கடந்த பதிவின் [ எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை ] தொடர்ச்சியாக அறிவழிகளையும் முன்மொழிவுகளையும் 4 பகுதிகளாக வெளியிட இருக்கிறோம். 4 பகுதிகளும் பின்வரும் தலைப்புகளில் வெளியாகும்.
குடிமை மாவட்ட மண்டலம் – பகுதி 1 (Civic District Zone – Part 1)
நடுவண் வணிக மாவட்ட மண்டலம் – பகுதி 2 (Central Business District Zone – Part 2)
கரையோர மண்டலம் – பகுதி 3 (Coastal Zone – Part 3)
தீவு மண்டலம் – பகுதி 4 (Island Zone – Part 4)
அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 1
யாழ் நகரத்தின் வளர்ச்சியானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கு இடையில் வலுவான தொடர்பினை ஏற்படுத்துவதுடன் யாழ் மாவட்டத்தின் ஏனைய சிறு நகரங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாகவும் அமையும் என்ற வகையில் இந்நகரத்தின் திட்டமிட்ட அபிவிருத்தி என்பது மிகவும் தேவையாகின்றது. அந்தவகையில் கீழ்வரும் அறிவழிகளும் முன்மொழிவுகளும் முன்வைக்கப்படுகின்றன.
1) யாழ் நகரத்தினை மையமாகக் கொண்டு பின்வரும் பிராந்திய நடுவங்களை (regional centers) உருவாக்குதல்
- தொடர்வண்டி நகரம் (Railway town)- (முன்மொழிவு – UDA)
- செயலகம் (கச்சேரி)
- திருநெல்வேலி யாழ் பல்கலைக்கழகமும் அதன் மிக அருகாமைச் சூழலும் (immediate surrounding))
- தட்டாதெருச்சந்தி (யாழ் நகர எல்லைப்பகுதி)
- கல்வியங்காடு
- நெடுங்குளம் சந்தி
இவற்றினை வீதியின் இருமருங்கும் வளர விடாது மண்டல (வலய) ரீதியாக விரிவாக்கம் செய்தல் (Enhancement of the zones) , பிராந்திய நடுவங்கள் (regional centers) என்பவற்றினை போக்குவரத்து மற்றும் தொழிற்பாட்டு அடிப்படையில் வலுப்படுத்துவதுடன் யாழ் நகரத்துடன் இறுக்கமான தொடர்பினை ஏற்படுத்துவதுடன் முறையான திட்மிடலின் கீழ் சேவைகளினை மையக் குவிப்பற்றுப் பரவலாக்கம் செய்தல் (decentralize)
2) ஏலவே நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் நகரத்தின் ஆற்றல் வளத்தின் (Potential) அடிப்படையில் கீழ்வரும் முதன்மையான அபிவிருத்தி மண்டலங்கள் (வலயங்கள்) பிரிக்கப்பட்டுள்ளன.
a) நகர் நடுவண் அபிவிருத்தி (City Center Development)
b) தண்ணீர் முன் வளர்ச்சி மண்டலம் (Water front Development Zone) (Lagoon Development)
c) தீவு அபிவிருத்தி (Island Development)
d) குடியிருப்பு சார்ந்த அபிவிருத்தி (Residential Development) (கலப்புப் பயன்பாட்டு அபிவிருத்தியாக {Mixed Use Development} மாற்றுவது மிகவும் பொருத்தமானது)
இவற்றுடன் கீழ்வரும் விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்படுதல் மிகவும் பொருத்தமானதாகும்
- யாழ் நகரத்தின் தனித்தன்மை, வரலாறு, பண்பாடு என்பனவற்றை என்றைக்கும் நிலைநிறுத்தும் யாழ்ப்பாணக்கோட்டை, யாழ் மாநகர சபை, யாழ் நூலகம், யாழ் நீதிமன்றம், சுப்பிரமணியம் பூங்கா, செல்வநாயம் தூபி ஆகியவற்றினை உள்ளடக்கிய பகுதியினை குடிமை மாவட்டமாக (Civic District) அறிவித்தல்;
- நல்லூர், காலனித்துவ குடியேற்றம் (Colonial Settlement) (1- 4 ஆம் குறுக்குத் தெருக்கள் {1st cross street to 4th cross street}) ஆகியவற்றினை பழமைசார்ந்த மண்டலமாகவும் (Conservative Zone)
- நகரத்தின் எல்லைப்பகுதியினை தொழில்துறை மண்டலம் (Industrial Zone) ஆகவும் அமைத்தல்-
வடமேற்குப்பகுதி
- குடிமை மாவட்டத்தில் (Civic District) இடம்சார்ந்த (spatial) ரீதியாக வினைத்திறனான மாற்றத்தினை ஏற்படுத்தவும் அதனை பகல் இரவு என இரு பொழுதும் இயங்க கூடிய வகையில் புதிய செயற்பாடுகளினை (activities) ஏற்படுத்தல்.
ஏலவே குறிப்பிட்டபடி இந்த குடிமை மாவட்டம் (Civic District) எனக் குறிப்பிட்ட பகுதியானது பண்ணைச் சந்தியிலிருந்து தொடங்கி யாழ்ப்பாணக்கோட்டை, யாழ் மாநகர சபை, யாழ் நூலகம், யாழ் நீதிமன்றம், சுப்பிரமணியம் பூங்கா, தந்தை செல்வநாயம் தூபி, நகர அபிவிருத்தி அதிகார சபை கட்டடத் தொகுதி, புல்லுக்குளம் (Proposed) கலாசார மண்டபம், விரசிங்கம் மண்டபம் மற்றும் துரையப்பா விளையாட்டரங்கம் ஆகியவற்றினை உள்ளடக்கிய பகுதியாகும்.
- யாழ்ப்பாணக் கோட்டையினை மரபுரிமை சார்ந்த சின்னமாக மட்டும் பயன்படுத்தாமல் நகர் நடுவில் உள்ள பொருண்மியத்தினை மேம்படுத்தும் நடுவமாகவும் தமிழரின் பண்பாட்டை எடுத்தியம்பும் வகையிலும் அமைத்தல் (Heritage is not only asset, it should contribute economic development of the city and should reflect the Tamilizan Culture).
அந்தவகையில் கீழ்வரும் செயற்பாடுகளினை (activities) நடைமுறைப்படுத்தலாம்.
- யாழ்ப்பாண அருங்காட்சியகம் (museum), தொல்பொருள் துறை (department of Archaeology). தொல்பொருளியல் திணைக்களத்தில் ஒரு பகுதி (Part of the Depart of Archaeology), யாழ் பல்கலைக்கழகம் (University of Jaffna) என்பவற்றினை இடமாற்றுதல் (relocate).
- யாழ்பாண பாரம்பரிய நடுவம் (heritage Centre)/ சுற்றுலாத்துறைத் திணைக்களம் (Tourism Department)/ விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறை (Hospitality and Tourism Department, Exhibition Centre) அமைத்தல்.
- புதிய செயற்பாடுகளினை நடைமுறைப்படுதத்தல் (New Activities)
- உள்ளரங்க விளையாட்டு (Indoor Game (YMCA))
- உடற்பயிற்சி (Fitness)
- சிற்பப் பூங்கா அல்லது தாவரவியற் பூங்கா (Sculpture Garden or Botanical Garden)
- ஆயள்வேத மூலிகைத் தோட்டம்
- யாழ்ப்பாண உணவு நிலையங்கள் , பண்பாட்டினை எடுத்தியம்பக் கூடிய பொருள் விற்பனை நிலையங்கள்
மாநகர சபை அல்லது தொல்பொருள் திணைக்களம் அல்லது கலாசாரத் திணைக்களத்தினால் மாதந்தோறும் ஏதாவது ஒரு நிகழ்வினை ஒழுங்கு செய்தல் (Cultural Show, Carnatic Musical Event or Heritage Day, Lighting Event, Art or Painting Event for School Children or Adult)
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இப்பகுதியினை முழுமையாக இயங்க வைத்தல். இவ்வியக்கமானது இப்பகுதியினையும் இதனை அண்டிய பகுதியினையும் சிறந்த முறையில் தொழிற்படவைக்கும்.
- ஏலவே திட்டமிட்டபடி யாழ் மாநகர சபையினை மீள அமைத்தல். இக்கட்டடமானது தமிழ் கட்டடக் கலையினை முழுமையாக எடுத்தியம்புவதுடன் இதனுடைய அனைத்து செயற்பாடுகளினையும் உள்ளடக்ககூடிய வகையில் சிறந்த உட்புற வடிவமைப்பினை (Interior Design) கொண்டிருத்தல்;
- புதிதாக அமைக்கப்படவுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை கட்டடத் தொகுதியானது தமிழ் கட்டடக் கலையின் எடுத்தொளிப்புடன் வினைத்திறனாக அமைக்கப்படல்
- சுப்பிரமணியம் பூங்காவினுடைய மதில்களினை அகற்றி சிறந்த முறையில் இயற்கையோடியைந்த வனப்பூட்டல் (landscaping) செய்தல், உணவகம் (restaurant), சிறுவர் விளையாட்டு அமைவுகள் என்பனவற்றை அமைப்பதன் மூலம் இதனுடைய பயன்பாட்டினைக் கூட்டுதல், யாழ் நீதிமன்றத்திற்கான வாகன நிறுத்தகங்களை நீதிமன்ற வளாகத்தினுள் அமைப்பதன் மூலம் இப்பூங்காவினை மேலும் விரிவாக்குதல்.
- இப்பகுதியில் தனியார் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக முன்மொழிவு காணப்படுகின்ற போதிலும், ஒரு நகரத்தில் சிறந்த பொது போக்குவரத்து முறைமை (Public transport System) தேவையானதாகும். இருப்பினும் தனியார் முயற்சிகளினை வரவேற்று இவற்றிற்கான நிறுத்தகங்களை, முன்மொழியப்பட்ட தொடர்வண்டி நகரம் (Proposed Railway Town) போன்றவற்றை அமைக்கலாம் என்ற முன்மொழிவுடன் இவ்விடத்தில் தனியார் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான முன்மொழிவினை கைவிடுவதுடன் யாழ்ப்பாணக் கலாசார மண்டபம் அமைப்பதற்கான முன்மொழிவுகள் இருப்பதன் காரணமாக எதிர்காலத்தில் வீரசிங்கம் மண்டபத்தின் தேவைப்பாடு இல்லாத காரணத்தினாலும் இந்நிலத்தில் யாழ் மாநகர சபையானது சிறந்த அபிவிருத்தி ஒன்றிற்கான திட்டமிடலினை மேற்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இப்பகுதியும் இதனை அண்டிய பகுதியும் அதிகமாக அலுவலங்களினைக் கொண்டு இருப்பதனால் முன்மொழியப்படவுள்ள செயற்பாடுகள் இப்பகுதியினை இரவு நேரத்திலும் இயங்க வைக்க கூடிய வகையில் இருத்தல் தேவையானதாகும். (கலப்புப் பயன்பாட்டு அபிவிருத்தியினை mixed use development கொண்டு இருத்தல் தேவையானதாகும்)
- மேலும் புல்லுக்குளம் இப்பகுதியிற்கே ஒரு தனி அழகினை கொடுக்கின்றது. . இதில் மரத்தினாலான சிறப்பு நடைபாதைகள் (Board walk), இதனைச்சுற்றி நடைபாதைகள், உணவகம் (Restaurant), உடற்பயிற்சிக் கருவிகள் (Exercise equipment), இதனுடன் இணைந்த நடவடிக்கைகளினை வழங்குவதன் மூலம் இக்குளத்தினை மேலும் மெருகு படுத்தலாம். அத்துடன் இதற்கு அணமையில் ஆனால் பின்புறமாக (not facing to pond) மருத்துவ மாணவர்களினுடைய விடுதி காணப்படுகின்றது. இவ்விடுதியினை
தெரிவு 1 – மருத்துவமனை வளாகத்தினுள் அமைத்தல்
தெரிவு 2- பொருத்தமான வேறு ஒரு இடத்தில் அமைத்தல் (இது அவ்விடம் சார்ந்த அபிவிருத்தியை மேலும் தூண்டும்
தெரிவு 3 – குளத்தினை நோக்கியதாக ஊக்குவித்தல் (Activate facing to Pond)
இவ்வாறு மருத்துவ மாணவர் விடுதியினை இடமாற்று (relocate) செய்வதன் மூலம் ஏலவே நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புல்லுக்குளத்திற்கு அண்மையில் உள்ள ஒரு பசுமைப் பூங்கா (green Park) அமைப்பது தொடர்பான முன்மொழிவு காணப்படுகின்றது. எனவே தற்போதைய வீரசிங்கம் மண்டப காணி, முன்மொழியப்பட்ட தனியார் பேருந்து நிறுத்தகத்திற்கான நிலம் (Proposed Private Bus stand land), பசுமைப் பூங்காக்கான நிலம் (Green Park Land) மற்றும் மருத்துவ மாணவர் விடுதி நிலம் என இவை யாவற்றினையும் உள்ளடக்கியதாக பொருத்தமான வினைத்திறனான திட்டமிடல் செய்வதன் மூலமும் கோட்டையின் வெளிப்புற பகுதியில் சிறந்த முறையில் இயற்கையோடியைந்த வனப்பூட்டல் (landscaping) செய்வதன் மூலமும் சிறந்த ஒரு அபிவிருத்தியை இவ்விடத்தில் மேற்கொள்ளலாம்.
மேலும் இந்தக் குடிமை மாவட்டத்தில் (Civic District) அதிகமானளவு பொதுத் திறந்த வெளிகளினை (Public Open Space) உருவாக்குதல் மூலம் நடைபாதைக்கு மட்டுமானதாக்கல் (Pedestrianization) என்பது மிகவும் தேவையானதாகும்
மற்றும் யாழ் தபால் நிலையமானது மிகவும் அதிகமான நிலப்பரப்பில் தனக்கான அலுவலத்தினை அமைத்துள்ளது. இக்கட்டடத்தினை அடர்த்தியதிகரிப்பு (Densification) செய்தவன் மூலம்; பல்வேறு பயன்பாடுகளிற்கு தபால் திணைக்கள வளாகம் பயன்டுத்தப்படலாம்.
மேலும் இலகு அணுகல் தன்மை (Accessibility) மற்றும் இலகு அசையுதன்மை (Mobility) போன்றவற்றினை அதிகரிப்பதன் மூலம் வலுவான தொடர்பினை ஏற்படுத்தல்
மேற்குறிப்பிடப்பட்ட முன்மொழிவுகளில் சட்டச் சிக்கல் காணப்படுகின்ற போதிலும் பேச்சுகள் (negotiation) மூலம் அவற்றினை தவிர்க்கலாம்.
பகுதி 2 இல் Central Business District (CBD) Zone தொடர்பான அறிவழிகளும் முன்மொழிவுகளும் இடம் பெறும்.
பகுதி – 2 – நகர் நடுவம் (City Center)/ நகரத் தொழிற்பகுதி அபிவிருத்தி வலயம் (Down Town Development Zone)
இவ்வலயமானது மருத்துவமனை வீதி, அராலி வீதி, நாவலர் வீதி மற்றும் கச்சேரி நல்லூர் வீதி என்பவற்றிற்கு இடைப்பட்ட நீல நிறத்தினால் நிழற்றப்பட்ட வலயமாகும். இன்று இவ்வலயமானது ஒரு கலப்பு வலயமாகவே காணப்படுகின்றது இவ்வலயத்தின் ஒரு சில பகுதிகளினை மட்டும் முழுமையான வர்த்தக வலயமாகக் கொண்டு ஏனைய பகுதிகளினை கலப்பு வலயமாகக் கொள்வது அல்லது தற்போது உள்ளது போல முழுமையாக கலப்பு வலயமாக கொள்வதே மிகவும் சிறந்ததாகும். இந்தவகையில் இவ்வலயத்தின் அமைவிடம், பொருண்மிய முதன்மை, சமூகத்தேவை மற்றும் எதிர்கால நிலையான அபிவிருத்தி என்பவற்றினைக் கருத்தில் கொண்டு பின்வரும் வழியூட்டல் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
அந்தவகையில், இவ் நகர் நடுவம் (City Center)/ நகரத் தொழிற்பகுதி அபிவிருத்தி வலயத்தினை (Down Town Development Zone) பின்வரும் துணை வலயங்களாக பிரிக்கலாம். அவை பின்வருமாறு:
அ. வர்த்தக வலயம்
ஆ) கலப்பு வலயம் (மொத்த வியாபாரம் , உற்பத்திக் கைத்தொழில்)
இ) கலப்பு வலயம் (வர்த்தகம், நிர்வாகம், சேவைக்கைத்தொழில் மற்றும் பொழுதுபோக்கு (Recreational))
இதனடிப்படையில் முதலாவதாக வர்த்தக வலயம் பற்றி நோக்குவோமாயின், வர்த்தக வலயமானது மருத்துவமனை வீதி நாவலர் வீதி, பலாலி வீதி, காங்கேசன்துறை வீதி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் வியாபார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் செறிந்து காணப்படுகின்றதுடன் இவை சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படாத காரணத்தினால் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. எனவே இவ்வலயத்தின் தற்போதைய நிலை மற்றும் அதனால் ஏற்படும் வசதிக்கேடுகள், எதிர்கால தேவைகள் என்பனவற்றினைக் கருத்தில் கொண்டு பின்வரும் முதன்மை எண்ணக்கருக்களின் அடிப்படையில் வழியூட்டல் கருத்துகள் முன்மொழியப்படுகின்றன.
- நிலவளத்தினை உச்சளவில் பயன்படுத்துதலும் தற்போது இருக்கும் இடத்தை மீள வடிவமைத்தலும் (Re-design the existing space)
- புதிய அபிவிருத்தி திட்டங்களில் நிலைத்து நிற்கும் அபிவிருத்திக் கொள்கைகளினை உள்வாங்குதல் (ஆற்றல் திறன் (Energy Efficiency), நீரில் தன்னிறைவு (Water self-sufficiency), சுழியக் கழிவு (Zero Waste), திறந்த வெளி (Open Space))
- அடர்த்தியதிகரிப்பு (Densification)
- கூட்டு ஒப்பந்த அபிவிருத்தி (Joint –Venture Development)- தனியார்-பொது கூட்டிணைவை ஊக்குவித்தல் (Encourage Private-Public Partnership)
- அணுகல் மற்றும் அசையும் தன்மைகளை மேம்படுத்தல் (Improve the Accessibility and Mobility)
- பசுமைப்போக்குவரத்துகளை (Green Transportations) அறிமுகப்படுத்தல் (நடைபாதைப் போக்குவரத்து மற்றும் ஈருருளிக்கான பாதை -Pedestrianized and Introduce Cycling way) மற்றும் கனரக ஊர்திப் பயன்பாட்டை குறைத்து சென்று-திரும்பும் ஊர்திச் சேவைகளை வழங்கல் (Discourage Heavy vehicle and provide Shuttle service)
- குடிமை மாவட்ட மற்றும் வர்த்தக வலயத்திற்கு வலுவான இணைப்பை உருவாக்கல் (Create the strong linkage between the Civic District and Commerce Zone)
- உள்நாட்டு நீர்நிலைகளை பேணிப்பாதுகாத்தலும் அவற்றிற்கு இடையில் நெருக்கமான தொடர்புகளினை ஏற்படுத்தலும். (எ.கா: ஆரியகுளம், வண்ணான்குளம், புல்லுக்குளம்,…….)
அந்தவகையில் பின்வரும் உத்திகள் இப்பகுதியில் முன்வைக்கப்படுகின்றது.
- வேறுபட்ட நில உரிமைகளினை ஒன்றிணைத்த அபிவிருத்தி
யாழ் மாநகர சபைக்கு சொந்தமான புதிய சந்தைக் கட்டடத்தொகுதி, யாழ் மாநகரசபையினால் போக்குவரத்து சபைக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தொகுதி எனயாவற்னையும் ஒரு நிலத் திணிவாக கருதி அவற்றில் ஒரு முழுமைத் திட்டம் (Master Plan)அமைத்தல்.
யாழ் நகர மத்தியில் காணப்படுகின்ற தற்போதைய பேருந்து நிலையம் போதியளவுஇடவசதி மற்றும் வினைத்திறனான போக்குவரத்து முறைமை என்பன இல்லாது நகரநடுவில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கி வருகின்றது. அதேபோல, புதிய சந்தைக்கட்டடத்தொகுதியும்; பொருத்தமற்ற அபிவிருத்திகளினை உள்ளடக்கியதாகஉச்சபயன்பாடற்ற வகையில் குறிப்பிட்ட சில மணிநேரங்கள் மட்டும் இயங்கிவருகின்றது,
நகரத்தின் மிக முதன்மையான அமைவிடம் ஒன்றில் இத்தகைய வினைத்திறனற்ற அபிவிருத்தியானது இந்நகரத்தின் தற்போதைய இயக்கம் மற்றும் எதிர்கால வளர்ச்சி என்பவற்றிற்கு நன்மை பயக்காது என்ற நிலையில், தற்போதைய மத்திய பேருந்து நிலையம், புதிய சந்தைக் கட்டடத்தொகுதி ஆகியவற்றினை ஒரு நிலத்திணிவாகக் கொண்டு சிறந்த ஒரு அபிவிருத்தி திட்டம் ஒன்றினை மேற்கொள்ளலாம். இந்நிலையில் பேருந்து நிலையத்தினை எங்கு அமைப்பது என்பது தொடர்பான வினாவிற்கு, யாழ் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தற்போதைய தொடர்வண்டி நிலையத்திற்கு அண்மையில் உள்ள நிலத்தொகுதி ஒன்றில் பல்வேறு உட்கட்டுமானங்களைக் கொண்டு Railway Township அமைப்பதற்கான சிறந்த முன்மொழிவு ஒன்று காணப்படுகின்றது. அந்தவகையில், போதிய இடவசதி மற்றும் பிற உட்கட்டுமான வசதிகளுடன் தொடர்வண்டி நிலையத்திற்கு (Railway Station) அருகாமையில் பேருந்து நிலையம் அமைவது தொடர்பான திட்ட முன்மொழிவும் வரவேற்கத்தக்கதாகும்.
எனவே இவ் அபிவிருத்தியானது வர்த்தகம், வியாபாரம், பொழுதுபோக்கு என பல்வேறு விடயங்களினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். அத்துடன் தற்போதைய புதிய சந்தைக் கட்டடமானது காலத்தால் மிகவும் பழைமை வாய்ந்தது. இப் பழைய கட்டடத்தொகுதியினை இன்னும் பல ஆண்டுகளிற்கு இவ்வாறே பேணிப்பாதுகாப்பது என்பது சுற்றுச் சூழலியல் கண்ணோட்டம் மற்றும் நகராக்கவியல் கொள்கைகளின் அடிப்படையில் சிறந்த உத்தியாகக் காணப்படவில்லை எனினும் அரசியல் மற்றும் தொல்பொருளியல் சிந்தனைகளின் அடிப்படையில் நோக்கின், இக்கட்டடமானது தமிழர் கட்டடக் கலையினை மற்றும் தழிழர்களின் அரசியல் என்பவற்றினை காலாகாலத்துக்கும் எடுத்து இயம்பும் ஒரு சின்னமாக இது விளங்கும் என்ற நிலையில் இதனைப் பேணிப்பாதுகாப்பது தேவையானது என்ற நிலையும் காணப்படுகின்றது. இந்நிலையில் இக்கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றத்தினை இவ்வாறே பேணிக்கொண்டு உட்கட்டுமானத்தினை சிறந்த முறையில் மாற்றியமைப்பதன் மூலமும் இத்தகைய பொருத்தமற்ற தற்காலிக அபிவிருத்தி நடவடிக்கைகளை தவிர்த்து (இத்தகைய நடவடிக்கைகள் இவ்வர்த்தக வலயத்தில் அமைப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். இச்சந்தையானது மக்கள் வதிவிடங்களிற்கு (Residential Zone) அண்மையில் அமைவதே மிகவும் பொருத்தமானது) புதிய கட்டடக்கலை நுட்பங்களை உள்வாங்கியதாகவும் பகல் மற்றும் இரவு என இரு பொழுதுகளும் இயங்க கூடிய வகையில் பல்வேறு வகையான வேறுபட்ட பயன்பாடுகள் மற்றும் போக்குவரத்து சேவையினை வினைத்திறனான முறையில் வழங்குவதற்கு ஏற்ற முறையில் Pick up Point போன்ற அம்சங்களினை உள்ளடக்கிய மறுமலர்ச்சி திட்டம் (Regenerative Project) ஒன்றினை அறிமுகப்படுத்தல்.
- கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள மாநகர சபையின் புதிய கட்டடடித்தொகுதியும் அதனை அண்மித்துள்ள பகுதி அபிவிருத்தியும்
யாழ் மாநகர சபையினால் மிக அண்மையில் கட்டடத்தொகுதி ஒன்று அமைக்கப்பட்டது. உண்மையில் அரசியல் லாப நோக்கங்களிற்கு அப்பால் இவ் அபிவிருத்தி நடவடிக்கையானது வரவேற்கத்தக்கது. ஏனெனில் புதிய திட்டமிடல் கொள்கைகள் இன்று தனியார்- பொது கூட்டிணைவையே (Private Public Partnership) ஊக்குவிக்கின்றன. ஆனால் இவ்வணுகுமுறையினை யாழ் மாநகர சபை சிறந்த முறையில் பயன்படுத்தவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இன்று இக்கட்டடம் பழைய மாநகர கட்டடத்தொகுதி போல ஒரு சில தளங்கள் மட்டுமே இயங்கிய நிலையில் காணபப்டுகின்றது. எனவே இக்கட்டடத்தில் உட்கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்வதன் மூலமும் வேறுபட்ட பயன்பாடுகளினை உள்வாங்குவதன் மூலமும் இக்கட்டடத்தினை இயக்குதல் என்பது கட்டாய தேவையாகும்.
அதுமட்டுமல்லாது நிழற்றப்பட்ட (மேலுள்ள படத்தில் கறுப்பு நிறத்தால் காட்டப்பட்டுள்ள பகுதி;) தனியார் அபிவிருத்தியானது, ஒழுங்கமைக்கபப்டட முறையில் அமைக்கப்படாததுடன் அவற்றில் பல ஒரு மாடிக்கட்டடங்களாகவும் சிறந்த கட்டட அமைப்புகள் அற்றதாகவும் காணப்படுகின்றன. இதனை யாழ் மாநகர சபை கருத்தில் கொண்டு ஊக்கப்படுத்தல் (incentive), வரிவிலக்களிப்பு அல்லது மேலதிகமான தளங்களிற்கு (Number of Floors) அனுமதி வழங்கல் போன்ற உத்திகளினூடாக சிறந்த அபிவிருத்தி ஒன்றினை ஊக்குவித்தல்.
மேலும் யாழ் மாநகர சபையின் புதிய கட்டடத்தொகுதிக்கு அண்மையில் உள்ள தனியார் காணி ஒன்றில் தற்காலிக தொலைவிட பேருந்து நிறுத்தகமானது இயங்கிக்கொண்டு இருக்கின்றது. இத்தனியார் காணியினை முறைப்படி பெற்று யாழ். மாநகர சபை அதில் அபிவிருத்தி நடவடிக்கைகளினை மேற்கொள்ளலாம். இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக காணுமிடத்து தனியார்- பொது கூட்டிணைவு (Private – Public Partnership) மூலம் பல செயற்பாட்டு அபிவிருத்தி (Multi-functional Development) ஒன்றிற்கு வழிவகுத்தல் சிறந்த திட்டமிடலாகும்.
இந்நிலையில் தனியார் பேருந்து நிலையத்தினை எங்கு அமைப்பது என்ற வினாவிற்கு, ஒரு நகரத்திற்கு பன்முகப்பட்ட போக்குவரத்து முறைகள் சிறப்பானதாகும் எனினும் அவை ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல் தேவையானதாகும். யாழ் நகரத்தில் வேறுபட்ட வாகன உரிமைகள் வேறுபட்ட நிறுத்தகங்கள் என அரச பேருந்து நிலையம் , தனியார் பேருந்து நிறுத்தகம், தொலைவிட பேருந்து நிலையம், தனியார் தொலைவிட பேருந்து நிலையம் என பல பேருந்து நிலையங்கள் காணப்படுகின்றன. வேறுபட்ட வாகன உரிமைகள் வினைத்திறனான சேவையினையும் தொழில் வாய்ப்புகளினையும் வழங்குவதனால் அதனை வரவேற்று அவற்றிற்கான நிறுத்தகங்களை ஒரு ஓழுங்குமுறையின் கீழ் ஒருமுகப்படுத்தி பல இடை மாற்றங்களை (interchange) உருவாக்கலாம். ஓவ்வொரு interchange இலும் குறிப்பிட்ட சில நிமிடங்கள் வாகனங்கள் தரித்து நிற்கும். எடுத்துக்காட்டாக தொடர்வண்டி நகரத்தில் (Railway Town) மத்திய பேருந்து நிலையம் அமைய முன்மொழியப்பட்ட மறுமலர்ச்சி திட்டம் (Regenerative Project) (தற்போதைய பேருந்து நிலையம் , மாநகர சபைக் கட்டடத்தொகுதி என்பவை உள்ளிட்ட பகுதியில்;) , தற்போதைய மாவட்ட செயலகம், ஆனைக்கோட்டை , நல்லூர், தட்டாதெரு சந்தி, திருநெல்வேலி என பல போக்குவரத்து நடுவங்களினை (transport nodal point) உருவாக்குவதன் மூலம் அபிவிருத்தியினை விரிவாக்கலாம். ஆனால் தற்போதைய அபிவிருத்தி முயற்சிகள் வேறுபட்ட வாகன உரிமைகளினை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டு வருகின்றமை விளைதிறனான திட்டமிடலாக அமையாது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் மக்கள் குறிப்பிட்ட இடத்திலேயே ஒன்று திரண்டு காணப்படுவர் என்ற விவாவதங்களினைத் தவிர்த்து மக்களின் இயங்குகை (people movement) இருக்கக் கூடியவகையில் அபிவிருத்தியானது பன்முகப்படுத்தப்பட்ட முறையில் அமைத்தல் என்பது திட்டமிடலாளர்களின் கடமையும் திறமையும் கூட.
- யாழ் பெரிய மருத்துவமனையில் திட்டமிட்ட நிலமுகாமைத்துவத்தினை மேற்கொள்ளுவதற்கு யாழ் மாநகர சபையையும் நகர அபிவிருத்தி அதிகார சபையையும் ஊக்குவித்தல்.
இவ் மருத்துவமனையில் நிலவளம் குறைப்பயன்பாட்டில் உள்ளது (underutilized) என்றே கூறலாம். எனவே மருத்துவ சேவையுடன் சமூக அபிவிருத்தி (Community Development), எரிசக்தி திறன் (Energy Efficiency), பொதுமக்கள் ஈடுபாடு (Public Involvement) என பல்வேறு நடவடிக்கைகளினை மேற்கொள்ளலாம். அத்துடன் யாழ் நகரத்தில் யாழ் சிறைச்சாலைக்கு அடுத்ததாக (core) அதிக உயரத்தில் யாழ் மருத்துவமனையே அதிக உயரமான சுவர்களைக் கொண்டுள்ளது. யாழ் மாநகர சபையானது அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் என்பவற்றிற்கு மதில்கள் அமைப்பதனை குறைக்கச் செய்தல் வேண்டும் இல்லாதவிடத்து பசுமை மதில்களையாவது (Green Wall) அறிமுகப்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில் மருத்துவமனையின் மதிலினை குறைப்பதன் (setback) மூலம் மருத்துவமனை மதிலிற்கும் வெள்ளவாய்காலிற்கும் இடையில் நடைபாதை மற்றும் ஈருருளிப் பாதை என்பவற்றினை அமைத்தல்.
இதேபோல, மாநகர சபையின் புதிய கட்டிடத்தொகுதிக்கு அண்மையில் உள்ள வண்ணான் குளத்தினை மீண்டும் சீரமைத்து அழகுபடுத்தி வைப்பதுடன் புதிய அபிவிருத்தி திட்டங்களை இக்குளத்தினை நோக்கிய வண்ணம் அமைப்பதுனூடாக இக்குளத்தினை ஒரு பொதுவெளியாக (public space) இயங்க வைத்தல். அத்துடன் இப்பகுதியில் கால்வாய் (canal) குறுகிய தூரத்தில் செல்கின்றது. இவ் வெள்ளவாய்க்காலின் இரு மருங்குகளிலும் நடை பாதைகள் அமைத்தல் என அணுகல் மற்றும் அசைவுத் தன்மைகளினை (accessibility & mobility) அதிகரிக்கக் கூடிய இலகுவான போக்குவரத்து முறைகளை அறிமுகப்படுத்துவதுடன், இது நிலமதிப்பினையும் (land value) அதிகரிக்கச் செய்கின்றது. இது மட்டுமல்லாது, யாழ் நகர மத்தியில் மருத்துவமனை வீதி, பாலாலி வீதி, யாழ் நூலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீளமான வெள்ளவாய்கால்கள் காணப்படுகின்றன. இவ்வெள்ளவாய்கால்கள் இரு மருங்குகளிலும் நடைபாதைகள் மற்றும் ஈருருளிக்கான பாதைகள் அமைத்தல். இவ்வாறு நடைபாதைகள் மற்றும் ஈருருளிக்கான பாதைகள் என்பனவற்றின் விரிவாக்கமானது, வெள்ளவாய்க்கால்கள் தூய்மையாக பேணப்படுவதுடன் இலகுவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து முறைமைமையை அறிமுகப்படுத்தி வலயங்களிற்கு இடையில் நெருக்கமான பிணைப்பினை ஏற்படுத்துகின்றது.
நகர் நடுவம் (City Center)/ நகரத் தொழிற்பகுதி அபிவிருத்தி வலயம் (Down Town Development Zone) தொடர்ச்சி
ஆ) கலப்பு வலயம் (வதிவிடம், மொத்த வியாபாரம் மற்றும் உற்பத்திக் கைத்தொழில்)
இவ்வலயமானது காங்கேசன்துறை வீதியிலிருந்து மருத்துவமனை வீதி, பொன்னாலை வீதி, உள்ளடக்கிய பகுதியாகும். இவ்வலயமானது தற்போது பெரும்பான்மை நிலப்பயன்பாடாக குடியிருப்புக்கள் மற்றும் வியாபார வர்த்தக நடவடிக்கைகளுடன் சிறுகைத்தொழில் நடவடிக்கைகளையும் கொண்டுள்ளது.
உரு- 01 – அமைவிடம்
அந்தவகையில் இவ்வலயமானது பின்வரும் வலுவினைக் (strength) கொண்டுள்ளது.
- நடுவண் பொருண்மிய வலயத்திற்கு அண்மையிலும் அதனுடன் நெருக்கமான தொடர்பினையும் கொண்டுள்ளமை
- நகர எல்லைப்புற விரிவாக்கத்திற்கு ஏதுவாக உள்ளமை
- நகரத்தின் இயற்கை அழகுடன் நேரடியான தொடர்புபடுதல்(கடல் , வேளாண்மை)
- சிறந்த வீதிவலைப்பின்னல், பௌதீகக் கட்டுமானங்களினை கொண்டுள்ளமை
- மக்கள்செறிவு அதிகமாகக் கொண்டுள்ளமை
- சமூக கட்டுமானங்கள் சிறந்த முறையில் விருத்தி பெற்றுக் காணப்படுகின்றமை.
- பொருண்மியவளம் மற்றும் ஏற்கனவே சிறு கைத்தொழில் நடவடிக்கைகள் காணப்படுகின்றமையும் அவற்றிற்கு ஏதுவாக களஞ்சியம் மற்றும் போக்குவரத்து வசதிகள் காணப்படுகின்றமை.
மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில், மேலே குறிப்பிடப்பட்ட ஆ.கலப்பு வலய எல்லையானது நகர எல்லை வரை விரிவாக்கம் செய்யப்படுகின்றது.
அதேநேரம் கீழ்வரும் சிக்கல்களும் இனங்காணப்பட்டுள்ளது.
- 50 வீதத்திற்கு மேற்பட்ட குடியிருப்புக்கள் தற்காலிகமானவையும் போரினால் பாதிப்படைந்தவையுமாகும்
- நன்கு விருத்தி பெற்ற கால்வாய்கள் மற்றும் குளங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாத காரணத்தினாலும் மக்களால் சுரண்டி குடியிருப்பபுக்கள் அமைக்கப்பட்ட காரணத்தினாலும் பௌதீகக் கட்டமைப்புக்களில் ஏற்பட்ட மாற்றங்களினால் வெள்ளப்பெருக்கு அபாயம் காணப்படுகின்றமை
- வெள்ள அபாயம் நிறைந்த இடங்களில் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளமை
- பெரும்பான்மை நிலப்பயன்பாடு குடியிருப்புக்களாக இருந்தாலும் அவற்றிற்கான சமூக்கட்டுமானங்கள் போதியளவு இன்மையும் விருத்தி பெறாத நிலையும்
- கைத்தொழில் நடவடிக்கைகான சிறந்த ஆற்றல்வளம் (potential) இருந்த போதிலும் அவை இன்னும் தொடக்க நிலையிலேயே (initial stage) இருத்தல்.
எனவே மேற்குறிப்பிடப்பட்ட வலிமை (strength) மற்றும் வலிமைக்குறைவு (weakness) என்பவற்றினை அப்படையாக் கொண்டு இவ்வலய அபிவிருத்தியானது பின்வரும் முதன்மைக் கருத்தின் (concept) அடிப்படையில் அபிவிருத்தி செய்யலாம் என பரிந்துரைக்கப்பபடுகின்றது.
- வீடமைப்பு அபிவிருத்தி (Housing Development)
- உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் இயங்குதன்மையை அதிகரித்தல் (Infrastructure Improvement and Enhance acceptability and mobility)
- பொதுவெளியை அதிகரித்தலும் மேம்படுத்தலும் (Increase and Improve the Public Space)
- தொழில்துறை மற்றும் வர்த்தக வளர்ச்சி (Industrial and commercial development)
1. பொருளாதார மையங்களினை விருத்தி செய்தல்
இப்பிரதேசத்தில் நாவாந்துறைச் சந்தி, காக்கைதீவு, தட்டார்தெருச்சந்தி, ஓட்டுமடம் சந்தி என்பன ஏற்கனவே சந்திகளினை ஒட்டி விருத்தி பெற்று இருப்பினும் இவை முறையான திட்டமிடல் இன்றி உட்கட்டுமானங்கள் அற்றனவாகவும் காணப்படுகின்றன. இந்நிலையில் இப்பிரதேசமானது கடலினை அண்டிக் காணப்படுவதுடன் இப்பிரதேச மக்களது பிரதான வாழ்வியானது கடல்சார்ந்த வளங்களினை அண்டிக்காணப்படுவதனால் கடல்சார் வள விருத்தி என்பது அத்தியாவசியமாகின்றது என்ற நிலையில் நாவாந்துறை மற்றும் காக்கைதீ:வு என்பவற்றினை சிறந்த உட்கட்டுமானங்கள் உள்ள பொருளாதார மையங்களாக அமைத்தல். மேலும் காக்கைதீவுச்சந்தியானது நகரத்தின் எல்லையில் காணப்படுவதுடன் இப்பகுதியின் வளர்ச்சியானது புறநகராக்கம் அல்லது அதனை ஒட்டிய விருத்திக்கு மற்றும் கடல்சார் வள கைத்தொழிலாக்கம் என்பனவற்றிற்கு வழிவகுக்கும்.
இப்பிரதேசத்தில் நாவாந்துறைச் சந்தி, காக்கைதீவு, தட்டார்தெருச்சந்தி, ஓட்டுமடம் சந்தி என்பன ஏற்கனவே சந்திகளினை ஒட்டி விருத்தி பெற்று இருப்பினும் இவை முறையான திட்டமிடல் இன்றி உட்கட்டுமானங்கள் அற்றனவாகவும் காணப்படுகின்றன. இந்நிலையில் இப்பிரதேசமானது கடலினை அண்டிக் காணப்படுவதுடன் இப்பிரதேச மக்களது பிரதான வாழ்வியானது கடல்சார்ந்த வளங்களினை அண்டிக்காணப்படுவதனால் கடல்சார் வள விருத்தி என்பது அத்தியாவசியமாகின்றது என்ற நிலையில் நாவாந்துறை மற்றும் காக்கைதீ:வு என்பவற்றினை சிறந்த உட்கட்டுமானங்கள் உள்ள பொருளாதார மையங்களாக அமைத்தல். மேலும் காக்கைதீவுச்சந்தியானது நகரத்தின் எல்லையில் காணப்படுவதுடன் இப்பகுதியின் வளர்ச்சியானது புறநகராக்கம் அல்லது அதனை ஒட்டிய விருத்திக்கு மற்றும் கடல்சார் வள கைத்தொழிலாக்கம் என்பனவற்றிற்கு வழிவகுக்கும்.
2. திட்டமிட்ட குடியிருப்பு
படத்தில் காட்டப்பட்ட இப்பகுதியானது முற்றுமுழுதாகவே குடியிருப்புச் சார்ந்த பகுதியாகும். (Refer existing land use map and disaster map) இருப்பினும் நிலத்தோற்றம், குளங்கள் மற்றும் கால்வாய்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டமையால் வெள்ள அபாயத்திற்கு உட்படுத்தப்பட்ட பகுதியாகவும் காணப்படுகின்றது. தற்போது இவ்வபாயங்கள் கட்டுப்டுத்தப்பட்ட நிலை காணப்படினும் எதிர்காலத்தில் இதன் நிலை எவ்வாறு அமையும் என்பது சிந்திக்கத்தக்க விடயமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் முறையான நிலப்பண்ணடுத்தல் பொறிமுறை (Land preparation and consolidation) விஞ்ஞானத்தின் கீழ் அனைத்துவசதிகளும் கொண்ட திட்டமிட்ட குடியிருப்பு ஒன்றினை அமைத்தல். இது முழுமையான குடியிருப்பு வலயமாக அன்றி கலப்பு வலயமாக அமைதல் அவசியமாகும். இத்திட்டமிட்டலானது ஏற்கனவே விடயம் 1 இல் குறிப்பிட்டது போல இதனை அண்டிய பகுதிகளின் விருத்திக்கு வழிவகுக்கும்.
3. சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் விருத்தி
இப்பகுதியில் ஏற்கனவே மீன் உணவு பதனிடுதல், கழிவு இரும்புகள் சேகரித்தல் மற்றும் இயந்திர பழுதுபார்க்கும் ஆலைகள் (mechanical repairing) மற்றும் யாழ் மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவம் சார்நத உர உற்பத்தி என்பன மிகவும் ஆரம்ப நிலையில் காணபப்டுகின்றன. இக்கைத்தொழில்களினை நடுத்தர கைத்தொழிலாக விருத்தி செய்வதற்கு ஏதுவான அமைவிடம், மூலப்பொருள், இடவசதி, மாந்தவலு என்பன இப்பகுதியில் காணப்படுவதனால் நடுவண் சுற்றுச் சூழல் அதிகார அபையின்
விதிமுறைகளிற்கு அமைவாக இப்பகுதியில் இவற்றினை விருத்தி செய்தல் என்பது தேவையாகின்றது.
இந்நிலையில் யாழ் நகரத்தில் கைத்தொழில்துறை விருத்தி செய்தல் பௌதீக கட்டமைப்புக்களிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்ற விமர்சனம் காணப்படுகின்றது. இந்நிலையில் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் இந்நகரில் கைத்தொழில் துறைசார்ந்த அபிவிருத்தியானது தேவையாகின்றது.
அ. தற்போது யாழ் நகரத்திலே வட மாகாணத்திலோ சரி பொருண்மியமானது முதலாம் நிலைக் கைத்தொழிலை அடிப்படையாகக்கொண்டு காணப்படுகின்றதுடன் கடந்தகால போரின் காரணமாகவும் வலுவான பொருண்மியக் கொள்ளைகள் இல்லாத காரணத்தினாலும் முறையான தொழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினாலும் அதிகரித்துவரும் மூளைசாலிகள் மற்றும் பொருண்மிய விருத்திக்காக குடியகல்வு என்பது பெரும் சிக்கலாகவே காணப்படுகின்றது. இக்குடியகல்வானது முறையான திட்டமிட்டமிடலினை மேற்கொள்வதற்கு பெரும் சவாலாக உள்ளமையால் இத்தகைய குடியகல்வினைக் கட்டுப்படுத்துவதற்கும் மேலும் குடிவரவினை அதிகரிப்பதற்கும் கைத்தொழில்துறை விருத்தி தேவையாகின்றது.
ஆ. அத்துடன் வட மாகாணத்தில் ஏற்கனவே நிறுவப்பட்ட கைத்தொழில் பேட்டைகளும் எந்தளவுக்கு வருமானம் மற்றும் வேலைவாய்ப்பினை ஈட்டித்தருபனவாக காணப்படுகின்றன என்பது ஐயப்பாட்டினையே ஏற்படுத்தி வருகின்றது. எனவே யாழ்நகரில் இத்தகைய கைத்தொழில் ரீதியான வலய விருத்தியானது சிறந்த சந்தைவாய்ப்பினை வழங்கும் நடுவமாக விளங்கும்.
இ. இதைவிட இப்பகுதியில் ஏற்கனவே யாழ் நகரத்தில் சிறு மற்றும் நடுத்தரளவிலான மீன்பிடிக்கைத்தொழில், இரும்பு மீள் பயன்பாடு, பழச்சாறு மற்றும் உர உற்பத்தி காணப்படுக்கின்றது. இவற்றினை பன்னாட்டுச் சந்தைக்கு எடுத்துச்செல்லக்கூடிய வகையில் முதலீட்டாளர்கள் அணியமாக உள்ளனர். எனவே இத்துறைசார்நத தொழினுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் பொறிமுறைகளினை விருத்தி செய்தல்
ஈ. இன்று திண்மக் கழிவு முகாமைத்துவம் என்பது ஒரு நகரத்தின் பௌதீக காரணிகள் மற்றும் அழகு, உயிர்த்திறன் (livability) என்பனவற்றை மேம்படுத்துவதாகக் காணப்படுகின்றதுடன் நகரப் பொருண்மியத்தில் மறைமுகமாகப் பங்கு செலுத்துகின்றது. இந்நிலையில் யாழ் மாநகர அவையினால் ஆண்டுதோறும் சேகரிக்கப்படுகின்ற திண்மக் கழிவுகள் எந்தளவுக்கு வருவாயினை ஈட்டித்தருவகின்றன என்பது பற்றி தெரியவில்லை. இது தொடர்பாக கடந்த காலங்களில் காக்கைதீவுப்பகுதியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அவை இன்னும் நடைமுறையில் இருப்பது ஐயப்பாடாகும். இதுதவிர யாழ் மாநகர அவை தன்னுடைய வருவாயினை அதிகரிப்பதற்கு இத்தகைய கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபடுதல் தேவையாகின்றது.
உ. யாழ் பல்கலைக்கழக பேராசிரியரினால் கழிவு இரும்புகளினைக் கொண்டு சிறு மகிழுந்துகளை உருவாக்கும் உற்பத்தி முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது என்ற நிலையில் தமிழ் மக்கள் தன்னார்வமும் விடாமுயற்சியும் உள்ளவர்கள் என்ற வெளிப்படை உண்மைக்கு ஏற்ப அவர்களிற்கான பொருண்மிய, தொழினுட்ப முயற்சிக்கான களங்கள் அமைத்துக்கொடுத்தல் என்பது முதன்மையானது.
மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் வடமாகாணத்திலோ அல்லது தழிழர் வாழிடங்களின் சுற்றுச்சூழலிற்கு பங்கம் ஏற்படாதவகையில் கைத்தொழில்துறையை உறுதிநிலைக்கு கொண்டுவருதல் தேவையானது என்ற வகையில் அவற்றிற்கான சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளுவதற்கு யாழ் நகரத்தினையும் அதனை அண்டிய பகுதியில் கைத்தொழில் வலய விருத்தி என்பது தேவையானது என்பதே ஆய்வாளரின் கருத்தாகும்.
4. அணுகல் மற்றும் அசைவியக்கத்தை மேம்படுத்தல் (Improve the accessibility and mobility)
யாழ் நகரத்தில் பொதுவாக வீதி வலைப்பின்னல் சிறப்பாக அமைந்து காணப்படினும் அணுகல் (accessibility) மற்றும் அசைவியக்கத்தினை (mobility) அதிகரிக்கக்கூடிய வகையில் அவ்வீதிவலைப்பின்னல் அமையவில்லை என்பது பெரும் குறைபாடாகவே காணப்படுகின்றது. அதாவது பெரும்பாலான இடங்களில் உள்ளக வீதிகள் முட்டுச்சந்து (dead end) ஆகவே உள்ளன. அத்துடன் இப்பகுதியிலும் சரி யாழ் நகரம் முழுவதிலும் சரி நடைபாதைகளோ ஈருருளிப்பாதைகளோ இல்லை.(நவீன நகரத்திட்டமிடலானது இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ஈருருளிப் பயன்பாட்டினை தூண்டுகின்ற வேளையில் இலங்கையில் யாழ் நகரத்தில் மகிழுந்துப் பயன்பாட்டினை தூண்டுகின்ற கொள்கைள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றமை மிகவும் வருத்தத்திற்கு உரிய விடயமாகும்.)
அந்தவகையில் பின்வருமாறு; உள்ளக வீதிகளிளை பேச்சுகளின் (negotiation) மூலம் ஒருங்கிணைக்கலாம்.
அந்தவகையில் வரைபடம் 1 இல் காட்டப்பட்டுள்ள படி இரண்டு இயற்கையான இயல்புகளைப் பொதுப்பாதைகள் மூலம் இணைத்தல். மேலும் அதேபடத்தில் நீல நிறத்ததால் குறிப்பிடப்பட்ட பகுதியில் அதிகம் வர்த்தக நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவன்பண்ணை வீதியினையும் காங்கேசன்துறை விதியினையும் இணைத்தல் போன்ற திட்டமிடல்கள் நகரத்தின் இயங்குதன்மையை (mobility) அதிகரிக்கும்.
இதுபோல குடியிருப்புப் பகுதியிலும் திட்டமிட்ட முறையில் வீதிவலைப்பின்னலினை மேற்கொள்ளலாம் (பார்க்க வரைபடம் 2) இவ்வாறு வீதிவலைப்பின்னலினை மேலும் அதிகரித்தல் மற்றும் அதன் தேவை என்பன பற்றி மேலும் பல ஆய்வுகள் தேவையாகின்றது.
மேலும் நகரத்திலுள்ள முதன்மையான இடங்களினை இணைத்து நடைபாதைகள் அல்லது ஈருருளிப்பாதைகளை அமைத்தல் (பார்க்க வரைபடம் 3 – increase mobility and social space)
[ Street as place making ]
மேலுள்ள படங்களில் காட்டப்பட்டுள்ள பகுதியானது:
1) இந்நீண்ட அகலமான இவ் வெள்ளவாய்க்காலினை முறையான தொழினுட்பமுறைமூலம் சீமெந்து தரையிட்டு (slab) இட்டு இதனை ஒரு பொதுப் பாயன்பாட்டு பகுதியாக (Public Space) ஆக பயன்படுத்தலாம். இதனை சிறுவர் விளையாடுவதற்கு அல்லது ஒன்று கூடுவதற்கு ஏற்ற இடமாக மாற்றுதல்
2) குளம், விளையாட்டு மைதானம் மற்றும் சனசமூக நிலையம் என் மூன்று பொது அழ்சங்களினைக் கொண்டுள்ள இவ் பொதுப் பாயன்பாட்டு பகுதியை (Public Space) வினைத்திறனற்ற முறையில் அமைந்துள்ளதைக் காணலாம்.
எனவே மேற்குறிப்பிட்ட முதன்மையான கொள்கைகளினை அடிப்படையாகக் கொண்டு இப்பகுதியினை சிறந்த கலப்பு வலயமாக உருவாக்கலாம்.
யாழ் நகரில் மரபுரிமை சார்ந்த பிரதேசங்கள்
1. அறிமுகம்
2. யாழ் நகரத்தில் மரபுரிமையின் தற்போதைய நிலைப்பாடு
2.1 யாழ் நகரத்தில் மரபுரிமையின் தற்போதைய நிலைப்பாடு
2.2 யாழ் நகருக்கான மரபுரிமை எண்ணக்கருத் திட்டமிடல்
2.1 யாழ் நகரத்தில் மரபுரிமையின் தற்போதைய நிலைப்பாடு
2.2 யாழ் நகருக்கான மரபுரிமை எண்ணக்கருத் திட்டமிடல்
3. நிலைநேர்வாய்வு (Case Study)
- யாழ்ப்பாணக்கோட்டை (விரிவாக பகுதி 1 இல் ஒன்றில் ஆராயப்பட்டது)
- காலனித்துவ நகரம் (Colonial Town) – அமைவிடம் மற்றும் காலரீயான வளர்ச்சி
- பரிந்துரைகள்
1. அறிமுகம்
ஒரு நகரத்தின் மரபுரிமையானது அந்த நகரத்தின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், தனித்தன்மை (Uniqueness) என்பவற்றினை சமூகத்திற்குக் காலங்காலமாக என்றும் எடுத்தியம்புவனவாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் மரபுரிமை என்பது ஒரு நகரத்தின் விலைமதிப்பற்ற சொத்ததாகவே காணப்படுகின்றது. எனினும் இலங்கைத்தீவில் தமிழர்தாயகங்களில் இவ்மரபுரிமையானது எந்தளவிற்குப் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்ற வினாவிற்கு அது புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என்ற பதிலையே குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அந்தவகையில் ஆய்வுப்பகுதியான யாழ் நகரத்தின் மரபுரிமையை தொல்பொருளியலியல் கண்ணோட்டத்தில் நோக்கும் போது தமிழர் பண்பாடு மற்றும் காலனித்துவ எச்சங்களினை தன்னகத்தே கொண்ட நகரமாக காணப்படினும் அவற்றில் சில புறக்கணிக்கப்பட்டும் பல பேணிப்பாதுகாத்தல், மீள் பயன்பாட்டிற்குட்படுத்தல் என்பனவன்றி திணைக்களங்களின் வெறும் சொத்துகளாகவே காணப்படுகின்றன (எ.கா: மந்திரி மனை). புதிய நகராக்கவியல் கொள்கைகள் மரபுரிமை என்பது ஒரு நகரத்தின் விலைமதிப்பற்ற சொத்தாக மட்டுமல்லாது அது அந்தநகரத்தின் சமூக பொருண்மிய துறைகளினை விருத்தி செய்கின்ற ஒரு கருவியாகவும் காணப்படுகின்றது என்று வலியுறுத்தி வருகின்றன என்ற நிலையில் இவற்றினை உரிய நகராக்க பொறிமுறையினுடாக பேணிப்பாதுகாத்தல் என்பது தேவையாகின்றது.
2. யாழ் நகருக்கான மரபுரிமைத் திட்டமிடல்
2.1 யாழ் நகரத்தில் மரபுரிமையின் தற்போதைய நிலைப்பாடு
அந்தவையில் யாழ் நகரத்தில் யாழ் நகரத்தில் யாழ்ப்பாணக்கோட்டை, காலனித்துவ நகரம், ரழைய கச்சேரி மற்றும் நல்லூர் என்பன இடங்களினை மரபுரிமைசார்நத இடங்கள் எனக் கூறலாம்.
எனினும் மேற்குறிப்பிடப்பட்ட இடங்கள் தொடர்பாக பின்வரும் சிக்கல்கள் இனங்காணப்பட்டுள்ளன.
- யாழ்ப்பாணக்கோட்டையும் அதனைச்சூழவுள்ள பகுதிகளும் பல மில்லியன் செலவில் மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருப்பினும் நகரத்தின் தேவைகளினையோ அல்லது வருமானத்தினையோ ஈட்டித்தருவதாக இல்லை.( பகுதி 1 இல் விரிவாக ஆராயப்பட்டது)
- யாழ்ப்பாணக்கோட்டைக்கு மிகவும் அண்மையில் போர்த்துக்கேய ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேய காலனித்துவத்தினைப் பட்டெறிகின்ற பசனை அமைப்புக் கொண்ட குடியிருப்புகள் மற்றும் வணிக நடுவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பல பாதிப்படைந்த மற்றும் நோக்குவாரற்ற நிலையிலும் மேலும் பல வீடுகள் முழுமையான கட்டட அமைப்பும் மாற்றம் பெற்ற நிலையில் புதிய கட்டடங்களாளகக் காணப்படுகின்றன. இவை தொடர்பாக தொடர்புபட்ட திணைக்களங்களால் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாது பாரமுகமாகக் காணப்படுகின்றன.
- பழைய செயலகத்தையும் (கச்சேரி) அதனுடன் இணைந்த பூங்காவையும் அண்டிய பகுதி – பழைய செயலகக் (கச்சேரி) கட்டடம் முழுவதும் சேதமுற்றுக் காணப்பபடினும் அது பற்றிய சரியான திட்டம் இன்னும் இல்லை. மேலும் பல ஆயிரம் சதுர மீற்றர் பரப்புக் கொண்ட பழைய பூங்காவானது நிலவளம் மற்றும் நீர்வளம் என்பனவற்றில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியதாகவும் மரங்கள் சேதமாக்கப்பட்டதுமான நிலையில் இன்று நிறுவனங்களின் நில உடைமைகளாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு குறைந்த சதுர மீற்றர் நிலப்பரப்பினைக் கொண்டு காணப்படுகின்றன.
- யாழ்ப்பாணம் என்றவுடனே உள்நாட்டவர்களிற்கும் சரி வெளிநாட்டவர்களிற்கும் சரி உடனடியாக நினைவிற்கு வருவது நல்லூர் கோயிலாகும். இக்கோயிலானது தனியார் சொத்தாக காணப்பட்டாலும், அது இந்நகரத்தின் வரலாறு மற்றும் மரபு என்பவற்றினைப் பட்டெறிகின்றது என்ற வகையில் இக்கோயிலையையும் அதனை அண்டிய பகுதிகளையும் சரியான விதிமுறைகளினை ஒழுகி பேணவேண்டியது தேவையானது. மேலும் இக்கோயிலும் இதனை அண்டிய பகுதியும் சங்கிலிய மன்னனின் ஆட்சியினை இன்றும் பட்டெறிகின்ற மந்தரி மனை, யமுனா ஏரி, சட்டநாதர் சிவன் கோவில் எனப் புகழ்பெற்ற கோயில்களையும் தொல்பொருள் சின்னங்களினையும் கொண்டிருக்கும் நிலையில் இவற்றினை மீள் பயன்பாட்டிற்குட்படுத்தாமல் உடைந்த கட்டடங்களாக நோக்குவாரற்ற நிலையில் தொடர்புபட்ட நிறுவனங்களால் விடப்பட்டுள்ளமை வருத்தத்திற்குரிய விடயமாகும்.
2.2 யாழ் நகருக்கான மரபுரிமை எண்ணக்கருத் திட்டமிடல்
எனவே மேற்குறிப்பிட்ட தற்போதைய சூழ்நிலை மற்றும் எதிர்காலத் தேவைகளினைக் கருத்திற்கொண்டு யாழ் நகரத்திற்கான மரபுரிமைத் திட்டத்தினைப் பின்வரும் எண்ணக்கருவின் (concept) அடிப்படையில் அமைக்கலாம்.
மரபுசார்ந்த பெறுமதியாக- பாதுகாத்தல் மற்றும் பேணிக்காத்தல் (Heritage as value – Conservation and Preservation)
மரபுசார்ந்த இடத்திற்கு வலுவான இணைப்பை உருவாக்கல் (Develop strong linkage between the heritage place)
சமூக, பொருண்மிய முதன்மைவாய்ந்த பகுதிகளாக மாற்றுதல் (Cultural Tourism)
3. Case Study
3.1 யாழ்ப்பாணக்கோட்டை (விரிவாக பகுதி 1 இல் ஒன்றில் ஆராயப்பட்டது)
3.2 காலனித்துவ நகரம் (Colonial Town) – அமைவிடம் மற்றும் காலரீதியான வளர்ச்சி
கி.பி 17 ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தினை ஒல்லாந்தர்கள் ஆட்சிசெய்த காலத்தில் அனைத்துக் குடியிருப்புகள் மற்றும் வியாபார வர்த்தக நடவடிக்கைகள் யாவும் யாழ்ப்பாணக்கோட்டைக்கு வெளியே ஆனால் மிக அண்மித்த தொலைவில் அதாவது தற்போதைய முதன்மைத் தெருவினை (Main Street) அண்டி சதுரக்கோட்டு அமைப்புகளினைக் கொண்ட வீதிகளினையும் வியாபார நிலையங்களுடன் கூடிய குடியிருப்புகள் மற்றும் கிறித்துவக் கோயில்கள் கொண்ட சிறு நகரமாக இயங்கி வந்த பகுதியே தற்போதைய 1ஆம் குறுக்குத்தெரு – 4ஆம் குறுக்குத் தெரு உள்ளிட்ட பகுதியாகும்.
காலப் போக்கில் குடித்தொகை அதிகரிப்பினாலேற்பட்ட தேவைக்கு ஏற்ப நகரத்தேவைகள் வளர்ச்சி அடைந்து வந்த காரணத்தினால் நகராக்கமானது மேற்குத்திசை நோக்கி விருத்தி பெறத் தொடங்கி 1995 ஆண்டுகளில் ஏற்பட்ட போரின் பின்னர் தற்போதைய நகர நடுவத்தில் உறுதிபெற்று வந்துள்ளது.
கட்டிடப் பயன்பாட்டு வரைபடம்
(மேலே காணப்படுவன யாழ்நகரத்தில் காணப்படும் மரபுசார்ந்த கட்டடங்கள் தொடர்பிலான மொறட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வில் இடம்பெற்ற படங்கள்)
3.2 காலனித்துவ நகரத்திற்கான தந்திரோபாய மீள்திட்டமிடல்
இந்நிலையில் பழைய இவ் நகரத்தினை மீள இயங்க வைத்தல் என்பது பின்வரும் காரணங்களின் அடிப்படையில் தேவையாகின்றது.
- மரபுரிமைகளினை பாதுகாத்தலும் கலப்பு அபிவிருத்தியினை (Mixed Development) ஊக்குவித்தலும்
- தற்போதைய நகர நடுவத்தில் உள்ள நெருக்கடிகளிளை குறைத்ததலும் சிறு நகர நடுவங்களினை உருவாக்குதலும்
- சதுரக்கோட்டு வடிவ அமைப்புக் கொண்ட நகர அமைப்பானது இலகுவான நடைப்பயிற்சி (walking, navigation) என்பனவற்றுக்கு ஏதுவாக அமைவதுடன் வரலாற்று முதன்மைவாய்ந்த பகுதிகள் மற்றும் இயற்கை இயல்புகள் என்பன நெருக்கமான இணைப்பினைக் கொண்டுள்ளமையால் இதனை மீள் இயக்குவதன் ஊடாக பொது இடங்களினை உருவாக்குதலும் அவற்றின் பயன்பாட்டினை ஊக்குவித்தலும்
- சுற்றுலாத்துறை விருத்தி மற்றும் மரபுரிமையுடன் இணைந்த பிற பொருண்மிய மற்றும் பண்பாட்டு விருத்தியினுடாக யாழ் நகரத்திற்கு என பன்னாட்டு வர்த்தக முத்திரை (Brand/Trade Mark) ஒன்றினை உருவாக்குதல்
(எ.கா: நெதர்லாந்தில் அம்ஸ்டடாம் நகரத்தில் I am sterdam என்ற வாசகம் காணப்படுகின்றது)
3.2.1 – பரிந்துரைகள்
இக்காலனித்துவ பகுதியானது கீழ்வரும் நகராக்க திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு உத்திகளைக் கையாள்வதன் மூலம் மீள் இயக்கம் செய்யலாம் என பரிந்துரை செய்யப்படுகின்றது.
அ. ஏற்கனவே உள்ள பொது இடங்களினை பௌதீக உட்கட்டமைப்புகள் மூலம் இணைத்தல்
இவ் ஆய்வுப்பகுதியானது யாழ்ப்பாணத்தின் மிகப்பழைமை வாய்ந்த கிறித்துவக் கோயில்களையும் மிகவும் புகழ்பெற்ற சந்தையினையும் மற்றும் இதன் எல்லைப்புறத்தில் யாழ் கோட்டை மற்றும் சுப்பிரமணியம் பூங்கா என்பவற்றினையும் கொண்டுள்ளது. இவற்றினை மிகவும் சிறந்த முறையில் நடைபாதைகள், ஈருருளிப் பாதைகள் அல்லது தொடர்ச்சியான முறையில் மரங்கள் என ஏதோ ஒரு பௌதீக உட்கட்டமைப்புகள் மூலமாக இறுக்கமான முறையில் இணைத்தல்.
ஆ. புதிய பொது இடங்களினை உருவாக்குதல்
(1) இப்பகுதி ஒரு குடியிருப்புப் பகுதி என்பதனால் அகவை முதிர்ந்தவர்கள் மற்றும் சிறுவர்கள் ஒன்று கூடுவதற்கான சிறு சிறு பொது இடங்களினை உருவாக்குதல் (Urban pocket). இப்பகுதியில் போரின் காரணமாக பல வீடுகள் சேதமுற்றுக் காணப்படுகின்றன. இக்காணி உரிமையாளர்களின் அனுமதியுடன் மதில் சுவரினை குறிப்பிட்ட அளவு அடிகள் உள்ளெடுத்தல் (Setback) மூலமாக புதிய இடங்களினை உருவாக்குதல்.
(2) யாழ் நகரத்தில் கோயில்களிற்குக் குறைவில்லை. எனினும் இவை எந்தளவிற்கு சமூக நிறுவனங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது விவாதத்திற்குரிய விடயம். யாழ் நகரில் தொடர்ந்து வரும் திட்டமிடப்படாத நகராக்கம் பல சிக்கல்களினை ஏற்படுத்தி வரும் நிலையில் இக்கோயில்கள் கூட பல்வேறு சிக்கல்களிற்குத் தீர்வாக அமைகின்றன என்ற அடிப்படையில் கோயில் நிருவாகத்தினரின் அனுமதியுடன் நிபந்தனைகளுடன் பூசை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களாக மாற்றுதல் அல்லது கட்டண அறவீட்டுடன் குறிப்பிட்ட நேரங்களிற்கு வாகனநிறுத்தகங்களாகப் பயன்படுத்தப்படல்.
ஆகக்குறைந்தது கீழுள்ள கோயிலிலுள்ள நடைமுறைகளையாவது பின்பற்றுதல் சிறந்தது.
(3) யாழ் நகரில் மக்கள் வங்கிக்கான பல கிளைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், இப்பகுதியில் 1948 களிற்கு பின்னர் கட்டப்பட்ட மக்கள் வங்கி அலுவலகக் கட்டடமானது தற்போது எந்தவிதமான பயன்பாடுமின்றிக் காணப்படுகின்றது. இதனை உரிய முறையில் மறுசீரமைத்து வங்கிப் பயன்பாட்டிற்கோ அல்லது பிற பயன்பாட்டிற்கோ உட்படுத்தல். கீழ் காட்டப்பட்ட குறுக்கு வெட்டுமுக வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு பயன்பாட்டினை மாற்றிக் கொள்ளலாம். தேவைப்படின் தளங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
(4) சின்னக்கடை சந்தையும் அதனுடன் இணைந்த பொருண்மிய நடுவ விருத்தியும்
யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான சின்னக்கடை சந்தையும் அதனுடன் இணைந்த பகுதியும் போதியளவு உட்கட்டுமான வசதிகளற்ற நிலையிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலும் காணப்படுகின்றன. இப்பகுதியின் திட்டமிட்ட அபிவிருத்தியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்ற நடுவமாக மாற்றுதலும் உருவம் 4 இல் குறிப்பிட்டதன் படி , யாழ் நகருக்கான சிறந்த முத்திரையினை (Brand) ஏற்படுத்தும் என்ற நிலையில் இதன் மீள் அபிவிருத்தி (redevelopment) என்பது தேவையாகின்றது. அதாவது யாழ் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் காலனித்துவ கால அபிவிருத்தியும் அதனுடன் இணைந்த நடவடிக்கைகள் (கலை நிகழ்வுகள், பாரம்பரிய நடவடிக்கைகள்) என்பவற்றினை கண்டு களித்து யாழ் நகருக்கே உரித்தான உணவினை உண்டு களிப்பதற்கு ஏற்ற இடமாக சின்னக்டைப்பகுதியும் மாலைப்பொழுதினை களிப்பதற்கான கடற்கரையோரமும் காணப்படுகின்றது. எனினும் இதனுடைய பொருண்மிய மற்றும் சமூக முதன்மை உணரப்படாத நிலையில் இன்று தனியே வளர்ச்சியடையாத ஆனால் புகழ்பெற்ற சந்தையாக இயங்கிவருகின்றது. எனவே சின்னக்கடையும் அதனுடன் இணைந்த பகுதியினையும் சரியான முறையில் திட்டமிடல் வேண்டும் என்ற நிலையில் பின்வரும் முன்மொழிவுகள் முன்வைக்கப்படுகின்றன. அது குறித்து அடுத்த பகுதியில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
தற்போது சின்னக்கடை பகுதியானது 2 தளங்களினைக் கொண்டு அதிலும் 1 தளம் மட்டுமே இயங்கிவருகின்றது. எனவே இக்கட்டடமானது குறுக்கு வெட்டு படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் தேவை மற்றும் இயற்கை அழகு என்பவற்றை வழங்க கூடிய வகையில் மரபார்ந்த கட்டடக்கலை சின்னங்களினை உள்ளடக்கிய நவீன கட்டடமாக மீள் அபிவிருத்தி செய்யலாம் எனப் பரிந்துரைக்கப்படுகின்றது. மேலும் இக்கடைத்தொகுதியும் சென். ஜேம்ஸ் ஆலயமும் முழுமையாக பாதசாரிகள் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படல் வேண்டும்.
இ. காலனித்துவகால கட்டடக்கலை வடிவங்களினைக் கொண்ட பகுதியினை சிறப்பு அபிவிருத்திப் பகுதிகளாக பிரகடனப்படுத்துவதுடன் சிறப்பு ஏற்பாடுகளினை (regulation) அமுல்படுத்தல்
17ஆம் நூற்றாண்டுகளில் பிரதான வீதியின் இருமருங்கிலும் நகரமும் அதனை அண்டிய பகுதியும் காணப்பட்டது. இதற்கு சான்றாக இப்பகுதியில் காணப்படுகின்ற குடியிருப்புகளும் அவற்றின் கட்டடக்கலை அமைப்புகளும் சான்றுபகர்கின்றன.
எனினும் பிரதான வீதியின் வலது புறமாக அதாவது 1ஆம், 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் குறுக்கு, 2ஆம் குறுக்கு தெருக்களில் இவை நிலை கொண்டுள்ளது என்பதற்கு இன்றும் இப்பகுதியில் காணப்படுகின்ற கட்டடக்கலை வடிவங்கள் சான்றாக உள்ளது. எனினும் நிறுவன ரீதியாக முறையான கொள்கைகள் சரியான நகரத்திட்டமிடல்கள் இல்லாத காரணத்தினால் இன்று இப்பகுதிகளின் தனித்தன்மையானது சிதைவடைந்து வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலையில் இவற்றினை பாதுகாக்க வேண்டியது தேவை என்ற நிலையில் இன்றும் அதேபோன்ற அமைப்புடைய வீடுகள் கொண்ட ஆகக்குறைந்த ஒரு குறிப்பிட்ட வீதி அல்லது ஒரு கட்டடம் கொண்ட பகுதியினை சிறப்பு ஏற்பாடாக (regulation) அறிமுகப்படுத்தல் என்பது தேவையாகின்றது. அந்தவகையில் படத்தில் காட்டப்பட்ட பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது. (மேலதிக ஆய்வுகள் தேவையானது)
சிறப்பு ஏற்பாடுகள் (Special Regulations)
மிகவும் பழைமையான கட்டடங்கள் என்பதனால் கட்டடத்தின் உறுதி குறைந்துகாணப்படுதல் மற்றும் இவற்றிற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சுற்றுச்சூழலிற்கு கேடுவிளைவிக்காதவாறு நகர வளார்சிதை மாற்றம் (Urban Metabolism) என்ற அடிப்படையில் இவற்றினை மீளுறுதி (retrofitting) செய்வதற்கு ஊக்கம் அளிக்கும்அதேவேளை அவற்றின் உட்கட்டுமானங்களினை மாற்றுவதற்கு சிறப்புக் கழிவுகள்வழங்குவதுடன் கட்டட முகப்புகள் (facade) மாற்றப்படாது இருத்தல் வேண்டும் என்றவிதியினை முழுமையாக கடைப்பிடித்தல்
– இவை சிறப்புக் குடியிருப்புகள் என்ற அடிப்படையில் இவற்றிற்கான வரி விலக்களிப்புகள் மற்றும் வங்கி கடன்கள் மற்றும் ஏனைய விதிமுறைகளில் நெகிழ்வாக இருத்தல்.
– ஒரேவகையான நிற வர்ணங்களினை வழங்குதல்
-இக்குடியிருப்புக்களின் சிறப்புத்தன்மையினை மேலும் வெளிப்படுத்தும் இதனைச்சுற்றி உள்ள குறுக்கு வீதிகளில் தார் வீதிகளினை அமைப்பதனை தவிர்த்து நடைபாதைகளினை (permeable pavement) இட்டு முழுமையான முறையில் வாகனத்தடைகளினை போடுதலினைத் தவிர்த்து ஒரு வழிப்பாதையினை அறிமுகப்படுத்தல்.
-இப்பகுதியானது ஒடுக்கமான வீதிகளினை கொண்டிருப்பதனால் வீதியோரங்களில் மரங்கள் நாட்டுவது சாத்தியம் இல்லாத காரணத்தினால் கீழ்க்காட்டப்பட்ட படத்தில் உள்ளவாறு வெள்ள வாய்க்கால்களினை இவ்வாறு மூடுவதனை தவிர்த்து பூச்செடிகள் நாட்டி அழுகுபடுத்தல்.
-குறிப்பிட்ட சில வீதிகளிலாவது காலனித்துவ காலத்தினை நினைவூட்டும் வகையில் இருக்கைகள் அல்லது வீதி விளக்குகள் போன்றவற்றை இடுதல்.
-நவீன நகராக்க கொள்கைகளின் படி வீதி பொது இடம் (street as public space) என்பதற்கிணங்க இப்பகுதியானது அதிகமாக கிறித்துவர்களின் குடித்தொகையினைக் கொண்டு இருப்பதனாலும் ஏற்கனவே குறிப்பிட்டபடி இப்பகுதியானது புகழ்பெற்ற பள்ளிக்கூடங்கள், கிறித்துவ கோயில்கள் மற்றும் கடற்கரையோரத்தினை அண்டி காணப்படுவதனாலும் நத்தார் பண்டிகை காலங்களில் பாண்ட் வாத்தியம், பாலன் பிறப்பு மற்றும் இன்னோரன்ன வீதி நிகழ்ச்சி மற்றும் கடற்கரையில் சிறந்த முறையில் வேறுபட்ட நிகழ்வுகளினை மாலை நேரங்களில் அல்லது இரவு நேரங்களில் சிறந்த முறையில் நடாத்துதல்.
எடுத்துக்காட்டாக சிங்கப்பூர், பரிஸ் போன்ற நகரங்களில் குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமைகள் வாகனங்கள் முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Car free Sunday).
– சுற்றுலாத்துறை அனுசரணையுடன் பாரம்பரிய பாதையினை (Heritage Trail) இனை ஏற்படுத்தல்.
-நிழற்றப்பட்ட பகுதி தவிர ஏனைய பகுதியிலுள்ள குடியிருப்பாளர் தமது விருப்பத்தின் பேரில் தமது குடியிருப்பினை gazette செய்வதற்கு முன்வரின் அவற்றிற்கு வரி மற்றும் இன்னோரன்ன விடயங்களில் சிறப்பு விலக்களிப்புகளை மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றலாத்துறை என்பன வழங்குதல். எடுத்துக்காட்டாக கட்டட முகப்புகள் மாற்றம் பெறாத வகையில் வேறு பயன்பாடுகளிற்கு மாற்றுவதற்கு வரி விலக்களித்தல் (change of use).
ஈ. கலப்பு வலயமாக மாற்றுதல் – புதிய செயற்பாடுகளினை ஊக்குவித்தல்
குடியிருப்புகளை அதிகம் கொண்ட இப்பகுதியானது கடந்த கால போரினால் இப்பகுதி மக்கள் பலர் புலம்பெயர்ந்துள்ளதுடன் பல குடியிருப்புகள் முழுமையாகவும் சில பகுதியாகவும் சேதமடைந்தவையாகவும் காணப்படுகின்றமையால் இப்பகுதி பொதுவாக மிகவும் அமைதியானதாக இயங்குநிலையின்றியே (dynamic) காணப்படுகின்றது. எனவே இப்பகுதியில் பின்வரும் சில செயற்பாடுகளினை உட்புகுத்துவதன் மூலம் மக்களை கவர்ந்திழுக்கும் பகுதியாக மாற்றுதல்.
- தனியார் வகுப்புகள் / கல்வி நடவடிக்கைகள் (Tution classes / Educational activities)
- அலுவலகம் (Office)
- திறன் அபிவிருத்தி நடவடிக்கைகள் (Skill development activities)
- இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்குமான தகவல் தொழினுட்ப நடுவம் (IT centre for teenages and adults)
- தேநீரகங்கள் (Coffeee shops)
- உணவகங்கள் (Restaurents)
- சில்லறைச் சிறப்புச் சந்தை (Reatail supermarket)
- அரச அல்லது தனியார் துறை அலுவலகர்களுக்கான வதிவிடம் (Living quaterters for Govt. Or Private Sector officers)
- குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு வசதிகள் (Recreational facilities for kids and teenagers)
எனவே இவ்வாறு நடவக்கைகளினை ஊக்குவிப்பதற்கு யாழ் மாநகர சபையானது பின்வரும் உத்திகளை மேற்கொள்ளலாம்.
– வரி விலக்களிப்புக்கள்
– குறைந்த விலையில் நீர் விநியோகம் செய்தல்
– மின்சார சபை கட்டணக் கழிவுகளுடன் இணைப்புகளினை பெற்றுக் கொடுத்தல் அல்லது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தினைப் (Renewable energy source) பெற்றுக் கொள்ளுவதற்கான ஆரம்பக் கட்டணத்தினை (initial payment) விலக்களித்தல்
– இக்குடியிருப்புகளை முறையான விதிமுறைகளிற்கேற்ப திருத்தம் செய்வதற்கு இலகு முறையில் அல்லது குறைந்த வட்டியில் வங்கி கடன்கள் வழங்குதல் போன்றவற்றினை மேற்கொள்ளல்.
– குடியிருப்பாளர்களின் அனுமதியுடன் இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் வாகன நிறுத்தக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
உ. பிரதான வீதியின் மருங்குகளில் கடை வீடு (Shop house) காணப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படினும் இவற்றில் பெரும்பாலானவை இன்று நவீன கட்டடங்களாக மாற்றம் பெற்று வருகின்றன. இவை தொடர்பாகத் தொடர்புபட்ட நிறுவனங்களான நகர அபிவிருத்தி அதிகார சபை, மாநகர மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களங்கள் என்பன பாராமுகமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே அவற்றினை கீழ்வருமாறு மீள்விருத்தி (retrofitting) செய்வதற்கு ஊக்குவித்தல்.
- கட்டடத்தின் நிறத்தின் தன்மை மற்றும் ஒரே வகையான நிறம் (Special paint scheme)• முதன்மையான கட்டிடக்கலை வடிவங்களை குறிப்பான நிறவர்ணங்கள் மூலம் காட்டுதல்
- காலனித்துவ கால கட்டடங்கள் என்பதனைப் பட்டெறியும் வகையில் இருக்கைகள் மற்றும் வீதி விளக்குகள் போன்றவற்றினை பொருத்துல்
- கண்ணாடி சாளரங்கள், கதவுகள் பொருத்துவதன் மூலம் நவீன மற்றும் பாரம்பரிய கட்டடக்கலை வடிவங்களினை பின்பற்றுதல்
• பொருத்தமான காலனித்துவ அல்லது வரலாற்று வரைபடங்களை வரைதல்
No comments:
Post a Comment