வரலாற்று காலம் தொடக்கம் யாழ் நகரமானது வடமாகாணத்தில் உள்ள நகரங்களில் மக்கள்தொகை, தொழிற்பாடு என்பன அடிப்படையில் முதன்மையான நகரமாகக் காணப்படுகின்றது. 22.75 சதுர கிலோ மீற்றர்கள் நிலப்பாரப்பினைக் கொண்டதாக, ஒருபுறம் (வடக்கு பக்கமாக) வளம் பொருந்திய விளைநிலங்கள் மற்றும் பிற சேவை நகரங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டதாகவும் இன்னொரு புறம் பொருண்மிய வளம் மற்றும் இயற்கை வளம் பொருந்திய கடல் வளத்தினை தன்னகத்தே கொண்ட இந்நகரமானது நன்கு விருத்தி பெற்ற வீதி வலைப்பின்னலினையும் இயற்கை எழில், வெள்ளப்பெருக்கு, நிலத்தடி நீர் என்பனவற்றினை பேணிப்பாதுகாக்கக் கூடிய 24 க்கும் மேற்பட்ட உள்நாட்டு நீர் நிலைகளினையும் நன்கு விருத்தி பெற்ற வடிகால்கள் மற்றும் தமிழர்களின் பண்பாடு, தொன்மம் ஆகியவற்றினை எக்காலத்திலும் எடுத்தொளிக்கக் கூடிய மரபுரிமைச்சின்னங்கள் என்பவற்றினைக் கொண்ட இந்நகரமானது வடமாகாணத்தினுள், அண்டையில் முதன்மையான நகரங்களுடன் சிறந்த நெருக்கமான தரை ரீதியான தொடர்பினைக் கொண்ட நகரமாகக் காணப்படுகின்றது. இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட இந்நகரமானது இன்று தான்தோன்றித்தனமாக எந்தவிதமான நீண்டகால திட்டமிடல்களுக்கும் தற்கால நகராக்கவியல் கோட்பாடுகளுக்கும் ஒவ்வாத வகையில் சிக்கல்களின் மையமாக காணப்படுகின்றது. கடந்த முப்பது ஆண்டுகளாகப் போரினை ஒரு காரணமாக கொண்டு “எதிர்காலம்” “நிலையான அபிவிருத்தி” என்ற எண்ணக்கருக்களினை மறந்து “எந்தவித திட்டமிடல்களோ, அபிவிருத்தி நடவடிக்கைகளோ இல்லாமல் நாளாந்த நடவடிக்கைளினை மட்டும் கருத்தில் கொண்டு இயங்கிக் கொண்டு இருந்த புத்திசீவிகளினைக் கொண்ட இந்நகரமானது, போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்தும் பல ஆட்சி மாற்றங்கள், நிர்வாக மாற்றங்கள், பல திட்டமிடல் கூட்டங்கள் நடந்து முடிவடைந்த நிலையயிலும் ஒரு சில மாற்றங்களுடன் இன்னும் அதே நிலையிலேயே இருக்கின்றது.
அந்த வகையில் யாழ் நகரமானது “அபிவிருத்தி” பாதையில் செல்கின்றதா? அல்லது நிலையான அபிவிருத்தி பாதையில் செல்கின்றதா? அல்லது நிலையான அபிவிருத்தி தொடர்பான புத்தாக்க சிந்தனைகள் (Innovative ideas) சிந்தனைகள் உள்வாங்கப்படுகின்றனவா? அல்லது புறக்கணிக்கப்பட்டு வருகின்றனவா? என்பது விமர்சனத்துக்குரிய விடயமாக மட்டுமல்லாமல் ஆழமான சிந்தனையை தூண்டுகின்ற விடயமாகவும் அமைந்துள்ளது.
உண்மையில் இந்நகரமானது எந்த வகையான நகரம் என்பதனையே நிர்ணயிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது. இது ஒரு நிர்வாக நகரமா? சேவை நகரமா? பண்பாட்டு நகரமா? சுகாதார நகரமா? அல்லது மருத்துவ நகரமா? என்று கூட வரைவிலக்ணப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் நகராக்கவியலின் அடிப்படைப் பண்புகள் பல (Urban Planning Principals) புறக்கணிக்கப்பட்ட திட்டமிடப்படாத அபிவிருத்தியினை நோக்கி முனைப்பாக செல்கின்ற (Haphazard Development) நகரம் என்றே கூறலாம்.
2030 களிலோ அல்லது 2050 களிலோ இந்தநகரமானது எவ்வாறு அமையப் போகின்றது? இப்படியே இருக்கின்றதா? அல்லது இதன் முப்பரிமாணம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதற்கு அரசியல்வாதிகளிடமோ நகரத்திட்டமிடலாளர்களிடமோ நிர்வாகிகளிடமோ எதாவது தெளிவான திட்டமிடல்கள் காணப்படுகின்றனவா என்பது மிகவும் சிந்திக்கத்தக்க விடயமாகும்.
இந்த நகரமும் அதன் அரசு என்னும் இயந்திரமும் எந்தப் பொருண்மியத்தினை மையமாக்க கொண்டு இயங்கப் போகின்றது என்பது தொடர்பாக எந்த வகையான பொருண்மியத் திட்டமிடல்கள் காணப்படுகின்றன?, சமூகக் கட்டுமானத்தில் என்னவகையான முன்னேற்றகரமான மாற்றத்தினை கொண்டுவர எத்தனிக்கின்றன? வெறுமனே வீதிகளினை அமைப்பதும் சீரமைப்பதும் (Renovation) மட்டுமா சிறந்த திட்டமிடல்?
பல பத்தாண்டுகளாக பல்வேறு சிக்கல்களிற்கு முகம் கொடுத்து எதிர் நீச்சல் போட்டு காயங்கள், வடுக்கள் என இருந்தாலும் இன்றும் நிமிர்ந்து நிற்கும் இந்நகரத்தில் சிக்கல்கள் மலிந்து காணப்படுகின்றன. ஒரு புறம் நிர்வாக நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் என யாவும் ஓரிடத்தில் குவிந்தும் இன்னொரு புறம் ஒருங்கிணைந்து காணப்படவேண்டிய நிர்வாகத் திணைக்களங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன.
நகரின் நடுவிலே அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையினதும் மத்திய பேருந்து நிலையத்தினதும் வினைத்திறனற்ற திட்டமிடலானது அமைவிடம் பல்வேறு சிரமங்களினை எற்படுத்தி வருகின்றது. யாழ் மக்கள் மத்தியில் அனைத்து உட்கட்டுமானங்களும் மிக அண்மையில் அமைந்து காணப்படுவது தான் இலகுவாக இருக்கும் என்ற சிந்தனை ஒன்று இருப்பது உண்மை தான். இது அவர்களின் தவறல்ல. இந்த நகரத்தில் இடம் சார்ந்த மேலாண்மை (Spatial Management) செய்து கொண்டிருக்கும் துறைசார் அதிகாரிகளின் தவறு. நகரத்தின் ஒவ்வொரு பாகத்தினையும் இயங்க வைக்க வேண்டிய வினைத்திறனாக செயற்பாடுகளினை அமைக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு. இவை சரியான முறையில் அமையும் போது நகரம் சிறப்பான முறையில் இயங்கும்.
அது மட்டுமல்லாது, நகர மத்தியிலே அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான ஒவ்வொரு கலந்துரையாடலிலும், நிர்வாகிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு நிலவளம் போதாது என்பது தான். உண்மையில் நில வளம் போதாது என்பதனை விட நிலவளம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது (under-utilized) ஆக உள்ளது என்பது தான் உண்மை. நகர மத்தியிலுள்ள எத்தனையோ நிலங்கள் பொருத்தமற்ற நிலப்பயன்பாடு, இலகு அணுகலுக்குரியதாயில்லை (Accessibility) போன்ற காரணங்களினாலேயே நில வளம் வினைத்திறனாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது (under-utilized).
நகர மத்தியில் பெரும் நிலப்பரப்பில் அமைந்துள்ள பல மில்லியன் ரூபா செலவில் சீரமைப்புப் பணிகள் செய்து முடிக்கப்பட்ட யாழ்ப்பாணக்கோட்டை எந்த விதமான வருவாயையும் ஈட்டித் தரமுடியாத வகையில் அப்படியே உள்ளது.
இது மட்டுமல்லாமல் நகரத்தின் மத்திய பகுதியிலேயே பெருமளவு நிலப்பரப்பில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையானது இன்னும் தனக்கு சொத்துச் சேர்க்கலாம் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றதே ஒழிய தனக்கு சொந்தமான நிலத்தினை எவ்வாறு உச்ச அளவில் பயன்படுத்தலாம் என்பதில் அக்கறையோ ஆர்வமோ காட்டவில்லை. மருத்துவமனை என்பதனால் அவ்வாறு தான் இருக்க வேண்டும் ஒரு சாரார் குறிப்பிடுகின்றனர், இன்னும் நிலவளம் தேவைப்படும் என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். உண்மையில் பிராந்திய மருத்துவமனைகள் வலுவடையாத நிலையும் மருத்துவமனையின் மிகவும் பின்னடைவான நில மேலாண்மையுமே (Spatial Management) பல சிக்கல்களை எற்படுத்தி வருகின்றது. யாழ் நகரத்தின் நிலவியலானது (Geology) பல மாடிக்கட்டடங்களினை அமைப்பதற்கு ஏதுவானதாக இல்லை என்று பலர் கருத்துத் தெரிவித்தாலும் தற்கால கட்டட கட்டமைப்பு பொறியியல் (Structural Engineering) முறையில் பல நாடுகளில் பல மாடிகட்டடங்கள் மிகவும் திடகாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளன என்பது வெளிப்படையானது. இது மட்டுமல்லாமல் தனக்கான நோயாளிகளுக்கான வாகன நிறுத்தகங்களைக் கூட வழங்கமுடியாத நிலை மற்றும் மருத்துவ மாணவர்களிற்கான தங்குமிட வசதியினைக் கூட வழங்க முடியாத அளவிற்கு மிகவும் தரங்குறைந்த நில மேலாண்மையே காணப்படுகின்றது. நோய்க்கான சிகிச்சை பெற வரும் நோயாளி இன்னும் நோய்வாய்ப்பட்டே வீடு திரும்பும் நிலையே காணப்படுகின்றது. நோயாளிக்கும் அவருடன் வரும் உறவினருக்கோ ஒரு இதமான மனநிலையினை உருவாக்கிக் கொடுப்பதற்கு இந்த மருத்துவமனை தயாராக இல்லை. இந்த மருத்துவமனை எத்தனை நிழல்தரு மரங்களைக் கொண்டிருக்கின்றது என்பது பற்றி சிந்தித்தாலே போதும். பல நாடுகளில் மருத்துவமனைகள் எத்தனையோ விதமான சமூக அபிவிருத்திகளை (Community Development) செய்து வருகின்றன.
அடுத்ததாக, யாழ் நகரமானது முறையான போக்குவரத்துத் திட்டமிடலினை பின்பற்றாத ஒரு நகரமாகவே காணப்படுகின்றது. எந்தவிதமான போக்குவரத்து விதிமுறைகளினையும் பின்பற்றாது நகரத்தின் இருதயத்தினை (Heart of the City) கிழித்துச் சென்று இரத்தம் சிந்தும் பேக்குவரத்து முறைமையே காணப்படுகின்றது. அரச பேருந்து, தனியார் பேருந்து, தொலைவிடம் பயணிக்கும் பேருந்து, முச்சில்லூந்து (Three wheeler), ஈருருளி என பல வகையான போக்குவரத்து முறைகள் (Transport mode) இருந்தும் வினைத்திறனான போக்குவரத்து முறைமை பினபற்றப்பட்டு வருகின்றதா என்ற வினாவினை எழுப்பினால் விபத்துக்களும், வாகன நெரிசலும் வாகன நிறுத்தகங்கள் இல்லாத சூழ் நிலையுமே காணப்படுகின்றது.
நகரமானது நடைதிறனுக்குகந்ததாக (Walkable city) மற்றும் மகிழுந்து இல்லா வலயமாக (Car free zone) இருக்கவேண்டும் என்பது தற்கால நகர்ப்புறக் (New urbanism) கொள்கைகளாகும். இந்த நகரமானது எத்தனை கிலோமீற்றர் தொலைவிற்குப் பாதுகாப்பான நடைபாதைகளும் பொதுப் போக்குவரத்தும் (Public transport) ஈருருளி ஓட்டும் தடமும் (Cycling track) காணப்படுகின்றன என நோக்க வேண்டும். யாழ் நகர மக்களிடத்தில் மகிழுந்து (Car) மற்றும் உந்துருளி போக்குவரத்து என்பன ஒரு மோகமாகக் காணப்படுகின்றது. இது வினைத்திறனற்ற பொதுப் போக்குவரத்து முறைமையினது வெளிப்பாடாகும்.
அடுத்தாக யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான 1959 ல் அமைக்கப்பட்ட, பல ஆண்டுகளாக 2 மாடிகள் மட்டும் தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் (function) இந்த 5 மாடிக்கட்டடத்தினை 2030 மட்டும் யாழ் மாநகர சபையினர் பேணிப்பாதுகாக்கப் போகின்றனரா என்பது விமர்சனத்திற்குரிய விடயம்.
தற்கால நகரத்திட்டமிடலில் முதன்மையான ஒரு விடயமாகவும் யாழ் நகரத்திலே முற்று முழுதாக புறக்கணிப்பட்ட இன்னாரு விடயம் பொதுவெளி மற்றும் இடவுருவாக்கம் (Public Space & Place Making). இலகுவாகக் கூறினால், நீங்கள் ஒரு நபரினை சந்தித்து அவருடன் உங்களுடைய ஒரு பொழுதின் ஒரு பகுதியைக் கழிக்க வேண்டுமானால் எங்கு செல்வீர்கள்? யாழ் நகரத்திலே பொதுவெளியினை (Public Space) விரல் விட்டு எண்ணக்கூடியதாகவே உள்ளது. அதிலும் பொதுத் திறந்தவிடம் (Public Open Space) கிடையவே கிடையாது. அவையும் பொதுவெளி (Public Space) ஒன்றிற்கான எந்தவிதமான பண்புகளினையும் கொண்டிராத தன்மையே காணப்படுகின்றது. உள்நாட்டு நீர் நிலைகள், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், கடற்கரையோரங்கள், வரலாற்று முதன்மைவாய்ந்த பகுதிகள் என இவற்றினை சரியான முறையில் பயன்படுத்தப்படாத நிலையினையே காணக்கூடியதாக உள்ளது.
நீங்கள் யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதியிலிருந்து யாழ் நகரினை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, யாழ்ப்பாணக்கோட்டை, பண்பாட்டினை வெளிப்படுத்தக்கூடிய கிறித்துவ தேவாலய கோபுரங்கள், மணிக்கூட்டுக்கோபுரம், யாழ் நூலகம் என பொருண்மிய மற்றும் சமூக கட்டுமானங்களினை நன்றாகக் கொண்ட யாழ் நகரின் தெற்கு கரையோரமானது அதிகளவு முன்னுரிமைப்படுத்தப்படாத, சிக்கல்களினைத் தீர்ப்பதில் வெகு சிரமம் என்று புறக்கணிக்கப்பட்ட கடலோரப் பகுதியினை (coastal belt) எவ்வாறு முன்னேற்றப்போகிறார்கள்? இம்மக்களின் சமூக, பொருளியல் சிக்கல்கள் 2050 கள் மட்டும் தொடருமா?
“சுழியக் கழிவு” (Zero Waste), “கழிவிலிருந்து ஆற்றலாக” (Waste to energy) என பல புதிய சிந்தனைகள் உலகளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் திண்மக் கழிவு மேலாண்மை (Solid Waste Management) தொடர்பாக திட்டமிடலாளர்களும் நிர்வாகிகளும் எத்தகைய நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளார்கள்? ஆண்டு முழுவதும் சூரிய ஒளியினைப் பெறுகின்ற இந்நகரத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தினை (Renewable Energy Source) பயன்படுத்துவது தொடர்பாக ஏதாவது முன்மொழிவுகள் உள்ளதா?
இவை யாவற்றிலும் மேலாக பல சிக்கல்களிற்கான தோற்றுவாயாக அல்லது அதன் தெளிவான சிந்தனை பல சிக்கல்களினை தீர்த்து வைக்கும் என்ற அடிப்படையில் யாழ் நகரத்தின் பொருண்மியத்திட்டம் யாது? இந்த நகரம் எந்தப் பொருண்மியத்தினை மையமாகக் கொண்டு இயங்கப்போகின்றது? முதலாம் நிலைக் கைத்தொழிலுடன் இந்நகரம் எதிர்காலத்திலும் செயற்படுமாயின் இந்நகரத்தின் எதிர்காலம் என்ன என்பது தொடர்பாக அரசியல் வல்லுனர்கள், கல்விமான்கள், திட்டமிடலாளர்களின் சிந்தனை என்ன?
சுற்றுச்சூழற் பார்வை (Environmental aspect)
வெள்ளம் & வடிகால் (Flooding & Drainage)
சிறு நகரங்கள் (Small Towns)
இவ்வாறாக, யாழ் நகரமானது பல்வேறு சிக்கல்களினைத் தன்னகத்தே கொண்டு தன்னுடைய எதிர்காலம் பற்றி ஒரு வினாவினை எழுப்பிய வண்ணம் இருக்கின்றது. இச்சிக்கல்களைத் தீர்த்து வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் கடந்த காலங்களினை விட தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இந்நகரத்திட்டமிடலானது எந்தளவுக்கு தற்கால நவீன நகரத்திட்டமிடல் உத்திகளை உள்வாங்கியுள்ளது என்பது ஐயப்பாட்டினை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இவற்றினை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என்பது தொடர்பாக தொடரும்.
No comments:
Post a Comment