சிந்தனைகளில், செயல்களில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு ஒரு தீர்க்கமான முடிவு காண்பது வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை; நம்புகின்றீர்களா? அப்படி என்றால் தொடர்ந்து படியுங்கள்.
புதிதாக ஒரு வீடு கட்ட ஆரம்பித்தவுடன் கட்டபோகும் வீடு பற்றி விரும்பியோ விரும்பாமலோ பலருடனும் கதைக்கும்; போது எல்லோருமே தங்களுடைய கருத்துக்களையும், புதிய சிந்தனைகளைத் தெரிவிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அத்தோடு நின்றுவிடாமல் அந்த வீட்டைப்பார் இந்த வீட்டைப்பார் என்று சிபாரிசும் செய்வார்கள். இப்படியோ கதைத்தும், பார்த்து மனம் நிறைய பல ஆசைகளோடு வீட்டுப்படம் கீற என்று ஒருவரிடம் செல்லும் போது அவர் தன்னுடைய கணக்கிற்கு பல ஐடியாக்கள் கொடுப்பார். இவற்றை எல்லாம் கடந்து வீட்டில் இருக்கின்ற பெரியவர்கள் உன்ர ராசிக்கு என்ன வாசல் வீடு என்று பார்த்து நிலயத்தை எடு என்பார்கள். இப்படியே வீட்டுப்படத்தைக்கீறி பிரதேச சபையிலோ நகரசபையிலோ காட்டி அனுமதி பெற வேண்டும். அதைச்செய்ய வெளிக்கிட்டால் அவர்கள் வேறு கொஞ்ச விடயங்கள் சொல்வார்கள் .
இவை எல்லாவற்றிலும் மிகவும் மயக்கமானதும் தலையிடி கொடுப்பதும் என்ன என்று பார்த்தால் நிலையம் பார்த்தல், வீட்டு அளவிட்டுத்திட்டம் போன்ற விடயங்களை சொல்கின்ற மனையடி சாத்திரம் அல்லது வாஸ்து சாத்திரம் இனி விடயத்திற்கு வருவோம்....
இந்திய உப கண்டத்திலும் அதற்கு அண்மித்த இலங்கை போன்ற நாடுகளிலும் சமயங்களும் அதனோடு சேர்ந்த வாழ்வியல் நம்பிக்கைகளும் பல நூற்றாண்டுகள் பழமையானவை. இவற்றில் வீடுகள் அமைப்பதற்கு பின்பற்றப்படும் மனையடி சாத்திரம் அல்லது வாஸ்து சாத்திரமும் அவற்றில் ஒன்று. உலகில் முன்பு கிராமங்களாக இருந்தவை இன்று நகரமாக மாறிக்கொண்டு இருக்கின்றன, சனத்தொகைப் பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணங்களால் பல வாழ்வியல் நம்பிக்கைகள் அனேக மக்களால்; பின்பற்றப்படாது கைவிடப்பட்டாலும், தமிழர்கள் வீடு அமைப்பதில் இன்னமும் மனையடி சாத்திரத்தை கையை விடுவதாகஇல்லை.
இந்தியாவில் பின்பற்றப்படும் வாஸ்து சாத்திரம் என்பது யாழ்ப்பாணத்தில் பின்பற்றப்படும் வாஸ்து சாத்திரம் எனப்படுவதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இது எல்லாம் இருக்க யாழ்ப்பாணத் தில் எங்களின் முன்னோர்கள் பாரம்பரியமாக கட்டி வந்த வீட்டின் மாதிரி என்ன என்பது எத்தனை பெயருக்குத் தெரியும்? இவற்றை அறிந்து கொண்டாலே வாஸ்து சாத்திரத்தில் உள்ள மயக்கம் தெளியும்.
இந்திய சாத்திரங்களில் அநேகமான விடயங்கள் 'போலச் செய்தல்' ஆகும். அதாவது திருமணம் என்றால் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடப்பது போலச் செய்யப்படும். மரணச்சடங்கு என்றாலும் கூட அதுவும் ஆதி முதலான சிவனுக்கு பூசைகள் நடப்பதாகவே செய்யப்படுகின்றது. (இதில் பிரதேசத்திற்கு பிரதேசம் சிறிய சிறிய வேறுபாடுகள் உண்டு) சடங்குகளில் புரோகிதர்களால் அமைக்கப்படும் இடம் (மண்ணடலம்) கூட ஒரு பால்வெளி மண்டலமாகவே பாவனை செய்யப்படுகின்றது. இது தவிர திசைக்கு ஒருகடவுள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு பதவிகளும் வழங்கப்பட்டு அவர்களின் கருணையால் எல்லாம் நடைபெறுவதாக நம்பவைக்கப்படுகின்றது. இதனடிப்படையிலேயே வாஸ்து சாத்திரமும் உள்ளதாக சொல்லப்படுகின்றது.
மனையடி சாத்திரம் ஆனது, பூமியில் பிறந்து வாழ்கின்ற மனித உயிர் அல்லது ஆன்மாவானது ஆகாயத்தில் சுழன்று கொண்டிருக்கும் கோள்களின், நட்சத்திரங்களின் அசைவுகளால் ஏற்படும் மாறுதல்களைக் கருத்தில் கொண்டு சஞ்சலம் இல்லாது ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஏற்ற வாழ்விடம் ஒன்றை அமைப்பது பற்றியது எனக்கொள்ளப்படுகின்றது. இவை எல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்பது எங்களது கடந்த கால வாழ்க்கையே நல்ல சான்றாகும்.
இதனைப்போல் வேறு பல வாஸ்து மண்டலமும் பாவனையில் இருக்கிறது. இதில் எது சரி எது பிழை என்ற குழப்பமும் இருக்கின்றது.
இனி யாழ்ப்பாணத்து பாரம்பரிய வீட்டின் அமைப்பு பற்றி இலங்கை கட்டடக்கலை வரலாறு என்ன சொல்கின்றது எனப்பார்த்தால், வீடு என்பது படத்தில் காட்டியவாறு பிரதான குடியிருப்பு, தனியான அடுக்களை மற்றும் தனியான தலைவாசல் எனப்படும் வரவேற்பறை ஆகியவற்றை சேர்ந்த ஒரு தொகுதியே பாரம்பரிய வீடாகும். இது மண்ணாலும் தடிகளாலும் பனை மற்றும் தென் ஒலையாலும் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட வீடு. இந்த கட்டுமாணப்பொருட்களே அதிகளவில் மக்களுக்கு இலகுவாக கிடைத்தன. இதுதவிர கோவில்கள் மட்டுமே கற்களாலும் மரத்தாலும் கட்டப்பட்டன. போத்துக்கேயரி;ன் ஆட்சியில் கோவில்கள் இடிக்கப்பட்டு கோட்டைகள் கட்டப்பட்டன. வீடுகள் உள்ளவாறே இருந்தன.
ஒல்லாந்தர்காலப்பகுதியில பாரம்பரிய மண், தடி ஓலை கொண்டு கட்டப்பட்ட வீடுகள் ஒடு, மரம், கல் மற்றும் சுண்ணச்சாந்து கொண்டு கட்டும் வழக்கம் ஏற்பட்டது. பாரம்பரிய வீட்டின் அமைப்பே பின்பற்றப்பட்டது. பிரதான குடியிருப்பும், வரவேற்று அறையும் (வெளி விறாந்தை) ஒன்றாக்கப்பட்டு, சமையலறை (குசினி) சற்று வேறாக்கி அதேவேளை சிறிய கூரையால் இணைக்கப்பட்டு கற்கலால் கட்டப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக்கப்பட்டு ஒரே கூரையின் கீழ் இன்னும் சில சிறு பகுதிகளையும் இணைத்து வீடு கட்டப்பட்டது. இவ்வாறான வீடுகளே இன்று அதிகமாக காணப்படுகின்றது.
இந்த நிலையில் இன்னொரு விடயம் கவனிக்கதக்கது, நாற்சார் வீடுகளை தமிழர்களின் பாரம்பரிய வீடு என்று கருதும் பலர் இருக்கின்றனர் . ஆனால் அவ்வாறு இல்லை. நாற்சார் வீடுகள் நகரத்து வீடுகள் இவை பெரும்பாலும் வியாபாரிகளால் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இதன் தொடக்கம் முஸ்லீம் நாடுகள் ஆகும்.
ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் முழுமையாக இயற்கையை நம்பி, இயற்கையோடு வாழ்ந்த தமிழர்கள் தம்மை உணர்ந்து உடல்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தமது வீடுகளை மற்றும் கோயில்களை கட்டினர். தமது ஆற்றலால் இயற்கையை முழுமையாக புரிந்து இயற்கையாக இருக்கின்ற பொருட்களின் தன்மைகளை அறிந்து அதனைப் பயன்படுத்துவதற்கு விதிகளை எழுதி அவற்றை பொருத்தமாகப் பயன்படுத்தினர். ஆக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனையடி சாத்திரம் அல்லது வாஸ்து சாத்திரம் முற்று முழுதாக பயன்படுத்த கூடியதாக இருந்திருக்கும் ஆனால் வீடு கட்டப்படும் இன்றைய சூழ்நிலை பல்வேறு வகையில் மாற்றமடைந்துள்ளது.
இன்றை அரசியல் மற்றும் நிர்வாக மாற்றங்கள் அரசாங்கத்தால் அறிமுப்படுத்தப்படும் நிர்மாணம் சம்பந்தமான சட்டங்களையும், விதிகளையும் அமுல்படுத்த பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் தொடங்கிவிட்டன. இச்சட்டங்கள் மக்களின் ஆரோக்கியமான பாதுகாப்பான வாழ்க்கை என்பவற்றை கருத்தில் கொண்டும், எதிர்கால அபிவிருத்தியைக் கொண்டும் தீர்மானிக்கபடுகின்றன. இவை பெரும்பாலும் சர்வதேச தரங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இது பற்றி இன்னொரு கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
100 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் சந்ததியினர் இருந்தது போல இப்போது நாங்கள் இல்லை. கல்வி நிலைகளில் மாற்றம், வேறு வேறான தொழில்கள், வெளிநாட்டு பணப்புழக்கம், வெளிநாட்டு கட்டுமாணப் பொருட்களின் பாவனை, இலத்திரனியல் உபகரணங்களாலும், நவீன தொலைத்தொடர்பு சாதனங்களால் வீடுகள் நிரம்பியிருக்கும் நிலையில் கடவுளை நினைத்து வழிபாடு செய்ய வழிபாட்டு இடம் அமைக்க வேண்டிய சூழ்நிலை. முன்னர் வீடு கட்டும் நிலைமைகளோடு ஒப்பிடும் போது இன்று வீடு கட்டும் நிலைமை வேறு. முன்பு வீடுகட்டியவர்களின் தொழில் நேர்த்தி, பக்குவம் (ஆன்மீக ரீதியான) இன்று வீடுகட்டுபவர்களிடம் பெரும்பாலும் இல்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள் தற்காலத்து வீடுகளில் இல்லை. முந்னைய காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் ஒரு வகையான நேர்த்தி, வீட்டில் வாழும் போது நின்மதி எல்லாம் இருந்தாக பலர் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். ஆனால் இன்று அவ்வாறு இல்லை என்று கவலைப்படுவர்கள் பலர் இருக்கின்றனர்.
தற்காலத்து கட்டுமாணப்பொருட்களின் தன்மை என்பது முன்பு பயன்படுத்திய கட்டுமாணப்பொருட்களிலும் பார்க்க அதிகளவில் வேறுபடுகின்றது. முன்பு பிரயோகித்த விதிகளை பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளான இந்தக்காலத்திற்கு பிரயோகிக்க முடியுமா? இப்போது ஏற்பட்ட கால, பொளதீக மாற்றத்தை கவனத்தில் எடுக்காது பழைய விதிகளையும் வழக்கங்களையும் எந்த வித விளக்கம் இல்லாது அல்லது புரிந்து கொள்ளாது பின்பற்றுவது என்பது எந்தளவுக்கு புத்திசாதுரியமானது?
குழப்பமான நிலையில் இருந்து செய்யும் காரியங்களும் குழப்பம் நிறைந்ததாக இருப்பதை எவராலும் தடுக்க முடியாது. மனையடி சாத்திரம் அல்லது வாஸ்து பார்த்து வீடு கட்டும்போதும் முழுமையாக அதனை நம்மி முழுக்க முழுக்க அதில் கூறப்பட்டவாறு செய்தால் அதன் பலனை அனுபவிக்க முடியும். அல்லது நவீன முறையில் வீட்டை வடிவமைத்து அதற்கேற்றால் போல் வாழலாம். ஆனால் இன்று பெரும்பாலான இடங்களில் நடைபெறுவது என்னவென்றால் அதில கொஞ்சம் இதில கொஞ்சம் என்று எல்லாம் கலந்த இரண்டும் கெட்டான் நிலையாகும். நிலைமை இவ்வாறு இருக்க இற்றைக்கு 50வருடங்களுக்கு முன்னர் வாஸ்து பற்றிய நம்பிக்கை என்பது இன்று இல்லை என்பது ஏற்றுக்கொள்ளவேண்டும். இதே போல் இன்னும் சில காலம் கடந்து இன்று உள்ளநம்பிக்கைகள் இருக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
சிந்தனையில் தெளிவு.....இன்பமான வாழ்வு
கு.பதீதரன்
கட்டடக்கஞைர்
Images from Google
No comments:
Post a Comment