Monday, January 18, 2016

வெளிப்பக்கமா ? உட்பக்கமா ? நீங்களே தீர்மானியுங்கள்...



அழகான அமைதியான இடத்தில் இருந்து சாப்பிட, புத்தகம் வாசிக்க, சிந்திக்க, பிள்ளைகளுடன் குடும்பமாக இருந்து கதைக்க, அன்புக்குரியவர்களுடன் இருந்து விவாதிக்க  ஒரு கிடைத்தால் யார்தான் வேணடாம் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இவ்வாறான சந்தர்பங்களும், இடங்களும் கிடைக்காது தங்களின் இன்பமான பொழுதுகளை தேவையில்லாத இடங்களில் இருந்து வீணாக்கி விடுகின்றனர். இறந்த காலம் இறந்தாக இருக்க, எதிர்காலத்தை வளமாக்க நிகழ்காலத்தில் செயலாற்றுவதே புத்திசாலித்தனம்.

வீட்டின், பாடசாலையின், அலுவலகத்தின், அங்காடிகளின் உட்பகுதிகளை அழகாக்குவது  பற்றி எப்போதாவது எண்ணியிருந்தீர்களா?  அழகாக்க சில யோசனைகள்......

ஒன்று:  வடிவமைத்தல் என்பது ஒரு கலைத்துவமான செயற்பாடு. அந்தவகையில் ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் போது அதற்கு ஒரு பிரதான கருப்பொருள் இருக்க வேண்டும். கருப்பொருள் இல்லாமல்  கலைப்படைப்பு ஒன்றை  உருவாக்குவதும், விளங்கிக்கொள்வதும் கடினம். உதாரணமாக  காதலை வெளிப்படுத்தம் பாடல் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் இதில் காதல் என்பது பிரதான கருப்பொருள், அதில் கவிதை வரிகள் காதலைச் சொல்லவேண்டும், அதற்கான பொருத்தமான சொற்கள் சரியான வகையில் இணைக்கவேண்டும். பொருத்தமான  குரலில்  இனிமையான  இசையுடன் பாடவேண்டும். இவ்வாறு ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடலுக்கு சரியான வகையில் காட்சி அமைக்க வேண்டும். ஒரு வெற்றி பெற்ற காதல் பாடலில் மேற்கூறியவை எல்லாம் சரியாக அமைந்திருக்கும். வடிமைக்கும் போதும் சரியான கருப்பொருளைத் தெரிவு செய்து அதற்கு ஏற்றால் போல் வடிவமைப்பு தத்துவங்களையும், வடிவமைக்கும் பதிகளையும் பயன்படுத்துவது அழகான உள்ளக வடிவமைப்பை தரும்.

இரண்டு: செயற்பாடு - குறித்த இடத்தில் இடம்பெறும் செயற்பாடுகள். வீட்டினை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு பகுதியிலும் வௌ;வேறு விதமான செயற்பாடுகள் நடைபெறும். உதாரணமாக சமையல் அறையை எடுத்துக்கொண்டால், சமையல் செயற்பாடுட்டினை சிறப்பாக செய்வதற்கு ஏற்றவகையில் அதற்குள் இருக்கும் பொருட்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். வேலைகளை செய்வதற்கு போதிய வெளிச்சம், காற்று இருக்க வேண்டும். தரை மற்றும் சுவர்களின் தன்மை இலகுவில் சுத்தாமாக வைத்திருக்க கூடியவகையில் இருக்க வேண்டும் அதே வேளையில் பொருத்தமான வர்ணம் என்பன குறித்த இடத்தின் செயற்பாட்டிற்கு ஏற்ற வகையிலேயே அமையும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்கின் உட்புறம் தொழிலாளர்கள் சிறப்பாக வேலை செய்வதற்கும், கோவில் உட்புறம் வடிவமைக்கும் போது மனதிற்கு ஆறுதல் அளிப்பதாகவும், இறை சிந்தனையை மேம்படுத்துவதாகவும், பாடசாலையின் உட்புறம் என்பது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஊக்கப்படுத்துவற்கும் ஏற்றவகையில் இருக்கவேண்டும்.  அழகாக்ககுவதற்கு செய்யும் செயல்கள் குறித்த இடத்தின் பிரதான செயற்பாட்டிற்கு ஊறு விளைவிப்பதாக இருக்க இருக்ககூடாது.

மூன்று:  ஒற்றுமையும் ஒத்திசைவும் - வடிவமைப்புசெய்ய வேண்டிய  இடத்தில் உள்ள பொருட்கள் மற்றும் யன்னல் கதவு தரை, கூரை போன்றவற்றில் காணப்படும் கோடு, வடிவம், அலங்காரம், மேற்பரப்பின் தன்மை, வர்ணம் போன்ற வடிவமைப்பின் மூலங்களுக்கு இடையிலான ஒற்றுமையும், ஒத்திசைவும். அதாவது அலுவலகம் ஒன்றின் வரவேற்பறையை எடுத்துக்கொள்ளுங்கள், வலிமையான கண்ணாடியிலான கதவு, அகலமான அலுமீனியத்தில் கொழுவப்பட்ட கண்ணாடி யன்னல்கள், யன்னலுக்கு எதிர்ப்பக்க சுவருக்கு  குருத்துப்பச்சைந pற  வர்ணம் பூசிய சுவர் இரண்டு பக்கத்திற்கு, அவ்வாறான இடத்தில் மரத்தில் செய்யப்பட்ட ஒரு கதிரை, அருகில் இரும்பிலான இன்னொரு கதிரை, அதற்குப்பக்கத்தில் பிளாஸ்ரிக் மேசை பருத்தி துணியிலான மேசை விரிப்புடன், அதற்கு அருகில் செப்பிலான பெரிய குத்து விளக்கு, நிலத்திற்கு பிளாஸ்ரிக் விரிப்பு, தலைக்கு மேல் ரியூப் மின்விளக்கு அருகில் ; மரத் தோற்றம் தரக்கூடிய ஸ்ரிக்கர் பதிக்கப்பட்ட ஒட்டுப்பலகையால் செய்யப்பட்ட வரவேற்பு மேசை யும் அதனோடு சேர்ந்த சூழலும் கதிரையும் இருக்கின்ற  வரவேற்பு அறையில் ஒருவரைச் சந்திப்பதற்காக அரை மணிநேரம் காத்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு வயிற்றைக் குமட்டி வாந்தி வந்தால் நான் பொறுப்பல்ல. வாந்தி வந்தமைக்கு காரணம் வேறு ஒன்றுமல்ல குறித்த இடத்தில் உள்ள பொருட்களின்  தன்மைகளுக்கு இடையிலான முரண்பாடு, மேற்பரப்புகளின் மேல் ஒளி பட்டு தெறிப்பதனால்  உருவாகும் ஒழுங்கீனங்கள் ஆகும். ஆழகான வரவேற்பு அறை ஆக்குறைந்தது படத்தில் உள்ளவாறு இருந்தால் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் தான் வந்த காரியம் ஆற்றும் வரைக்கும் எரிச்சல் அடையாமல் காத்துக்கொண்டு இருக்கலாம்.

நான்காவது: முன்னிலைப்படுத்தல் - குறித்த உள்ளக அமைப்பில் முன்னிலைப்படுத்தப்படும் விடயம். சாதரணமாக மனிதக்கண்கள் எவ்வாறு அசைகின்றன என்பதைப்புரிந்துகொண்டு செயலாற்றுதல். உதாரணமாக உங்கள் அங்காடிக்கு ஒருவர் வருவதாக வைத்துக்கொள்வோம். வாசலுக்கு எதிரில் ஒரு இடம் இருக்கும் அதில் என்னபொருளை வைக்கப்போகின்றீர்கள், அதனை எவ்வாறு வைக்கப்போகின்றீர்கள் என்பது முக்கியமானது. ஏனெனில் உங்கள் அங்காடியில் குறித்தஇடம் ஒரு முக்கிய பார்வைப்புள்ளியாகும். குறித்த வாடிக்கையாளர் அங்கு பணியாற்றும் பணியாளரைத் தே ப்பார்ப்பார் அப்போது வாடிக்கையாளரின் கண்கள் அசையும் அந்த வேளையில் அவருடைய கண்ணில் படவேண்டிய பொருட்கள் என்ன என்பதை நீங்கள் தீர்மானித்து ஒழுங்குபடுத்தினால் குறித்த வியாபாரத்தில் நீங்கள் உள்ளகவடிவமைப்பினை பயன்படுத்தி வெற்றி பெற்றவர். இதே போல் அலுவலகம், வரவேற்பறை , படுக்கை அறையில் கூட இந்த விதியைப் பிரயோகித்துப்பார்க்கலாம்.

ஐந்தாவது: பார்வைச்சமநிலை. மீண்டும் கண் பற்றிய விடயம். சகலவிதமான முயற்சியும் எடுத்து உள்ளக அமைப்பில்  மாற்றத்தை ஏற்படுத்திய பின்னர் பார்க்கும் கண்களுக்கு பார்வையில் சமநிலை ஏற்படாத பட்சத்தில் குறித்த வடிவமைப்பு முயற்சி பயன்அற்ற ஒன்றே. பௌதீக அழகு எல்லாமே கண்களால் தீர்மாணிக்கப்படுவதால் பார்வைச் சமநிலை வடிவமைப்பில் முக்கியமான ஒன்றாகும். இதனை அடைவதற்கு வடிவமைப்செய்பவர் தன்னுடைய சொந்த முயற்சியால் சமநிலை பற்றிய உணர்வை வளர்த்துக்கொண்டாலே செய்யும் வேலையில் பார்வைச்சமநிலையயை அடைய முடியும்.

ஆறாவது:வடிவமைப்பு செய்யும் இடத்தின் கட்டடம் சார்ந்த சேவைகள் பற்றியது. மின்சாரம், தண்ணீர், மற்றும் ஒலி போன்றவற்றுக்காக செய்யப்படும் மின்சாரக்கம்பி, தண்ணீர்க்குழாய் போன்ற பொருட்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவை பழுது ஏற்பட்டால் இலகுவில் திருத்தி அமைக்ககூடிய வகையிலும், இடத்தின் அழகை மெருகூட்டும் வகையில் அல்லது அழகைப்பாதிக்காத வகையில் செய்யப்படவேண்டும். இதற்கான எந்த விதியும் இல்லை, எப்படி அமைக்கவேண்டும் என்பது பற்றிய தீர்மானமும் வடிவமைப்பாளருடையதாகும்.  குறித்த இடத்தின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாகும்.

உள்ளக வடிவமைப்புத் துறை பற்றிக்கற்கும் ஒருவர் மேற்குறித்த விடயங்கள் பற்றியும் வேறு துறைசார் நுட்பங்களையும் கற்க முடியும். அதேNவுளை ஆர்வமுள்ள ஒருவர் இணையத்தளங்களில் இது பற்றிய பல புத்தகங்கள் ஆங்கில மொழியில் உண்டு அவற்றை வாசித்தும் துறைசார் அறிவை வளர்த்துக்கொள்ளமுடியும்.

இனித் தலையங்கத்துக்குவருவோம் அது என்ன வெளிப்பக்கமா ? உட்பக்கமா ? நீங்களே தீர்மானியுங்கள்... என்று எழுதி இருக்கு என்று யோசிக்கிறிர்களா? யாழ்ப்பாணத்தில் அநேகர் வீடு மற்றும் இதர கட்டடங்களை அமைக்கும் போது மற்றவர்களுக்கு தங்களுடைய செல்வச்செழிப்பைக்காட்டுவதற்காக பல இலட்சங்களை செலவு செய்வார்கள். அவ்வாறு செலவு செய்யும் போது ஒப்பந்தகாரர்கள், வியாபாரிகளின் தகவல்கள் மற்றும் சந்தைப்படுத்தல்களுக்கு மயங்கி எது பொருத்தம் எது பொருத்தமில்லை  என்பதைப் பார்க்காதுஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத கட்டுமாணப்பொருட்கள், பொருத்தமில்லாத வர்ணங்கள், பொருத்தமில்லாத அளவுபிரமாணங்கள் என முடிந்தளவு எங்கெல்லாம் பொருத்தமில்லாத வேலைகள் செய்யமுடியுமோ செய்து கொள்வார்கள். இது தவிர வெளியில் காட்டிய படத்திற்கு எதிர் வளமாக உட்பக்கம் குறைந்தளவு கவனமே செலுத்தியிருப்பார்கள். செலவு செய்து கட்டடிய கட்டத்தினை வெளியில் பார்ப்பவர்கள் பார்த்துவிட்டு மட்டும் போக கட்டியவர் வீட்டுக்குள்ளே எதுவும் இ ல்லாது இருப்பர். இது தேவைதானா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கு.பதீதரன்
கட்டடக்கஞைர்

Thursday, January 14, 2016

தமிழர்கள் வீடும் சாத்திரமும்


சிந்தனைகளில், செயல்களில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு ஒரு தீர்க்கமான முடிவு காண்பது வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை; நம்புகின்றீர்களா? அப்படி என்றால் தொடர்ந்து படியுங்கள்.

புதிதாக ஒரு வீடு கட்ட ஆரம்பித்தவுடன் கட்டபோகும் வீடு பற்றி விரும்பியோ விரும்பாமலோ பலருடனும் கதைக்கும்; போது எல்லோருமே தங்களுடைய  கருத்துக்களையும், புதிய சிந்தனைகளைத் தெரிவிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

அத்தோடு நின்றுவிடாமல் அந்த வீட்டைப்பார் இந்த வீட்டைப்பார் என்று சிபாரிசும் செய்வார்கள். இப்படியோ கதைத்தும், பார்த்து மனம் நிறைய பல ஆசைகளோடு வீட்டுப்படம் கீற என்று  ஒருவரிடம் செல்லும் போது அவர் தன்னுடைய கணக்கிற்கு பல ஐடியாக்கள் கொடுப்பார். இவற்றை எல்லாம் கடந்து வீட்டில் இருக்கின்ற பெரியவர்கள் உன்ர ராசிக்கு என்ன வாசல் வீடு என்று பார்த்து நிலயத்தை எடு என்பார்கள். இப்படியே  வீட்டுப்படத்தைக்கீறி பிரதேச சபையிலோ நகரசபையிலோ காட்டி அனுமதி பெற வேண்டும். அதைச்செய்ய வெளிக்கிட்டால் அவர்கள் வேறு கொஞ்ச விடயங்கள் சொல்வார்கள் .

இவை எல்லாவற்றிலும்  மிகவும் மயக்கமானதும் தலையிடி கொடுப்பதும் என்ன என்று பார்த்தால் நிலையம் பார்த்தல், வீட்டு அளவிட்டுத்திட்டம் போன்ற விடயங்களை சொல்கின்ற மனையடி சாத்திரம் அல்லது வாஸ்து சாத்திரம் இனி விடயத்திற்கு வருவோம்....

இந்திய உப கண்டத்திலும் அதற்கு அண்மித்த இலங்கை போன்ற நாடுகளிலும் சமயங்களும் அதனோடு சேர்ந்த வாழ்வியல் நம்பிக்கைகளும் பல நூற்றாண்டுகள் பழமையானவை. இவற்றில் வீடுகள் அமைப்பதற்கு பின்பற்றப்படும் மனையடி சாத்திரம் அல்லது வாஸ்து சாத்திரமும் அவற்றில் ஒன்று. உலகில் முன்பு கிராமங்களாக இருந்தவை இன்று நகரமாக மாறிக்கொண்டு இருக்கின்றன, சனத்தொகைப் பெருக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற  காரணங்களால் பல வாழ்வியல் நம்பிக்கைகள் அனேக மக்களால்; பின்பற்றப்படாது கைவிடப்பட்டாலும்,  தமிழர்கள் வீடு அமைப்பதில் இன்னமும்  மனையடி சாத்திரத்தை கையை விடுவதாகஇல்லை.

இந்தியாவில் பின்பற்றப்படும் வாஸ்து சாத்திரம் என்பது யாழ்ப்பாணத்தில் பின்பற்றப்படும் வாஸ்து சாத்திரம் எனப்படுவதில் இருந்து முற்றிலும்  மாறுபட்டது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இது எல்லாம் இருக்க யாழ்ப்பாணத் தில் எங்களின் முன்னோர்கள் பாரம்பரியமாக கட்டி வந்த வீட்டின்  மாதிரி என்ன என்பது எத்தனை பெயருக்குத் தெரியும்? இவற்றை  அறிந்து கொண்டாலே வாஸ்து சாத்திரத்தில் உள்ள மயக்கம் தெளியும்.

இந்திய சாத்திரங்களில் அநேகமான விடயங்கள் 'போலச் செய்தல்' ஆகும். அதாவது திருமணம் என்றால் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம்  நடப்பது போலச்  செய்யப்படும். மரணச்சடங்கு என்றாலும் கூட அதுவும் ஆதி முதலான சிவனுக்கு பூசைகள் நடப்பதாகவே செய்யப்படுகின்றது.  (இதில்  பிரதேசத்திற்கு பிரதேசம் சிறிய சிறிய  வேறுபாடுகள் உண்டு) சடங்குகளில் புரோகிதர்களால் அமைக்கப்படும் இடம் (மண்ணடலம்) கூட ஒரு பால்வெளி மண்டலமாகவே பாவனை செய்யப்படுகின்றது.  இது தவிர  திசைக்கு ஒருகடவுள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு   ஒரு பதவிகளும் வழங்கப்பட்டு அவர்களின் கருணையால் எல்லாம் நடைபெறுவதாக நம்பவைக்கப்படுகின்றது. இதனடிப்படையிலேயே வாஸ்து சாத்திரமும் உள்ளதாக சொல்லப்படுகின்றது.

மனையடி சாத்திரம் ஆனது, பூமியில் பிறந்து வாழ்கின்ற மனித உயிர் அல்லது ஆன்மாவானது ஆகாயத்தில் சுழன்று கொண்டிருக்கும் கோள்களின்,  நட்சத்திரங்களின் அசைவுகளால்  ஏற்படும் மாறுதல்களைக் கருத்தில் கொண்டு  சஞ்சலம் இல்லாது ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஏற்ற வாழ்விடம்  ஒன்றை அமைப்பது பற்றியது எனக்கொள்ளப்படுகின்றது.  இவை எல்லாம் எவ்வளவு தூரம் உண்மை  என்பது எங்களது கடந்த கால வாழ்க்கையே நல்ல சான்றாகும்.


படத்தில் இருப்பது இந்தியாவில் பின்பற்றப்படுகின்ற ஒரு வாஸ்து மண்டலம்.  இதைப்போல பல்வேறு வகையான வாஸ்து படங்கள் உலா வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  இதில் காணித்துண்டு எப்போதும் சதுரமாக இருக்க வேண்டும் என்று இது கூறுகின்றது. ஆவ்வாறு சதுரமாக இருக்கும் காணியை 3 சம பங்குகளாக இரு பக்கதிலும் பிரித்து அதற்குள் தேர்ந்து எடுத்த பகுதியில் அறைகள் அமைக்க வேண்டும் என்று கூறுகின்றது. நடுப்பகுதியான பிரமஸ்தானம் இது வரவேற்பறையாக இருக்கலாம் என்கிறது ஆனால் வேறு சில  எப்போதும் திறந்ததாக இருக்கவேண்டும் என்று சொல்கின்றது. மேலும் வடகிழக்கு மூலை (ஈசானம்) இது புனிதமானது, கடவுளுக்கு உரிய இடம் அல்லது தண்ணீர் அல்லது திறந்த வெளியாக இருக்கலாம் என்கிறது சாத்திரம். தென்கிழக்கு மூலை  அக்கினி தெய்வத்திற்கு உரியது இங்கு சமையல் அறை இருக்கலாம் என்கிறது. வடக்கு  குபேர  திசை இதில் பொக்கிசங்கள் வைப்பது அல்லது கல்வி சம்பந்தமான அறை இருக்கலாம் எனச்சொல்கின்றது. கிழக்கு சூரியனுக்கு உரிய திசை இங்கு களஞ்சிய அறை, சாப்பாட்டு அறை மற்றும் வரவேற்பறை இருக்கலாமமம்.  தெற்கு யமனுக்கு உரிய திசை இங்கும்  களஞ்சிய அறை, சாப்பாட்டு அறை மற்றும் வரவேற்பறை இருக்கலாமமம ;. மேற்கு திசை வருணண் திசை மழைக்குரிய கடவுக்குரியது இங்கு படுக்கை அறை, குளியல் அறை இருக்கலாம் என்கிறது.  தென் மேற்கு மூலை யில் படுக்கை அறையும் வட மேற்கு வாயு மூலையில் கழிவு அகற்றும் இடம்விருந்தினர் அறை ஆகியன இருக்கலாம் என்கிறது சாத்திரம்.  இதல் முக்கிய விடயம் என்னவென்றால் காலத்திற்கு காலம் சிறிய மாற்றத்திற்கு உட்பட்ட வாஸ்து மண்டலமே படத்தில் உள்ளது.



இதனைப்போல் வேறு பல வாஸ்து மண்டலமும் பாவனையில் இருக்கிறது. இதில் எது சரி எது பிழை என்ற குழப்பமும் இருக்கின்றது.

இனி யாழ்ப்பாணத்து பாரம்பரிய வீட்டின் அமைப்பு பற்றி இலங்கை கட்டடக்கலை வரலாறு என்ன சொல்கின்றது எனப்பார்த்தால், வீடு என்பது படத்தில்  காட்டியவாறு பிரதான குடியிருப்பு, தனியான அடுக்களை மற்றும் தனியான தலைவாசல் எனப்படும் வரவேற்பறை ஆகியவற்றை சேர்ந்த ஒரு தொகுதியே  பாரம்பரிய வீடாகும்.  இது மண்ணாலும் தடிகளாலும் பனை மற்றும் தென் ஒலையாலும் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட வீடு. இந்த கட்டுமாணப்பொருட்களே அதிகளவில் மக்களுக்கு இலகுவாக கிடைத்தன. இதுதவிர கோவில்கள் மட்டுமே கற்களாலும் மரத்தாலும் கட்டப்பட்டன.  போத்துக்கேயரி;ன் ஆட்சியில் கோவில்கள் இடிக்கப்பட்டு கோட்டைகள் கட்டப்பட்டன. வீடுகள் உள்ளவாறே இருந்தன.



ஒல்லாந்தர்காலப்பகுதியில  பாரம்பரிய மண், தடி ஓலை கொண்டு கட்டப்பட்ட வீடுகள்   ஒடு, மரம், கல் மற்றும் சுண்ணச்சாந்து கொண்டு கட்டும் வழக்கம் ஏற்பட்டது.  பாரம்பரிய  வீட்டின் அமைப்பே பின்பற்றப்பட்டது. பிரதான குடியிருப்பும், வரவேற்று அறையும் (வெளி விறாந்தை)  ஒன்றாக்கப்பட்டு, சமையலறை (குசினி) சற்று வேறாக்கி அதேவேளை சிறிய கூரையால் இணைக்கப்பட்டு கற்கலால் கட்டப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்  ஆட்சிக்காலத்தில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக்கப்பட்டு ஒரே கூரையின் கீழ் இன்னும் சில சிறு பகுதிகளையும் இணைத்து வீடு கட்டப்பட்டது.  இவ்வாறான வீடுகளே இன்று அதிகமாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் இன்னொரு விடயம் கவனிக்கதக்கது, நாற்சார் வீடுகளை தமிழர்களின் பாரம்பரிய வீடு என்று கருதும் பலர் இருக்கின்றனர் . ஆனால் அவ்வாறு இல்லை. நாற்சார் வீடுகள் நகரத்து வீடுகள் இவை பெரும்பாலும் வியாபாரிகளால் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இதன் தொடக்கம் முஸ்லீம் நாடுகள் ஆகும்.



ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் முழுமையாக இயற்கையை நம்பி, இயற்கையோடு வாழ்ந்த தமிழர்கள் தம்மை உணர்ந்து உடல்கள் வாழ்வதற்கு ஏற்ற  வகையில் தமது வீடுகளை மற்றும் கோயில்களை கட்டினர். தமது ஆற்றலால் இயற்கையை முழுமையாக புரிந்து இயற்கையாக இருக்கின்ற பொருட்களின் தன்மைகளை அறிந்து அதனைப் பயன்படுத்துவதற்கு விதிகளை எழுதி அவற்றை பொருத்தமாகப் பயன்படுத்தினர். ஆக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனையடி சாத்திரம் அல்லது வாஸ்து சாத்திரம் முற்று முழுதாக பயன்படுத்த கூடியதாக இருந்திருக்கும் ஆனால் வீடு கட்டப்படும் இன்றைய சூழ்நிலை பல்வேறு வகையில் மாற்றமடைந்துள்ளது.

இன்றை அரசியல் மற்றும் நிர்வாக மாற்றங்கள் அரசாங்கத்தால்  அறிமுப்படுத்தப்படும் நிர்மாணம் சம்பந்தமான சட்டங்களையும், விதிகளையும் அமுல்படுத்த  பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் தொடங்கிவிட்டன. இச்சட்டங்கள் மக்களின் ஆரோக்கியமான  பாதுகாப்பான வாழ்க்கை என்பவற்றை கருத்தில் கொண்டும், எதிர்கால அபிவிருத்தியைக் கொண்டும் தீர்மானிக்கபடுகின்றன. இவை பெரும்பாலும்  சர்வதேச தரங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இது பற்றி இன்னொரு கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

100 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் சந்ததியினர் இருந்தது போல இப்போது நாங்கள் இல்லை. கல்வி நிலைகளில் மாற்றம், வேறு வேறான தொழில்கள், வெளிநாட்டு பணப்புழக்கம், வெளிநாட்டு கட்டுமாணப் பொருட்களின் பாவனை,  இலத்திரனியல் உபகரணங்களாலும், நவீன தொலைத்தொடர்பு  சாதனங்களால் வீடுகள் நிரம்பியிருக்கும் நிலையில் கடவுளை நினைத்து வழிபாடு செய்ய வழிபாட்டு இடம் அமைக்க வேண்டிய சூழ்நிலை. முன்னர் வீடு கட்டும் நிலைமைகளோடு ஒப்பிடும் போது இன்று வீடு கட்டும் நிலைமை வேறு. முன்பு வீடுகட்டியவர்களின் தொழில் நேர்த்தி, பக்குவம் (ஆன்மீக ரீதியான) இன்று வீடுகட்டுபவர்களிடம் பெரும்பாலும் இல்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள் தற்காலத்து வீடுகளில்  இல்லை. முந்னைய காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் ஒரு வகையான நேர்த்தி, வீட்டில் வாழும் போது நின்மதி எல்லாம் இருந்தாக பலர் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். ஆனால் இன்று அவ்வாறு இல்லை என்று கவலைப்படுவர்கள் பலர் இருக்கின்றனர்.

தற்காலத்து கட்டுமாணப்பொருட்களின் தன்மை என்பது முன்பு பயன்படுத்திய கட்டுமாணப்பொருட்களிலும்  பார்க்க அதிகளவில் வேறுபடுகின்றது.  முன்பு பிரயோகித்த விதிகளை  பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளான இந்தக்காலத்திற்கு பிரயோகிக்க முடியுமா? இப்போது  ஏற்பட்ட கால,  பொளதீக மாற்றத்தை கவனத்தில் எடுக்காது பழைய விதிகளையும் வழக்கங்களையும் எந்த வித விளக்கம் இல்லாது அல்லது புரிந்து கொள்ளாது பின்பற்றுவது என்பது எந்தளவுக்கு புத்திசாதுரியமானது?

குழப்பமான நிலையில் இருந்து செய்யும் காரியங்களும் குழப்பம் நிறைந்ததாக இருப்பதை எவராலும் தடுக்க முடியாது. மனையடி சாத்திரம் அல்லது வாஸ்து பார்த்து  வீடு கட்டும்போதும் முழுமையாக  அதனை நம்மி முழுக்க முழுக்க அதில் கூறப்பட்டவாறு செய்தால் அதன் பலனை அனுபவிக்க முடியும். அல்லது நவீன முறையில் வீட்டை வடிவமைத்து அதற்கேற்றால் போல் வாழலாம். ஆனால் இன்று பெரும்பாலான இடங்களில் நடைபெறுவது என்னவென்றால் அதில கொஞ்சம் இதில கொஞ்சம் என்று எல்லாம் கலந்த இரண்டும் கெட்டான் நிலையாகும். நிலைமை இவ்வாறு இருக்க இற்றைக்கு 50வருடங்களுக்கு முன்னர் வாஸ்து பற்றிய  நம்பிக்கை என்பது இன்று இல்லை என்பது ஏற்றுக்கொள்ளவேண்டும். இதே போல் இன்னும் சில காலம் கடந்து இன்று உள்ளநம்பிக்கைகள் இருக்குமா  என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சிந்தனையில் தெளிவு.....இன்பமான வாழ்வு

கு.பதீதரன்
கட்டடக்கஞைர்

Images from Google

Monday, January 11, 2016

வேட்டி கட்டியிருக்கும் மாம்பிளைக்கு 'ரை' கட்டி அழகுபார்க்கும் மனநிலை


இயற்கையாக படைக்கப்பட்ட உயிரினங்கள் எவ்வளவு நேர்த்தியாக, அழகாக உள்ளன. ஆனால் எங்களிற் சிலரால் ஆக்கப்படுபவை மட்டும் பார்ப்பதற்கும், பாவிப்பதற்கும் சகிக்கமுடியாதவையாக இருக்கின்றதே!

மனிதர்களின் கண், மூக்கு, வாய் என முக அழகு, கை கால் என உடலழகு எல்லாவற்றையும் இரசிப்போம்  அல்லது இவற்றில் ஏதாவது ஏடாகூடமாக அமைந்துவிட்டால்   இலகுவில் அடையாளம் கண்டு சுட்டிக்காட்டும் இயல்புடைய நாம்,  எம்மைச்சுற்றியுள்ள இயற்கை மற்றும்; கட்டச்சூழலின் அழகு மற்றும் அழகில்லாத தன்மை பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லையே ஏன்? இவற்றில் உள்ள அழகு பற்றி தெரிந்து கொள்ளாமையா? அல்லது அவை முக்கியமில்லை என்று கருதுவதாலா? பொதுவாக யாருமே அழகில்லாதவற்றை  விரும்புவதில்லை. அவ்வாறு இருக்க கட்டடங்களில் காணும் அலங்கோலங்களை ஏற்றுக்கொள்கின்றோம் எனில் அது தவிர்க்க முடியாமல் இருக்கின்றது என்றே எண்ணத்தோன்றுகின்றது. .

 சேட், ஜீன்ஸ், சேலை, சட்டை, கைப்பை மற்றும் சின்னச்சின்ன பொருட்கள் வாங்கும் போது கூட அழகாக இருக்கிறதா எனப் பார்த்துப் பார்த்து வாங்கும் அநேகர் பல இலட்ச ரூபா செலவு செய்து கட்டும் தங்களுக்குரிய வீட்டை, ஏனைய கட்டடங்களை அழகாக அமைப்பதில்லை.



சில கட்டடங்களைப் பார்க்கும் போது இனம்புரியாமல் எல்லோருடைய மனத்தினைக் கவரும் ஆனால் இங்கு அனேகமான கட்டடங்கள் அவ்வாறு இல்லை.  வித்தியாசமாக இருக்கும். வித்தியாசமாக இருத்தால்தான் கட்டடம்  அழகு என்று சில படித்தவர்களே சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் கட்டடங்களில் அழகு என்பது அவ்வாறு இல்லை. சில சந்தர்பங்களில் அழகாகத் தான் அமைக்கின்றோம் என நினைத்து ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத பல விடயங்களை ஒன்றாக்கி அலங்கோலப்படுத்தும் சந்தர்பங்களே அதிகமாகவும் இருக்கின்றது.  இதற்கு எல்லாம் அழகு பற்றிய சரியான தெளிவு இல்மையே காரணமாகும்.

அழகு பற்றிய எண்ணக்கரு இடத்திற்கு இடம் காலத்திற்கு காலம் , ஆளுக்கு ஆள் வேறுபட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.  பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பார்வைச் சமநிலை (Visual balance) கட்டடங்களின் நீள உயர மற்றும் அகலங்களுக்கிடை யிலான தொடர்பு அளவுப்பிரமாணம் (Scale), மனிதனுக்கும் கட்டடத்திற்கும்  இடையிலான அளவுப்பிரமாணம் (Proportion ), பார்வையில் ஏற்படுத்தும் கன மற்றும் இடைவெளித்தோற்றம் (Solid & Void  ), ஒட்டு மொத்த தோற்றம் ஏற்படுத்தும் ஒத்திசைவு (Unity) ,பிரித்துக்காட்டுதல் (Contrast) மற்றும் முதன்மைப்படுத்துதல் (Focus / Emphasis)  ஒட்டு மொத்த கட்டடத்தின் தோற்றம் ஏற்படுத்தும் இசைவு (Rhythm) போன்ற விடயங்களை கருத்தில் எடுத்து கட்டடத்தின் பகுதிகளான சுவர், யன்னல், கதவு, கூரை, கட்டடத்திற்கு பூசப்படும் வர்ணம், ஒளியூட்டுகின்ற மின்குமிழ்கள் போன்றவற்றை கவனமாகக் ஒருங்கிணைததால் அழகான கட்டடம் உருவாகி விடும்.

கட்டிடடங்கள் அழகாக தெரியாமல் இருப்பதற்கு கட்டடத்தின் முப்பரிமாணத் தோற்றம் முதலாவது காரணமாகும். இதனை ஆங்கிலத்தில் Form என்று சொல்வார்கள். கட்டடத்தின் தேவைக்கு ஏற்ப அதன் ஒவ்வொரு பாகங்களும் அமையும் அதாவது பாடசாலைக்கட்டடம்  என்பதை எடுத்துக்கொண்டால் முன்வாசல், அதிபர் மற்றும் நிர்வாக இடம், வகுப்பறை, ஆய்வு கூடம், நூலகம் என தேவைக்கு ஏற்றவாறு இடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, அவற்றுக்கான சுவர் கூரை என்பற்றை அமைக்கும் போது இறுதியில் ஒரு முப்பரிமாணத் தோற்றம் ஒன்று உருவாகும் இது அழகாக இருப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களை கவரும், குறித்த பாடசாலைக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்தும். இந்த முப்பரிமாணத் தோற்றத்தை உருவாக்கும் போது வடிவமைப்பு தத்துவங்கள் பின்பற்றப்படும்.

மேலும் கட்டடங்கள் கட்டும் போது  குறிப்பாக வீடு கட்டும்போது கட்டடக்கலைப் பாணி (Style) ஐப் பின்பற்றுவார்கள். பொதுவாக கூறினால் திராவிடக்கட்டடக்கலைப்பாணி, கண்டியப்பாணி, நவீன பாணி எனப் பல்வேறு பாணிகள் நடைமுறையில் உள்ளது. யாழ்ப்பாணம்  பொதுநூலகம் திராவிடக்கட்டிடக்கலைப் பாணியைத் தழுவியது எனக்கூறுவர். கட்டடங்களைக்கட்டும்போது கட்டடக்லைப் பாணிகளை அறியாது ஒன்றுடன் இன்னொன்றைச் சேர்த்து உருவாக்கும் போது கட்டடம் ஒரு கலவையாக தோன்றும். காலத்திற்கு காலம் ஒவ்வொரு கட்டடமாக கட்டும்போது இவ்வாறான குழப்பம் ஏற்படுவதற்கு அதிக சந்தர்பங்கள் உண்டு. ஆனாலும் அந்த வேளையிலும் பொருத்தமாக கட்டடங்களை அமைக்கலாம். இதற்கு உதாரணமாக யாழ் பொது நூலகத்திற்கு அருகில் இருக்கும் உணவகத்தைக் குறிப்பிடலாம். குறித்த உணவகம் நூலகம் கட்டிய ஆரம்ப காலத்தில் இல்லை. ஆனாலும் பின்நாளில் கட்டும்போது பிரதான கட்டடத்திற்குப் பொருத்தமானதாக கட்டப்பட்டுள்ளது.

எல்லாக்கட்டடங்களும் கட்டடக்கலை என்ற வகையில் வருவதில்லை. நன்கு வடிவமைக்கப்பட்ட கட்டடம் கட்டடக்கலைப்படைப்பாகும். நல்ல ஒரு கலைப்படைப்பு வெறுமனே அழகாக மட்டும் இருப்பதில்லை. நல்ல ஒரு கட்டடக்கலைப் படைப்பு  மனதில் ஏற்படுத்துகின்ற தாக்கம் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. ஓவ்வொருவரும் தாமாக மெய் உணர்ந்துகொள்ளவேண்டிணவை. உதாரணமாக  வணக்கத்தல மான நல்லூர் முருகன் கோவிலுக்கு செல்லும் ஒருவர் என்ன மனநிலையில் இருந்தாலும் அவருடைய மனஎழுச்சிகள் அடங்கி ஒரு வித இறையுணர்வை பெறுவர். இதுவே  கட்டடக்கலையின் இறுதி இலக்கு. அதாவது

கடடுமாணப்பொருட்களைக் கொண்டு எமது தேவைக்கு ஏற்ற கட்டடங்களைக் கட்டினாலும் இறுதியில் அதன் பயனாளர்கள் என்ன நோக்கத்திற்காக கட்டடம் கட்டப்பட்டதோ அந்நோக்கத்தை அடையவேண்டும். இதனை புரியும்படி சொல்வதானால், படுக்கை அறை ஒன்று கட்டினால் நின்மதியாக நித்திரை கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.  அவ்வாறான திருப்தி மனதில் ஏற்படவில்லை என்றால் எங்கோ ஒரு குறை இருக்கின்றது என்ற முடிவுக்கு வரலாம்.

இது தவிர கட்டடத்திற்கு வர்ணம் பூசும் போது வடிவமைப்பு விதிகளைப்; பின்பற்றுவதோடு அவற்றுக்கான தன்மைகளையும் உணர்ந்து பிரயோகிக்க வேண்டும். ,  வர்ணங்கள் ஒவ்வொன்றும்  ஒவ்வொருவிதமான  உணர்வுகளை மனதில்  ஏற்படுத்தும். ஐரோப்பிய நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள் போன்ற வர்ணங்கள் அதிக இயக்கதறன் உள்ளவை, எங்கிருந்தாலும் கண்களால் உடனடியாக உள்வாங்கப்படக்கூடியவை எனக்கூறுகின்றது. அதேபோல் நீலம் , பச்சை ஊதா போன்றன மென்மையான குணம் கொண்டவை என்றும் இவை கண்களின் பார்வைக்கு பின்னோக்கிச்செல்லும் தன்மை கொண்டவை எனக்கூறுகின்றது.

விலை மலிவாகக் கிடைக்கின்றது, பக்கத்தது வீட்டிற்கு அடித்த கலர் நல்லா இருக்கு, இப்ப எல்லா இடத்திலும் இந்த கலர்தான் அடிக்கினம் என்று சொல்லி கட்டடங்களுக்கு வர்ணம் பூசுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.  பொருத்தமான வர்ணம் வெள்ளையாக இருந்தால் அதனையே பூசுங்கள்.
கட்டுமாணப்பொருட்களைப் பாவிக்கும் போது அவற்றின் தன்மைகளை அறிந்து பயன்படுத்தாது, கண்மூடித்தனமாக பயன்படுத்துவதும் கட்டடத்தின் அழகைப் பாதிக்கும். அதாவது தன்மை என்று குறிப்பிடப்படுவது  அவற்றைக் கட்டுப்போது நிறை தாங்குதிறன் (பலம்) பற்றியது அல்ல. சீமெந்துக்கல்லுக்கு வெறுமையாக இருக்கும் போது அது சொரசொரப்பாக இருப்பதும், கரடு முரடாக தோன்றுவதும்,  கட்டி முடித்து சீமெந்துப் பூச்சு முடிந்ததும் அதே கல் வேறு மாதிரியாக தோன்றும்;. பின்னர் அதற்கு வர்ணம் பூசியதும் வேறு மாதிரியான உணர்வையும் தரும். இதைப்போல மரம், இரும்பு, அலுமீனியம், பிளாஸ்ரிக், கண்ணாடி, கறையில் உருக்கு, செங்கல் என கட்டுமாணத்திற்குப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் ஒவ்வொருவிதமான தன்மையும், அவற்றால் மனதில் ஒவ்வொருவிதமான உணர்வுகளும் ஏற்படும். பொதுவாக கட்டுமாணப்பொருட்கள் ஒன்றுடன் மற்றொன்று சேர்த்து பயன்படுத்தும் போது அதற்கு ஏற்றவகையில் சேர்க்கவேண்டும்.

உடம்பில்  எவ்வாறு  தலை, கழுத்தைப் பயன்படுத்தி அழகாகப் பொருத்தப்பட்டுள்ளதோ அவ்வாறான பொருத்தம் இருக்கவேண்டும். தலைக்கும் உடலுக்கும் பொருத்தம் சரியாக அமையாவிட்டால் ஒட்டு மொத்த உருவம் எவ்வாறு வித்தியாசமான தோற்றத்தைத்கொடுக்குமோ, அதைப்போல சரியாகப் பொருந்தாத இரண்டு கட்டுமாணப்பொருட்கள் மனதில் வித்தியாசமான உணர்வைத்தரும்.



இனித் தலையங்கத்திற்கு வருவோம் அது என்ன வேட்டி கட்டியிருக்கும் மாப்பிழைக்கு 'ரை' கட்டி அழகுபார்க்கும் மனநிலை என்று யோசிக்கிறீர்களா? வேட்டி கட்டினால் அதற்குப்பொருத்தமான சேட், அதற்குப்பொருத்தமான சால்வை, அதற்குப்பொருத்தமாக தேவை என்றால் தலைப்பாகை என்றுதானே அதன் சேர்க்கை இருக்கவேண டும். அவ்வாறு இல்லாமல் பட்டு வேட்டி, பருத்தித்துணியில்  கடும்நீலநிற அரைக்கை சேட்டு அதற்கு நவீன ரை முடிந்தால் விளையாடும் போது அணியும் சப்பாத்து இதை எல்லாம் சேர்த்து ஒரு ஆள் வெளிக்கிட்டு வந்தால் எப்படி இருக்கும் கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாருங்கள்.....கற்பனை பண்ண கஸ்ரமாக இருந்தால் அப்படியே யாழ்ப்பாணத்தில் ஒரு சுற்று சுற்றி  வாருங்கள் அநேகமான கட்டடங்கள் அவ்வாறுதான் இருக்கிறது.

கு.பதீதரன்
கட்டடக்கஞைர்



Friday, January 8, 2016

அழகான வீடு சந்தோசமான வாழ்க்கை



அழகான வீட்டில் வசிக்க யாருக்குத்தான் விருப்பமில்லாமல் இருக்கும். ஆனாலும் ஒரு சில வீடுகளே அழககாக இருக்க காண்கின்றோம்.  வீடு முக்கியமானது என நாமெல்லாம் உணர்ந்த போதும் வீட்டைப் பராமரிப்பது அல்லது அழகுபடுத்துவது என்பதில் எங்களில் பலர் அதிக கவனம்  செலுத்துவதில்லை. இதற்கு எமது கடந்த கால வாழ்க்கை, அன்றாடம் எம்மைச்சுற்றியுள்ள வேலைகள், சோம்பேறித்தனம், அலட்சியம், அழகு பற்றிய புதிய சிந்தனைகள் எதுவும் மனதில் தோன்றாமை எனப் பல காரணங்கள் சொல்ல முடியும். ஏன்   நாம் வாழும் வீட்டை அழகாக வைத்திருக்க முடியவில்லையே  என்று நீங்கள் எப்போதாவது கவலைப்படும் ஒருவரா  நீங்கள் ?  இனிக் கவலையை விடுங்கள் நீங்களும் உங்கள் வீட்டை அழகாக வைத்திருக்க சில ஆலோசனைகள்.

வீட்டை அழகுபடுத்தல் என்றால் அதிகபணம் செலவழித்து செய்ய வேண்டிய ஒன்று என தவறான கருத்து நம்மில் பலருக்கு உண்டு. இதன் காரணமாக  கலியாணம், பூப்புனித நுPராட்டு விழா போன்ற  நல்ல விடயங்கள் வீட்டில் இடம்பெறும் வேளைகளில் மட்டும் வீட்டை அழகுபடுத்த நேரத்தை செலவு செய்வதுண்டு. ''கந்தை ஆனாலும் கசக்கி கட்டு'' என்ற  பழமொழி எங்களிடத்தில் பாவனையில் இருந்தது பலருக்கு மறந்தே போயிருக்கும்.  வீடு பழையதாக இருந்தாலும் அதனை அழகுபடுத்தலாம். வீட்டில்  விஷேடம் இடம்பெறும் வரை யாரும் காத்திருக்க வேண்டியதில்லை, சாதாரண நாளில் கூட உங்கள் வீட்டை அழகபடுத்த முதலில் செய்ய வேண்டிய விடயம் என்னவென்றால்.......எமக்கு தேவை அற்றவை எனக்கருதும் பொருட்களை அகற்றுவது அல்லது இடம் மாற்றுதல்.  அதாவது உங்கள் வீட்டில் நீண்ட காலத்திற்கு முன்னர்  வாங்கிய பொழிவிழந்த பூச்சாடி அழுக்குப்படிந்தபடி வீட்டில் தொங்கிக்கொண்டு இருந்தால் அதனை அகற்றி விடுங்கள் அல்லது அதனை துப்பரவு செய்து இன்னொரு புதிய இடத்தில் வையுங்கள். இதே போல பழைய கலண்டர்கள், சாமிப்படங்கள் , சோடி இல்லாத செருப்பு என உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளாக பார்த்து  பார்த்து தேவை இல்லை என்று நீங்கள் கருதுவதை அகற்றுங்கள் அல்லது இடம் மாற்றுங்கள்.



இரண்டாவது தேவையான பொருட்களை உரிய உரிய இடத்தில் வைத்தல்.  அனேகமாக எல்லாப்பொருட்களும் அவற்றுக்குரிய இடத்திலேஇருக்கின்றது  என்று நீங்கள் சொல்லாம் ஆனாலும் மிக அவதானமாக பாருங்கள்  சாமி அறைக்குள் இருக்கவேண்டிய பொருட்கள் குசினிக்குள் இருக்கும், படிக்கின்ற  இடத்தில் இருக்கவேண்டிய புத்தகங்கள் கொப்பிகள் போன்றவை படுக்கை அறைக்குள் இருக்கும். இவற்றை எல்லாம் விட  களஞ்சிய அறைக்குள்  இருக்க வேண்டிய பல பொருட்கள் வீட்டின் எல்லா முலையிலும் இருக்கும். எல்லாப் பொருட்களுக்கும் அவற்றுக்கு உரிய இடத்தில் வையுங்கள் அவ்வாறு  வைக்கும் போது ஏதாவது பொருளுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம் புதிய இடம் ஒன்றை ஒதுக்கி கொள்ளுங்கள். அப்புதிய இடம்  ஒரு அறையாக இருக்க வேண்டியதில்லை. அது ஒரு கடதாசிப்பெட்டியாக கூட இருக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள். இனி குசினிக்குள் வருவோம்  அங்கு கத்தி இருக்க வேண்டிய இடம் என ஒரு இடத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள். அந்த இடத்திலேயே கத்தியை தொடர்ந்து வைத்துக்கொள்ளுங்கள். இதைப்போலவே குசினிக்குள் இருக்கும் கரண்டி, பெட்டி, பாத்திரங்கள், போத்தல்கள் போன்ற ஏனைய பொருட்களையும்  குறித்த ஒரு இடத்திலேயே வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது  இடத்தை தூய்மையாக வைத்திருக்க உதவும் அதே வேளை உங்கள் வேலையை சுலபமாக்கி நேரத்தை மீதப்படுத்தும்.

மூன்றாவது பாவிக்கும் பொருட்களை சுத்தமாக அல்லது அழுக்கு இல்லாமல் வைத்திருத்தல்.  எல்லா  வீடுகளிலும் சமையலுக்கும், சாப்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும் தட்டு போன்ற பொருட்கள் ஆகக்குறைந்தது ஒரு வேளையாவது கழுவி சுத்தமாக இருக்கும் ஆனால் சமையல் அறையில் இருக்கும்  சமையல் பொருட்கள் சேமித்து வைக்கப்பயன்படும் சிறிய கொள்கலன்கள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்துகின்றீர்கள்?  வீட்டில் இருக்கும்  தளபாடங்கள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுதுகின்றீர்கள்?  இவற்றை எல்லாம் சுத்தப்படுத்துவதற்கு ஒரு அட்டவணை தயாரித்து  கொள்ளுங்கள்.  குறித்த இடைவெளியில் அவை அழுக்காக இருக்கிறதா இல்லையா என்பதை கண்காணித்துக் கொள்ளுங்கள்.  சிறிய அழுக்கு இருந்தாலும்  உடனுக்கு உடன் சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். பொருட்களில் சிறிய சிறிய பிழைகள் இருந்தால் அவற்றை உடனடியாகவே திருத்தி  அமைத்துக்கொள்ளுங்கள் அவ்வாறு செய்யதாது தாமதப்படுத்துவது சில வேளைகளில் குறித்த பொருளை பாவிக்க முடியாத நிலைக்கு இட்டுச்செல்லும்  என்பதை மறந்துவிடாதீர்கள்.

நான்காவது மேற்கூறியவற்றை தொடர்ச்சியாக செய்தல்.  எந்த காரியத்தையும் ஒரு வேளை செய்யக்கூடியதாக இருக்கும். அதே வேலையை திருப்ப திருப்ப செய்வது என்பது பலருக்கு சலிப்பு ஏற்படுத்தும் ஒரு செயல் ஆனாலும் மேற்கூறிய மூன்று செயல்களையும் சலிப்பை பார்க்காது தொடர்சியாக  செய்யுங்கள் அப்போது குறித்த செயல்கள் உங்களுக்கு சந்தோசத்தையும், உங்கள் செயல்களில் ஒரு முன்னேற்றத்தையும் தரும். ஒரு குடும்பத்தில் இருக்கும்  ஒருவர் அல்லது இருவர் ஒரு குறித்த வேலையைச் செய்யும் போது அதனைப் பார்த்த ஏனையவர்களும் பின்பற்றி செய்வார்கள்.

ஐந்தாவது தொடர்ச்சியாக செய்து வரும் போது அதுவே உங்களுடைய பழக்கமாகி உங்களையும், உங்களைச் சூழ உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். மேற்குறிப்பிட்ட ஐந்து படிமுறைகளையும் எந்த செலவும் இல்லாமல் செய்யலாம்.

இப்ப சொல்லுங்கள் உங்கள் வீட்டை அழகாக  வைத்திருக்க பணம் தேவைதானா?  இதேவேளை இந்த வேலைகளை வீட்டில் உள்ள ஒருவர் மட்டும் செய்வதால் சலிப்பும் வெறுப்புமே உண்டாகும்  அதனால் வீட்டில் உள்ள ஏனையவர்களும் இணைந்து செய்தால் இயல்பாகவே நாம் வாழும் வீடு அழகாக மாறிவிடும்.



அகத்தின் அழகு முகத்தில் என்றால் ஒருவருடைய உள் மன வெளிப்பாடு அவருடைய முகத்தில் தெரியும் என்ற அர்த்தத்தம் கொள்ளப்படுகின்றது.  இதேவேளை தமிழில் அகம் என்ற சொல் வீடு என்னும் பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றது. வீட்டின் அழகு முகத்தில் தெரியும். அதுமட்டுமல்ல நீங்கள்  செல்கின்ற இடத்திலும் உங்கள் முகத்தில் தெரியும் என்பதை மறந்துவிடாதீர்கள். இது எப்படி என்று யோசிக்கின்றீர்களா?  உதாரணமாக நீங்கள் உங்கள்  உறவினர் வீட்டிற்கு செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு இருக்கின்ற பொருட்கள் உரிய முறையில் வைக்கப்படாமல், அழுக்காக இருந்தால் நீங்கள் அவற்றை பார்த்து முகம் சுளிப்பீர்கள் அப்போது குறித்த வீட்டின் அழகு உங்கள் முகத்தில் தெரிகின்றது. இப்போது புரிகின்றதா?

தமிழில் மனித உடலையும் ஆன்மா வாழும் வீடு என்று சொல்வார்கள். ஆனாலும் இவ்வளவு நேரமும் நீங்கள் வாசித்தது கல்லாலும் மரத்தாலும்  உலோகத்தாலும் கட்டிய வீடு பற்றி ஆனாலும் அந்த வீடு கூட பல ஆத்மாக்கள் வாழும் உடல். ஒரு ஆன்மா வாழும் வீடான உடலை எப்படி  எல்லாம் நேரம் செலவு செய்து ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்க ஒவ்வொருவரும் முயற்சி செய்கின்றோம். அதே போலவே நம் குடும்பம்  வாழுகின்ற வீடும் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் அழகாகவும் இருப்பது சிறப்பானது.

வீட்டை அழகாக வைத்திருப்பதற்கு வேறு என்ன செய்யலாம் என்று அடுத்த பதிவிலும்  பார்க்கலாம்....
குமாரலிங்கம் பதீதரன்