவிருத்தி, கைத்தொழில்மயமாக்கல், வர்த்தகமயமாக்கலின் அடிப்படையில் நகரம் முன்னிலை வகிக்கின்றது. அதே போன்று பொதுநிர்வாகம், கட்டடவாக்கம், விஞ்ஞானக் கண்டுப்பிடிப்புகள் மற்றும் தொழிநுட்பத்தின் புதிய போக்குகள் போன்ற விஷேடமான தொழிற்பாடுகள் நகரத்தை மையமாகக் கொண்டே நடைப்பெற்றன. இதற்கிணங்க நகரமயமாக்கலின் மட்டம் அதிகரித்துச் செல்லலும், நகரமயமாக்கலின் வளர்ச்சி வீதம் அதிகரித்துச் செல்லலும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியைக் காட்டுகின்ற பண்புகளாயுள்ளன.
நகரங்களின் தோற்றம் பற்றி பார்க்கும் போது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே உலகில் பல பாகங்களில் நகரங்கள் தோன்றி இருந்தன. நிரந்தரமான பயிர்ச்செய்கை அவ்வேளை நகரங்களின் தோற்றத்திற்குக் காரணமாகியது. சிந்துவெளி, மொஹஞ்சதாரோ, ஹரப்பா, பபிலோனியா, எகிப்து (நைல்), சீனா என்பவற்றின் பண்டைய நகரங்கள் இருந்தன. பைஸாண்டியம், ஏதென்ஸ், அலெக்சாண்டியம், பாபிலோன், முதலிய இவ்வகை நகரங்களாகும்.
வரலாற்றுக் காலத்தில் 15 ஆம் நூற்றாண்டு வரை நகரப் பண்புகளோடு கூடிய பழைய நகரங்கள் விளங்கின. டில்லி, லண்டன், மெக்சிகோ, பாரிஸ், லிஸ்பன், அம்ஸ்ரடாம் முதலிய இவ்வகையின.

கைத்தொழில் புரட்சியின் பின்னர் தோன்றிய நகரங்கள் யாவும் பெரிய நகரங்களாகும். பழைய நகரங்களும் தம்மளவில் விருத்தியடைந்துள்ளன. உணவுற்பத்தி தன்னிறைவு நிலையிலிருந்து வர்த்தக நிலைக்கு மாறியதும் நகரங்கள் தோன்றின. இதற்கு விவசாயத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திரங்களாயின. போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் புகையிரதம், கால்வாய், சுரங்கப்பாதை, விமானம் என்பன நகரங்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தின. இவை காரணமாக நகரங்களிலிருந்து பொருட்கள் கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கிராமப்புறங்களிலிருந்து நகர்புறம் நோக்கிய பொருள் நகர்வும் மனித நகர்வும் துரிதப்பட்டன.
நவீன வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகளே காரணமாக இருக்கின்றன. உற்பத்தி பொருட்கள், வர்த்தக விருத்தி, சேவைகள் ஆகியன நகரங்களைப் புதிய பாணியில் கட்டியமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி நகரங்களின் வகைகளாக நதிக்கரை நகரங்கள்-லண்டன் (தேமஸ் நதி), பாரீஸ் (ஸீன் நதி), மொஸ்கோ (ஓகாநதி), துறைமுக நகரங்கள்-நியூயோர்க், லண்டன், சிட்னி, கொழும்பு, சந்தை நகரங்கள்-நார்விச்(இங்கிலாந்து), கானோ (நைஜீரியா), அலப்போ (துருக்கி), சுரங்கத்தொழில் நகரங்கள்-ஜொகனஸ்பேர்க் (தங்கம்), பாகு (பெற்றோலியம்), கிருணா (இரும்புதாது), தொழிற்சாலை நகரங்கள்-லியோன்ஸ் (பிரான்ஸ்), சாயோபோலோ (பிறேசில்), சிக்காக்கோ (ஐக்கிய அமெரிக்கா), நிர்வாக நகரங்கள்-கான்பெரா (அவுஸ்ரேலியா), புதுடெல்லி, ரோம், மொஸ்கோ, சமயப்பணி நகரங்கள்-மெக்கா, வாரணாசி, மதுரை, பண்பாட்டு நகரங்கள்-அண்ணாமலை நகர், கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போட் போன்றனவாகும்.

நகரம் ஒன்றின் உருவாக்கத்தை இரு அம்சங்களில் அவதானிக்க முடியும். அவை:
வீதிகள், வீடுகள், ஏனைய கட்டிடங்கள் ஆகிய கட்டமைப்பு மூலம்
பணிவலயங்கள் வயல்கள் (Functional Zones) மூலம் நகரத்தின் ஒவ்வொரு பகுதி ஒவ்வொரு தொழிற்பாட்டுக்கு முக்கியம் பெற்றிருக்கும். உதாரணமாக ஒரு பகுதி வர்த்தக வலயமாகவும், இன்னொரு பகுதி ஏழைகள் வாழும் சேரி வலயமாகவும் இருக்கும்.

நகரங்கள் வேகமாக விருத்தியடைந்து வருகின்றன. அதனால் அவற்றின் உருவமும் மாறிவரும். எனினும் வீதி, கட்டடம், பணி என்பவற்றின் மூலம் நகரின் பழைய வடிவத்தைக் காணமுடியும். பழைய வீடுகள் நவீனப்படுத்தப்பட்டாலும் சமயக்கட்டிடங்கள் பெரும்பாலான நகரங்களில் பழைய வடிவம் மாறாமலேயே உள்ளன. பழைய நகரங்கள் பெரும்பாலும் வட்டவடிவிலும் சதுரவடிவிலும் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு நினைவுச் சின்னத்தைச் சுற்றி ஐரோப்பிய நகரங்கள் வட்ட வடிவில் அமைந்தன. அமெரிக்க நகர்கள் சதுரவடிவானது. ஆனால் இன்றைய பல நகர்கள் (கான்பெரா, பெடாலிங்ஜயா) வசதிக்கேற்ற வடிவத்தில் அமைந்துள்ளன.
நகரங்களின் கட்டமைப்பு பற்றி பார்க்கும் போது ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு மையப்பகுதியை கொண்டிருக்கும். பிரதான வர்த்தகக் கட்டிடங்கள், புராதன வர்த்தக வீதிகள் என்பனவற்றை கொண்டிருக்கும். வதிவிடங்கள் மாடிகளில் அல்லது வர்த்தக நிலையங்களின் பின் பக்கங்களில் காணப்படும். பல மாடிகட்டிடங்கள் நிறைந்திருக்கும். வாகனப்போக்குவரத்தும் நடைப்பயணிகளின் போக்குவரத்தும் மிகுந்து காணப்படும். இதன் இயல்புகள் வருமாரு:

இம் மையப்பகுதியில் அலுவலகங்களும் வர்த்தகமும் பகலில் மட்டுமே இயங்குவதால் பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் வாகனநெருக்கடி மிகுந்திருக்கும்.
மையப்பகுதிகளில் நிலத்தின் மதிப்பு மிகக் கூடுதலாக காணப்படும். அதனால் கிடையான கட்டிட விரிவு குறைந்து குத்தான கட்டிட விரிவு காணப்படும்.
மையப்பகுதி நிலப் பெறுமதி கட்டிட வாடகை என்பன மிகக் கூடுதலாக இருக்கும். அரசின் நிலவரி, சொத்து வரி என்பனவும் உயர்வாக இருக்கும்.
பல்லின மக்கள், பல சமய மக்கள் காணப்படும் பகுதியாக நகரின் மையப்பகுதி விளங்கும்.

உணவு, உடை, தளப்பாடம், மோட்டார் வண்டி, பல்வகைப் பொருட்கள், பொழுதுபோக்கு என்பனவற்றோடு சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்கள் இங்கு காணப்படுகின்றன.
வதிவிடங்கள் குறைவாக காணப்படும். நிலத்தின் மதிப்பு, வாடகை என்பன உயர்வாக இருப்பதில் மக்கள் மையப்பகுதியை விட்டு விலகி நகரின் ஏனைய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருப்பர்.
மாநகர்களில் பிரதான வீதிகளையடுத்து துணைவர்த்தக மையங்கள் உருவாகின்றன. சில்லறை வர்த்தக நிலையங்களாக இவை உள்ளன. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கொத்தணி அமைப்பில் இந்த துணை வர்த்தக மையங்கள் அமைந்துள்ளன. புடவை, நகை, இரும்பு, உதிரிபாகங்கள், பல சரக்கு, மருந்துப் பொருட்கள் போன்றன வர்த்தக நிலையங்களாக இருந்தன.

இன்றைய நவீன நகரங்களில் 250000 மக்களுக்குச் சேவை புரியக் கூடியபெரும் வர்த்தகத் தொகுதிகள் உள்ளன. இவற்றை 'ஹைபர் மார்க்கட்' அல்லது பிரதேச வர்த்தக மையம் என்பர். ஒரே கட்டிடத் தொகுதியில் சகலவற்றையும் பெறத்தக்கதாக இது அமைந்திருக்கும். இவை பிரதான நகர மையத்திலிருந்து விலகிப் புறநகர் பகுதிகளில் அமைத்து வருகின்றன.
ஒவ்வொரு நகரத்திலும் சிறியளவில் கைத்தொழில் பகுதிகள் அமைந்திருக்கின்றன. இவை பெரிதும் மின்வலுவைப் பெரிதும் ஆதாரமாகக் கொண்டு அமைவதை காணலாம். நகர மையத்தில் ஆடையணி, அச்சு, செய்திதாள் போன்ற தொழில்கள் விருத்தியடைந்திருக்கும்.

போக்குவரத்து வசதிகள் வளர்ச்சியடைந்தமையால் நகரின் மையப்பகுதியை விட்டு மக்கள் எல்லைப்புறங்களுக்குக் குடிப்பெயர்கின்றனர். நில மலிவு, காற்று, வெளிச்சம், ஆரோக்கியம், சனசந்தடிக்குறைப்பு போன்ற காரணிகள் குடிப்பெயர்வுக்கு காரணமாகின்றன. இதனால் புற நகரங்கள் உருவாகின்றன. புறநகர்களில் வீடுகள் பெரிதாகவும் வளவுகள் பெரிதாகவும் இருக்கின்றன.
இன்றைய நகர்கள் பலவற்றிலும் பரவலாகச் சேரிப்புறங்கள் உருவாகியுள்ளன. நகரின் கட்டிடப் பகுதிகளுக்கு அப்பால் விளிம்புகளிலுள்ள புறம்போக்கு நிலங்களிலும் கேட்பாரற்றுக் கிடக்கும் நிலங்களிலும் சேரிப்புறங்கள் உருவாகியுள்ளன. இங்கு நகர்ப்புற தொழிலாளர்கள், ஏழைகள் குடிசைகளை அமைத்து வாழ்கின்றனர். லத்தீன் அமெரிக்கா, இந்திய நகரங்களில் சேரிப்புறங்களைக் காணலாம். இவை ஆரோக்கியமற்ற குடியிருப்புகளாக விளங்குகின்றன.

நகராக்க போக்கு பற்றி பார்க்கும் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் எறியத்தின் படி 2007 ஆம் ஆண்டில் 6.5 பில்லியனாக அதிகரிக்கின்ற உலக சனத்தொகையில் அரைவாசிப்பேர் மனித வரலாற்றின் முதல் தடவையாக நகரவாசிகளாக மாறுகின்றனர். இது மேலும் வளர்ச்சியடைந்து 2030 ஆம் ஆண்டில் 8.13 பில்லியனாக அதிகரிக்கின்ற உலக சனத்தொகையில் நூற்றுக்கு 60வீதமானோர் நகரவாசிகளாக மாறுவார்கள் என எதிர்வு கூறப்படுகின்றது.

இவ்வாறு நகர சனத்தொகை அதிகரிப்பினால் பல்வேறு சுற்றாடல் பிரச்சினைகளும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளும் உருவாகின்றன. உலக சனத்தொகையில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் வசிக்கின்ற குறை அபிவிருத்தி நாடுகளில் நகர்புறங்களில் வாழ்கின்ற ஏறத்தாழ 600 மில்லியன் மக்கள் வீடமைப்பு, நீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளையாவது நிறைவேற்றிக் கொள்ளமுடியாத நிலையிலேயே வாழ்கின்றனர். இது இந்நாடுகளின் அபிவிருத்தி செயற்பாட்டில் மிகவும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இப்பாதகமான விளைவுகளைத் தவிர்க்கும் பொருட்டு நகர சனத்தொகையின் அதிகரிப்பை முகாமை செய்தலானது குறித்த நாடுகளுக்கும் அதே போன்று முழு உலகிற்கும் பெரும் சவாலாக உள்ளது.
கிராமங்களில் நகரமயமாக்கம் காரணமாக சனத்தொகையின் அளவு குறைவதுடன் கிராமிய பொருளாதார கட்டமைப்புக்கள் சீர்குலைவதற்கும் காரணமாய் அமைகின்றது. இதனால் கிராமிய விவசாய நிலங்கள் கவனிப்பாரற்று போகும் நிலையை அடையும். நகரங்களை பொறுத்தமட்டில் இங்கு கட்டடக்கலைகளின் அமைப்பு, திட்டமிடல் முறைகள், நகரப்பகுதிகளின் வரலாற்று ரீதியான வளர்ச்சி போன்ற நகரமயமாக்கம் காரணமாக மாற்றமடையும் நிலை உருவாகும்.
அண்மைக்காலங்களில் உள்நகர மீள் அபிவிருத்தி திட்டங்களில் பல புதிய மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. நகரங்களை வந்தடைந்தவர்களில் அதிகமானோர் நகரத்தின் மையப்பகுதியில் தொடர்ந்து வாழ வேண்டும் என்ற நிலைப்பாடு படிப்படியாக இன்று மறைந்து வருகின்றது. பல வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு எதிர் விளைவு இடம்பெற்று வருகின்றது. நகரங்களை வந்தடைந்தவர்களில் அதிகமானோர் நகரத்தின் மையத்தில் இருந்து நகர விளிம்பு அல்லது அதற்கு அடுத்த பகுதிகளி;ல் சென்று குடியேறுகின்ற போக்கு இடம்பெற்று வருகின்றது. இதனையே எதிர்மயமாக்கம் அல்லது எதிர்நகரமயமாக்கம் என கூறப்படுகின்றது.
வதிவிடப்பகுதிகள் நகர விளிம்பு பகுதிகளை நோக்கி மாற்றமடையும் போது உபநகரமயமாக்கம் ஒன்று இடம்பெறுகின்றது. அதிகமான ஆய்வாளர்களும் ஆலோசனையாளர்களும் இந்த உபநகரமயமாக்கத்தால் நகரின் முக்கிய பகுதிக்கு வெளியே பல செறிவு மிக்க உபநகரங்கள் தோற்றம் பெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வுபநகரமயமாக்கலினால் வலைப்பின்னல் அமைப்புடைய புதிய நகரங்கள் உருவாகியுள்ளன. அந்த வகையில் இப்புதிய நகரமயமாக்கமானது

வெளியே நடைப்பெறும் நகரமயமாக்கம்
வலையமைப்பு நகரமயாக்கம்
முடிவில் நடைப்பெறும் நகரமயமாக்கம்
தற்போது உருவாகியுள்ள நகரமயமாக்கம்
என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. அண்மைக்காலங்களில் குறிப்பாக வளர்முக நாடுகளில் இடம்பெற்று வருகின்ற முக்கிய மாற்றமாக இருப்பது கிராமிய இடப்பெயர்வாளர்கள் நகரங்களை நோக்கி அதிக எண்ணிக்கையில் இடம்பெயர்ந்து வந்து நகரமானது முழுமையான பயனை அவர்களுக்கு வழங்காத போது சேரிப்புறங்களில் அவர்கள் குடியேறி மிகத் தீவிரமான நகர வறுமையை அனுபவிப்பதாகும். இவ்வாறாக நகரமயமாக்கம் காரணமாக நகரங்களிலும் கிராமங்களிலும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதன்படி இலங்கையின் நகராக்கம் தொடர்பாக பாhக்கும் போது இலங்கையில் நகரங்கள் பெரும்பாலும் நகரசபையாலும், மாநகசபையாலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இங்கு இலங்கையின் நகரங்கள், அவற்றின் மாவட்டங்களின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது.
இலங்கையின் முதல் நகரம் அநுராதபுரம் ஆகும். இது பண்டுகாய மன்னனால் தோற்றுவிக்கப்பட்டது. இலங்கையின் நகரங்களில் பெரும்பாலானவை ஒரே மாதிரியான கட்டமைப்பையும் பணியையும் கொண்டமைந்திருக்கின்றன. கொழும்பு நகர் தவிர்ந்த ஏனைய நகரங்களில் ஒரே மாதிரியான இயல்புகளே காணப்படுகின்றன. இலங்கையின் நகரங்கள் என்ற வரையறைக்குள் பின்வருவன வருகின்றன.
பிரதான நகரங்கள் (குடித்தொகை-ஆயிரத்தில்)-1990

1. கொழும்பு
2. தெகிவளை –(பட்டினவொருக்கம்;) 920
3. கோட்டை
4. மொறட்டுவை 170
5. யாழ்ப்பாணம் 129
6. கண்டி 104
7. காலி 84
8. நீர்க்கொழும்பு 64
9. மட்டக்களப்பு 51
10. திருகோணமலை 50
11. இரத்தினப்புரி 46
12. மாத்தறை 41
13. அநுராதபுரம் 37
14. களுத்துறை 34
15. பதுளை 32
16. குருநாகல் 28
17. புத்தளம் 27
18. சிலாபம் 26
19. நுவரெலியா 26
20. வவுனியா 21
21. மன்னார் 19
22. கேகாலை 18
23. அம்பாந்தோட்டை 11

இந்த நகரங்கள் அனைத்தும் நிர்வாகப் பணிபுரியும் நகரங்களாகவுள்ளன. இவற்றில் சிலாபம் தவிர்ந்த ஏனையவை மாவட்ட நிர்வாக மையங்களாக விளங்கி வருகின்றன. இவற்றைப் பணி அடிப்படையில் வகுத்துக் கொள்ளலாம்.

1) தலைநகர் அல்லது நிர்வாக மையம்- கொழும்பு
2) துறைமுக நகர்கள்- காலி, திருகோணமலை
3) வரலாற்று நகர்கள்- கண்டி, அநுராதபுரம், குருநாகல், மன்னாh,; யாழ்பாணம், கோட்டை, நீர்க்கொழும்பு
4) கனிப்பொருள் நகர்- இரத்தினப்புரி
5) பெருந்தோட்ட நகர்- பதுளை, கேகாலை, நுவரெலியா, மாத்தறை
6) சுகாதார நகர்- நுவரெலியா
7) மாவட்ட நிர்வாக நகர்- களுத்துறை, புத்தளம், வவுனியா
அதேபோல இலங்கையின் சனத்தொகைக்கு ஏற்ப நகரங்களை வகைப்படுத்தலாம்.

1) பெரு நகரம்- சனத்தொகை 500000இற்கு மேல்- கொழும்பு
2) நடுத்தர நகரங்கள்- சனத்தொகை 100000இற்கு மேல்- களுத்துறை
3) சிறு நகரங்கள்- சனத்தொகை 100000இற்கு குறைவாக- கேகாலை பகுதி

இலங்கையின் பெரும்பாலான நகரங்கள் விவசாயப் பண் பினடிப்படையாக வளர்ச்சி பெற்றவையாகும். இவை மாவட்ட நிர்வாக நகரங்களாக இருப்பதனால் நகரங்களின் பெயர்களே மாவட்டத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான அரச கட்டிடங்கள் இந்த நகரங்களில் காணப்படுகின்றன. ஒடுங்கிய வீடுகள், பதிந்த வீடுகள் என்பன பொதுப்பண்புகளாகும். மேலைத்தேய நகரங்களைப் போன்று வர்த்தகம், வதிவிடம், பொதுகட்டிடங்கள் என்பனவற்றிடையே தெளிவான பகுதிகளாக பிரிக்கப்படவில்லை. வியாபார பகுதிகளிலேயே குடியிருப்புப் பகுதிகளும் காணப்படகின்றன.
சமய அடிப்படையில் கொத்தணியாக வாழ்கின்ற வதிவிடங்களை இலங்கை நகரங்களில் காணலாம். கொழும்பு நகரில் தமிழர் வாழ்கின்ற பகுதி, முஸ்லீம்கள் வாழ்கின்ற பகுதி கொத்தணிகளாக உள்ளன. மேலைததேயத்தவர்களின் வருகைக்கு பின்னர் பழைய நகரங்களில் இரு பகுதிகள் உருவாகின.

ஒரு பகுதியில் சுதேசிய தன்மை வாய்ந்த கட்டமைப்பும், மற்றைய பகுதியில் ஐரோப்பியத் தன்மை வாய்ந்த கட்டமைப்பும் உருவாகின. யாழ்ப்பாணத்தில் பறங்கித் தெரு ஐரோப்பியத் தன்மை வாய்ந்த கட்டமைப்பினை கொண்டது. அகலமான வீதிகள், நேரான குறுக்கு வீதிகள், நிகழ்தரு மரங்கள், தார் போட்ட வீதிகள், பங்களாக்கள் என்பன இக்கட்டமைப்பில் அமைகின்றன.
இலங்கை நகர்களின் மையப்பகுதிகள் பொதுவாகப் பழைய பகுதிகளாகும். புதிய பகுதிகள் யாவும் நகரின் விளிம்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. பிரித்தானியராட்சி காலத்தில் விருத்தியடைந்த இலங்கையின் கரையோர நகர்களான கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகியவை கோட்டையை மையமாகக் கொண்டு விருத்தியடைந்துள்ளன. இப்பகுதிகள் அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் கருவாக விளங்கின. அதனால் செல்வர்கள் இப்பகுதியில் வீடுகளைக் கட்டிக் கொண்டனர். அதனால் இந்த நகரங்களில் வர்த்தக மையப்பகுதி வட்டவடிவிலமையாது அரை வட்டவடிவில் அமைந்திருப்பதைக் காணலாம்.

கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, காலி, திருகோணமலை ஆகிய நகரங்களின் நகராக்க வளர்ச்சியை நோக்குவோம். இந்து சமுத்திரத்தின் மத்தியின் கப்பல் போக்குவரத்தின் குவிமையமாகக் கொழும்பு அமைந்திருக்கின்றது. கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக அது உலக வர்த்தகத் துறைமுகமாக விளங்கி வருகிறது. இயற்கையாகக் கொழும்பில் துறைமுக வசதிகள் இல்லை. அதனால் மூன்று பெரும் அணைகள் கட்டித் துறைமுகத்தினுள் கப்பல்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு வசதிகள் செய்துள்ளனர். கொழும்பு மாநகரத்தை பொருத்தளவில் அரசியல் செயற்பாட்டில் மத்திய நிலையமாகவும், அரசாங்க திணைக்களங்களின் மத்திய நிலையமாகவும் காணப்படுகின்றமை முக்கியமான விடயமாகும். பாரிய பொருளாதார நிலையங்கள், ஹோட்டல்கள் (கலதாரி, ஹில்டன், தாஜ்சமுத்ரா) என்பனவும் காணப்படுகின்றமை கொழும்பு நகரத்தினை வளர்ச்சி போக்கு தன்மைக்கு எடுத்துக்காட்டுகின்றது.
15ஆம் நூற்றாண்டிலிருந்து இலங்கையின் வர்த்தக மையமாக விளங்கிவரும் கொழும்பு தனது வர்த்தக முக்கியத்துவத்தை இன்று வரை இழந்துவிடவில்லை. இலங்கையின் முக்கிய வர்த்தகப் பயிர்களான தேயிலை, றப்பர், தெங்குப் பொருட்கள் என்பனவற்றின் ஏற்றுமதியும் உணவுப் பொருட்கள், நெசவுப் பொருட்கள், இயந்திர பொருட்கள் முதலியனவற்றின் இறக்குமதியும் கொழும்பிலேயே நடைப்பெறுகின்றது. அதனால் இலங்கையின் ஏனைய பாகங்களிலுள்ள வர்த்தகர்கள் தமக்குத் தேவையான பொருட்களைக் கொழும்பிலிருந்தே பெற்றுக் கொள்கின்றனர்.

வடமாகாணத்தில் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாகும். மாவட்ட நிர்வாக மையமாகவும் விளங்குகிறது. இலங்கையின் எப்பாகத்திலும் இல்லாத அளவு போக்குவரத்து வசதிகள் யாழ்ப்பாண குடாநாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளும் வீதிகளினால் ஒன்றினோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. இரும்பு பாதையினால் கொழும்போடு நேரடியாக யாழ்ப்பாணம் தொடுக்கப்பட்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண நகரம் கோட்டையைச் சுற்றி அமைந்திருந்து. அவ்வேளை சிறு நகர மையங்கள் காணப்பட்டன. பின்னர் படிப்படியாக வடக்காகவும் கிழக்காகவும் நகரம் விரிவடைந்துள்ளது. யாழ்ப்பாண நகரம் இன்னும் நன்றாக விரிவடைய முடியும். கொழும்பு நகரம் கிழக்கே விரிவடைய வெள்ளம் தடையாகவும் கண்டி நகரம் விரிவடைய மலைகளும் பள்ளத்தாக்குகளும் தடையாக இருப்பனபோல யாழ்ப்பாண நகரம் விரிவடையத் தடைகள் எவையும் இல்லை.யாழ்ப்பாண நகரம் வடக்கேயும் கிழக்கேயும் போதியளவு விரிவடைய இடமுண்டு.

இலங்கையின் வரலாற்று புகழ் பெற்ற இடம் கண்டியாகும். இது பழைய தலைநகர்களில் ஒன்றாக விளங்கியிருக்கின்றது. மலைகளினாலும் பள்ளத்தாக்குகளினாலும் பாதுகாக்கப்பட்ட நகராக கண்டி இருந்ததனாலேயே மலை நாட்டை ஆண்ட மன்னர்கள் கண்டியை தலைநகராக கொண்டிருந்தார்கள். இயற்கை அரண் கொண்ட நகராகக் கண்டி விளங்கியப்படியால் இலங்கை முழுவதையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முடிந்த போர்த்துகேயராலும் ஒல்லாந்தராலும் இந்நகரை கைப்பற்ற முடியவில்லை. ஆங்கிலேயரால் கண்டி கைபற்றப்பட்டது குறிப்பிடதக்கது.

கண்டி நகரம் மகாவலி கங்கையின் வடவளைவினுள் அமைந்துள்ளது. கட்டுகஸ்தோட்டை தொடக்கம் பேராதனை வரை மகாவலி கங்கை வளைவினுள் கண்டி நகர் அமைந்திருக்கின்றது. 104000 மக்களுக்கு மேல் வாழ்கின்றனர். சிங்கள மக்கள் கண்டி நகரை மகாநுவர என்று அழைக்கின்றனர்.
கண்டி இலங்கையின் புனித நகரமாக விளங்குகின்றது. இது பௌத்த மக்களின் வழிப்பாட்டிற்குரிய நகரமாகும். தலதா மாளிகை என்னும் புத்த தந்ததாது உள்ள பௌத்த கோயில் கண்டி நகரிலுள்ள ஏரியின் கரையில் அமைந்திருக்கின்றது. பெரகரா என்னும் திருவிழா வருடாவரும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப் புனித நகரை நாடி நாளாந்தம் நூற்றுக்கணகான மக்கள் வருகின்றார்கள்.

கண்டி நகரத்தில் கைத்தொழில்கள் சில நடைப்பெறுகின்றன. பித்தளை, வெள்ளி, சிற்ப வேலைகள் என்பன இங்கு சிறப்பாக நடைப்பெறுகின்றன. மரம் வெட்டி பலகையாக்கி விற்கும் தொழில் நன்கு விருத்தியடைந்திருக்கின்றது. சவக்காரம், பிஸ்கட் தொழில், பழைய டயரைப் புதுப்பித்தல் என்னும் தொழில்கள் விருத்தியடைந்திருக்கின்றன. செங்கட்டி தொழில் எங்கும் பரந்து காணப்படுகின்றது.
கண்டி நகரின் முக்கியத்துவத்திற்கு இன்னோர் காரணம் இருக்கின்றது. ஆசியாவிலேயே சிறந்த இயற்கைச் சூழல் நிறுவப்பட்டிருக்கும் பல்கலைக்கழகம் என போற்றப்படும் இலங்கைப் பல்கலைக்கழகம் கண்டி நகரிலிருந்து மூன்று மைல்கள் தூரத்தில் பேராதனையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதுவும் கண்டியின் சிறப்புக்கு காரணமாகும்.

கொழும்பு துறைமுகம் இலங்கையின் பிரதான துறைமுகமாக முக்கியம் பெறுவதற்கு முன்னர் காலியே இலங்கையின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. வரலாற்றுக் காலத்தில் அராபிய வணிகர்களும் சீன வர்த்தகர்களும் இத்துறைமுகத்திற்கூடாக வர்த்தகம் செய்திருக்கின்றனர். இந்நிலைமை ஓரளவு பிரித்தானியர் இலங்கையில் ஆட்சி செய்ய தொடங்கும் மட்டும் இருந்தது. ஆனால் பிரித்தானியரது காலத்தில் காலி துறைமுகம் கவனிப்பாரற்று கைவிடப்பட்டது.
அண்மைக்காலத்தில் காலிதுறைமுகத்தின் விருத்தியில் அரசாங்கம் கூடிய கவனம் எடுத்து வருகின்றது. கப்பல்த்துறை மேடைகளும் பாதுகாப்பு அணைகளும் கட்டப்படுகின்றன. கொழும்பில் இடநெருக்கடி நிலவுவதால் காலி துறைமுகத்திற்கும் கப்பல்களை அனுப்ப முடியும். மேலும் காலியை தக்கதோர் மீனப்பிடித் துறைமுகமாக்குவதற்கும் முயற்சிகள் நடைப்பெறுகின்றன.
திருகோணமலை ஒரு இயற்கை துறைமுகமாகும். கொட்டியாரக்குடாவினுள் இத்துறைமுகம் அமைந்துள்ளது. இத்துறைமுகம் ஆண்டு முழுவதும் காற்றின் தாக்கத்திலிருந்து கப்பல்களை பாதுகாப்பாகத் தங்க வசதியுள்ளதாக அமைந்துள்ளது. இவற்றினாலேயே இலங்கையைத் தமதாதிக்கத்தில் வைத்திருந்தவர்கள் திருகோணமலையை தமது படைக்கேந்திரமாக வைத்துள்ளனர். பிரித்தானியர் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு திருகோணமலையின் இராணுவ முக்கியத்துவத்தினை உணர்ந்துள்ளனர். அதனால்தான் இலங்கை தனது சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்பும் பிரித்தானியர் திருகோணமலையில் தமது படைத் தளத்தை வைத்திருந்தனர்.

திருகோணமலை நன்கு விருத்தியடைந்திருக்க வேண்டும். அதனால் தான் அபிவிருத்திக்குத் தடையாக சில ஏதுக்கள் உள்ளன. இத்துறைமுகத்தின் பின்னணி நிலம் செழிப்பு வாய்ந்ததாக இல்லை. பின்னணி நிலத்தில் ஏற்படுகின்ற வெள்ளம், சதுப்பு நிலங்கள் என்பன இதன்வள்ச்சிக்குத் தடையாக உள்ளன. இன்று வடக்குக், கிழக்கு மாகாண தலைநகரமாக மாறியுள்ளதால் விருத்தி துரிதப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.
இதன்படி இலங்கையில் நகராக்கத்திற்கான காரணங்கள் பற்றி பார்க்கும் போது வறுமை, வேலையின்மை, மற்றும் நிலப்பற்றாக்குறை, வெளியிடங்களிலிருந்து நகரப்குதிகளுக்கு வருபவர்களில் என்பன காரணமாக கிராமிய பகுதிகளிலிருந்து மக்கள் நகரங்கள் நோக்கி இடம்பெயர்ந்தமை. (தள்ளுவிசை காரணிகள்)
நகரங்கள் மக்களைக் கவர்ந்தமை. (இழுவிசைக் காரணிகள்) வளர்முக நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டஎனப்படுகின்றன. இவை அபிவிருத்திக் கொள்கைகளில் காணப்பட்ட நகர் சாhந்த பாரபட்சம், நகரப்பகுதிகளில் குடித்தொகை அதிகரிப்பு என்ற விளைவுக்கு வழிசமைத்தது.

கிராமாந்திரங்களின் அல்லது கிராம நகரங்களின் தோற்றம்
நகரங்களின் முக்கிய பிரச்சினைகளின் தோற்றுவாய் நகரங்களில் குடித்தொகை அதிகரிப்பதற்கு இணங்க கட்டமைப்பிலும் சமூக நலன் சேவைகளிலும் விரைவான விருத்தி ஏற்படாமையாகும். இயற்கையான குடிப்பெருக்கத்துடன் வந்தேறும் குடிகளின் குடியேற்றம் தொடர்ந்தும் நகர்புறங்களில் நிகழ்கின்றது. அதிகரித்து வரும் குடித்தொகைக்கு ஈடுசெய்ய ஏற்ற வதிவிடங்கள் வீதிகள் போன்ற கட்டமைப்புக்களும் கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சமூகநலச் சேவைகளம் விருத்தியடைவது துரிதமாக நிகழ்வதில்லை. அதனால் இலங்கையில் நகரங்கள் பின்வரும் பிரச்சினைகளுக்குள்ளாகின்றன.

இடநெரிசல் பிரச்சினையானது பெரும்பாலும் வளர்முக நாடுகளிலேயே நிலவி வருகின்றது. குறிப்பாக இந்தியாவில் கல்கத்தா நகரில் இப்பிரச்சினை பாரிய பிரச்சினையாக உள்ளது. கல்கத்தா நகருக்கு ஒவ்வொரு நாளும் 2000 பேரும் மும்பாய்க்கு ஒவ்வொரு மாதமும் 25000 பேரும் டில்லிக்கு ஒவ்வொரு வருடமும் 100000 பேரும் குடிப்பெயர்ந்து வருவதாக மதிப்பபிடப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் மேல் மாகாணப் பகுதியிலேயெ அதாவது தலைநகரை அடுத்துள்ள பகுதியிலேயே 80வீதம் கைத்தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் தலைநகரை சூழ்ந்து பாரிய அளவில் குடியிருப்புக்கள் ஏற்பட்டன. சனத்தொகையின் அளவுக்கு நிலத்தின் அளவு போதாமையால் அடுக்கு மாடிக்கட்டிடங்கள் பல கொழும்பில் உருவாகியிருப்பதை அவதானிக்கமுடிகின்றது. இவ்வாறு நாளுக்கு நாள் துரிதமக அதிகரித்து வரும் சனத்தொகையே இடநெரிசல் ஏற்பட காரணமாய் அமைகிறது.
நகரின் இடப்பரப்பை மீறி மக்கள் தொகை அமைவதால் வீட்டு வசதி என்பது சிக்கலானதாக மாறுகின்றது. இந்திய அரசும் வீட்டுவசதி மற்றும் பொதுப்பணி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 1981இல் நகரங்களில் 6.7 மில்லியன் வீடுகள் பற்றாக்குறையாக இருப்பதை சுட்டிக் காட்டி இருந்தது. அத்துடன் இப்பிரச்சினை தீர் க்ப்படாது விட்டால் 2000ஆம் ஆண் டில் 33.2 மில்லியன் என்ற அளவில் வீட்டுப்பிரச்சினை அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்பிரச்சினை காரணமாகவே வீதியோரச் சேர்வுகள், குடிசைகள், கொட்டில்கள் என்பவற்றில் மக்கள் வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கொழும்பு நகரில் உள்ள ஏறத்தாழ 50 வீதமானோர் சிறு குடிசைகளில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கையான குடிப்பெருக்கத்துடன் வந்தேறும் குடிகளின் குடியேற்றம் தொடர்ந்து நகர்ப்புறங்களில் இடம்பெறுவதால் நகர சனத்தொகை துரிதமாக அதிகரித்து வருகின்றது. இவ்வாறாக அதிகரித்து வரும் சனத்தொகையை ஈடுசெய்யக்கூடிய வகையில் மருத்துவம், கல்வி, சுகாதாரம் போன்ற
சமூக சேவைகளும் வீதிகள், வதிவிடங்கள் போன்ற கட்டமைப்புக்களும் விருத்தியடைவதற்காக நகரங்களின் பரப்பு விரிவுப்படத் தொடங்குகிறது. இதனால் பல பிரச்சினைகள் உருவாகின்றன. நகர நிலப்பற்றாக்குறை காரணமாக நகரப்பகுதிகள் புறநகரப் பகுதிகளை ஆக்கிரமிப்பதனால் விவசாய நிலங்களும் மேய்ச்சல நிலங்களும் பாதிக்கப்படுகின்றன.

அத்துடன் நகரத்தேவைக்காக குறிப்பாக விறகுத் தேவைக்காக சதுப்பு நிலத் தாவரங்கள், புதர்கள் காடுகள் அழிக்கப்படுவதனாலும் பல்வேறு தேவைகளுக்காக மண் அகழ்தெடுக்கப்படுதனாலும் நகரப் பின்னணி நிலத்தில் குன்றும் குழிகளும் உருவாகுவதோடு உயிர்ச் சூழல் மாற்றத்துக்குள்ளாகின்றது. குறிப்பாக கொழும்பில் கோட்டை, கொலன்னாவை, தெஹிவளைப் பகுதியில் வீதி விஸ்தரிப்பு நடவடிக்கைகளினால் தமது சொந்த நிலங்களை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நிலமீட்பு நடவடிக்கை காரணமாக 19600 ஹெக்டயர் காணி தனியார் துறையினரிடமிருந்து சுவீகரிக்கப்பட்டது. இதனால் சதுப்பு நிலம் நிரப்பப்படுதல், கடற்கரையோரங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுதல், மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற சூழலியல் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உருவாகின்றன.

சேரிகளன் உருவாக்கமும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இன்றைய நிலையில் இலங்கையில் மட்டுமல்ல உலகத்திலும் பாரிய பிரச்சினையாகும். உதாரணம் - பிலிப்பைன்ஸில் மனிலா நகர சேரியில் சூழல் பிரச்சனை காரணமாக சிசு மரணம் அதிகமாகக் காணப்படுவதுடன் டி.பி . நோய் ஏனைய பகுதிகளை விட 9 மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றது.
இலங்கையில் நகரங்கள் பரவற்றிலும் பரவலாக சேரிபுறங்கள் உருவாகியள்ளன. திண்மக் கழிவுபொருட்களை அகற்றி ஒழித்தல் பிரதான பிரச்சனையாக காணப்படுகின்றது. மக்களினால் பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்படும் பொருட்களில் உயிரியல்ரீதியாக பிரிகையடையாத பிளாஸ்டிக் பைகளும், கொள்கலங்களும் அடங்குகின்றன.

மனிதனின் செயற்பாடுகள் நகர சூழல் ஒழுங்குகளில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சேரிப்புறங்களை இரு பிரிவுகளாகப் பிரித்து இனங்காணலாம். அவை வரிசை வீடுகள்(லயன் வீடுகள்), சேரித் தோட்டங்களாகும். இன்றுள்ள நகரங்கள் பலவற்றிலும் பரவலாகச் சேரிக் குடியிருப்புக்கள் உருவாகியுள்ளன. நகரின் கட்டிடப் பகுதிகளுக்கப்பால் விளிம்புகளிலுள்ள புறம்போக்கு நிலங்களிலும் கேட்பாரற்று கிடக்கும் நிலங்களிலும் சேரிப்புறங்கள் உருவாகியுள்ளன.
இங்கு நகர்ப்புறக் கூலித் தொழிலாளர்கள,; ஏழைகள் குடிசைகளை அமைத்து வாழ்கின்றனர். சட்டவிரோதமான இக் குடியிருப்புக்கள் அகற்றப்பட்டாலும் மீண்டும் மிக விரைவில் அமைக்கப்பட்டுவிடுகின்றன. இச் சேரிக் குடியிருப்புக்கள் ஆரோக்கியமற்ற குடியிருப்புகளாக விளங்குகின்றன. குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நகரங்களின் உயர்நில மதிப்பும் அதிகரித்த வாடகையும் சுமையாக இருப்பதால் இவ்வாறான சேரிப்புறங்கள் உருவாவதற்குக் காரணங்களாக அமைகின்றன.

நகரங்களின் தொழில் பட்டறைகள், வர்த்தக நிலையங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்காக வீடுகள் கட்டப்பட்டிருத்தல் வீட்டின் வகை 150-275 அடி அளவினதாகும். சேரித் தோட்டங்களின் வீடுகள் வகை 35-475 அடி அளவினது. கொழும்பு நகரிலுள்ள கொச்சிக்கடை, வாழைத்தோட்டம், பஞ்சிகாவத்தை போன்ற இடங்களில் சேரித் தோட்டங்களின் வரிசை வீடுகளைக் காணலாம்.
இச்சேரிக்குடியிருப்புக்கள் தாழ்நிலங்கள், சதுப்பு நிலங்கள், புகையிரத பாதை ஓரங்கள், முடுக்குகள், கால்வாய்களை அண்மித்த பகுதிகள், கழிவு சேகரிக்கும் பகுதிகள் போன்ற இடங்களிலேயே காணப்படுகின்றது. இங்கு நீர் வசதியோ, கழிப்பறை வசதியோ, கழிவு நீர் அகற்றல் வசதியின்றி காற்றோட்டம் அற்ற செறிந்த வீடுகளாக காணப்படுவதுடன் வீடுகளின் வெளியேதான் சமைத்தல், துவைத்தல், காயவைத்தல், மலம் கழித்தல் போன்ற சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இவ்வாறான இந்த நடவடிக்கைகள் பல சூழல் பிரச்சினைகள் உருவாக்கத்திற்கு காரணமாகின்றது.

நகராக்கத்தால் மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றும் குடிநீரானது குறைவுப்படுத்தப்படுகின்றது. குடிநீர் பிரச்சினையானது போதியளவு நீர் மக்களுக்கு கிடைக்காமையினை குறித்து நிற்கி;ன்றது. சென்னையில் குடிநீர் தேவை 55 மில்லியன் கலன்களாகும். இலங்கை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளில் 30வீதமானோர் நீரினால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். குறிப்பாக தைபோய்ட், கொலறா, வாந்திபேதி, ஈரல் அழற்சி என்பன புறநகர் பகுதி மக்களை அதிகமாக பலி கொள்ளும் பாதுகாப்பற்ற நீரருந்தலால் ஏற்படுகின்ற விளைவுகளாகும்.
பொதுவாக இலங்கையில் அனேக நகர்களில் சேரிப்பகுதிகள் தாழ்ந்த இடங்களிலேயே காணப்படுவதனால் வெள்ள காலங்களில் அங்கு நீர் நிறைந்து ஏனைய பகுதிகளுக்கும் தொற்றுநோய்களை பரப்ப வாய்ப்பேற்படுத்தி கொடுப்பதுடன் கோடைக் காலங்களில் அதிக தூசு, துர்நாற்றம் என்பன முழு நகரையும் பாதிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அத்துடன் சேரிகுடியிருப்புகளின் அமைவிடம், வீடுகளின் தரம், அமைப்பு போன்றன மனிதன் வாழ முடியாத தன்மையை கொண்டிருப்பதுடன் மனித சுகாதாரத்தையும் பாதிக்கின்றது. சில நகர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் சில நகர்களில் பாதை ஓரங்களில் தேங்கி நின்று பல்வகை தொற்றுநோய்களுக்கு காரணமாவதுடன் துர்நாற்றத்திற்கும் காரணமாகின்றன. இப்பிரச்சினை பொதுவாக இலங்கையின் எல்லா நகர்களிலும் ஏற்படுகின்றன.

பெருநகர்களில் குப்பைகள் அதிகம் குவிவதால் அவற்றில் கழிவு நீர் தேங்கி நின்று நுளம்புகள் பெருகுவதற்கும் நோய்களை உண்டாக்குவதற்கும் காரணமாய் அமைகின்றது. அத்துடன் கழிவு நீர் குடிநீருடன் கலந்து விடுவதனால் வயிற்றோட்டம், வாந்திபேதி, நெருப்புக்காய்ச்சல் முதலிய நோய்கள் ஏற்படுகின்றன. அத்துடன் கழிவுநீரின் முகாமைத்துவமற்ற வடிகாலமைப்பு, திட்டமிடப்படாத கழிவகற்றல் முறைகள் என்பன பல்வேறு தொற்றுநோய்கள் உருவாகுவதற்கும் காரணமாவதுடன் மனித நடவடிக்கைகளினால் ஏற்படுத்தப்படும் வளிமாசடைவு, சுவாசம் சம்பந்தமாக பல நோய்களையும் நகர்புறங்களில் தோற்றுவிக்கின்றது.
இவை தவிர நகர்ப்பகுதிகளில் அதிகமாக இடம்பெறும் தகாத உடலுறவு மற்றும் விபச்சாரம் போன்றவற்றினாலும் போதைவஸ்து, மதுபானம் போன்றவற்றின் அதிகரித்த பாவனையின் காரணமாகவும் எயிட்ஸ், கசரோகம் ஏனைய நீண்டகால நோய்களான இருதய நோய்கள், உளம் தொடர்பான நோய்கள் என்பவற்றின் பரவல் தன்மை அதிகரிப்பதுடன் மேலும் பல பாதகமான நோய்கள் நகரப்பகுதிகளில் பரவக்கூடிய அபாயமும் காணப்படுகிறது. குறிப்பாக நகர வறுமைக்கு உட்படுகின்ற அடிப்படை வசதியற்ற மக்களின் ஏறத்தாழ 1ஃ3 பகுதியினைக் கொண்டிருக்கும் சேரிப்பகுதி மக்கள் பெரும்பாலும் அதிகளவான நோய்களுக்கு ஆளாகி வருகின்றமை குறிப்பிடதக்கது. இவ்வாறான இந்த நிலமைகள் நகர்புறங்களில் மிகவும் மோசமான சுகாதாரப் பிரச்சினைகளின் விளைவுகளாகும்.

நகராக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகளுள் சூழல் மாசடைதல் முக்கியமானதாகும். அந்தவகையில் நிலம், நீர், வளி முதலியவை மாசடைவுக்கு உட்படுவதனை அவதானிக்கமுடிகின்றது. நகரப்பகுதிகளில் கைத்தொழில் அதிகரிப்புகளும் மேலதிக மூலப்பொருள் அகழ்வுகளும் கைத்தொழில் மற்றும் மூலப்பொருட்களின் இடநகர்வுக்கான போக்குவரத்து சாதனங்களின் அதிகரிப்புகளும் அவற்றுடன் கூடிய கழிவுப் பொருட்கள் அளவுக்கதிகமாக சூழலில் விடப்படுவதனால் சூழல் மாசடைகின்றது. இவற்றில் கைத்தொழில் கழிவுகள் பாரிய சூழல் பிரச்சினையாக விளங்குகிறது. கைத்தொழில் புகை, ஒளி, இரசாயன புகை, மற்றும் மிதக்கும் துணிக்கைகள், ஈயத்தூள்கள், ஒட்சைட்டுக்கள், தூசுக்கள் என்பன வளியுடன் கலந்து சூழலை மாசுற செய்கின்றது. பிளாஸ்ற்றிக் உற்பத்தி துறைகள், குளோர் ஆல்கலி தயாரிப்பு நிலையங்கள், மின்சார மற்றும் மின்னணு தொழிற்சாலைகள் போன்ற பல தொழிற் சாலைகளில் மெர்க்குரி அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. கேட்மியம், ஈயம், போன்றவை சூழலை மாசுபடுத்தும் பொருட்களாகும்.
நகர்பகுதிகளில் கூடுதலாக குளிரூட்டிகள் பாவிக்கப்படுவதனால் ஊகுஊ (குளோரோ புளோரோ காபன்) வெளியேற்றப்படுகின்றது. இதுவும் வளியை மாசுப்படுத்தி ஓசோன் படையை சிதைவடையச் செய்கின்றது. கொழும்பில் ஏறத்தாழ 120000 வாகனங்கள் தினமும் போக்குவரத்தில் ஈடுப்படுகின்றன. இவை தினமும் 250-300 தொன் காபனோர் ஒட்சைட்டையும் 20-50 ஐதரோகாபனையும் 10-20 நைதரசன் ஒட்சைட்டையும் வளியில் சேர்ப்பதாக ஆய்வுகள் கூறப்படுகின்றது. இவ்வாறு வளி மாசடைவதன் காரணமாக தலைவலி, கண்ப்பார்வைக் குறைப்பாடு, சுவாச நோய்கள், மூச்சுதிணறல் போன்றன ஏற்படுகின்றன. இவற்றை விட நகரங்களில் கொட்டல் கழிவுகள், வீட்டுக்கழிவுகள், சந்தைக் கழிவுகள், மலசலக் கழிவுகள் மற்றும் ஏனைய நகரக் கழிவுகள் நிலப்பகுதிகளில் ஒன்று சேர்க்கப்பட்டு நிலத்தை மாசுபட வைக்கின்றது. 

பின்னர் இக்கழிவுகள் நீர்ப்பகுதிகளை அடைவதினால் நீர் மாசடைகின்றது. கொழும்பில் கழிவுகள் களனி கங்கையில் சேர்க்கப்படுவதனால் அந்நீர் மாசடைகின்றது. குறிப்பாக கொழும்பு நகரில் 60 வீதமான சாக்கடைகள் மூலம் அகற்றப்படுகின்றது. பராமரிப்பிற்கு உட்படாத சாக்கடை கழிவுகளில் ஏறத்தாழ 80000 கனமீற்றர் தினமும் களனி கங்கையினுள் செலுத்தப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது.
இதைவிட இலங்கையில் தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக் கழிவுகள் தலவாக்கலை ஆற்றில் கொட்டப்படுவதால் நீர் மாசடைகின்றது. ஆரம்பகாலத்தில் நகர்புறமான கோட்டையை பலப்படுத்தும் போது பேரா ஏரி போர்த்துயேரால் அமைக்கப்பட்டது. தற்போது இவ்வேரியில் கழிவுப்பொருட்கள் கைத்தொழில் மாசுறுத்திகள், குப்பை ஆகியன வந்து சேர்கின்றன. மக்கள் அதன் கரைகளில் குடியேறி வாழ்கின்றனர். ஆiஉசழஉலளவளை எனும் நீலப் பச்சை அல்காவினால் உண்டாகும் அல்கா மலர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சியுள்ள மாதங்களில் உண்டாகிறது. இதிலிருந்து அருவருப்பான மணம் உண்டாகிறது. இதனால் ஒட்சிசன் அகற்றப்படுகின்றமையால் மீன்கள் இறக்க நேரிடும். இதனால் சூழல் மாசடைகின்றது.
கருத்து பரிமாறலுக்கு இன்றியமையாத ஒலி பல்வேறு வழிகளாலும் நகர்ப் பகுதிகளில் பெருகியதால் அது செவிப்புலனுக்கு தீங்கு விளைவிப்பதாக மாறியுள்ளது. குறிப்பாக ஒலிபெருக்கிகள், வானொலி, தொலைக்காட்சி, மோட்டார் வாகனங்கள், புகையிரதங்கள், ஜெட்விமானங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள், மின்பிறப்பாக்கிகள் கட்டிட இயந்திரங்கள் என்பவற்றின் மூலம் பல மடங்கு பெருகின்ற ஒலியினால் ஒலி மாசடைகின்றது. மனிதனுக்கு ஆரோக்கியமும் அமைதியையும் தரும் ஒலி அழுத்தம் 25-45 னநஉiடிடை அலகுகளாகும். ஒலி அழுத்தம் 45-60 னநஉiடிடை ஆயின் சமிப்பாட்டுத் தொகுதியை பாதிக்கும். 60-80 னநஉiடிடை ஆயின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து கோபம் வன்முறை மனநோய் என்பனவற்றை ஏற்படுத்தும். அதேசமயம் ஒலி அழுத்தம் 80-120னநஉiடிடை ஆயின் காதுச் சவ்வுகளைப் பாதித்து படிப்படியாக செவிடாக்கி விடும். எனவே நகர்ப்பகுதிகளில் மிகக் கடுமையாக ஒலி மாசடைந்து வருவதால் உயிர்ச் சூழல் பல சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றது என்பதும் குறிப்பிடதக்கது.

கிராமிய வாழ்வின் வறுமையும் மூலவளங்களின் பற்றாக்குறையும் வருமானத்திற்கான தொழில்கள் இன்மையும் கிராமிய மக்களை நகரங்களை நோக்கி விரட்டி விடுகின்றன. இக்கிராமிய மக்கள் போஷாக்கின்மையால் உழைப்பாற்றலை இழந்தவர்களாக, கல்வியறிவும் தொழிநுட்ப அறிவும் அற்றவர்களாக, மூலதன வசதிகள் இல்லாதவர்களாக, தொழிலின் நிமித்தம் அழையாவிருந்தாளிகளாக நகரங்களுக்கு குடிப்பெயர்கின்றார்கள். இந்நகரங்களின் அடிப்படை வசதிகள் ஏற்கனவே அங்குள்ள மக்களிற்கு உணவையோ, தொழில்களையோ, சேவைகளையோ வழங்குவதற்குத் திறனற்றவையாக இருக்கின்ற போது புதிதாக குடியேறுவோருக்கு விரக்தியே மிஞ்சுகிறது. இதனால் தொழில் தேடி வருபவர்கள் முறைசாரா தொழில்களான பிச்சை எடுத்தல், குப்பை மற்றும் கழிவு பொருட்களை அகற்றுதல், தரகு வேலை போன்றவற்றை செய்து வாழ்க்கையை நடத்துகின்றனர். குறிப்பாக இலங்கையில் 62 வீதமானோர் சேரிவாசிகள் இவ்வாறான தொழில்களில் ஈடுப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கைத்தொழில் துறை விருத்தியடையாத நிலையில் அரச துறையினரால் வழங்கப்படக்கூடிய வேலைவாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதனால் நகரங்களின் வேலையின்மை என்பது எதிர்க்காலத்தில் மேலும் தீவிரமடையக்கூடும் என கூறப்படுகிறது.
நகரங்களை சென்றடைந்தவர்கள் போதுமான வருமானம் அற்ற நிலையில் தமக்கான வருமானம் ஈட்டித்தரும் முயற்சியாக இத்தகைய சமூக விரோத நடவடிக்கையில் ஈடுப்படுகின்றனர். விபச்சாரம், கொலை, கொள்ளை சட்டத்திற்குபுறம்பான மதுபான விநியோகங்கள், போதைவஸ்துக்களின் வர்த்தக பரிமாற்ற நடவடிக்கைகள், வியாபார பதுக்கல்கள் போன்ற பல விதமான செயற்பாடுகள் தனிப்படடவர் என்ற முறையிலும் குழுக்களாகவும் பாதாள உலக குழுவினர் என்ற முறையிலும் மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையின் நகரங்களில் விபச்சாரம் முதன்மை நடவடிக்கையாக இடம்பெறுகின்றது. 

அண்மைக்காலங்களில் நகராக்கம் காரணமாக ஏற்படும் ஒரு பிரச்சினையாக நகரவெப்பத்தீவுகளின் உருவாக்கம் காணப்படுகின்றது. கிராம சூழலோடு ஒப்பிடும் போது முற்று முழுதாக மாறுப்பட்ட ஒரு சூழலை நகரங்களில் அவதானிக்க கூடியதாக இருக்கும். குறிப்பாக இயற்கைச் சூழலுக்கு மாறான தாவரங்களற்ற சூழல், உயர்மாடிக்கட்டடங்கள், வலைப்பின்னலான வீதியமைப்புக்கள், கரடு முரடான நகர மேற்பரப்பு என்பனவற்றுடன் போக்குவரத்து சாதனங்களின் அதிகரித்த பாவனைகளும் கைத்தொழில் செயற்பாடுகளும் நுண்வளிமண்டல வெப்பநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தி வெப்ப கொள்ளளவு அதிகர்ப்பதற்கு காரணமாகின்றன. இத்தகைய நகரமேற்பரப்பு சார்ந்த வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக நகர வெப்பதீவுகள் உருவாக்கம் பெறுகின்றன. 

நகர வளிமண்டலத்தின் வெப்பநிலையை இயல்பு நிலைக்கு மாறாக கொண்டு செல்லும் மனித செயற்பாடுகள் (கைத்தொழில் பொருளாதார நடவடிக்கைகள்) சூழலுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக சூழல் மாசடைதல், புற ஊதா கதிர்களின் தாக்கம், கோளவெப்பமாகுதல், காலநிலை, வானிலை தாக்கம் போன்றவற்றினால் பல்வேறு பிரச்சினைகளை புவிக்கோளம் எதிர்க்கொண்டு வருகின்றது. நகர வெப்பதீவுகளின் எரிதலின் விளைவாக வெளியேற்றப்படும் கந்தகவீரொட்சைட்டு, நைதரசன் ஈரொட்சைட்டு என்பன வளிமண்டலத்தின் நீருடன் தாக்கம் புரிந்து முறையே சல்பூரிக்கமில், நைத்திரிக்கமிலம் என்பனவற்றை உருவாக்குகின்றன. இவ்வமிலம் கூடியளவு எரியூட்டும் போது அமில மழையாக புவிமேற்பரப்பை வந்தடைகின்றன. இந்த அமில மழையால் பல்வேறுப்பட்ட உயிர்ச் சூழல் மற்றும் சூழலியல் சார்ந்த பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.
அதிகரித்துச் செல்லுகின்ற குடித்தொகை, வாகனங்களின் அதிகரிப்பு, குறுக்கலான வீதியமைப்புக்கள் என்பன நகரங்களில் போக்குவரத்து நெரிசல்களையும் அதன் காரணமாக விபத்துக்களையும் ஏற்படுத்துவதுடன் வாகனங்களின் புகைகளினால் சூழல் மாசுபட வழிவகுக்கின்றது. இதனை விட சட்டத்திற்கு முரணான வகையில் எழுந்துள்ள கட்டடங்களும் மக்களின் வதிவிடங்களும் பாதையோர விற்பனை நிலையங்களும் வீதிப்போக்குவரத்து நெருக்கடியை மேலும் அதிகரிக்க செய்கின்றன. இலங்கையில் கொழும்பில் நகரங்களின் போக்குவரத்து நெருக்கடி உச்ச நிலையில் காணப்படுகின்றது.

குறிப்பாக நீர்கொழும்பு – கட்டுநாயக்கா வீதி கோமாகம-கோட்டை வீதி கொழும்பு- காலி வீதி என்பன முக்கிய வாகன நெரிசல் பகுதிகளாக விளங்குகின்றன. இப்போக்குவரத்துப் பாதையில் சுமார் 10 நிமிடங்களில் கடந்து செல்லக்கூடிய 5முஅ தூரத்தினை வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுவதால் 60-90 நிமிடம் வரை செலவிட வேண்டியுள்ளது. 

கடற்கரையோர நிலங்கள் கைத்தொழில், கடற்றொழில் அபிவிருத்தி, உல்லாசப்பயணத் துறை, போக்குவரத்து, நகரமயமாக்கம், அணு ஆயுதப் பரிசோதனை போன்ற பல்வேறு மானிட நடவடிக்கைகள் காரணமாக அரிப்பிற்றக்கு உட்பட்டு வருகின்றன.இதன் காரணமாக கரையோரப்பகுதிகள் தாக்கத்திற்கு உட்படுகின்றன. மண் அகழ்தல், முருகைக் கல் அகழ்தல், கரையோர தாவரங்களை அகற்றல் போன்றனவும் கரையோர தின்னலை துரிதப்படுத்துகின்றன. உதாரணம் - இலங்கையில் பாணந்துறை, மொரட்டுவ, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் மணல் தோண்டி எடுக்கப்படுவதையும், களனி ஆற்றிலிருந்து வருடாந்தம் 400,000 கன மீற்றர் மணல் அகற்றப்படுவதைக் குறிப்பிடலாம். 

அந்தவகையில் நகரங்களில் காணப்படுகின்ற வறுமை நிலை அதிகளவான நகரப்;பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றது. நகரப்பிரதேசங்களில் நகர வறுமை ஏற்படுவதற்குரிய காரணங்களாக கிரமப்பகுதிகளில வேலைவாய்ப்பின்மை, கிராம மக்களின் அதிகளவானோர் நகரங்களில் குடியேறுதல், உயர் வாழ்க்கைச் செலவு, பகுதிநேர வேலைவாய்ப்புகள் போன்ற காரணிகள் செல்வாக்குச் செலுத்தகின்றன.

இவற்றினை விட அரசியல் உட்பூசல்கள், இன ஒதுக்கல் பிரச்சினைகள் என நகரம் ஒரு நரகமாகும் அளவிற்கு பல்வேறுப்பட்ட பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்க்கொண்டு வருகின்றது. இலங்கையில் நகர விருத்தி வேகமானது மெதுவாக நிகழ்ந்தாலும் இலங்கையில் பிரச்சினைகள் அதிகரித்தே காணப்படுகின்றன. அதற்கேற்ற வடிவிலான திட்டமிடல் செயற்பாடுகள் இந்நகரமயமாக்கத்தில் இதுவரை குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெறவில்லை. எனவே திட்டமிடப்பட்ட வகையில் நகரங்கள் கட்டியெழுப்பப்படாவிட்டால் இலங்கை எதிர்நோக்கும் நகரமயமாக்கப் பிரச்சினைகள் எதிர்காலத்தில் மேலும் தீவிரமடையக்கூடும்
இலங்கையில் மட்டுமன்றி உலகத்திலும் நகராக்க பிரச்சினைகள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. அந்தவகையில் நகராக்க பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாகவே சில உச்சிமாநாடுகள் நடைப்பெற்று வருகின்றன. 1972இல் சுவீடனில் இடம் பெற்ற ஸ்ரொக்கொம் மாநாட்டில் நீரின் தரம் பேணல் சூழல் மாசடைதல் போன்ற பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிடப்பட்டன. 1992இல் பிறேசில் நாட்டில் றியோடி ஜெனிரோவில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில் நகர சூழல் தொடர்பான விடயங்கள் பற்றி அதிகளவில் கலந்துரையாடப்பட்டன. 1994இல் மன்செஸ்ரர் மாநாட்டில் நகர அபிவிருத்தி பற்றி பெரிதாக பேசப்படவில்லை. எனினும் நகர சூழலும் சுகாதாரமும் நிலைத்து நிற்ககூடிய அபிவிருத்தி என்பன பற்றி முடிவுகள் சமர்பிக்கப்பட்டன.
இலங்கைக்கு உரிய பௌதீக, பொருளாதார, சமூக கட்டமைப்புக்கு ஏற்ப திட்டங்களை வகுத்து நகராக்கப் பிரச்சினைகளை கட்டுப்படுத்தி வருகின்றன. குறிப்பாக இலங்கையில் பிரதேச அபிவிருத்தி முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டும் கிராமிய எழுச்சித்திட்டங்கள் உருவாக்கியும் வருகின்றது. அந்தவகையில் கிராமிய பகுதிகளை விருத்தி செய்ய பின்வரும் திட்டங்கள் மேற்கொள்;ளப்படுகின்றன.

கிராம அபிவிருத்தித் திட்டங்கள்.
உட்கட்டமைப்பு விருத்தி.
கைத்தொழிற் திட்டங்கள்.
கல்வி, சுகாதார வசதி ஏற்படுத்தல்.
நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்குதல்.
நிருவாகத்தை பரவலாக்கல்.
அரசியல் வலுவை பரவலாக்கல்.
குடியிருப்புக்களை திட்டமிட்டு விருத்தி செய்தல்.
நகராக்க பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக எடுக்கப்பட்ட திட்டங்களில் நகரத்திட்டமிடல் மிகப்பிரதான தீர்வு நடவடிக்கையாக கொள்ளப்படுகன்றது. குடிநீர் வழங்கல், ஆரோக்கிய வாழ்வு, பூங்காக்கள் அமைத்தல், போக்குவரத்து, மின்சாரம், பொருளாதார முன்னேற்ற வழிமுறைகள் ,தொழிற்சாலைக்கு இடமளித்தல், நிலப்பரப்பை சரியான வழியில் பயன்படுத்துதல், முதலியவைகள் நகரதிட்டமிடலில் முக்கிய கூறுகளாகும். எனவே நகர சூழலுக்கு நட்புறவான முறையில் நகரதிட்டமிடலையும் நகரமுகாமைத்துவத்தையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

சேரிப்புறங்கள் சூழலைப் பாதிப்படையச் செய்வதுடன் படிப்படியாக சமூக, பொருளாதார அரசியல் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது. எனவே இப்பிரச்சினைகள் உருவாவதற்கு பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அந்தவகையில் சேரிப்புறங்களை அகற்றுவதில் இருவழிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
முன்னேற்ற முறை (சேரிப்பகுதிகளை தரமுயர்த்தும் திட்டம்)
முழுமையாக அகற்றும் முறை

இலங்கை அரசு கொட்டில்கள், சேரிப்புறங்கள் என்பவற்றின் பிரச்சினைகளுக்கு மேற்கொண்ட நடவடிக்கைகளாக சேரிப்புறங்கள் அமைந்துள்ள பகுதிகளின் நிலைமைகளை மேம்படுத்தல், பிரதேசத்தினுள் மீளக் குடியிருப்பு அமைத்தல், நகருக்கு வெளியே குடியிருத்தல், வீடுகளை கட்டட நிதி வசதிகள் வழங்குதல், சுகாதார வசதிகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
நகர்புற வறுமையினை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சுய உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல், சேரிப்புற வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்து கொடுத்தல், ஏழைகளை மேம்படுத்தும் திட்டங்களை உருவாக்குதல், சிறந்த நகர முகாமைத்துவத்தை ஏற்படுத்தல், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை வறியவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு வழிசெய்தல், சேமிப்பு வசதி வாய்ப்புகளை வறியவர்களிடையே ஏற்படுத்தல் போன்றவற்றின் மூலம் கட்டுப்படுத்த முனையலாம்.

மேலும் இலங்கை பௌதீக திட்டமிடல் கொள்கைகள் மற்றும் நகர திட்டமிடல், பௌதீக விருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான வழிக்காட்டல் '2030ஆம் ஆண்டளவில் இலங்கை'(2030 இல் இலங்கை தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம்) போன்ற செயற்பாடுகளை முன்வைத்துள்ளது.

தேசிய பௌதீக கட்டமைப்பு திட்டமிடல் கொள்கையில் தேசிய பௌதீக திட்டமிடலூடாக சுற்றாடலுடன் அதிக தொடர்புள்ள பிரதேசங்கள் மாநகர வலயங்கள் மாநகர மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வலயங்களுக்கிடையிலான தொடர்புகள் இனங்காணப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பு திட்டமிடலூடாக தேசிய பௌதீக திட்டமிடல் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஒருமுகப்படுத்தும் வழிகாட்டல் இடம்பெறும். தேசிய பௌதீக திட்டமிடல் மூலம் ஏற்படுத்தக்கூடிய துறைகள் சுற்றாடல் வலய பாதுகாப்புடன் நகர மத்திய நிலையங்களை பயன்படுத்துவதுடன் பொருளாதார சமூக நடவடிக்கைகளை விருத்தி செய்வதுடன் முழு இலங்கையையும் விருத்தி பெறச் செய்தல் என்பன எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டமிடலினூடாக மக்கள் பிரிவுகளுடனான தொடர்பு, நிலப்பயன்பாடு, போக்குவரத்து, பொருளாதார செயற்பாடுகள், பொருளாதார சமத்துவதின்மையைக் குறைத்தல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றது

எனவே நகராக்கம் என்பது பிரச்சினைகளை தோற்றுவிக்கின்ற போதிலும் கூட நகராக்கம் என்ற ஒன்று ஏற்படாமல் இருக்கமுடியாது. மனிதன் தனது ஆளுமைத்திறன் காரணமாக இந்த உலகில் பல்வேறான பிரம்மிக்கத்தக்க நகராக்கதிட்ட அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றான். இருந்தாலும் மனிதன் தனது மனித வாழ்வுக்கு எதிரியாகிறான். இந்த வகையில் ஒவ்வொரு மனிதனும் தனது பொறுப்பை உணர்ந்து செயற்பட்டால் நகராக்கத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தடுப்பதற்கு எந்த விதமான சட்ட திட்டமோ தேவையில்லை. ஒரு வேளாண்மை நாட்டை நகரமயமாதல் நிலைக்கு மாற்றுவது மேலே கூறியது போன்ற பல பிரச்சினைகளை விளைவிக்கும் என்பதிலும் ஐயமில்லை. ஆனால் அதே சமயம் நகரமயமாதலினால் விளையக்கூடிய முழுப் பயனும் எதிர்மறையானது அன்று என்பதை இங்கு சுட்டிக்காட்டுவது தேவையாகும்.

நகரங்களே தொழிநுட்பத்துறையிலும் உற்பத்தியிலும் வாழ்க்கைத் தரத்திலும் அறிவியல் வளர்ச்சியிலும் புதிய கலைவடிவங்களை உண்டாக்குவதிலும் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க வழிவகுப்பதினால் நகரங்களின் வளர்ச்சியும் அவற்றின் மாற்றங்களும் காலத்திற்கு காலம் அவசியமாகிறது.

https://www.facebook.com/permalink.php?story_fbid=942109595908234&id=271266222992578

1 comment: