Monday, January 11, 2016

வேட்டி கட்டியிருக்கும் மாம்பிளைக்கு 'ரை' கட்டி அழகுபார்க்கும் மனநிலை


இயற்கையாக படைக்கப்பட்ட உயிரினங்கள் எவ்வளவு நேர்த்தியாக, அழகாக உள்ளன. ஆனால் எங்களிற் சிலரால் ஆக்கப்படுபவை மட்டும் பார்ப்பதற்கும், பாவிப்பதற்கும் சகிக்கமுடியாதவையாக இருக்கின்றதே!

மனிதர்களின் கண், மூக்கு, வாய் என முக அழகு, கை கால் என உடலழகு எல்லாவற்றையும் இரசிப்போம்  அல்லது இவற்றில் ஏதாவது ஏடாகூடமாக அமைந்துவிட்டால்   இலகுவில் அடையாளம் கண்டு சுட்டிக்காட்டும் இயல்புடைய நாம்,  எம்மைச்சுற்றியுள்ள இயற்கை மற்றும்; கட்டச்சூழலின் அழகு மற்றும் அழகில்லாத தன்மை பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லையே ஏன்? இவற்றில் உள்ள அழகு பற்றி தெரிந்து கொள்ளாமையா? அல்லது அவை முக்கியமில்லை என்று கருதுவதாலா? பொதுவாக யாருமே அழகில்லாதவற்றை  விரும்புவதில்லை. அவ்வாறு இருக்க கட்டடங்களில் காணும் அலங்கோலங்களை ஏற்றுக்கொள்கின்றோம் எனில் அது தவிர்க்க முடியாமல் இருக்கின்றது என்றே எண்ணத்தோன்றுகின்றது. .

 சேட், ஜீன்ஸ், சேலை, சட்டை, கைப்பை மற்றும் சின்னச்சின்ன பொருட்கள் வாங்கும் போது கூட அழகாக இருக்கிறதா எனப் பார்த்துப் பார்த்து வாங்கும் அநேகர் பல இலட்ச ரூபா செலவு செய்து கட்டும் தங்களுக்குரிய வீட்டை, ஏனைய கட்டடங்களை அழகாக அமைப்பதில்லை.



சில கட்டடங்களைப் பார்க்கும் போது இனம்புரியாமல் எல்லோருடைய மனத்தினைக் கவரும் ஆனால் இங்கு அனேகமான கட்டடங்கள் அவ்வாறு இல்லை.  வித்தியாசமாக இருக்கும். வித்தியாசமாக இருத்தால்தான் கட்டடம்  அழகு என்று சில படித்தவர்களே சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கட்டடங்களில் அழகு என்பது அவ்வாறு இல்லை. சில சந்தர்பங்களில் அழகாகத் தான் அமைக்கின்றோம் என நினைத்து ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத பல விடயங்களை ஒன்றாக்கி அலங்கோலப்படுத்தும் சந்தர்பங்களே அதிகமாகவும் இருக்கின்றது.  இதற்கு எல்லாம் அழகு பற்றிய சரியான தெளிவு இல்மையே காரணமாகும்.

அழகு பற்றிய எண்ணக்கரு இடத்திற்கு இடம் காலத்திற்கு காலம் , ஆளுக்கு ஆள் வேறுபட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.  பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பார்வைச் சமநிலை (Visual balance) கட்டடங்களின் நீள உயர மற்றும் அகலங்களுக்கிடை யிலான தொடர்பு அளவுப்பிரமாணம் (Scale), மனிதனுக்கும் கட்டடத்திற்கும்  இடையிலான அளவுப்பிரமாணம் (Proportion ), பார்வையில் ஏற்படுத்தும் கன மற்றும் இடைவெளித்தோற்றம் (Solid & Void  ), ஒட்டு மொத்த தோற்றம் ஏற்படுத்தும் ஒத்திசைவு (Unity) ,பிரித்துக்காட்டுதல் (Contrast) மற்றும் முதன்மைப்படுத்துதல் (Focus / Emphasis)  ஒட்டு மொத்த கட்டடத்தின் தோற்றம் ஏற்படுத்தும் இசைவு (Rhythm) போன்ற விடயங்களை கருத்தில் எடுத்து கட்டடத்தின் பகுதிகளான சுவர், யன்னல், கதவு, கூரை, கட்டடத்திற்கு பூசப்படும் வர்ணம், ஒளியூட்டுகின்ற மின்குமிழ்கள் போன்றவற்றை கவனமாகக் ஒருங்கிணைததால் அழகான கட்டடம் உருவாகி விடும்.

கட்டிடடங்கள் அழகாக தெரியாமல் இருப்பதற்கு கட்டடத்தின் முப்பரிமாணத் தோற்றம் முதலாவது காரணமாகும். இதனை ஆங்கிலத்தில் Form என்று சொல்வார்கள். கட்டடத்தின் தேவைக்கு ஏற்ப அதன் ஒவ்வொரு பாகங்களும் அமையும் அதாவது பாடசாலைக்கட்டடம்  என்பதை எடுத்துக்கொண்டால் முன்வாசல், அதிபர் மற்றும் நிர்வாக இடம், வகுப்பறை, ஆய்வு கூடம், நூலகம் என தேவைக்கு ஏற்றவாறு இடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, அவற்றுக்கான சுவர் கூரை என்பற்றை அமைக்கும் போது இறுதியில் ஒரு முப்பரிமாணத் தோற்றம் ஒன்று உருவாகும் இது அழகாக இருப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களை கவரும், குறித்த பாடசாலைக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்தும். இந்த முப்பரிமாணத் தோற்றத்தை உருவாக்கும் போது வடிவமைப்பு தத்துவங்கள் பின்பற்றப்படும்.

மேலும் கட்டடங்கள் கட்டும் போது  குறிப்பாக வீடு கட்டும்போது கட்டடக்கலைப் பாணி (Style) ஐப் பின்பற்றுவார்கள். பொதுவாக கூறினால் திராவிடக்கட்டடக்கலைப்பாணி, கண்டியப்பாணி, நவீன பாணி எனப் பல்வேறு பாணிகள் நடைமுறையில் உள்ளது. யாழ்ப்பாணம்  பொதுநூலகம் திராவிடக்கட்டிடக்கலைப் பாணியைத் தழுவியது எனக்கூறுவர். கட்டடங்களைக்கட்டும்போது கட்டடக்லைப் பாணிகளை அறியாது ஒன்றுடன் இன்னொன்றைச் சேர்த்து உருவாக்கும் போது கட்டடம் ஒரு கலவையாக தோன்றும். காலத்திற்கு காலம் ஒவ்வொரு கட்டடமாக கட்டும்போது இவ்வாறான குழப்பம் ஏற்படுவதற்கு அதிக சந்தர்பங்கள் உண்டு. ஆனாலும் அந்த வேளையிலும் பொருத்தமாக கட்டடங்களை அமைக்கலாம். இதற்கு உதாரணமாக யாழ் பொது நூலகத்திற்கு அருகில் இருக்கும் உணவகத்தைக் குறிப்பிடலாம். குறித்த உணவகம் நூலகம் கட்டிய ஆரம்ப காலத்தில் இல்லை. ஆனாலும் பின்நாளில் கட்டும்போது பிரதான கட்டடத்திற்குப் பொருத்தமானதாக கட்டப்பட்டுள்ளது.

எல்லாக்கட்டடங்களும் கட்டடக்கலை என்ற வகையில் வருவதில்லை. நன்கு வடிவமைக்கப்பட்ட கட்டடம் கட்டடக்கலைப்படைப்பாகும். நல்ல ஒரு கலைப்படைப்பு வெறுமனே அழகாக மட்டும் இருப்பதில்லை. நல்ல ஒரு கட்டடக்கலைப் படைப்பு  மனதில் ஏற்படுத்துகின்ற தாக்கம் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. ஓவ்வொருவரும் தாமாக மெய் உணர்ந்துகொள்ளவேண்டிணவை. உதாரணமாக  வணக்கத்தல மான நல்லூர் முருகன் கோவிலுக்கு செல்லும் ஒருவர் என்ன மனநிலையில் இருந்தாலும் அவருடைய மனஎழுச்சிகள் அடங்கி ஒரு வித இறையுணர்வை பெறுவர். இதுவே  கட்டடக்கலையின் இறுதி இலக்கு. அதாவது

கடடுமாணப்பொருட்களைக் கொண்டு எமது தேவைக்கு ஏற்ற கட்டடங்களைக் கட்டினாலும் இறுதியில் அதன் பயனாளர்கள் என்ன நோக்கத்திற்காக கட்டடம் கட்டப்பட்டதோ அந்நோக்கத்தை அடையவேண்டும். இதனை புரியும்படி சொல்வதானால், படுக்கை அறை ஒன்று கட்டினால் நின்மதியாக நித்திரை கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.  அவ்வாறான திருப்தி மனதில் ஏற்படவில்லை என்றால் எங்கோ ஒரு குறை இருக்கின்றது என்ற முடிவுக்கு வரலாம்.

இது தவிர கட்டடத்திற்கு வர்ணம் பூசும் போது வடிவமைப்பு விதிகளைப்; பின்பற்றுவதோடு அவற்றுக்கான தன்மைகளையும் உணர்ந்து பிரயோகிக்க வேண்டும். ,  வர்ணங்கள் ஒவ்வொன்றும்  ஒவ்வொருவிதமான  உணர்வுகளை மனதில்  ஏற்படுத்தும். ஐரோப்பிய நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள் போன்ற வர்ணங்கள் அதிக இயக்கதறன் உள்ளவை, எங்கிருந்தாலும் கண்களால் உடனடியாக உள்வாங்கப்படக்கூடியவை எனக்கூறுகின்றது. அதேபோல் நீலம் , பச்சை ஊதா போன்றன மென்மையான குணம் கொண்டவை என்றும் இவை கண்களின் பார்வைக்கு பின்னோக்கிச்செல்லும் தன்மை கொண்டவை எனக்கூறுகின்றது.

விலை மலிவாகக் கிடைக்கின்றது, பக்கத்தது வீட்டிற்கு அடித்த கலர் நல்லா இருக்கு, இப்ப எல்லா இடத்திலும் இந்த கலர்தான் அடிக்கினம் என்று சொல்லி கட்டடங்களுக்கு வர்ணம் பூசுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.  பொருத்தமான வர்ணம் வெள்ளையாக இருந்தால் அதனையே பூசுங்கள்.
கட்டுமாணப்பொருட்களைப் பாவிக்கும் போது அவற்றின் தன்மைகளை அறிந்து பயன்படுத்தாது, கண்மூடித்தனமாக பயன்படுத்துவதும் கட்டடத்தின் அழகைப் பாதிக்கும். அதாவது தன்மை என்று குறிப்பிடப்படுவது  அவற்றைக் கட்டுப்போது நிறை தாங்குதிறன் (பலம்) பற்றியது அல்ல. சீமெந்துக்கல்லுக்கு வெறுமையாக இருக்கும் போது அது சொரசொரப்பாக இருப்பதும், கரடு முரடாக தோன்றுவதும்,  கட்டி முடித்து சீமெந்துப் பூச்சு முடிந்ததும் அதே கல் வேறு மாதிரியாக தோன்றும்;. பின்னர் அதற்கு வர்ணம் பூசியதும் வேறு மாதிரியான உணர்வையும் தரும். இதைப்போல மரம், இரும்பு, அலுமீனியம், பிளாஸ்ரிக், கண்ணாடி, கறையில் உருக்கு, செங்கல் என கட்டுமாணத்திற்குப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் ஒவ்வொருவிதமான தன்மையும், அவற்றால் மனதில் ஒவ்வொருவிதமான உணர்வுகளும் ஏற்படும். பொதுவாக கட்டுமாணப்பொருட்கள் ஒன்றுடன் மற்றொன்று சேர்த்து பயன்படுத்தும் போது அதற்கு ஏற்றவகையில் சேர்க்கவேண்டும்.

உடம்பில்  எவ்வாறு  தலை, கழுத்தைப் பயன்படுத்தி அழகாகப் பொருத்தப்பட்டுள்ளதோ அவ்வாறான பொருத்தம் இருக்கவேண்டும். தலைக்கும் உடலுக்கும் பொருத்தம் சரியாக அமையாவிட்டால் ஒட்டு மொத்த உருவம் எவ்வாறு வித்தியாசமான தோற்றத்தைத்கொடுக்குமோ, அதைப்போல சரியாகப் பொருந்தாத இரண்டு கட்டுமாணப்பொருட்கள் மனதில் வித்தியாசமான உணர்வைத்தரும்.



இனித் தலையங்கத்திற்கு வருவோம் அது என்ன வேட்டி கட்டியிருக்கும் மாப்பிழைக்கு 'ரை' கட்டி அழகுபார்க்கும் மனநிலை என்று யோசிக்கிறீர்களா? வேட்டி கட்டினால் அதற்குப்பொருத்தமான சேட், அதற்குப்பொருத்தமான சால்வை, அதற்குப்பொருத்தமாக தேவை என்றால் தலைப்பாகை என்றுதானே அதன் சேர்க்கை இருக்கவேண டும். அவ்வாறு இல்லாமல் பட்டு வேட்டி, பருத்தித்துணியில்  கடும்நீலநிற அரைக்கை சேட்டு அதற்கு நவீன ரை முடிந்தால் விளையாடும் போது அணியும் சப்பாத்து இதை எல்லாம் சேர்த்து ஒரு ஆள் வெளிக்கிட்டு வந்தால் எப்படி இருக்கும் கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாருங்கள்.....கற்பனை பண்ண கஸ்ரமாக இருந்தால் அப்படியே யாழ்ப்பாணத்தில் ஒரு சுற்று சுற்றி  வாருங்கள் அநேகமான கட்டடங்கள் அவ்வாறுதான் இருக்கிறது.

கு.பதீதரன்
கட்டடக்கஞைர்



No comments:

Post a Comment