Friday, January 8, 2016

அழகான வீடு சந்தோசமான வாழ்க்கை



அழகான வீட்டில் வசிக்க யாருக்குத்தான் விருப்பமில்லாமல் இருக்கும். ஆனாலும் ஒரு சில வீடுகளே அழககாக இருக்க காண்கின்றோம்.  வீடு முக்கியமானது என நாமெல்லாம் உணர்ந்த போதும் வீட்டைப் பராமரிப்பது அல்லது அழகுபடுத்துவது என்பதில் எங்களில் பலர் அதிக கவனம்  செலுத்துவதில்லை. இதற்கு எமது கடந்த கால வாழ்க்கை, அன்றாடம் எம்மைச்சுற்றியுள்ள வேலைகள், சோம்பேறித்தனம், அலட்சியம், அழகு பற்றிய புதிய சிந்தனைகள் எதுவும் மனதில் தோன்றாமை எனப் பல காரணங்கள் சொல்ல முடியும். ஏன்   நாம் வாழும் வீட்டை அழகாக வைத்திருக்க முடியவில்லையே  என்று நீங்கள் எப்போதாவது கவலைப்படும் ஒருவரா  நீங்கள் ?  இனிக் கவலையை விடுங்கள் நீங்களும் உங்கள் வீட்டை அழகாக வைத்திருக்க சில ஆலோசனைகள்.

வீட்டை அழகுபடுத்தல் என்றால் அதிகபணம் செலவழித்து செய்ய வேண்டிய ஒன்று என தவறான கருத்து நம்மில் பலருக்கு உண்டு. இதன் காரணமாக  கலியாணம், பூப்புனித நுPராட்டு விழா போன்ற  நல்ல விடயங்கள் வீட்டில் இடம்பெறும் வேளைகளில் மட்டும் வீட்டை அழகுபடுத்த நேரத்தை செலவு செய்வதுண்டு. ''கந்தை ஆனாலும் கசக்கி கட்டு'' என்ற  பழமொழி எங்களிடத்தில் பாவனையில் இருந்தது பலருக்கு மறந்தே போயிருக்கும்.  வீடு பழையதாக இருந்தாலும் அதனை அழகுபடுத்தலாம். வீட்டில்  விஷேடம் இடம்பெறும் வரை யாரும் காத்திருக்க வேண்டியதில்லை, சாதாரண நாளில் கூட உங்கள் வீட்டை அழகபடுத்த முதலில் செய்ய வேண்டிய விடயம் என்னவென்றால்.......எமக்கு தேவை அற்றவை எனக்கருதும் பொருட்களை அகற்றுவது அல்லது இடம் மாற்றுதல்.  அதாவது உங்கள் வீட்டில் நீண்ட காலத்திற்கு முன்னர்  வாங்கிய பொழிவிழந்த பூச்சாடி அழுக்குப்படிந்தபடி வீட்டில் தொங்கிக்கொண்டு இருந்தால் அதனை அகற்றி விடுங்கள் அல்லது அதனை துப்பரவு செய்து இன்னொரு புதிய இடத்தில் வையுங்கள். இதே போல பழைய கலண்டர்கள், சாமிப்படங்கள் , சோடி இல்லாத செருப்பு என உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளாக பார்த்து  பார்த்து தேவை இல்லை என்று நீங்கள் கருதுவதை அகற்றுங்கள் அல்லது இடம் மாற்றுங்கள்.



இரண்டாவது தேவையான பொருட்களை உரிய உரிய இடத்தில் வைத்தல்.  அனேகமாக எல்லாப்பொருட்களும் அவற்றுக்குரிய இடத்திலேஇருக்கின்றது  என்று நீங்கள் சொல்லாம் ஆனாலும் மிக அவதானமாக பாருங்கள்  சாமி அறைக்குள் இருக்கவேண்டிய பொருட்கள் குசினிக்குள் இருக்கும், படிக்கின்ற  இடத்தில் இருக்கவேண்டிய புத்தகங்கள் கொப்பிகள் போன்றவை படுக்கை அறைக்குள் இருக்கும். இவற்றை எல்லாம் விட  களஞ்சிய அறைக்குள்  இருக்க வேண்டிய பல பொருட்கள் வீட்டின் எல்லா முலையிலும் இருக்கும். எல்லாப் பொருட்களுக்கும் அவற்றுக்கு உரிய இடத்தில் வையுங்கள் அவ்வாறு  வைக்கும் போது ஏதாவது பொருளுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம் புதிய இடம் ஒன்றை ஒதுக்கி கொள்ளுங்கள். அப்புதிய இடம்  ஒரு அறையாக இருக்க வேண்டியதில்லை. அது ஒரு கடதாசிப்பெட்டியாக கூட இருக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள். இனி குசினிக்குள் வருவோம்  அங்கு கத்தி இருக்க வேண்டிய இடம் என ஒரு இடத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள். அந்த இடத்திலேயே கத்தியை தொடர்ந்து வைத்துக்கொள்ளுங்கள். இதைப்போலவே குசினிக்குள் இருக்கும் கரண்டி, பெட்டி, பாத்திரங்கள், போத்தல்கள் போன்ற ஏனைய பொருட்களையும்  குறித்த ஒரு இடத்திலேயே வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது  இடத்தை தூய்மையாக வைத்திருக்க உதவும் அதே வேளை உங்கள் வேலையை சுலபமாக்கி நேரத்தை மீதப்படுத்தும்.

மூன்றாவது பாவிக்கும் பொருட்களை சுத்தமாக அல்லது அழுக்கு இல்லாமல் வைத்திருத்தல்.  எல்லா  வீடுகளிலும் சமையலுக்கும், சாப்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும் தட்டு போன்ற பொருட்கள் ஆகக்குறைந்தது ஒரு வேளையாவது கழுவி சுத்தமாக இருக்கும் ஆனால் சமையல் அறையில் இருக்கும்  சமையல் பொருட்கள் சேமித்து வைக்கப்பயன்படும் சிறிய கொள்கலன்கள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்துகின்றீர்கள்?  வீட்டில் இருக்கும்  தளபாடங்கள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுதுகின்றீர்கள்?  இவற்றை எல்லாம் சுத்தப்படுத்துவதற்கு ஒரு அட்டவணை தயாரித்து  கொள்ளுங்கள்.  குறித்த இடைவெளியில் அவை அழுக்காக இருக்கிறதா இல்லையா என்பதை கண்காணித்துக் கொள்ளுங்கள்.  சிறிய அழுக்கு இருந்தாலும்  உடனுக்கு உடன் சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். பொருட்களில் சிறிய சிறிய பிழைகள் இருந்தால் அவற்றை உடனடியாகவே திருத்தி  அமைத்துக்கொள்ளுங்கள் அவ்வாறு செய்யதாது தாமதப்படுத்துவது சில வேளைகளில் குறித்த பொருளை பாவிக்க முடியாத நிலைக்கு இட்டுச்செல்லும்  என்பதை மறந்துவிடாதீர்கள்.

நான்காவது மேற்கூறியவற்றை தொடர்ச்சியாக செய்தல்.  எந்த காரியத்தையும் ஒரு வேளை செய்யக்கூடியதாக இருக்கும். அதே வேலையை திருப்ப திருப்ப செய்வது என்பது பலருக்கு சலிப்பு ஏற்படுத்தும் ஒரு செயல் ஆனாலும் மேற்கூறிய மூன்று செயல்களையும் சலிப்பை பார்க்காது தொடர்சியாக  செய்யுங்கள் அப்போது குறித்த செயல்கள் உங்களுக்கு சந்தோசத்தையும், உங்கள் செயல்களில் ஒரு முன்னேற்றத்தையும் தரும். ஒரு குடும்பத்தில் இருக்கும்  ஒருவர் அல்லது இருவர் ஒரு குறித்த வேலையைச் செய்யும் போது அதனைப் பார்த்த ஏனையவர்களும் பின்பற்றி செய்வார்கள்.

ஐந்தாவது தொடர்ச்சியாக செய்து வரும் போது அதுவே உங்களுடைய பழக்கமாகி உங்களையும், உங்களைச் சூழ உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். மேற்குறிப்பிட்ட ஐந்து படிமுறைகளையும் எந்த செலவும் இல்லாமல் செய்யலாம்.

இப்ப சொல்லுங்கள் உங்கள் வீட்டை அழகாக  வைத்திருக்க பணம் தேவைதானா?  இதேவேளை இந்த வேலைகளை வீட்டில் உள்ள ஒருவர் மட்டும் செய்வதால் சலிப்பும் வெறுப்புமே உண்டாகும்  அதனால் வீட்டில் உள்ள ஏனையவர்களும் இணைந்து செய்தால் இயல்பாகவே நாம் வாழும் வீடு அழகாக மாறிவிடும்.



அகத்தின் அழகு முகத்தில் என்றால் ஒருவருடைய உள் மன வெளிப்பாடு அவருடைய முகத்தில் தெரியும் என்ற அர்த்தத்தம் கொள்ளப்படுகின்றது.  இதேவேளை தமிழில் அகம் என்ற சொல் வீடு என்னும் பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றது. வீட்டின் அழகு முகத்தில் தெரியும். அதுமட்டுமல்ல நீங்கள்  செல்கின்ற இடத்திலும் உங்கள் முகத்தில் தெரியும் என்பதை மறந்துவிடாதீர்கள். இது எப்படி என்று யோசிக்கின்றீர்களா?  உதாரணமாக நீங்கள் உங்கள்  உறவினர் வீட்டிற்கு செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு இருக்கின்ற பொருட்கள் உரிய முறையில் வைக்கப்படாமல், அழுக்காக இருந்தால் நீங்கள் அவற்றை பார்த்து முகம் சுளிப்பீர்கள் அப்போது குறித்த வீட்டின் அழகு உங்கள் முகத்தில் தெரிகின்றது. இப்போது புரிகின்றதா?

தமிழில் மனித உடலையும் ஆன்மா வாழும் வீடு என்று சொல்வார்கள். ஆனாலும் இவ்வளவு நேரமும் நீங்கள் வாசித்தது கல்லாலும் மரத்தாலும்  உலோகத்தாலும் கட்டிய வீடு பற்றி ஆனாலும் அந்த வீடு கூட பல ஆத்மாக்கள் வாழும் உடல். ஒரு ஆன்மா வாழும் வீடான உடலை எப்படி  எல்லாம் நேரம் செலவு செய்து ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்க ஒவ்வொருவரும் முயற்சி செய்கின்றோம். அதே போலவே நம் குடும்பம்  வாழுகின்ற வீடும் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் அழகாகவும் இருப்பது சிறப்பானது.

வீட்டை அழகாக வைத்திருப்பதற்கு வேறு என்ன செய்யலாம் என்று அடுத்த பதிவிலும்  பார்க்கலாம்....
குமாரலிங்கம் பதீதரன்


No comments:

Post a Comment